Published : 13 Sep 2025 09:49 AM
Last Updated : 13 Sep 2025 09:49 AM
நமது அண்டை நாடான நேபாளத்தில் ‘இசட் தலைமுறை(Gen Z)’ எனப்படும் இளைய தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியையே கவிழ்த்துள்ளனர்.
தற்போது நேபாளத்தில் ராணுவம் கட்டுப்பாட்டை தற்காலிகமாக கையில் எடுத்துள்ளது. 95-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் இசட் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்த இவர்கள் டிஜிட்டல் உலகத்தில் வளர்ந்த முதல் தலைமுறையினர் என்பதால், இவர்களது உலகமே மின்னணு சாதனங்கள், முகநூல், எக்ஸ், இன்ஸ்டா, யூ டியூப் உள்ளிட்டவை தான். இதற்கு தடை என்று அறிவித்ததும் இந்த தலைமுறை கொதித்தெழுந்து போராட்டக் களத்திற்கு வந்துவிட்டது.
நேபாள நாடாளுமன்ற கட்டிடம், அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டு ஆட்சி கவிழகாரணமாகி விட்டனர். இந்த கலவரத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததால் கலவரம் வருமா? என்ற கேள்வி பொதுவாக எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், உண்மையான பின்னணி வேறு. நேபாளத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர் அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் நிலை உள்ளது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், ஆட்சியில் இருப்பவர்களின் படோடாபம் ஆகியவையே மக்களின் கோபத்திற்கு அடிப்படை.
இந்த கலவரத்தின் பின்னணி மூலம் உலக நாடுகள் அனைத்தும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்பதே. ஊழல் மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை முந்தைய தலைமுறையினர் வகுத்து வைத்துள்ள நாடாளுமன்ற அரசியல் நடைமுறைகள், நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடையும்போது அவையனைத்தையும் புறந்தள்ள இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதையே நேபாள சம்பவம் உணர்த்தியுள்ளது.
நேபாள கலவரத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான ‘சாம்னா’ தலையங்கம் ழுதியிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்களான வேலையிழப்பு, பொருளாதார சமமின்மை, லஞ்ச - ஊழல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையான நிர்வாகம், பொறுப்புணர்வு ஆகியவையும் முக்கியம்.
இந்த விஷயங்களில் இளைஞர்கள் நம்பிக்கையிழக்கும்போது, அதுகுறித்த கவலையை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துகின்றனர். அதை அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்க நினைக்கும்போது, கிளர்ச்சிக்கான பொறி உருவாகி விடுகிறது. எனவே, இளைய சமுதாயத்தை நேரடியாக பாதிக்கும் விஷயங்களில் இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் அலட்சியம் காட்டாமல் கவனத்துடன் செயல்பட்டு குறைகளை உடனுக்குடன் களைவது அவசியம் என்பதே நேபாள சம்பவத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT