Last Updated : 11 Sep, 2025 06:43 AM

2  

Published : 11 Sep 2025 06:43 AM
Last Updated : 11 Sep 2025 06:43 AM

நேபாளம்: இமயமலை தேசத்தில் வெடித்த எரிமலை!

“சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிக்க மாட்டேன். யாரும் அப்படிச் செய்ய அனுமதிக்கவும் மாட்டேன்” - நேபாளத்தில் வெடித்த இளைஞர் புரட்சிக்குப் பயந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய கே.பி.சர்மா ஒலி அடிக்கடி கூறிவந்த வார்த்தைகள் இவை. ஊழல் முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை, கருத்துச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு எனப் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம், நேபாள அரசியல் மேட்டிமைத்தனத்துக்கு ஒருவழியாக முடிவுகட்டியிருக்கிறது.

இளைஞர்​களின் எழுச்சி: பல நூற்றாண்​டுகளாக மன்னராட்​சியின் கீழ் இருந்த நேபாளம், 2006இல், மன்னர் ஆட்​சிக்கு எதிராக அரசியல் கட்சி​யினரும் மாவோயிஸ்ட் அமைப்​பினரும் திரண்டு நடத்திய போராட்​டத்தின் தொடர்ச்சியாக, 2008இல் ஜனநாயக நாடாக மாறியது. சீனா, இந்தியா என இரு பெரும் சக்தி​களின் அரசியல் தாக்கத்​துக்கு உள்ளாகிவரும் நேபாளத்​தில், இந்தக் குறுகிய காலத்தில் இதுவரை 14 முறை ஆட்சி மாறியிருக்​கிறது. எனினும், ஓர் அரசுகூடத் தனது ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்ய​வில்லை.

அந்த அளவுக்கு அரசியல் ஸ்திரத்​தன்​மை​யின்மை கொண்ட நாடு இது. நேபாள இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்​பின்மை 17.2% என்கின்றன புள்ளி​விவரங்கள். இந்தியா, தென்கொரியா, மலேசியா, மத்தியக் கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளுக்குப் பெரும்​பாலும் கட்டு​மானப் பணிகளுக்​காகத்தான் நேபாளி​களில் பலர் செல்கின்​றனர்.

அரசியல் தலைவர்​களின் ஊழல் முறைகேடுகள், அவர்களது வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை போன்ற காரணிகள் அங்கும் இளைய சமுதா​யத்​தினரை வெகுண்டு எழ வைத்திருக்​கின்றன. பல ஊழல் குற்றச்​சாட்டு​களில் விசாரணையே நடைபெறு​வ​தில்லை. நேபாள காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பாவுக்​கும், ஒலிக்கும் இடையில் இருந்த ‘புரிந்துணர்​’வால் ஊழல் வழக்குகள் மெளனமாக்கப்படுவதாக விமர்​சனங்கள் உண்டு.

இந்தச் சூழலில், அரசியல் தலைவர்​களின் ஆடம்பர வாழ்க்கை குறித்து நெபோகிட்ஸ், நெபோபேபீஸ் என்கிற ஹாஷ்டேகு​களில் இளம் தலைமுறையினர் விமர்​சித்து​வந்​தனர். சமூக வலைத்​தளங்​களில் விமர்சனம் அதிகரித்துவந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பயன்படுத்​திக்​கொண்ட ஒலி அரசு, சமூக வலைத்​தளங்கள், நேபாளத்தில் பதிவுசெய்​வதற்கான நிபந்​தனைகளை ஏழே நாட்களுக்குள் பூர்த்தி​செய்ய வேண்டும் என்று உத்தர​விட்டு, ஃபேஸ்​புக், எக்ஸ், இன்ஸ்​டகி​ராம், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்​தளங்​களைத் தடைசெய்தது.

இளைஞர்கள் எழுப்பும் எதிர்க்​குரலை நசுக்க சமூக வலைத்​தளங்களை முடக்​கினால் போதும் என்று ஒலி அரசு நினைத்​ததுதான் மிகப் பெரிய நகைச்​சுவை. சமூக வலைத்​தளங்களை முறைப்​படுத்து​வதற்​காகவே இந்தத் தடை என அரசுத் தரப்பில் அளிக்​கப்பட்ட விளக்​கத்தை ஏற்க இளைஞர்கள் தயாராக இல்லை. டிக்டாக், விபிஎன் இணைப்பு போன்ற​வற்றின் துணையுடன் செப்டம்பர் 8இல் இளைஞர்கள் திரண்டு, அமைதியான முறையில் போராடினர். இவர்களில் பலர் போராட்டம் என்றால் என்னவென்றே அறிந்​தி​ராதவர்கள்.

அரசின் அடக்குமுறை: கைகளை உயர்த்தியபடி அமைதியான முறையில் சென்று​கொண்​டிருந்த இளைஞர்கள் மீது - திடீரென ரப்பர் குண்டு​களால் துப்பாக்​கிச்சூடு நடத்தியது காவல் துறை. கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்​பட்டது. இந்தக் களேபரத்​தில், பள்ளிச் சீருடை அணிந்த மாணவர்கள் உட்பட 19 இளைஞர்கள் கொல்லப்​பட்டது போராட்​டக்​காரர்​களைக் கொந்தளிக்க வைத்தது; போராட்டம் வன்முறை வடிவமெடுத்த பின்னர், அரசு அமைப்பு​களால் அவர்களைக் கட்டுப்​படுத்தவே முடிய​வில்லை.

கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்​களும் குறிவைக்​கப்​பட்​டனர். அவர்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் சேதப்​படுத்​தப்​பட்டன. நாடாளு​மன்றம், உச்ச நீதிமன்​றமும் இதில் தப்பவில்லை. அடுத்​தடுத்து அமைச்​சர்கள் பதவி விலகி​னாலும் இளைஞர்​களின் கோபம் தணியவில்லை. குறிப்பாக, நிதியமைச்சர் மீது விழுந்த உதை, இளைஞர்​களின் மனதில் கனன்று​கொண்​டிருந்த கோபத்தின் வெளிப்​பாடு.

போக்கரா, பிராத்​நகர், சித்வான், புத்வால் எனப் பல நகரங்​களில் போராட்டம் நடைபெற்றது. சமூக வலைத்​தளங்​களுக்கு விதிக்​கப்பட்ட தடை நீக்கப்பட்ட பின்னரும் இளைஞர்​களின் கோபம் தணியவில்லை. ஊரடங்கு உத்தர​வுகளை மீறித் திரண்டு சென்று வன்முறையில் ஈடுபட்​டனர். இளைஞர்​களின் எழுச்சிக்கு ஒட்டுமொத்த நேபாளமும் துணைநின்றது. 2022இல் இலங்கை ராஜபக்சே குடும்பத்​தினருக்கு எதிராக​வும், 2024இல் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா​வுக்கு எதிராகவும் நடந்த போராட்​டங்​களுடன் இந்தப் போராட்டம் ஒப்பிடப்​படு​கிறது.

ஆனால், நேரடி​யாகத் தலைவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது நேபாளப் போராட்​டத்​தில்தான் என்பது குறிப்​பிடத்​தக்கது. இந்தப் போராட்​டத்தை ஒருங்​கிணைத்தது, ‘ஹமி நேபாள்’ என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான 26 வயதான சுதான் குருங். இளைஞர்கள் மீது நிகழ்த்​தப்பட்ட அடக்கு​முறையால் வெகுண்டு ​எழுந்த சுதான் குருங், ‘உடனடியாக ஒலி அரசு பதவி விலக வேண்டும்’, ‘துப்​பாக்​கிச்சூடு நடத்த உத்தர​விட்​ட​வர்கள் / நடத்தி​ய​வர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்​கப்பட வேண்டும்’, ‘இளைஞர்​களின் இடைக்கால அரசு அமைய வேண்டும்’ என நிபந்​தனைகளை விதித்​தார்.

அமைதியை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் எதுவும் கைகொடுக்காத நிலையில், பதவிவில​கினார் சர்மா ஒலி. எனினும், மற்ற நிபந்​தனைகள் நிறைவேற வாய்ப்புகள் உண்டா என்பது இனிமேல்தான் தெரியும். ராணுவத்தின் கட்டுப்​பாட்டில் நேபாளம் வந்து​விட்ட நிலையில், பதற்றம் குறையலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. “மாணவர்கள் மீது தவறு இல்லை. போராட்​டக்​காரர்​களிடையே கலவரக்​காரர்கள் ஊடுரு​வி​விட்​டார்கள்” என்றெல்லாம் பேசிய ஒலி, இளைஞர்கள் முன்வைத்த ஊழல் குற்றச்​சாட்டுகள் குறித்து வாய் திறக்க​வில்லை என்பது கவனிக்​கத்​தக்கது.

இந்தியாவின் பொறுப்பு: இந்த விவகாரத்தில் இந்தியா என்ன செய்யும் என்கிற எதிர்​பார்ப்பு எழுந்​திருக்​கிறது. சிக்கிம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பிஹார் என ஐந்து மாநிலங்​களின் எல்லைப் பகுதி​களில் நேபாள நிலப் பகுதிகள் அமைந்​திருக்​கின்றன. பண்பாட்டு ரீ​தி​யிலும் இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கம் அதிகம் என்றாலும், அவ்வப்போது சீன ஆதரவு நிலைப்​பாட்டை நேபாளம் எடுக்​கும்.

குறிப்பாக, சீனாவின் பக்கம்தான் ஒலி நிற்பார். நேபாளத்தில் கரோனா பரவலுக்குக் காரணம் இந்தியாதான் என அவர் குற்றம்​சாட்​டி​யிருந்​தார். 2015இல் நேபாளத்தில் கொண்டு​வரப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைச் சங்கடப்​படுத்​தியது. இந்திய எல்லையில் இருக்கும் ‘தராய்’ என்ற சமவெளிப் பகுதியில் வாழும் மாதேசிகளின் நலனையும் உள்ளடக்​கியதாக அரசமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என இந்தியா வற்புறுத்​தியது.

மாதேசிகளில் பெரும்​பாலானோரின் பூர்விகம் இந்தியா​தான். பல தருணங்​களில் உதவிசெய்த நாடு என்றாலும், இந்தியாவின் இந்தத் தலையீட்டை நேபாளம் விரும்ப​வில்லை. இப்படிப் பல முறை பிணக்​குகள் ஏற்பட்டன. அண்மை​யில்தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்காக சீனா சென்று​வந்தார் ஒலி. கட்சி​யிலும் தன்னைப் பலப்படுத்​திக்​கொண்​டிருந்த ஒலிக்கு, இளைஞர் புரட்சி ஏறத்தாழ முடிவுரை எழுதி​விட்டது.

காட்மாண்டு மேயரும் முன்னாள் ராப் இசைக் கலைஞருமான பாலேந்திர ஷா, ராஷ்ட்ரிய சுதந்திரா கட்சித் தலைவர் ராபி லாமிச்சானே ஆகியோர் இளைஞர்​களின் போராட்​டத்​துக்கு ஆதரவு அளித்த நிலையில், ஆட்சிப் பொறுப்​புக்கு அவர்கள் வருவார்களா என எதிர்​பார்ப்பு எழுந்​திருக்​கிறது. இருவரும் போதிய அரசியல் அனுபவம் இல்லாதவர்கள்.

எல்லாவற்​றையும் தாண்டி, நேபாள மக்களுக்கு ஆதரவான நிலைப்​பாட்டை எடுத்து​வரும் இந்தியா, இந்த முறை எடுக்​கப்​
போகும் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்​கப் ​படு​கின்றன. ஆரம்பத்தில் மெளனமாக இருந்து​விட்டுச் சம்பிர​தாய​மாகச் சில வார்த்தைகளை சீனா உதிர்த்திருக்​கிறது.

‘நாங்கள் வென்று​விட்​டோம்’ என நாடாளு​மன்றக் கட்டிடத்தில் போராட்​டக்​காரர் ஒருவர் முழக்​கமிட்​டார். இளைஞர்​களின் கோபம் எந்த சாம்ராஜ்யத்தையும் வீழ்த்​தி​விடும் என்பதற்கான உதாரணம் இது. பிலிப்​பைன்ஸ், இந்தோ​னேசியா, மலேசியா போன்ற நாடுகளிலும் இதே போன்ற போராட்டங்கள் வெடித்​திருக்​கின்றன. ஆட்சி அதிகாரம் கையில் இருக்​கும்போது எப்படி வேண்டு​மா​னாலும் செயல்​படலாம் என அரசியல் தலைவர்கள் நினைப்பது இனியும் செல்லுபடி​ ஆகுமா என்னும் கேள்வியை இந்தப் போராட்​டங்கள் வலுவாக எழுப்​புகின்றன!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x