Last Updated : 11 Sep, 2025 09:56 AM

1  

Published : 11 Sep 2025 09:56 AM
Last Updated : 11 Sep 2025 09:56 AM

தெருவோர கடைகளில் தர சோதனை அவசியம்!

பிரதிநிதித்துவப் படம்

சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் விக்கி என்ற இளைஞர் குடும்பத்துடன் தெருவோர கடை ஒன்றில் பழச்சாறு குடிக்கச் சென்றுள்ளார். மாதுளம் பழச்சாறு கேட்டு வாங்கி குடிக்க முயன்றபோது, அதிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

அவர் சுதாரித்துக் கொண்டு துர்நாற்றம் குறித்து பழச்சாறு தயாரித்த வடமாநில வாலிபரிடம் விசாரித்துள்ளார். அவர் முறையாக பதிலளிக்காததால், கடைக்குள் சென்று பழச்சாறு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மாதுளம் பழங்களை சோதனையிட்ட போது, அவை கெட்டுப் போன நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக அவரும் அவரது குடும்பத்தினரும் அந்தப் பழச்சாறை குடிக்காததால், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின்பேரில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கெட்டுப்போன பழங்கள் மற்றும் எலி கடித்த நிலையில் இருந்த பழங்கள் இருந்தது கண்டறியப்பட்டு அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் எங்கோ ஒரு இடத்தில் மட்டும் நடந்த சம்பவமாக கருத முடியாது. ஏனென்றால் லட்சக்கணக்கான தெருவோரக் கடைகள் சுகாதாரமற்ற முறையில் பழச்சாறுகள் தயாரிப்பதையும், போக்குவரத்து மாசுகளுக்கு மத்தியில் நடைபெறும் தெருவோர துரித உணவகங்கள், கோழி இறைச்சி சமைக்கும் கடைகள் சமீபகாலங்களில் பெருகி உணவுப் பொருட்களின் தரத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் செயல்படுவதையும் கண்கூடாக காண முடிகிறது.

முந்தைய நாள் பயன்படுத்தி மீதமான பழங்கள் மற்றும் இறைச்சியை மறுநாள் பயன்படுத்துவதும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அவற்றை சாப்பிடும் பொதுமக்கள் வயிற்று உபாதைகளுடன் அவ்வப்போது அவதிப்படுவதும் அதிகரித்து வருகிறது. துரித உணவகங்கள் பெருகிவிட்ட காலகட்டத்தில் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிசெய்ய கூடுதல் பொறுப்புடன் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் செயல்பட வேண்டியது அவசியம்.

பழச்சாறு தயாரிக்கும் முன்பு, பயன்படுத்தப்படும் பழங்களின் தரம் குறித்து வாடிக்கையாளரிடம் காண்பிக்க வேண்டும், முந்தையநாள் பயன்படுத்தி மீதமான பொருட்களை மறுநாள் பயன்படுத்தக் கூடாது போன்ற புதிய விதிமுறைகளை வகுப்பது குறித்து உணவுப் பாதுகாப்பு துறை பரிசீலிக்க வேண்டும்.

தெருவோர உணவகங்கள் கெட்டுப் போகாத தரமான பொருட்களையே பயன்படுத்துகின்றனர் என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனைகளில் ஈடுபடுவதுடன், உணவுப் பொருட்களின் தரத்தில் அலட்சியமாக நடந்து கொள்ளும் கடைக்காரர் களுக்கு அபராதத்துடன் கடும் தண்டனை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களே உணவின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரமளிக்க வேண்டும். அப்படி முன்வரும் பொதுமக்களுக்கு பழச்சாறு கடைகள் மற்றும் தெருவோர உணவகங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்பதை விதிமுறையாக கொண்டு வர வேண்டும். இது போன்ற உணவுப் பாதுகாப்பு குறித்த கூடுதல் விழிப்புணர்வ அம்சங்கள் மற்றும் தர சோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலமே உணவு தயாரிக்கும் கடைகளை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x