Last Updated : 09 Sep, 2025 10:21 AM

 

Published : 09 Sep 2025 10:21 AM
Last Updated : 09 Sep 2025 10:21 AM

சென்னை மெட்ரோ இணைப்பு வசதி பன்மடங்கு வருவாய் ஈட்டும்!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வருவதற்கான இணைப்பு வசதியை உருவாக்கும் முயற்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக தனி துணை நிறுவனம் ஒன்றையும் உருவாக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக வெளிவரும் செய்திகள் சென்னை நகர மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தியாகும்.

ஏனென்றால், சென்னையில் தற்போது இயங்கிவரும் 54 கி.மீட்டர் மெட்ரோ ரயில் வசதி சென்னை மக்களின் இதயத் துடிப்பாக மாறி வருகிறது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில், குளிர்சாதன வசதியுடன் தங்கு தடையின்றி, சொகுசான பயணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கி வருவதன் மூலம், சென்னை மக்களின் இதயத்திற்கு நெருக்கமான அமைப்பாகவே மெட்ரோ ரயில் மாறிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையே இதற்கு சான்றாகும்.

ஆனால், மெட்ரோ ரயில் நிலையங்களை சென்றடைவதற்கும், அங்கிருந்து தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பவும் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது. ஒரு சில மெட்ரோ நிலையங்களில் மட்டுமே மாநகர பேருந்துகள் நின்று செல்கின்றன. சிற்றுந்து வசதியும் மக்களுக்கு பயன்படும் வகையில் இயக்கப்படுவதில்லை. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 3.5 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். அதிகபட்சமாக கடந்த மாதம் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

ஒரு மாதத்துக்கு ஒரு கோடி பேர் பயணம் செய்யும் மெட்ரோ ரயில் நிர்வாகம் முறையான இணைப்பு வசதிகளை ஏற்படுத்தினால், இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை. டில்லி போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களின் ஒவ்வொரு நுழைவாயில் பகுதியிலும் இ-ரிக் ஷாக்கள் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் இருப்பிடங்களுக்கு சென்று வருகின்றனர். அதுபோன்ற வசதியை உருவாக்கித் தருவது அவசியம்.

அதற்கான முயற்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் பணிக்காக துணை நிறுவனம் உருவாக்க மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ள செய்தியும் மகிழ்ச்சிக்குரியது. இரண்டாம் கட்ட திட்டப் பணிகளும் மூன்று வழித்தடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவையும் முடிந்துவிட்டால், முதல்கட்ட வழித்தடத்துடன் இணைந்து சென்னை நகர போக்குவரத்தின் ஆணிவேராக மெட்ரோ ரயில் மாறி பன்மடங்கு வருவாய் ஈட்டும் என்பதில் சந்தேகமில்லை.

பல லட்சம் பேர் பயணிக்கவுள்ள அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெட்ரோ ரயில் பயணம் மென்மேலும் மெருகேறும் வகையில் நடவடிக்கை எடுப்பது அவசியம். அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் போதுமான அளவில் கழிப்பிட வசதி, வாகன நிறுத்தும் வசதி, போக்குவரத்து இணைப்பு வசதிகளை உருவாக்கும்போது, சென்னை உட்கட்டமைப்பின் ரத்தினமாக மெட்ரோ ரயில் ஜொலிப்பது நிச்சயம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x