Published : 08 Sep 2025 07:37 AM
Last Updated : 08 Sep 2025 07:37 AM
இந்திய கலாச்சாரம் மற்றும் இசையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இன்று (செப்டம்பர் 8) மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த, அசாதாரண திறன் வாய்ந்த இசைக்கலைஞர்களில் ஒருவரான டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் பிறந்த நாள் இன்று. இந்த ஆண்டு அவர் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களின் தொடக்க ஆண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்திய இசைக்கும் கலைக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது.
அசாமில் இருந்து காலத்தால் அழியாத நதி போல ஒரு குரல் சீறிப் பாய்ந்து வெளிப்பட்டது. அந்தக் குரல் எல்லைகளையும் கலாச்சாரங்களையும் கடந்து, மனிதகுலத்தின் உணர்வைச் சுமந்து சென்றது. பூபேன் அண்ணா உலகம் முழுவதும் பயணம் செய்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் தோளோடு தோளாக இணைந்திருந்தார். ஆனால் அவர் அசாமில் தமது வேர்களுடன் ஆழமாகப் பிணைந்திருந்தார். அசாமின் வளமான வாய்மொழி மரபுகள், நாட்டுப்புற மெல்லிசைகள், சமூக ரீதியாகக் கதை சொல்லும்நடைமுறைகள் ஆகியவை அவரது ஆரம்பகால குழந்தைப் பருவத்தை நுட்பமாகவும் ஆழமாகவும் வடிவமைத்தன. இந்த அனுபவங்களே அவரது கலைத் திறனின் அடித்தளமாக அமைந்தன.
அவர் பதின் பருவத்தில் இருந்தபோது, தமது முதல் பாடலைப் பதிவு செய்தார். இசை என்பது அவரது ஆளுமையின் ஒரு பகுதி மட்டுமே. தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசைதான் அவரை காட்டன்கல்லூரி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கச் செய்தது. அத்துடன் அவரை அமெரிக்காவிற்கும் அழைத்துச் சென்றது. அங்கு அவர் அந்தக் காலத்தின் முன்னணி கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டார்.
புகழ்பெற்ற கலைஞரும், மக்கள் உரிமைகள் தொடர்பான இயக்கத்தின் தலைவருமான பால் ராப்சனையும் அவர்சந்தித்தார். ராப்சனின் ‘ஓல்ட் மேன் ரிவர்’ என்ற பாடல் பூபேன் அண்ணாவின் புகழ்பெற்ற இசையமைப்பான ‘பிஸ்டிர்னோ பரோரே'-வுக்குஉத்வேகமாக அமைந்தது. மிகவும்போற்றப்பட்ட பெண்மணியாகத்திகழ்ந்த அமெரிக்காவின் அப்போதையமுதல் பெண்மணி எலினோர் ரூஸ்வெல்ட், இந்திய நாட்டுப்புற இசையைச் சிறப்பாக நிகழ்த்தியதற்காக பூபேன் ஹசாரிகாவுக்குத் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
பூபேன் அண்ணா அமெரிக்காவிலேயே தங்குவதற்கான வாய்ப்பைப்பெற்றார். ஆனாலும் அவர் இந்தியாவுக்குத் திரும்பி இசைத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வானொலி தொடங்கி நாடகம் வரை, திரைப்படங்கள் முதல் ஆவணப்படங்கள் வரை, ஒவ்வொரு கலைப்படைப்பு அம்சங்களிலும் அவர் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் எங்கு சென்றாலும், இளம் திறமையாளர்களை ஆதரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவரது இசைப் படைப்புகள் ஏழைகளுக்கான நீதி, கிராமப்புற மேம்பாடு, மக்களின் வலிமை போன்ற சமூகச் செய்திகளை வழங்கின.
தமது இசையின் மூலம், படகு ஓட்டுபவர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பெண்கள், விவசாயிகள் போன்றவர்களின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பூபேன் ஹசாரிகா குரல் கொடுத்தார். கலை உணர்வுடன் கூடிய பூபேன் அண்ணாவின் படைப்புகள், நவீனத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒரு சக்திவாய்ந்த கண்ணாடியாகவும் மாறின. குறிப்பாக அவரைப் போன்ற சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பலர், அவரது இசையிலிருந்து மன வலிமையையும் நம்பிக்கையையும் பெற்றனர்.
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வு பூபேன் ஹசாரிகாவின் வாழ்க்கைப் பயணத்தில் சிறப்பான முறையில் வெளிப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்க அவரது படைப்புகள் முயன்றன. அவர் அஸ்ஸாமி, வங்காளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
பூபேன் அண்ணா, ஒரு தீவிர அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும், பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1967-ம்
ஆண்டில், அசாமில் உள்ள நௌபோயிச்சா தொகுதியிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒருபோதும் முழுநேர தீவிர அரசியல்வாதியாக மாறவில்லை. ஆனாலும், மக்களுக்குச் சேவை செய்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் அதீதமானது.
பத்ம, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது போன்ற பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில், எங்களது ஆட்சிக் காலத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இது எனக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் கிடைத்த ஒரு பெருமையாகும். இசை, அனைத்துத்தடைகளையும் தாண்டிச் செல்லக்கூடிய தன்மை வாய்ந்தது.
பூபேன் ஹசாரிகாவின் பாடல்களை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொடர்ந்து பாடி வருகிறார்கள். பூபேன் ஹசாரிகா நமக்குக் கிடைத்தது பாரதத்தின் அதிர்ஷ்டம். அவரது நூற்றாண்டு விழாவின் தொடக்கத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், அவர் வழங்கிய செய்தியை தொலைதூரங்களுக்குப் பரப்ப நாம் உறுதியேற்போம். இசை, கலை, கலாச்சாரம் ஆகியவற்றை ஆதரிக்கவும், இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், இந்தியாவை படைப்பாற்றல் மற்றும் கலைச் சிறப்பிற்கான களமாக மாற்றவும் தொடர்ந்து பணியாற்ற, பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு நம்மை ஊக்குவிக்கட்டும்.
- நரேந்திர மோடி, பிரதமர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT