Published : 07 Sep 2025 05:40 PM
Last Updated : 07 Sep 2025 05:40 PM
இந்தியா மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் அன்றைய காலகட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது தான் ‘நம்ப முடியாத நாட்குறிப்புகள்’ எனும் இத்தொடர். அந்த வகையில் என் நினைவில் இருந்தவை, குறித்து வைத்திருந்தவை, வரலாற்று ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து முக்கியமான நிகழ்வுகளை செய்தித் துளிகள் போல் உங்களுடன் பகிர்ந்து வருகிறேன். இந்தத் தொடர் உருவாக மற்றொரு முக்கியமான காரணியாக விளங்குவது ஈழத் தமிழர் பிரச்சினை. இந்தக் கட்டுரைத் தொடர் வெளிவருவதற்கு உந்துதலாக இருந்ததும் ஈழத் தமிழர் பிரச்சினைதான் என்று சொன்னால் அது மிகையில்லை.
இனிவரும் தொடர்களில் ஈழத் தமிழர் பிரச்சினை, பிரபாகரன், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற பல்வேறு ஆயுதக் குழுக்களைப் பற்றி சொல்லப் போகின்றேன். அதற்கு ஒரு முன்னுரையாக... முகவுரையாக கீழே தரப்பட்டுள்ள கட்டுரை இருக்கும் என்று நம்புகிறேன். ‘துரையப்பா படுகொலையும் தமிழ்த் தேசியப்பரப்பில் ‘துரோகி’ மொழியாடலும்’ என்ற தலைப்பில் ‘அரங்கம் செய்திகள்’ என்ற இணையதளப் பக்கத்தில் வெளியான இந்தக் கட்டுரையை எழுதியவர் ராகவன் ஆவார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகாவாக இருந்தவர் ராகவன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்தவர். சென்னை பாண்டிபஜாரில் 1982-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை சம்பவத்தைத் தொடர்ந்து, இவரும் பிரபாகரனுடன் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஜாமீனில் வெளியே எடுத்தவன் அடியேன்தான்.
பிற்காலத்தில் பிரபாகரனுடன் கருத்து மாறுபட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறினார் ராகவன். பாண்டிபஜார் துப்பாக்கிச் சண்டை வழக்கில் பிணை கிடைத்த பின்னர், பிரபாகரன் மதுரையில் நெடுமாறன் வீட்டிலும், ராகவன் புதுக்கோட்டையிலும் தங்கியிருந்தனர். பின்பு இயக்கத்தை விட்டு வெளியேறி திருமணமாகி லண்டன் நகரில் வசித்து, பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று விட்டார் ராகவன்.
இப்போது அவர் தானுண்டு, தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் ‘அரங்கம் செய்திகள்’ இணையதளத்துக்கு அவர் எழுதியுள்ள ‘துரையப்பா படுகொலையும் தமிழ்த் தேசியப்பரப்பில் ‘துரோகி’ மொழியாடலும்’ என்ற நீண்ட கட்டுரை பழைய வரலாறுகளைச் சொல்லுகின்றது. எனவே அந்தக் கட்டுரையை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். இதற்காக ‘அரங்கம் செய்திகள்’ இணையதளத்துக்கும், நண்பர் ராகவனுக்கும் எனது நன்றி.
ஆனால், ஒன்றை மட்டும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்... இந்தக் கட்டுரையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஆயுத குழுவைச் சார்ந்தவர்கள் பற்றியும் கூறியுள்ள ஒருசில கருத்துகளில் நான் மாறுபடுகிறேன். இதில் கூறப்பட்டுள்ள எல்லா விடயங்களையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஈழப் போராளி பிரபாகரன் என்னோடு தங்கியவர். என்னுடைய சகாவாக இருந்தவர். என்னை ‘அண்ணன்’ என்று அன்புடன் அழைப்பார். இப்படியான நிலையில் அவரைப் பற்றியான எதிர்மறையான கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. இனி அந்தக் கட்டுரைக்குள் செல்வோம்...
அல்ஃபிரட் துரையப்பாவின் அரசியல் படுகொலை நிகழ்ந்து 50 வருடங்கள் கடந்தோடிவிட்டன. 27 ஜுலை 1975 அன்று விடுதலைப் புலிகளின் ஏகத்தலைவராகப் பின்நாளில் உருவான எனது முன்னாள் சகா பிரபாகரன் மற்றும் மூன்று நபர்கள் இக்கொலையில் ஈடுபட்டனர். நான் இக்கொலையில் நேரடிப் பங்குதாரர் இல்லையெனினும், தமிழ்த் தேசியப் பாதையில் தடைக்கல்லாக விளங்கிய ‘துரோகி’ ஒருவர் கொல்லப்பட்டார் என ஆழ்ந்த மனத்திருப்தியடைந்தேன் என்பதில் ஐயமில்லை.
இக்கொலையின் பின்பு, பிரபாகரன் எனது கிராமமான புன்னாலைக்கட்டுவனுக்கு வந்திருந்தார். ஏறத்தாழ ஒரு வருடம் வரைக்கும் எனது பாட்டி வீட்டில் வைத்து அவரைப் பாதுகாத்தேன். 50 வருடங்கள் கடந்து இச்சம்பவத்தை மீட்டிப் பார்க்கையில் இக்கொலையானது அர்த்தமற்றது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்கவில்லை என்பேன்.
அரசியல் படுகொலை - துரையப்பா
தமிழ்த் தேசியக் கருத்தாடலில் 1975-ல் நிகழ்ந்த துரையப்பாவின் அரசியல் படுகொலை துரோகி ஒழிப்பாகச் சித்தரிக்கப்படுகிறது. 1970 காலப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கருத்தாடலுடன் முரண்பட்டு, இலங்கை அரசின் உதவியைபெற்றுத் தனது தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகச் செயற்பட்ட துரையப்பாவின் அரசியல் பங்களிப்பானது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான ‘துரோகி’ என்ற பிம்பத்தைக் கட்டியது. மாற்றுக்கருத்துகளைக் கருத்தாயுதம் கொண்டு எதிர்கொள்வதை விடுத்து ‘துரோகி’ என்ற சித்தரிப்பு மூலம் அரசியல் நகர்வை மேற்கொண்ட ஆபத்தான போக்கு இது.
ஆரம்பத்தில், சுயேட்சை வேட்பாளராகப் பாராளுமன்றத் தேர்தலிலும் யாழ்ப்பாண மேயர் தேர்தலிலும் துரையப்பா போட்டியிட்டார். 1960-ல் யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டு,1965 வரை பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றினார்.
1970 தேர்தல் மும்முனைப்போட்டியாக இருந்தது. தமிழ் காங்கிரஸ் வேட்பாளர், தமிழரசுக் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் துரையப்பா என நிகழ்ந்த மும்முனைப்போட்டியில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் மார்ட்டின் வெற்றி பெற்றார். வெறும் 56 வாக்குகள் வித்தியாசத்தில் துரையப்பா இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
யாழ்ப்பாணத் தொகுதியில் அவருக்கான அரசியல் செல்வாக்கு பலமாகவே இருந்தது. இதன்பின்பு, அதே வருடத்தில் யாழ்ப்பாண மேயர் தேர்தலில் துரையப்பா போட்டியிட்டு வெற்றியடைந்தார். ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணை பெற்றுக் கிடைத்த தேர்தல் வெற்றிகளை, அரசநிதிகளை பெற்றுத் தனது தொகுதிக்கான முன்னேற்றத்துக்காகத் துரையப்பா பயன்படுத்தினார். யாழ் நூலக நிர்மாணம், நவீன சந்தை போன்றவை அவரது வளர்ச்சிப் பணிகளுக்கான எடுத்துக்காட்டுகள்.
ஆனால், தமிழ்த் தேசியப் பரப்பில் - முக்கியமாக விடுதலைப் புலிகளின் பார்வையில் - துரையப்பா தமிழ்த் தேசியத்துக்கு ஆபத்தான துரோகி. எனவே அவரைக் கொன்றது வீரச்செயல். எனது நோக்கம் இந்த இரு வேறு கருத்துருவாக்கங்களை விவாதிப்பதல்ல. மாறாக, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ‘துரோகி’ என்ற கருத்துருவாக்கம் வரலாற்று ரீதியாகவும் சொற்சிலம்பத்தூடாகவும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதை அணுகுவதே எனது நோக்கு.
‘துரோகி’ எனும் பதம்
‘துரோகி’ எனும் பதம் தமிழ் அரசியலுக்கு மட்டும் தனித்துவமானதல்ல. மாறாக, ‘துரோகி’ என்பது பல்வேறு மொழிகளிலும் தொன்று தொட்டுப் பயன்படுத்தப்படும் பதம். ‘துரோகி’ எனும் பதத்தின் கருத்து நிலையானதல்ல. ஒரு குறிப்பிட்ட சமூக - அரசியல் வரலாற்றுப் பின்னணியில் கட்டமைக்கப்படும்போது, அதன் அர்த்தம் சூழலுக்கேற்ப மாறுபடும் தன்மையைக் கொண்டது.
விசுவாசத்தின் மீது கட்டப்பட்ட நெறிகள், மதிப்பீடுகள் அல்லது அரசியல் பற்றுறுதிகள் மீறப்படுவது துரோகமாகச் சித்திரிக்கப்படுகிறது. எனவே, ‘துரோகி’ எனும் பதமானது அரசாலும் அரசு சாரா அமைப்புகளாலும் ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் கட்டப்படும் சமூக அரசியல் தளத்தில் அர்த்தம் பெறுகிறது.
தமிழ்த் தேசியக் கருத்தாடலில் ‘துரோகி’
தமிழ்த் தேசியவாதக் கருத்தாடலில் ‘துரோகி’ என்ற சொல்லின் அர்த்தம் பரப்புரைகளில் பழித்துரைத்தலுடன் கட்டப்பட்டு, அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மூலம் செயற்படுத்தப்படுகிறது. பின்பு அது இயல்பாக்கமடைந்து தமிழ்த் தேசியக் கருத்தாடலின் அங்கமாகிறது.
‘துரோகிகளுக்குக் கிஞ்சித்தும் இரக்கம் காட்டப்படமாட்டாது; தாயகத்தின் தூய்மையைப் பாதுகாக்க அவர்களை அகற்றுதல் அவசியம்; அவர்களின் அழிப்பு சமூகச் சுத்திகரிப்புக்கான முதற்படி; களைகள் நீக்கப்படவேண்டும்’ என்பதுவே தமிழ்த் தேசியவாதத்தின் தாரக மந்திரம்.
அதிகாரப்பூர்வமான தமிழ்த் தேசியக் கதையாடலில், அரசுடன் இணக்க அரசியல் செய்பவர் அல்லது அரச ஆதரவாளர்களாக கருதப்படுபவர்கள் அனைவரும் துரோகிகளே. தமிழரின் உரிமைக்கு குந்தகம் விளைவிப்பவர் என்பதே ‘துரோகி‘ எனும் பதத்தின் வரைவிலக்கணம். துரோகிப் பட்டம் சூட்டப்படுபவர் அரசின் ஆதரவாளராகப் படிமப்படுத்தப்படுகிறார்.
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் தேச அரசு கட்டுமானம், சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகளை மறுத்து ஓரங்ககட்டப்பட்டதன் விளைவின் வளர்ச்சிப்போக்கில், தமிழ்த்தேசியக் கருத்தியல் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வேருன்றியது.
1949-ல் தமிழரசுக் கட்சியின் தொடக்கமே தமிழ்த் தேசியத்தின் ஊற்றுக்கண். எனினும் தமிழரசுக் கட்சியானது முஸ்லிம் - மலையக மக்களை உள்ளடக்கிய ‘தமிழ் பேசும் மக்கள்’ எனும் கருத்துருவைக் கோட்பாடாக முன்வைத்தது. இக்கோட்பாடு 1976-ல் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் எனும் தமிழ் ஈழப் பிரகடனத்துடன் முடிவுக்கு வந்து, இனரீதியான தேசியவாதமாக மாற்றமடைந்தது.
தமிழ் ஆயுத அமைப்புகளும் சுயாட்சிக் கழகமும் தமிழர் தாயகக் கருத்தியலை 1970-களில் முன்னெடுத்திருப்பினும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1976 தமிழீழப் பிரகடனம் ஒருவகையில் ஆயுத அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கான இணக்கப்பாடாகவும், இன்னொரு வகையில் அரசுக்கு விடுக்கப்படும் அரசியல் சவாலாகவும் அமைந்தது.
ஐக்கிய இலங்கையில் ‘சமஸ்டி’ என்பதே ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியின் கோட்பாடாக இருந்தது. தமிழ் இனம் என்ற தனித்துவமான இனத்துவ கருதுகோளை விடுத்து ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற கோட்பாட்டையே தமிழரசுக் கட்சி முன்னெடுத்தது. 1970 வரை ‘துரோகி’ என்ற சொல்லாடல் தமிழரசுக் கட்சியின் அகராதியில் இருக்கவில்லை என்றே கூறலாம்.
‘அரசுடன் பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வு; அந்த கோரிக்கைகள் நிறைவேறாவிடின் அறப் போராட்டம்’ என்பதே தமிழரசுக் கட்சியின் தந்திரோபாயம். உதாரணமாக, 1965-ம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சிக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவைத் தமிழரசுக் கட்சி வழங்கி, மு.திருச்செல்வம் அமைச்சரானார். எனவே, தமிழ் ஈழத்துக்கு எதிரானவர்கள் அல்லது அரசுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற ‘துரோகி’ அரசியல் கருத்தாடல் 1970 வரை எழவில்லை எனலாம்.
1970: சொற்சிலம்ப மாற்றமும் நடவடிக்கைகளும்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் கூட்டில் அமைந்த ஐக்கிய முன்னணியானது மே 1970 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும், தமிழ் காங்கிரஸ் 3 ஆசனங்களையும் அத்தேர்தலில் கைப்பற்றின.
பிரித்தானியக் காலனித்துவத் தொடர்ச்சியில் இருந்து முற்றிலும் வெளியேறும் வகையில் குடியரசு நிறுவுவதற்கான அறிவிப்பும், சுயபொருளாதாரக் கொள்கையும், தேசியமயமாக்கலும் ஐக்கிய முன்னணியின் கொள்கையாகயிருப்பினும், சிங்களப் பெரும்பான்மைவாத அரசியல் தொடர்ந்தது. தமிழரசுக் கட்சியின் ‘சமஸ்டி’ கோரிக்கை நிராகரிக்கப்பட்ட காரணத்தால், அரசியலமைப்புச் சபையில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது.
இலங்கை அரசானது தமிழரசுக் கட்சியின் 6 அம்சக்கோரிக்கைகளை நிராகரித்ததன் பின்னணியில் 1972-ல் தமிழர் ஐக்கியக் கூட்டணி உருவாகியது. இதனைத் தொடர்ந்து, குடியரசுக்கு எதிரான பகிஸ்கரிப்பாக செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்ததுடன், தனிநாட்டு கோரிக்கைக்கான குரல்கள் எழுந்தன.
தமிழ்த் தேசியவாத இளைஞர்களின் - முக்கியமாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களின் - பொறுமையின்மையை நிவர்த்திக்கவும், சிறுபான்மை இனங்களின் குறைகளை அரசு பொருட்படுத்தாத நிலையை எதிர்க்கவும் மே 1976-ல் தமிழர் ஐக்கிய கூட்டணி, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாகப் பெயர் மாற்றம்பெற்றுத் தனிநாட்டுக் கோரிக்கைத் தீர்மானம் நிறைவேறியது.
இக்காலப்பகுதியில், 1970-ல் தரப்படுத்தல் முறையைப் பல்கலைக்கழக அனுமதியில் அரசு நடைமுறைப்படுத்தியதற்கு எதிராகச் சத்தியசீலன் தலைமைமையில் ‘தமிழ் மாணவர் பேரவை’ உருவாக்கப்பட்டது. தமிழ் மாணவர்கள், சிங்கள மாணவர்களைவிட அதிக புள்ளிகள் பெற வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிராக மாணவர் பேரவை கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்தது.
தமிழரசுக் கட்சியும் அதன் பின்னரான தமிழர் ஐக்கிய கூட்டணியும் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி இருப்பினும், வன்முறை அரசியலை அவர்கள் ஆரம்பத்தில் வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை. தரப்படுத்தலுடன் சேர்ந்து மாவட்டரீதியான ஒதுக்கீட்டை அரசு பின்னர் அறிவித்ததால் வன்னி, மட்டக்களப்பு போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் பயன்பெற்றிருப்பினும், யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட தமிழ்த் தேசியர்களால் இது கவனத்தில் எடுக்கப்படவில்லை.
இக்காலப்பகுதியில், கூட்டணியில் நம்பிக்கை இழந்த யாழ்ப்பாண தமிழ்த் தேசியவாத இளைஞர்கள் வன்முறையை நாடத் தலைப்பட்டு, அரசுடன் சேர்ந்து இயங்கியவர்கள் எனக் கருதப்பட்டவர்களைத் துரோகிகளாக்கி, அவர்களை இலக்கு வைக்கத் தொடங்கினர்.
இந்த மாற்றத்திற்கு முத்திரை பதித்தவர்களில் ஒருவர் ஆயுத அமைப்புகளின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான சிவகுமாரன். அப்போது அமைச்சராக இருந்த சோமவீர சந்திரசிறி ‘தமிழர்களும் சிங்களவர்களும் கலாச்சாரத்தால் பெரும்பாலும் ஒன்றுபட்டிருக்கின்றனர்’ எனக் கூட்டமொன்றில் பேசியதைக்கேட்டு ஆத்திரமுற்ற சிவகுமாரன், ஜூலை 1971-ல் அவரது காருக்கு வெடிகுண்டு வைத்தார். சந்திரசிறி காருக்குள் இருக்கவில்லை.
சந்திரசிறி ஒரு சிங்கள அமைச்சர்; அவர் ‘துரோகி’ என்ற பாதாகைக்குள் அடங்கமாட்டார் எனினும், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் கலாச்சார இணைப்பு இருக்கின்றது எனும் எந்த ஒரு பரிந்துரையையும் பொறுக்க முடியாத தனித்துவ இனத்துவ அரசியலுக்கான ஆரம்பத்தை இது கட்டியம் கூறுகிறது. இதன் வளர்ச்சிப்போக்கில் துரோகிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் கருத்தாடல் இயல்பாக்கம் பெறுகிறது.
(குறிப்பு - இந்த கட்டுரை தகவல்கள் எனது கருத்தாக்கம் அல்ல… இது பார்வைக்கு மட்டுமே!)
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம்: விருதுநகர் தொகுதியில் காமராஜரின் வெற்றி வியூகம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 53
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT