Published : 06 Sep 2025 06:51 PM
Last Updated : 06 Sep 2025 06:51 PM
சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக காமராஜர் ஆட்சி நடத்தி வந்தார். இந்நிலையில் 1957-ம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது. விருதுநகர் தொகுதியில் காமராஜர் போட்டியிட்டார். போட்டிக் களம் கடுமையாக இருந்தது. பல்வேறு முணுமுணுப்புகள், குமுறல்கள் கட்சிக்குள் எதிரொலித்தன. காமராஜருக்கு எதிராக காங்கிரசில் பலர் கலகக் குரல் எழுப்பியிருந்தனர் என்பது குறித்தும், அவர்கள் பிரிந்து ‘சீர்திருத்தக் காங்கிரஸ்’ என்ற கட்சியைத் தொடங்கினார்கள் என்பது குறித்தும் முன்னரே கூறியிருந்தேன்.
குறிப்பாக டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, கோசல்ராம் போன்றவர்கள் காமராஜரோடு முரண்பட்டு இருந்தாலும், இவர்கள் இருவரும் காங்கிரசிலேயே இருந்தார்கள். கோசல்ராம் பிற்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காமராஜர் எங்களை ஏமாற்றி விட்டார். இருந்தாலும் சென்னை மாகாண முதலமைச்சரான அவருக்கு நாங்கள் துணை நிற்போம்’ என்று கூறி அவர்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர்.
பொதுத் தேர்தல் காமராஜருக்கு பெரும் சவாலாகவே இருந்தது. அவரை எதிர்த்து சீர்திருத்த காங்கிரஸ் சார்பில் ஜெயராம் ரெட்டியார் களத்தில் குதித்தார். அத்தொகுதியில் காமராஜருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது. காரணம், அத் தொகுதியில் நாயுடு மற்றும் ரெட்டியார் சமூகத்தினர் கணிசமாக இருந்தனர். நாயுடு சமூகத்தினர் எஸ்.ராமசாமி நாயுடு பின்னே இருந்தனர். இவருக்கும் காமராஜருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால் 1957 தேர்தலில் போட்டியிட்ட அவர், 1967-ல் மீண்டும் போட்டியிட காமராஜர் வாய்ப்பு தரவில்லை. பின்னாளில் சுதந்திரா கட்சி சார்பில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் சட்டமன்றத்துக்குச் சென்றார். இவர் சிவகாசி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.ஜெயலட்சுமியின் தந்தையாவார்.
பின்னாளில் எஸ்.ராமசாமி நாயுடு மறைந்தபோது, அந்த சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் என்னுடைய உறவினர் சங்கரபாண்டியபுரம் சீனிவாச நாயக்கர், சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது திமுகவுடன் கூட்டணி அமைத்து சுதந்திரா கட்சி போட்டியிட்டது என்பதெல்லாம் வேறு கதை!
இந்த எஸ்.ராமசாமி நாயுடு, சி.சுப்பிரமணியத்தின் வகுப்புத் தோழர் ஆவார். பெரியசாமி தூரன் போன்ற பெருந்தகைகள் பலர் இவருடன் படித்தவர்கள்தான். விருதுநகர் தொகுதியில் காமராஜருக்கான வெற்றிவாய்ப்பு பலவீனமாக இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்தன. மேலும், காங்கிரஸ் சார்பில் தேர்தல் பொதுக்கூட்டங்களும் சரிவர நடத்தப்படவில்லை.
பொதுவாகவே விருதுநகர் தொகுதியில் நாடார் சமுதாயத்தினரின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருந்தது. இத்தகைய சூழலில் சி.சுப்பிரமணியத்தை அழைத்த காமராஜர், தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். மேலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், எஸ்.ராமசாமி நாயுடுவுடன் கலந்து பேசி தேர்தல் பணிகளை மேற்கொண்டு, நிலமைகளைச் சரி செய்யுமாறும் வலியுறுத்தினார்.
நண்பர் என்ற முறையில் எஸ்.ராமசாமி நாயுடுவைச் சந்தித்த சி.சுப்பிரமணியம், தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏன்? என்று விசாரித்தார். அதற்கு அவர், “தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராஜர், தோல்வியடைய நான் எப்படி துணை போவேன்? மேலும் காமராஜர் தோல்வியடைவது சென்னை மாகாணத்துக்கு நல்லதல்ல, காங்கிரசுக்கும் நல்லதல்ல...” என்று பதிலளித்தார்.
மேலும், வேதாரண்யம் வேதரத்தினம், புதுக்கோட்டை வல்லத்தரசு, திருச்செந்தூர் கே.டி.கோசல்ராம், பழனிசாமி கவுண்டர், டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் காமராஜருக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இவ்வாறு இருக்கும்போது என்னால் என்ன செய்யமுடியும்?’’ என்று சி.சுப்பிரமணியத்திடம் குறைபட்டுக்கொண்டார் எஸ்.ராமசாமி நாயுடு. அதற்கு சி.எஸ். ‘அவற்றையெல்லாம் போகப்போக சரி பண்ணிவிடலாம்’ என்று பதிலளித்தார். இருந்தபோதும் காமராஜர் தன்னிடம் சரியாகப் பேசுவதில்லை, அன்பு பாராட்டுவதும் இல்லை என்ற மனவருத்தம் எஸ்.ராமசாமி நாயுடுவுக்கு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அதை அவர் ஒரு போதும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
சி.சுப்பிரமணியம் கோவை பகுதியில், கொங்கு வேளாளர் பிரிவைச் சார்ந்தவர். இருந்தபோதும் திண்டுக்கல்லைச் சேர்ந்த நாயுடு வகுப்பைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே அவர் எஸ்.ராமசாமி நாயுடு போன்ற முக்கியத் தலைவர்களோடு எப்போதும் தொடர்பில் இருந்தார். அவர்களுக்குள் நல்ல நட்பும் இருந்தது. அதனால்தான் எஸ்.ராமசாமி நாயுடுவுடன் பேச சி.சுப்பிரமணியத்தை தூது அனுப்பினார் காமராஜர்.
சி.எஸ். சந்திப்புக்குப் பிறகு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டினார் எஸ்.ராமசாமி நாயுடு. 2 நாட்கள் தொகுதி முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நிலமைகளை எல்லாம் சரிசெய்து, காமராஜர் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக சி.சுப்பிரமணியத்திடம் ராமசாமி நாயுடு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காமராஜருக்கு இந்த செய்தியை தெரிவித்து, அவரை ராமசாமி நாயுடுவோடு தொலைபேசியில் பேச வைத்ததும் சி.சுப்பிரமணியம்தான்.
தேர்தல் முடிவுகள் வந்தன. விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான காமராஜர் வெற்றி பெற்றார். இருந்தபோதும் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருந்தது. காமராஜரை எதிர்த்து ஜெயராம் ரெட்டியார் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அந்தத் தேர்தலில் எஸ்.ராமசாமி நாயுடு போன்றவர்கள் காமராஜரை தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்ற தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், முதலமைச்சராக இருந்த காமராஜர் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தேர்தல் பணியாற்றி, காமராஜரை வெற்றிபெற வைத்தனர். இப்படியாக விருதுநகர் தொகுதியில் காமராஜரின் வெற்றி அன்றைக்கு அமைந்தது.
1957-ம் ஆண்டு நடைபெற்ற அந்தத் தேர்தலில் திமுக சார்பில் 15 பேர் வெற்றிபெற்று அண்ணா தலைமையில் சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. அக்கட்சிக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பி.ராமமூர்த்தி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சீர்திருத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 26 பேர் வெற்றி பெற்றனர்.
சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் கடும் வாதங்களை எடுத்து வைத்தனர். ராஜாஜி அமைச்சரவையில் இருந்த யு.கிருஷ்ணாராவ், காமராஜர் அமைச்சரவையிலும் தொழில்துறை அமைச்சராக நீடித்தார்.
1957-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு யு.கிருஷ்ணாராவ் சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த யு.கிருஷ்ணாராவ் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்டாலும், மற்றொரு பிராமணரான ஆர்.வெங்கட்ராமன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அதே தொழில்துறை, தொழிலாளர் நலன் மற்றும் மின்சாரத் துறை வழங்கப்பட்டது. பிராமண சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறை ஏற்படாதவாறு காமராஜர் பார்த்துக் கொண்டார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் எல்லோருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்பட்டது. முதல் பேரவைத் தலைவராக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த சிவசண்முகம் பிள்ளை நியமிக்கப்பட்டார். அவர் வடசென்னையில் வாழ்ந்த அரிசன வகுப்பைச் சார்ந்தவர். பின்னாளில் அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த லூர்தம்மாள் சைமன், தூத்துக்குடி விக்டோரியா, கடையநல்லூரைச் சேர்ந்த மஸ்ஜித் ஆகியோரும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவம் எந்த வேற்றுமையும் இல்லாமல் வழங்கப்பட்டு சமூக நீதி நிலைநாட்டப்பட்டது என்பதை உணர வேண்டும் என மறைந்த ஏ.எஸ்.பொன்னம்மாள் என்னிடம் கூறியது உண்டு. ஜெகஜீவன் ராம், சஞ்சீவய்யா, ஆசாத் போன்ற ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின தலைவர்கள் மத்திய அரசின் அதிகார மைய பொறுப்புகளில் இருந்தனர். அதேபோல் கல்வி நிறுவனங்கள், அரசு பணிகளிலும் எந்த விதத்திலும் சமூக நீதி தமிழகத்தில் 67 காலகட்டம் வரை நிலைநாட்டப்பட்டது. இன்று கூறப்படுவதுபோல், திராவிடக் கட்சிகள் வந்துதான் சமூக நிதி நிலைநாட்டப்படுகிறது என்ற கூற்றில் உண்மையில்லை. பெரியாருக்கு முன்பே சமூக நீதியை நிலைநாட்டியவர் ஓமந்தூரார். அதனால் அவர் பெரியாருக்கெல்லாம் பெரியார் ஆவார்.
ராஜாஜி அமைச்சரவை காலத்தில் இருந்தே பிராமணர் மீதான எதிர்நிலை அரசியல் தொடங்கியது. குறிப்பாக பெரியார் அதை முன்னெடுத்தார். அதைத்தொடர்ந்து திமுகவும் மேற்கொண்டது. அதேபோல் திமுகவைப் பற்றி அதிகம் விமர்சித்ததும் பெரியார்தான். பெரியாரை அதிகமாகப் பழித்ததும் திமுகவினர்தான் என்பது வேறு விஷயம். பெரியாருக்கும் திமுகவினருக்கும் இடையே நடந்த வாக்குவாதங்கள், அறிக்கைகள் எல்லாம் எழுத்து வடிவில் இன்றைக்கும் ஆதாரங்களாக உள்ளன. கி.வீரமணி கூட திமுக மீதும், கருணாநிதி மீதும் அறிக்கைகள் வாயிலாக கடும் தாக்குதல்களை மேற்கொண்டார். அது விடுதலையிலும் வெளிவந்தது.
திமுகவினரை ‘கண்ணீர் துளிகள்’ என்றும், தேசத்துக்கு விரோதமானவர்கள், சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள், அயோக்கியர்கள் என்றும் தரம் தாழ்த்தி பெரியார் விமர்சித்ததுண்டு. அதேபோல் திமுகவினரும் பெரியாரை விட்டுவைக்கவில்லை. அந்த அளவுக்கு கடுமையாகச் சாடினர். பெரியாரும் திமுகவினரும் ஒருவரையொருவர் சாடியதுபோல் மற்ற இயக்கங்கள் இவர்கள் மீது சாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1967-ல் அண்ணா அமைச்சரவை அமைந்த பிறகுதான், பெரியார் - திமுக இடையே இருந்த கருத்துவேறுபாடுகள், முரண்கள் எல்லாம் முடிவுக்கு வந்தன.
காமராஜர் ஆட்சிக்கு முன் முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூர் ரெட்டியார், ராஜபாளையம் குமாரசாமி ராஜா அடுத்ததாக வந்த ராஜாஜி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பக் கல்வியில் தனி கவனம் செலுத்தப்பட்டது. அந்தப் பொறுப்பு வெங்கடாச்சலபதியிடம் ஒப்படைக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பொதுவாக கிராமங்களில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான பள்ளிகளும், அதிக மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 1 முதல் 8 வரையிலான பள்ளிகளும் அன்றைக்கு தொடக்கக் கல்வியாக இருந்தன.
அன்றைக்கு ஆசிரியர்களை செகண்டு கிரேடு, ஹையர் கிரேடு என்று பிரித்திருந்தார்கள். எஸ்எஸ்எல்சி முடித்த பின்னர் 2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து வெற்றி பெற்றால் ஹையர் கிரேடு ஆசிரியர்களாகலாம். 8-ம் வகுப்பு முடித்து, ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தால் செகண்டு கிரேடு ஆசிரியராகலாம் என்று இருந்தது. இப்படியாக அன்றைக்கு கல்வி முறை இருந்தது.
மற்றொரு கவனிக்கப்படக் கூடிய விஷயம் ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் பற்றியதாகும். பஞ்சாயத்து ஒன்றியத்தில் ஆசிரியர் மாறுதல் எல்லாம் அந்தந்தப் பஞ்சாயத்து யூனியனின் நிர்வாகத்திலேயே இருந்தது. இன்று இருப்பதுபோல் அரசியல் தலையீடும், சிபாரிசுகளும் அன்றைக்குத் தேவைப்படவில்லை. அன்றைக்கு பஞ்சாயத்து யூனியன் தலைவர் அல்லது பஞ்சாயத்து யூனியன் ஆணையரைப் பார்த்தாலே எந்தவித லஞ்ச லாவண்யம் இல்லாமல் எளிதாக மாறுதல் வாங்கி விடலாம். என் தந்தையாரே பலருக்கு இடமாறுதல் வாங்கிக் கொடுத்தார் என்பது என் நினைவு.
அதேபோல் பள்ளிக் கல்விக்காக ஒரு ஆய்வாளர் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இருப்பார். பள்ளி நிர்வாகம் பஞ்சாயத்து யூனியன் ஆணையரிடம் இருந்தாலும், ஒவ்வொரு பள்ளிக்கும் அந்த ஆய்வாளர் சென்று ஆய்வு நடத்துவார்.
நாங்கள் எல்லாம் அவ்வாறான ஆரம்பப் பள்ளியில் படித்துதான் இன்றைக்கு இந்த நிலைமையில் உள்ளோம். கல்வியில் எந்த குறைபாடும் இல்லை. நான் அரசியலுக்கு வந்துவிட்டதால் எந்த அரசு பதவிக்கும் செல்ல முடியவில்லை. ஆனால் என்னுடன் படித்த நண்பர்கள் பலர் பெரிய பெரிய அரசு பதவிகளில், தனியார் நிறுவனங்களில் அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டனர். பலர் வெளிநாடுகளில் பணியாற்றி அங்கு பிரஜா உரிமை பெற்று பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் படிக்கும்போதெல்லாம் 6-ம் வகுப்புக்குப் பிறகுதான் ஆங்கிலப் பாடமே கற்பிக்கப்பட்டது. 6 வயதுக்குப் பிறகுதான் பள்ளிகளில் சேர்க்கப்பட்டோம்.
ஆனால், இன்றைக்கு நிலை என்ன...? குழந்தை 3 வயது ஆனவுடனேயே பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி என்று அனுப்பி விடுகின்றனர். விளையாடக் கூடிய வயதில் பள்ளிக்குச் செல்கின்றனர். குழந்தைகள் முதல் 5 ஆண்டு காலம் பெற்றோருடன் இருந்து விளையாடி. உரையாடி மகிழ வேண்டும். 6-வது வயதில்தான் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். இதுதான் நம் மண் மற்றும் கலாச்சாரத்துக்கு ஏற்றது. நான் எஸ்எஸ்எல்சி படிக்கும் வரை ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் புவியியலும், வரலாறும் அடங்கிய சமூகப் பாடம் ஆகிய பாடங்கள் மட்டுமே இருந்தன. அதோடு 4 நோட்டுகள்... இவைதான் புத்தகப் பையில் இருக்கும். ஆனால் இன்றைக்கு எல்கேஜி, யுகேஜி படிக்கும் குழந்தைகள் கூட சுமக்க முடியாத அளவுக்கு புத்தகங்களை முதுகில் சுமந்து செல்கின்றனர்.
கிராமங்களில் முக்கிய சேவகா என்ற பெண்ணும், சமூக சேவகா என்ற பெண்ணும் மக்களை அடிக்கடி சந்திப்பது உண்டு. அவர்கள் பெண்கள் நலப் பிரச்சினைகள், மருத்துவ ஆலோசனைகளையெல்லாம் வழங்குவார்கள். இது 1967 வரை நடைமுறையில் இருந்தது.
காமராஜர் ஆட்சியின்போது கழக உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவை 6 முதல் 8 மைல்களுக்கு இடைவெளியில் செயல்பட்டன. இன்றைக்கு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. நாளடைவில் மாணவர்கள் அதிக தூரம் நடந்து சென்று சிரமப்படக் கூடாது என்ற எண்ணத்தில் 2 - 3 மைல்கள் இடைவெளியில் உயர்நிலைப் பள்ளிகள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டன.
காமராஜர் காலத்தில் கல்வி சீர்திருத்தம் முக்கிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பக்தவத்சலம் இருந்தார். சில காலம் சி.சுப்பிரமணியமும் கல்வி அமைச்சராக இருந்து உண்டு. உயர் நிலைப் பள்ளியில் தமிழ் பண்டிட், இந்தி பண்டிட், டிராயிங் மாஸ்டர் என ஆசிரியர்கள் இருந்தார்கள்.
அன்றைக்கு ஆசிரியர்களுக்கான ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. மாகாணத்தில் ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட மாகாண கல்வித் துறைக்கு சுமார் ரூ.19 லட்சம் என்ற அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆசிரியர் வேலைவாய்ப்பு முறைப்படுத்தப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகப் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஏழைக் குழந்தைகளுக்காக மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் கூடங்கள் அமைக்கப்பட்டன. விளையாட்டு திடல்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களின் உடல் நலத்திலும் கவனம் செலுத்தப்பட்டது.
அதேபோல் விவசாயத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் பிஎஸ்சி விவசாயம் படித்த பட்டதாரி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவரின் கீழ் உதவி விவசாய அதிகாரிகள் செயல்பட்டனர். என்னென்ன உரங்கள் போடலாம்? எந்த வகையான பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தலாம்? என்று ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் திட்டமும் இருந்தது. இவ்வாறாக கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கல்லூரிகளுக்குள் புகுந்த அரசியல்
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து நாட்டு நலன் கருதி காங்கிரசுக்கு ஆதரவாக ஒரே குரலில் மாணவர்கள் போராடினார்கள். சட்டப்பேரவைக்குள் திமுக நுழைந்த பின்னர், கல்லூரிகளிலும் அரசியல் பரவத் தொடங்கியது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை சேர்த்தால்தான் கட்சி வளர்ச்சி அடையும் என்ற நோக்கில் கல்லூரி மாணவர்களை அரசியல்படுத்த திமுகவினர் முயன்றனர்.
இத்தகைய சூழலில் மத்திய அறிவியல் ஆய்வு மற்றும் கலாச்சாரம் விவகாரத் துறை அமைச்சராக இருந்த ஹுமாயூன் கபீர், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் அரசியல் கட்சிகளில் சம்பந்தப்படாமல் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அரசியலில் தலையிட்டு தங்களுடைய படிப்பை பாழ்படுத்திக் கொள்வது நல்லதல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் அன்றைய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவாக சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக இருந்த பி.வி.சுப்பா சாஸ்திரி கடிதம் எழுதினார்.
மத்திய அமைச்சரின் கடிதத்தை எதிர்த்த திமுக, “மாணவர்களுக்கென்று தனிப்பட்ட உரிமை இருக்கிறது. தனக்கு விருப்பப்பட்டால் அரசியலுக்கு வரலாம். அதேபோல் கல்லூரி ஆண்டு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சித் தலைவர்களை அழைக்க உரிமை உண்டு” என்று தங்கள் நிலைப்பாட்டை கூறியது.
அப்போது கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், “மாணவர்கள் அரசியல் பேசலாம், விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அதேநேரம் திமுக போன்ற கட்சிகள் கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடையே அரசியலைப் புகுத்தி பிளவை ஏற்படுத்துவது நல்லதல்ல” என்றார். தமிழக கல்வி அமைச்சரின் இந்த முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்தனர்.
(தொடர்வோம்...)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT