Last Updated : 06 Sep, 2025 08:46 AM

1  

Published : 06 Sep 2025 08:46 AM
Last Updated : 06 Sep 2025 08:46 AM

இலவச திட்டங்கள் மீதான நிர்மலா சீதாராமன் பார்வை - விவாதம் தேவை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘சில அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு இலவசத் திட்டங்களை கொண்டு வருவதாக தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்க முடியாமல் திண்டாடுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தால், மத்திய அரசு நிதி தரவில்லை என்று எளிதில் பழிபோடுகின்றன. இலவச வாக்குறுதிகளை அளிக்கும் முன் அதற்கான நிதி ஆதாரம் குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அவர் பேசியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மதிய உணவு, காலை உணவுத் திட்டம், இலவச மடிக்கணினி, உயர்கல்வி நிதியுதவி என ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதுபோன்று பல்வேறு மாநில அரசுகளும் இலவசத் திட்டங்களை செயல்படுத்தி அதில் பல திட்டங்கள் மக்களின் பாராட்டைப் பெற்று, பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படும் அளவுக்கு பிரபலமடைந்து வரும் நிலையில், மத்திய அமைச்சரின் விமர்சனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற தேர்தல் வாக்குறுதியை அண்ணா அறிவித்ததே, இந்திய அரசியல் வரலாற்றின் முதல் இலவசம் வழங்குவதற்கான தேர்தல் வாக்குறுதியாகும். அரிசிப் பஞ்சம் இருந்த காலகட்டத்தில் இத்தகைய வாக்குறுதியை அளித்து திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தது. காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சி ஒன்றிடம் முதல் முறையாக தோல்வியடைந்ததும் இந்த தேர்தலில் தான். அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகளின் முன்னோடி என்ற முறையில் மத்திய அரசின் கருத்துக்கு பதில் சொல்லும் கடமை தமிழகத்திற்கு உண்டு.

தமிழகத்தின் இலவச திட்டங்களை மற்ற மாநிலங்கள் மட்டுமின்றி, மத்திய அரசே பின்பற்றியிருக்கிறது. கடந்த 2013 டில்லி சட்டசபை தேர்தலில் இலவச மின்சாரம், தண்ணீர் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. பாஜக-வும் மத்திய பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரா, டில்லி மாநில தேர்தல்களில் இலவச வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில், மத்திய அமைச்சரின் கருத்து விமர்சனத்திற்குரியதாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அதிக இலவசத் திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்களாக பஞ்சாப், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களே உள்ளன. இலவசத் திட்டங்கள் அனைத்தும் தவறானவை என்று முழுமையாக ஒதுக்கித் தள்ளி விட முடியாது. இலவச மடிக்கணினி, இலவச பாடப் புத்தகங்கள், மிதிவண்டி உள்ளிட்ட பல திட்டங்களை ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களாகவே கருத வேண்டும். இருந்தாலும், அதற்கான நிதி ஆதாரங்களை ஒதுக்குவது பற்றிய நியாயமான கவலை குறித்து மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் ஆரோக்கியமான விவாதங்களை நடத்தி, இலவச திட்டங்களுக்கு வரையறை வகுப்பதில் தவறில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x