Published : 01 Sep 2025 09:34 AM
Last Updated : 01 Sep 2025 09:34 AM
பெட்ரோல், டீசலில் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலந்து விற்பனை செய்துவரும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக புதுப்பிக்கப்பட்ட எரிபொருளாக எத்தனால் முன்மொழியப்படுவதால், பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், சுற்றுச்சூழல் மாசடைதல் கணிசமாக குறையும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
இதுபோன்று எத்தனால் கலந்து வெளிவரும் பெட்ரோல், டீசலை பயன்படுத்தும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து சமீபகாலமாக ஒருபுலம்பல் வெளிவரத் தொடங்கியுள்ளது. தற்போது விற்பனைசெய்யப்படும் பெட்ரோல், டீசல் முன்பிருந்ததைப் போல் எரிபொருள் திறனுடன் இல்லை, எத்தனால் கலப்பதால் வாகனத்தின் இன்ஜின் மற்றும் உதிரிபாகங்கள் சேதமடைகின்றன என்ற கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அவை சமூக வலைதளங்கள் மூலம் வேகமாக பரவுவதால், அந்த கருத்தில் உண்மை இல்லை என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மறுத்துவருகிறது. இந்திய ஆட்டோமொபைல் ஆய்வு கூட்டமைப்பு, இந்திய பெட்ரோலிய பயிற்சி மையம் ஆகியவை நடத்திய ஆய்விலும் வாகனங்கள் சேதமடைவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட இத்துறையைச் சேர்ந்தவர்களும் அரசின் கருத்தையே வழிமொழிகின்றனர். இருந்தாலும் வாகன ஓட்டிகளின் புலம்பல் நின்றபாடில்லை.
பெட்ரோல் பயன்படுத்துபவர்களில் 61 சதவீதம் பேர் இருசக்கர வாகன ஓட்டிகளாகவும், 34 சதவீதம் பேர் நான்கு சக்கர வாகன ஓட்டிகளாகவும் இருக்கும் நிலையில், அவர்களது குரலை முற்றிலுமாக புறந்தள்ளுவது நியாயமாகாது. கார்பன் – டை – ஆக்சைடு உமிழ்வு குறைவு என்பதால் சுற்றுச்சூழல் நலன் கருதி எத்தனாலை கலப்பது நல்ல நோக்கமாக இருந்தாலும், பெட்ரோலும், எத்தனாலும் ஒரேசெயல்திறனுடன் வாகனத்தில் செயல்படுகிறதா என்பதை கவனிப்பதும் முக்கியம்.
எரிபொருள் உற்பத்தி செய்யும் சக்தியில் இருந்தே வாகனங்கள் இயங்குகின்றன. இந்த சக்தியைMEGAJOULE(MJ) என்ற அளவீட்டில் கணக்கிடுகின்றனர். பெட்ரோலில் இருந்து ஒரு லிட்டருக்கு 32.6 MJ திறன் கிடைக்கிறது. ஆனால், எத்தனாலில் 21 MJ என்ற அளவிலேயே திறன் உற்பத்தியாகிறது. டீசலில் இருந்து ஒரு கிலோவுக்கு 42.6 MJ கிடைப்பதே அதிகபட்சமாகும். பெட்ரோல், டீசலில் குறைந்த திறனை உற்பத்தி செய்யும் எத்தனாலை கலக்கும்போது, இயற்கையாகவே அந்த எரிபொருளின் திறன் குறைந்து விடுகிறது.
அதுமட்டுமின்றி, மத்திய, மாநில வரிகள் காரணமாக அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை வாகன ஓட்டிகள் வாங்கி வரும் நிலையில், உற்பத்தி திறன் குறைந்த எத்தனாலையும் கலந்து அதற்கு பெட்ரோல், டீசலுக்கு இணையான விலையை வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. எத்தனாலை ஊக்குவிக்க வேண்டுமென்றால், பெட்ரோல், டீசலை தனியாகவும் எத்தனாலை தனியாகவும் விற்பனை செய்ய வேண்டும். எதை வாங்கி பயன்படுத்துவது என்ற உரிமை வாகன ஓட்டிகளுக்கு இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT