Published : 31 Aug 2025 06:21 PM
Last Updated : 31 Aug 2025 06:21 PM
ராஜாஜியின் மீது சிலர் தனிப்பட்ட முறையில் குறைகள் கூறினாலும், அரசை, அமைச்சரவையை நிர்வாகம் செய்வதில், வழிநடத்துவதில் கைதேர்ந்தவர் ராஜாஜி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஒரு பிரச்சினையோ, கோப்புகளோ தன்னுடைய பார்வைக்கு வரும்போது, அதனுடைய முழு விவரங்கள், அதன் தன்மை, அதன் மூலம் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை ஆராய வேண்டும்.
மேலும் சட்டங்கள், நடைமுறைகள் ஒருபுறம் இருந்தாலும் அதன் நியாயத் தன்மையை சீர்தூக்கிப் பார்த்து அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ராஜாஜி. தன்னுடைய அமைச்சரவை சகாக்களும் அதையே பின்பற்ற வேண்டும் என விரும்பினார்.
அதேபோல் எல்லாப் பிரச்சினைகளையும் அந்தத் துறை அமைச்சர்களே தன்னிச்சையாகச் செயல்பட்டு தீர்க்க வேண்டும். அதில் அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதில் சுயநலமோ, ஒருபக்க சார்போ, பிரதிபலன் எதிர்பார்ப்போ இருக்கக் கூடாது. தங்களுடைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்பும் வகையில் அரசின், அமைச்சர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதற்கு மாறாக அமைச்சர்கள் செயல்பட்டால் அவர்கள் பாவம் செய்தவர்கள் ஆவார்கள். மக்களைக் காக்கும் தகுதியை அவர்கள் இழந்து விடுவார்கள். அமைச்சர் என்பவர் ஒரு நீதிமன்றத்தின் நீதிபதி போல அனைத்து விஷங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று ராஜாஜி அடிக்கடி சொல்வதுண்டு.
அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. அது நேர்மறையானதாக இருக்க வேண்டும். சமூக நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். என்னுடைய அமைச்சரவை சகாக்கள் என்னை திருப்திப்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்கக் கூடாது. தீர ஆராய்ந்து நியாயமான முடிவுகளை மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டங்களில் ராஜாஜி அறிவுறுத்துவார்.
ராஜாஜியின் சிந்தனைகள் பற்றிய நூல்களைப் படித்தால் அவருடைய எண்ண ஓட்டங்கள் நமக்குத் தெரிய வரும். அவருடைய ‘சுயராஜ்யா’ பத்திரிகையில் கருத்தாழமிக்க கட்டுரைகள், செய்திகளைப் படித்தபோது ஆச்சரியப்பட்டேன். எனக்கு என்றைக்குமே ‘ரோல்மாடல்’ ராஜாஜிதான். அவருடைய ‘சுயராஜ்யா’ பத்திரிகையில் வெளிவந்த தலையங்கங்களின் 5 தொகுப்புகளையும் நான் படித்துள்ளேன். என்ன ஆழமான கருத்துகள்... என்ன வகையான ஆங்கில நடை...! மலைத்துப் போய்விட்டேன். அரசியல் குறித்து அறிய விரும்புபவர்கள் அந்த 5 தொகுதிகளைப் படித்தால் போதும்... அரசியல் தெளிவு பெற்று விடுவார்கள்!
பட்ஜெட் குறித்து ராஜாஜி கூறும்போது, “என்னய்யா... பட்ஜெட்... பட்ஜெட்.. என்கிறீங்க... பிரிட்டிஷ் கால வழக்கப்படி ஒரு தோல் பையில் அறிக்கைகளை கொண்டு வர்றீங்க... பட்ஜெட்னா என்ன... நம்முடைய வரவு செலவு கணக்குகளைப் பார்க்குறோம்... அதுக்கு மக்கள் மன்றத்துல அனுமதி வாங்குறோம்... மக்களைப் பாதிக்காத வகையில எப்படி வரி போடணும்... அதன் மூலமா வரும் தொகையில் நயா பைசா கூட வீணடிக்காமல் மக்கள் நலத் திட்டங்களுக்கு செயல்படுத்தணும்... அதுதானே பட்ஜெட்டின் கருப்பொருள்.
பிரிட்டிஷாருக்கு தாய் நாடாளுமன்றம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம்தான். அதை வெஸ்ட் மினிஸ்டர் சிஸ்டம்னும் சொல்றாங்க... அங்கு உச்ச பதவியில் ராணி இருக்கிறார். ஆனால் நாம் குடியரசு நாடு. இங்கு குடியரசுத் தலைவர் இருக்கிறார். மக்கள் குரலை பிரதிபலிக்க நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் இருக்கு... இப்படியிருக்கையில பிரிட்டிஷார் நடைமுறைப்படி பட்ஜெட்... பட்ஜெட்.. என்றுதான் சொல்லணுமா... நிதிநிலை அறிக்கையின்னு சொல்ல வேண்டியதுதானே” என்று சி.சுப்பிரமணியத்திடம் ராஜாஜி கேட்டதுண்டு.
ஆனால், ராஜாஜியின் இந்த கருத்து அவரது ஆட்சியின்போது செயல்படுத்தப்படவில்லை... அடுத்து வந்த காமராஜர் ஆட்சியின்போது நிதியமைச்சராக வந்த சி.சுப்பிரமணியம், ‘பட்ஜெட்’ என்பதை ‘நிதிநிலை அறிக்கை’ என்று குறிப்பிட்டார்.
சென்னை மாகாணத்தின் முதல்வராக காமராஜர் பதவியேற்ற பின்னர் சென்னை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
1955-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆண்டுக் கூட்டத்தை சென்னையின் ஆவடியில் நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டுப் பொறுப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக் கொண்டது. காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே இந்த மாநாடு நடைபெறுவதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
சென்னை மாகாணத்தில் எந்த இடத்தில் மாநாட்டை நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. முடிவில் சென்னை நகரைச் சுற்றியுள்ள இடங்களில் ஆவடி சரியான தேர்வாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் சென்னை - பம்பாய் ரயில்பாதை மார்க்கத்தில் ஆவடி அமைந்துள்ளது. மேலும் சென்னை மாநகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள அப்பகுதி பெரிய நகரமாக அன்றைக்கு இல்லை. திறந்தவெளி பரப்பு இருந்ததால் 4 கி.மீ. சுற்றளவில் ஒரு நகரமாக உருவாக்கப்பட்டது. இந்நகருக்கு ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் காமராஜர் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டன. டிவிஎஸ் நிறுவனத்தின் டி.வி.சுந்தரம் அய்யங்கார், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைவர் ராம்நாத் கோயங்கா, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மிராசுதார் தியாகராஜ முதலியார் ஆகியோரைக் கொண்ட குழுவை காமராஜர் அமைத்தார். இக்குழு இரவு பகலாக மாநாட்டு வேலைகளை மேற்கொண்டது.
இந்த மாநாட்டில் கதர் கிராமத் தொழில் பொருட்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்து அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் சென்னை ஆவடியை நோக்கி படையெடுத்தனர். ‘ஆல் ரோட்ஸ் லீட்ஸ் டூ ரோம்’ என்பார்களே... அதுபோல் அன்றைக்கு ஆவடியை நோக்கி தொண்டர்களும், தலைவர்களும் அணிவகுத்தனர். அனைத்து செய்தித்தாள்களிலும் மாநாடு பற்றிய செய்திகளே ஆக்கிரமித்திருந்தன.
கூட்டம் நடந்த இடத்துக்கு ‘சத்தியமூர்த்தி நகர்’ என்று தனது குருவின் பெயரைச் சூட்டினார் காமராஜர். காங்கிரஸ் கமிட்டி தலைவர் யு.என்.தேபர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். யூகோஸ்லோவேகியா நாட்டின் அதிபர் மார்ஷல் டிட்டோ சிறப்பு அழைப்பாளாக இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசும்போது, “இந்தப் பிரம்மாண்டக் கூட்டத்தைப் பார்த்து உண்மையிலேயே நான் வியந்து போனேன். என் சார்பிலும், என் நாட்டு மக்களின் சார்பில் இந்த மாநாட்டுக்கு முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நாட்டின் எதார்த்தத்தை, மக்களின் கலாச்சார பண்பாடுகளைக் காண நான் இங்கு வந்துள்ளேன். எங்கள் நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வளர்ச்சி சம்பந்தமான பிரச்சினைகளை மிகவும் கடினமான சூழலில் சமாளித்து வருகிறோம்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், உலகப் போருக்கு முன்பு எங்கள் நாடு பிளவு பட்டு இருந்தது. அதன்பிறகுதான் நாங்கள் ஐக்கியமானோம். அதுதான் எங்கள் வெற்றிக்கான காரணம். அதேபோல் பல்வேறு மொழிகள், பலதரப்பட்ட இனங்கள் இருந்தாலும் ஒன்றுபட்ட இந்தியாவாக இருப்பதைப் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியா தற்போது வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சோசலிச அமைப்பை நோக்கி உங்களை இந்நாட்டுத் தலைவர்கள் அழைத்துச் செல்ல இருக்கிறார்கள் என்பதை நான் உணர்கிறேன். இந்தியா மேன்மேலும் வளர வேண்டும் என்று சக நண்பனாக, ஒரு சகோதரனாக இந்த மாநாட்டின் வாயிலாக இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்த நாடு வாழ்க, இந்திய மக்கள் வாழ்க, உலகத்துக்கே இந்தியா வழிகாட்டட்டும்” என்று பேசினார். அவரின் இந்தப் பேச்சு எல்லோராலும் பாராட்டப்பட்டது.
நேரு காலத்தில் காங்கிரசில் இருந்து விடுதலைப் போராட்டத்துக்கு முன்பும், பின்பும் பலர் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சென்று விட்டார்கள். அப்போது காங்கிரசில் இருந்து விலகிய ஆச்சார்யா நரேந்திர தேவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன், கிருபளானி, லோகியா போன்றவர்கள் காங்கிரசோ, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கமோ இந்தியாவை சோசலிச வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லாது என்றனர்.
மேலும், நேருவுக்கு சோசலிசம் மீது நம்பிக்கை இல்லை. அவர் மேலை நாட்டு தொழில் வளர்ச்சியைத்தான் விரும்புவார். நமக்கு விவசாயமும் வேண்டும், தொழில் வளர்ச்சியும் வேண்டும். விவசாயத்தை நேரு அழித்து விட்டார். எனவே நாங்கள் சோசலிஸ்ட்களாக வெளியேறுகிறோம். நம் மண், மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட ஜனநாயக சோசலிசம் முக்கியம் என்று கூறி, ‘சோசலிஸ்ட் கட்சி’ என்ற கட்சியைத் தோற்றுவித்தனர்.
மேலை நாட்டுக்கு ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டு நேரு மீது பொதுவான பார்வையாக இருந்தது. அதை உடைத்து, சோசலிசப் பாதையைக் கடைப்பிடிக்கப் போகிறேன் என்பதை நாட்டு மக்களுக்கு, உலகத்துக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே ஆவடி காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் சோசலிசம் என்ற கொள்கை பிரகடனத்தை தீர்மான வடிவில் அன்றைக்கு காங்கிரஸ் வெளியிட்டது.
அதேநேரம் காங்கிரசை விட்டு வெளியேறிய சோசலிஸ்ட் கட்சியினர், கம்யூனிஸ்ட்களை தீவிரமாமக எதிர்த்தார்கள். ஏனென்றால், அன்றைக்கு ரஷ்யாவில் லெனின் கடைப்பிடித்த கொள்கைகளோ, அதன்பின் வந்த ஸ்டாலினுடைய ஆட்சியோ மக்களுக்கான ஆட்சி அல்ல. அவர்கள் கோட்பாடுகள் மக்களுக்கு உகந்ததாக இல்லை. அதேபோல் சீனாவிலும் மக்கள் நலக் கோட்பாடுகள் இல்லை.
இந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை. ரஷ்யா, சீனா, கியூபா மற்றும் ‘யூரோ கம்யூனிசம்’ என்று சொல்லப்படுகின்ற ஐரோப்பிய நாடுகளிலும் குறிப்பாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து போன்ற நாடுகளிலும் என்ன நடக்கிறது என்பது வெளியுலகத்துக்குத் தெரியாமல் இரும்புத் திரை போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றம்சாட்டினர்.
இத்தகைய சூழலில்தான், ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் சோசலிச பாணி, சோசலிச சமுதாயம் என்ற வார்த்தைகளைப் பிரகடனப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு நேரு தள்ளப்பட்டார். அந்த வகையில் சோசலிசம் என்ற கொள்கை காங்கிரஸில் கருவுற்றது இந்த ஆவடி மாநாட்டில்தான்.
இந்த மாநாட்டில் ராஜாஜியும் கலந்து கொண்டார். அதேநேரம், சோசலிசக் கொள்கையை ராஜாஜி எதிர்த்தார். ‘எல்லோருக்கும் கல்வி என்ற முறையை எப்படி கொண்டு செல்லப்போகிறோம்?’என்ற கேள்வியை எழுப்பினார் ராஜாஜி. அதேபோல் சர்வதேச பிரச்சினை குறித்த தீர்மானத்தை அவர் முன்மொழிந்தாலும் சோசலிசத்தை அவர் ஆதரிக்கவில்லை.
“இந்த சோசலிசம் பொருளாதாரத்தின் மீது, அரசாங்கத்தின் மீது கட்டுப்பாடுகளை அதிகரிக்க வழிவகுக்கும். பெர்மிட் - லைசென்ஸ் - கோட்டா ராஜ்ஜியத்துக்கு வழிவகுக்கும். இது ஊழல் பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்லும். சுயராஜ்யம் என்றால் என்ன? நமக்கு நாமே ஆண்டு, நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் சுயராஜ்யம். இன்றும் நாம் கல்வியில் மேம்படவில்லை. அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யவில்லை” என்று கூறினார். இத்தகைய முரண்பட்ட கருத்துகள் கொண்ட ராஜாஜி படிப்படியாக காங்கிரசில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். நேருவுடனான நட்பும் பின்னடைவைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவடி காங்கிரஸ் மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நேருக்கு மிக்க மகிழ்ச்சியையும், திருப்தியையும் கொடுத்தது இந்த மாநாடு. உண்மையில் உயிர் துடிப்பு மிக்க மாநாடாக விளங்கியது. மாநாட்டுக்காகப் போடப்பட்ட மிகப் பிரம்மாண்டமான பந்தல், அங்கு திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் என்ற நிலையில், காங்கிரஸ் வரலாற்றில் சத்தியமூர்த்தி நகர் தவிர்க்க முடியாததாகி விட்டது.
‘மிகவும் கவர்ச்சிகரமாக என்னை ஈர்த்த அரசியல் மாநாடு’ என்று நேரு பெருமிதத்துடன் கூறினார். இந்த மாநாடு வெற்றி பெற கடுமையாக உழைத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யு.என்.தேபர், சென்னை மாகாண முதலமைச்சர் காமராஜர் மற்றும் மாநாட்டுக் குழுவினரை வெகுவாகப் பாராட்டினார் நேரு. ‘சோசலிசமும், சென்னையும், சென்னை மாகாணமும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டது’ என்று நேரு பெருமிதம் கொண்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் சில சுவாரஸ்யமான தகவல்களும் அன்றைய செய்தித்தாள்களில் வெளிவந்தன.
காலை உணவுக்காக பெரிய பெரிய அண்டா சைஸில் இருந்த இட்லி பாத்திரங்களை வைத்து ஆயிரக்கணக்கான இட்லிகள் தயார் செய்யப்பட்டன. வடை, சாம்பார், சட்னி, எண்ணெய் பொடியுடன் சுடச்சுட பரிமாறப்பட்டன. தொடர்ந்து ஃபில்டர் காபியும் வழங்கப்பட்டது.
மதியம் விருந்தாக அரிசி சாதம், சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், அவியல், பலவகையான பொரியல், கூட்டு வகைகள் இடம்பெற்றிருந்தன. யாருக்கும் எந்தக் குறையும் ஏற்படாமல், உணவு இல்லை என்ற குற்றச்சாட்டு இல்லாமல் தாராளமாக அனைவருக்கும் பரிமாறப்பட்டன.
முக்கிய விருந்தினர்கள், அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள், மற்றும் சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், கடற்கரைக்குச் சென்று வர போக்குவரத்து வசதிகள் என அனைத்தும் மிக விரிவாக செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் முதலமைச்சர் காமராஜர் மற்றும் ராம்நாத் கோயங்கா, சுந்தரம் அய்யங்கார், தியாகராஜ முதலியார் தலைமையிலான குழுவினர் பம்பரமாகச் சுற்றி சுழன்று வேலை செய்தனர்.
இப்படியாக ஆவடி காங்கிரஸ் மாநாடு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. இந்த மாநாடு ஒரு வருடத்துக்கும் மேலாக தேசிய அளவில் பேசு பொருளாக இருந்தது என்றால், எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக நடந்திருக்கும் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்நிலையில், அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் ராஜாஜிக்கும் காங்கிரசுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்தன. சோவியத் யூனியன் அணுகுண்டுகளை தயாரித்துக் குவித்துக் கொண்டிருப்பதை ராஜாஜி கடுமையாக எதிர்த்தார். அதேநேரம் நேரு தலைமையிலான இந்திய அரசு சோவியத் யூனியனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தது.
இதற்கிடையே, அமெரிக்காவும், சோவியத் யூனியனும் அணுகுண்டுகளை குவிக்கக் கூடாது என்று இந்தியா சார்பில் தூதுக்குழு இரண்டு நாடுகளுக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இரண்டு தூதுக் குழுக்கள் சென்றன. ராஜாஜி தலைமையில் ஒரு குழு அமெரிக்காவின் வாஷிங்டனுக்கும் மற்றொரு குழு ரஷ்யாவின் மாஸ்கோவுக்கும் சென்றது.
இரண்டு நாட்டு அதிபர்களையும் சந்தித்த இக்குழு, அணுகுண்டுகள் தயாரிப்பு, அணு ஆயுதங்கள் குவிப்பு வேண்டாம், மனித நேயம் தழைத்தோங்க நடவடிக்கை எடுங்கள் என்று ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கி, கோரிக்கை விடுத்தது.
சென்னை மாகாணத்தில் நடத்திய பிரமாண்டமான மாநாடு ஒருபக்கம் இருந்தாலும், தமிழக அரசியல் களத்தை காங்கிரஸ் படிப்படியாக இழந்து கொண்டு வந்தது. ஒரு பக்கம் சீர்திருத்தக் காங்கிரஸ், ராஜாஜியின் மனவருத்தங்கள், மறுபுறம் திராவிட இயக்கங்களின் வளர்ச்சி போன்ற காரணங்களில் 1957-களின் இறுதியில் காங்கிரசின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இதுகுறித்து அடுத்து பார்ப்போம்.
(தொடர்வோம்...)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT