Published : 30 Aug 2025 03:47 PM
Last Updated : 30 Aug 2025 03:47 PM
முதல்வர் வேட்பாளர் போட்டியில் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த சி.சுப்பிரமணியம் இதுகுறித்து கூறும்போது, “முதல்வர் வேட்பாளர் தேர்வில் காமராஜர் போட்டியிடுவார் என்று நான் முதலில் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் அவர் போட்டியிட்டவுடன், ராஜாஜியின் ஆலோசனையின் பேரில்தான் காமராஜருக்கு எதிராகப் போட்டியிட்டேன். பக்தவத்சலமும் என்னை முன்மொழிந்தார்.
முதல்வர் பதவியில் இருந்து ராஜாஜி விலகியதும், நானும் கோவைக்குச் சென்று வழக்கறிஞர் தொழிலை மீண்டும் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தேன். அதேநேரம், காமராஜர் அமைச்சரவையில் என்னைச் சேரும்படி ராஜாஜி உட்பட பலர் வலியுறுத்தினர். ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை. அதேபோல், என்னையும், பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் சேர்க்கும்படி காமராஜரிடம், பிரதமர் நேரு கூறியதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. இருப்பினும் முறையான அழைப்பு வரவில்லை. நானாக வலிய போய் செல்லவும் தன்மானம் இடம் கொடுக்கவில்லை” என்றார்.
இத்தகைய சூழலில், முதலமைச்சர் தேர்தலில் வெற்றி பெற்ற காமராஜர், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், பக்தவத்சலத்தையும் அவரே அழைத்து அமைச்சரவையில் சேர்த்தார். முந்தைய ராஜாஜி அமைச்சரவை போலவே மிகக் குறைந்த எண்ணிக்கையில் காமராஜர் அமைச்சரவை அமைந்தது.
பெரிய மாநிலமாக இருந்த சென்னை ராஜதானியில் இருந்து ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும், கர்நாடகத்துக்கும் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு மாநிலம் வரையறுக்கப்பட்டது. அப்போதைய சூழலில் திருத்தணி நம்மிடம் இல்லை. பின்னாளில்தான் இணைந்தது. அதேபோல் கன்னியாகுமரியும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையும் நம்மோடு இணைந்தன.
சென்னை ராஜதானியப் பகுதிகள் பிரிக்கப்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுருங்கி விட்டது. அப்போது இருந்த சட்ட மேலவையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஏ.லட்சுமண சுவாமி முதலியார், கே.பாலசுப்பிரமணிய ஐயர் போன்ற மிகவும் பிரபலமானவர்கள் மேலவை உறுப்பினர்களாக இருந்தனர்.
ராஜாஜி அமைச்சரவையைத் தொடர்ந்து காமராஜர் அமைச்சரவையிலும் நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சி.சுப்பிரமணியம், தமிழக பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அப்போது ‘நிதி நிலை அறிக்கை’ என்று கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழின் மேன்மையைப் போற்றக்கூடிய வகையில் 1947-ல் இருந்து தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் தமிழ் பயிற்சி மொழி, தமிழ் பாடப் புத்தகங்கள், பிற மொழியாக்கம் செய்த நூல்கள், அறிவியல் தமிழுக்கான சில துறைகள், அதன்மூலம் அறிவியல் தமிழுக்கான நூல்கள் வெளியீடு, பெரியசாமி தூரன் தலைமையில் கலைக்களஞ்சிய தொகுப்புகள், தமிழ் இலக்கியங்கள் என தமிழக அரசின் வெளியீட்டுத் துறை சார்பில் நூல்கள் நல்ல கட்டமைப்போடு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.
“தமிழுக்கு காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்று திராவிட இயக்கங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதேநேரம், நாங்கள் மேற்கொண்டுவரும் தமிழ்ப் பணிகளின் மூலம் அவர்களுக்கு சரியான பதிலடியைக் கொடுத்து வருகிறோம்” என்று சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ராஜாஜி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் காமராஜர். இதற்கிடையே காமராஜர் அமைச்சரவையில் சி.சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் சேர்க்கப்பட்டது காமராஜர் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் குமுறல்கள் ஒருபக்கம் ஒலித்துக் கொண்டு இருந்தன.
இன்னொரு பக்கம், காமராஜருக்கு எதிராக குரல் எழுப்பி காங்கிரசில் இருந்து விலகி, ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் ஆதரவைப் பெற்ற சீர்திருத்தக் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமைந்தது, காமராஜருக்கு தலைவலியாக இருந்தது. அப்போது அண்ணா தலைமையிலான திமுகவுக்கு 15 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால் அவர்களின் முக்கியத்துவம் பற்றி அப்போது பெரிதாகப் பேசப்படவில்லை.
இத்தகைய சூழலில், ராஜேந்திரப் பிரசாத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி தனக்கு வழங்கப்படும் என்று ராஜாஜி எதிர்பார்த்திருந்தார்.
ஏற்கெனவே, 1947-ம் ஆண்டிலேயே சென்னை ராஜதானியின் முதலமைச்சராக ராஜாஜி வருவார் என்று அவர் உட்பட எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், காமராஜர் போன்றவர்களின் ஆதரவால் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், அவரைத் தொடர்ந்து குமாரசாமி ராஜாவும் முதலமைச்சர் ஆகி விட்டனர். அப்போதில் இருந்தே ராஜாஜி - காமராஜர் இடையே பனிப்போரும், கோபதாபங்களும் தொடங்கி விட்டன.
சென்னை மாகாண முதலமைச்சராக காமராஜர் பொறுப்பேற்றதும், கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தினார். அதேபோல் ஆட்சியிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார். தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை உத்வேகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
இந்நிலையில், மக்களவை உறுப்பினராக இருந்த காமராஜர், தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குடியாத்தத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். குடியாத்தம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாகும். இருப்பினும் துணிந்து களத்தில் இறங்கினார் காமராஜர்.
அந்த நேரத்தில், பிராமணரல்லாத வேட்பாளர் காமராஜர் என்று கூறி, அவருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் பெரியார். அதேநேரம் காமராஜரை பெரியார் ஆதரித்தது காங்கிரஸ் கட்சிக்குள் ஒருபுறம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக உயர் சாதியினர், கடவுள் நம்பிக்கையாளர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, காமராஜருக்கு ஆதரவாக பெரியார் ஏன் பிரச்சாரம் செய்கிறார்? காங்கிரசுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, “பெரியாரிடம் இருந்து காங்கிரஸ் எந்த ஆதரவையும் கோரவில்லை. பெரியார் தாமாகவே முன்வந்து காங்கிரஸ் வேட்பாளர் காமராஜரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது. ‘பிராமணர்களுடைய எதிரி காமராஜர்’ என பிரச்சாரத்தில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. அதற்குப் பதிலடியாக, “காமராஜருடைய குருவே பிராமணரான சத்தியமூர்த்திதான். அவரைப் போலவே மத்திய அமைச்சராக உள்ள டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மற்றும் ஆர்.வெங்கட்ராமன் போன்றவர்கள் காமராஜரின் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அப்படியிருக்கையில் பிராமணர்களுக்கு எதிரானவர் காமராஜர் என்ற குற்றச்சாட்டு தவறானது” என காங்கிரஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இன்றைக்கு உள்ள பெரியார் திடல், அப்போது டிராம் வண்டி நிலையமாக இருந்தது. அதை பெரியாருக்கு வாங்கித் தர காமராஜர் முயற்சி எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் தேர்தல் களத்தில் வைக்கப்பட்டது.
அதேபோல் பல விஷயங்களையும், முன்னாள் நடந்த சம்பவங்களை எல்லாம் தோண்டி எடுத்து தேர்தல் களத்தில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, 1948-ல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை, திருவண்ணாமலைக்குச் சென்று சலூன் ரயில் வண்டியில் (சலூன் ரயில் வண்டி என்பது படுக்கை, சமையலறை, குளியலறை மற்றும் ஓய்வறையுடன் கூடிய சிறப்பு ரயில் பெட்டிகள் ஆகும், இது பொதுவாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களுக்காக வடிவமைக்கப்பட்டன.
முன்னர், இவை அதிகாரிகளின் பயணத்திற்காகவும், ஆய்வுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இப்போது பல சலூன் வண்டிகள் சுற்றுலா மற்றும் சொகுசு ரயில்களாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன.) பெரியார் சந்தித்து, மணியம்மையாரை திருமணம் செய்து கொள்வது பற்றி ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார் என்றும், மணியம்மையார் விருப்பப்பட்டால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பெரியாரிடம் ராஜாஜி கூறியதாகவும் அப்போது பேசப்பட்டது.
பொதுமக்களிடம் பெரியார் செல்வாக்கை இழக்க வேண்டும் என்ற மறைமுக நோக்கத்தில்தான் பெரியாருக்கு இவ்விதமான ஆலோசனையை ராஜாஜி கூறினார் என்றும் ஒருசாரார் குற்றம்சாட்டினர். இந்த விவகாரங்கள் எல்லாம் தேர்தல் களத்தில் விவாதங்களாக்கப்பட்டன.
அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை திமுக ஆதரித்தாலும், ‘குணாளா, குடியாத்தத்தில் வெற்றி பெற்று வா’ என்று காமராஜருக்கு வாழ்த்து கூறினார் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய களேபரங்களுக்கு இடையே, கம்யூனிஸ்ட் மண்ணான குடியாத்தத்தில் காமராஜர் வெற்றி பெற்றார்.
தட்சிணப் பிரதேசம் அமைக்க நேரு முயற்சி: மொழிவழி அடிப்படையில் ஆந்திர மாநிலம் மாற்றியமைக்கப்பட்டதைப் போல், மற்ற மாநிலங்களும் மொழிவழி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் உள்ள இந்தியாவில், அந்தந்த வட்டாரங்கள், அமைப்பு ரீதியாக ஆட்சி செய்யும் நில அமைப்பு வேண்டும் என்று வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து மொழிவாரி மாகாணங்கள் அமைப்பதற்கு தார் கமிஷன் அமைக்கப்பட்டது. அதேநேரம் அதன் பரிந்துரைகளை அண்ணல் அம்பேத்கர் எதிர்த்தார். பலமான ஒருங்கிணைந்த மத்திய அரசே வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.
அதுகுறித்து அம்பேத்கர், “இனம், மொழி, இலக்கியம் என்று இறுமாப்பு கொள்ளும் மொழிவழிக் கூட்டங்கள் மூலம் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால் இந்தியா சிதறுண்டு பல நாடுகளாக உருவாகும். இன்று நிலவக்கூடிய சகோதர மனப்பான்மை, நல் உறவுகள் நீங்கி பகைமையை தோற்றுவிக்கும்” என்று எச்சரிக்கை செய்தார். அதேபோல் அரசியல் சட்டப்பிரிவு 370 - காஷ்மீருக்கு தனி அதிகாரம் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். மேலும், இந்தி பிரச்சாரம், இந்தி பரவல் வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அம்பேத்கர் கூறியுள்ளார்.
மொழிவாரி மாநிலம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பேசும்போது, “இந்தியா ஒன்றுபட்ட நிலையில் இருக்க வேண்டும் என்றால், மொழிவாரி மாநிலங்கள் அமையக் கூடாது” என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் பிரதமர் நேரு 2 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டார். முதலாவது தட்சிணப் பிரதேசம். அடுத்தது 6 பெரிய மாகாணங்களைப் பிரிப்பது என்பதாகும். மேற்கு வங்க முதல்வரும் நேருவின் ஆத்மார்த்த நண்பருமான டாக்டர் பி.சி.ராய் போன்ற சில முக்கிய தலைவர்களுடன் கலந்தாலோசித்து மேற்கண்ட 2 திட்டங்களையும் முன்வைத்தார். அதேபோல், மேற்கு வங்காளத்தையும், பீகாரையும் ஒரே மாநிலமாக அமைக்க திட்டமிட்டார். இதற்காக பீகார் முதலமைச்சரோடு ஓர் ஒப்பந்தமும் மத்திய அரசு அப்போது செய்தது.
தட்சிணப் பிரதேசம் என்பது, தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களை இணைக்கும் திட்டமாகும். இந்த திட்டங்கள் குறித்து 1956-ம் ஆண்டில் அமிர்தசரஸ் நகரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் டாக்டர் பி.சி.ராய் முன்னெடுத்த இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. இதற்கான தீர்மானத்தை கோவிந்த வல்லப பந்த் முன்மொழிந்தார். சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் அத்தீர்மானத்தை வழிமொழிந்தார்கள்.
இத்தகைய சூழலில், காமராஜர் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தார். அப்போது இதுகுறித்து காமராஜரிடம் கேட்டபோது, கோவிந்த வல்லப பந்தின் தீர்மானம் பற்றி எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தொடக்கத்தில் கூறினாலும், பின்னாளில் இத்திட்டத்துக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அந்த வகையில், கோவிந்த வல்லப பந்த் தீர்மானம் அன்றைய அரசியல் களத்தில் பேசு பொருளாக இருந்தது.
1962-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகு, ஹைதராபாத் மாநிலம் ஆந்திராவோடு இணைந்தது. அன்றைய நிலையில் இந்தியாவில் 16 மாநிலங்கள் இருந்தன. இதற்கிடையே, மீண்டும் தட்சிணப் பிரதேசம் குறித்து பெங்களூரில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய நேரு, “இந்தத் திட்டத்தை யார் மீதும் திணிக்கப் போவது இல்லை. இது அந்தந்த மாநிலங்களின் விருப்பத்தின் பேரிலேயே நிறைவேற்றப்படும்” என்றார். அதேநேரம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாகாண முதல்வர் காமராஜர், கேரள முதல்வர் கோவிந்த மேனன் மற்றும் கர்நாடக முதல்வர் அனுமந்தையா ஆகியோர், தட்சிணப் பிரதேசம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பிற்பகல் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து காமராஜருக்கு ஒரு தந்தி வந்தது. அந்த தந்தியை அனுப்பியவர் பெரியார். அதில், “தட்சிணப் பிரதேசம் ஏற்படுவதை நான் எதிர்க்கிறேன். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். உங்களுடைய (காமராஜருடைய) ஆளுமை பாதிக்கப்படக் கூடும்” என்று பெரியார் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, பல்வேறு மாநிலத் தலைவர்கள் இத்திட்டத்தை ஏற்பதில் முழு ஈடுபாடு காட்டாததை உணர்ந்த நேரு, இதனால் பின்னாளில் சிக்கல்கள் ஏற்படுமோ என்ற எண்ணத்தில் தட்சிணப் பிரதேச திட்டம் விவகாரத்தில் பின்வாங்கினார். பின்னர் படிப்படியாக அத்திட்டம் கைவிடப்பட்டது. மேலும் பெரிய மாநிலங்கள் அமைந்தால் அதன் நிர்வாகத்தை சீராக நடத்த முடியாது என்பது பலரின் கருத்தாக இருந்தது. இப்படியான நிலையில் பீகாரையும், மேற்கு வங்கத்தையும் இணைக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாமல் போனது.
அதேநேரம், பெங்களூரில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தட்சிணப் பிரதேச திட்டத்தை கொண்டுவந்து அதை செயல்படுத்துவதன் மூலம் காமராஜருடைய செல்வாக்கை குறைக்க சி.சுப்பிரமணியம் முயற்சி செய்தார் என்ற பிரச்சாரமும் ஒருபுறம் நடந்து வந்தது. ஆனால் அதை சி.சுப்பிரமணியம் மறுத்தார்.
இத்தகைய சூழ்நிலையில் ஆவடியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் சோசலிசக் கொள்கை என்ற தனது கோட்பாட்டை காங்கிரஸ் பிரகடனப்படுத்தியது. இந்த மாநாடு குறித்து சற்று விரிவாக அடுத்து பார்ப்போம்...
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம் > முதல்வராக ராஜாஜி எதிர்கொண்ட பிரச்சினைகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 50
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT