Last Updated : 29 Aug, 2025 08:10 AM

15  

Published : 29 Aug 2025 08:10 AM
Last Updated : 29 Aug 2025 08:10 AM

‘கூலி’ - இயல்பாக்கம் செய்யப்படும் வன்முறை

அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கூலி’ திரைப்படம், வசூல் சாதனைகளுக்காக மட்டுமன்றி, அதிர்ச்சியூட்டும் வன்முறைக் காட்சிகளுக்காகவும் பேசப்படுகிறது. ஒரு காலத்தில் திகில் திரைப்படங்களில் இடம்பெற்ற கொடூரக் கொலைகள், இன்றைய திரைப்படங்களின் தெருச்சண்டைக் காட்சிகளில்கூட மிக இயல்பான அம்சங்களைப் போல முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய அத்துமீறல்களின் உச்சமாக ‘கூலி’ திரைப்படம் அமைந்திருக்கிறது. படைப்புத்திறன் வெளிப்பாடு என்று இதைச் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. சமூகத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் போக்கு இது.

பொறுப்பு​ணர்​வின்மை: திரைப்படம் என்பது இயல்பு வாழ்க்கையை அப்படியே பதிவுசெய்​யக்​கூடிய ஊடகம் அல்ல என்பதும், சுவாரசி​யத்​துக்காக இயல்பை மீறிய சித்தரிப்புகள் சேர்க்​கப்​படுவது கலையம்​சத்​தின்​-பொழுது​போக்கின் ஒரு பகுதி என்பதும் நாம் நன்கு அறிந்​தவை​தான். படைப்​பாக்​கத்​துக்குக் கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​படு​வதும் ஏற்க முடியாதது. ஆனால், தனது படைப்பின் மூலம் சமூகத்​துடன் ஊடாடும் ஒரு கலைஞருக்குக் குறைந்த​பட்சப் பொறுப்பு​ணர்வு அவசியம். இதை இன்றைய திரைக் கலைஞர்​களில் பலர் மிகவும் அலட்சி​யத்​துடன் புறந்​தள்​ளுகிறார்கள்.

நாயக பிம்பத்​துக்கு வலுச்சேர்க்​க​வும், திரைக்​கதையின் தர்க்கப் பிழைகள் குறித்துப் பார்வை​யாளரின் மனதில் எழும் கேள்விகளை மழுங்​கடிக்கும் வகையிலும் மிகக் கோரமான வன்முறைக் காட்சிகளைத் தங்கள் படங்களில் இவர்கள் சேர்க்​கிறார்கள். குற்றப் பின்னணி கொண்ட​வர்​களையே தனது படங்களில் முதன்மைப் பாத்திரங்களாக முன்வைக்கும் லோகேஷ் கனகராஜ், அண்மைக் காலமாக இதன் உச்சத்தைத் தொட்டிருக்​கிறார்.

லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தின் கதையை​யும், காட்சிகளையும் ஒருவரிடம் விவரிக்​கும்​போது, அந்த நபரால் வாய்விட்டுச் சிரிக்​காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு எள்ளி நகையாடும் வகையிலான மோசமான எழுத்​தாக்​கத்தைக் கொண்டது. ஆனால், அந்தப் பலவீனத்தை மறைக்க லோகேஷ் கையாண்​டிருக்கும் ஆயுதம்... ஆயுதங்​கள்​தான். கொலைக்கு அஞ்சாத கூலிப்​படை​யினரே பயன்படுத்தத் தயங்கும் கொக்கி, சுத்தியல் போன்ற பயன்பாட்டுக் கருவிகள் இந்தப் படத்தில் கொலைக் கருவி​களாகப் பிரயோகிக்​கப்​படு​கின்றன.

ஒரு காட்சி​யில், அமைதியாக இருக்கும் நாயகன் தேவா (ரஜினி), தன்னை மிரட்டும் அடியாள் ஒருவரைக் கதிகலங்க வைக்க ஆடும் ருத்ர​தாண்​டவம், கொடூரக் கொலைக் காட்சிகளுக்காக இன்றுவரை பேசப்​படும் ‘ஃப்ரைடே தி தேர்ட்​டீன்த்’, ‘டெக்சாஸ் செயின்ஸா மசக்கர்’, ‘ஸா’, ‘தி ஹில்ஸ் ஹேவ் ஐஸ்’ போன்ற ஹாலிவுட் ஹாரர் படங்களின் காட்சிகளையே பின்னுக்குத் தள்ளக்​கூடியது. சாமானியரைப் போலத் தோற்றமளித்து, எதிர்​பாராத தருணத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கதாபாத்​திரங்கள் இன்றைய திரைப்​படங்​களில் அதிகம் காணக் கிடைக்​கின்றன. தேய்வழக்​காகிப்போன (Cliche) இத்தகைய காட்சிகளைக் கூச்சமே இல்லாமல் பெரும் பொருட்​செலவில் காட்சிகளாகப் படைக்​கின்றனர் இன்றைய இயக்குநர்கள் பலர்.

சமூகத்தின் கடமை: தங்கள் பிரத்யேக முத்திரைகள் எனச் சில அம்சங்களை வலிந்து திணிப்பதை இந்த இயக்குநர்கள் தொடர்ந்து மேற்கொள்​கிறார்கள். தர்க்​கரீ​தியில் மிகவும் பலவீனமான காட்சி​அமைப்புகளை வைத்து​விட்டு, அது தொடர்​பாகத் திரைப்படச் சட்டகத்​துக்கு வெளியில், ஊடகப் பேட்டிகளில் அந்தக் காட்சிகளின் பின்னணியில் கருதுகோள்கள் இருப்​பதுபோல் ஊதிப்​பெருக்கு​கிறார்கள். ஆனால், அந்தப் படைப்பில் செய்நேர்த்தியும் திரைக்கதை நம்பகத்​தன்​மையும் இல்லாமல் வெறும் வன்முறையே பிரதானமாக முன்வைக்​கப்​படும்​போது, அதைக் கடுமை​யாகக் கண்டிப்​பதும் புறக்​கணிப்​பதும் ஒரு சமூகத்தின் அடிப்​படைக் கடமை.

ஒரு பெருங்​கூட்டம், எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒற்றைக் கதாபாத்​திரத்தின் வார்த்தைகளைக் கேட்டு வன்முறையில் ஈடுபடு​வதைப் போலவும், முதன்மைக் கதாபாத்​திரங்கள் மேற்கொள்ளும் வன்முறைக்கு இலக்காவது போலவும் தொடர்ந்து முன்வைக்​கப்​படும் காட்சி​யமைப்பு​கள் அபத்தம் என்பதைத் தாண்டி, மிகவும் ஆபத்தானவை​யும்கூட. போதைப்​பொருள் கடத்தல்​காரர்கள், விற்பனை​யாளர்களை எதிர்​மறை​யாகச் சித்தரிக்​காமல் அவர்களின் பராக்கிரமத்தின் புகழ்​பாடும் வகையிலான காட்சிகளைத் தொடர்ந்து முன்வைப்பது, மாணவர்கள் மத்தியில் போதைப்​பொருள் பழக்கம் அதிகரித்து​வரும் இன்றைய காலக்​கட்​டத்​தில், கலைஞர்கள் பொறுப்​பற்று நடந்து​கொள்​வதையே உணர்த்து​கிறது. ‘லியோ’ படத்தில் வன்முறையைத் தூண்டும் காட்சிகளை வைத்தற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்​றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடரப்​பட்டது குறிப்​பிடத்​தக்கது.

ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில், தொழில்முறை (!) எதிரிகளை ஒன்றாக நிற்க​வைத்து அடித்து நொறுக்குவது, வரிசையில் அமரவைத்துச் சுட்டுத்​தள்​ளுவது என்று சித்தரிக்​கப்பட்ட காட்சிகளைப் பார்க்​கும்​போது, தர்க்கம் என்பதையெல்லாம் தாண்டி, இத்தகைய படைப்​பாளிகள் பார்வை​யாளர்களை எந்த அளவுக்கு மலினமாகக் கருதுகின்றனர் என்னும் கேள்வி எழுகிறது. வணிக வெற்றியின் பொருட்டுத் தொடர்ந்து வாய்ப்பு​களைப் பெற்று​வரும் நெல்சன் திலீப்​கு​மாரும் கடுமையாக விமர்​சிக்​கப்பட வேண்டியவர்.

தன்னையும் தனது குடும்பத்​தினரையும் தற்காத்​துக்​கொள்ள யாரை வேண்டு​மா​னாலும் பலி கொடுக்​கின்ற - அதற்காக எந்த வகையிலும் குற்றவுணர்வே கொள்ளாத நாயகியை ‘கோலமாவு கோகிலா’ படத்தில் முன்வைத்த நெல்சன், அடுத்​தடுத்த படங்களில் ரத்தக் களரியின் சதவீதத்தை அதிகரித்​தார். நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில், வெட்டப்பட்ட தலை, கட்டிடத்​துக்கு வெளியே தெறித்து விழும் காட்சியை மக்கள் குடும்பத்​துடன் ‘கண்டு​களித்​தனர்’!

சந்தை மதிப்​புக்​காகச் சமரசம்... - உச்ச நட்சத்​திர​மாகக் குழந்தைகள் மத்தி​யிலும் இன்றுவரை புகழுடன் திகழும் ரஜினி​காந்த், நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தில் ஒருவரின் தலையை வெட்டும் காட்சி சந்தை மதிப்பைத் தக்கவைத்​துக்​கொள்ள ஒரு மூத்த நடிகர் எந்த மோசமான எல்லைக்கும் செல்வார் என்பதற்கு உதாரணம். அப்போதே இப்படியான காட்சி​யமைப்பு​களுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்​தா​லும், அவற்றுக்கு இத்தகைய இயக்குநர்கள் முகங்​கொடுக்க முன்வர​வில்லை.

வன்முறைக் காட்சிகள் தங்கள் பிரத்யேக பாணி என்று வாதிடும் இயக்குநர்கள், தங்கள் படைப்பு​களுக்கு வணிக வெற்றியைத் தாண்டி, சமூகத்தில் அங்கீ​காரத்தையும் கோரி நிற்பது வேடிக்கை. ஹாலிவுட் திரைப்​படங்​களில் சித்தரிக்​கப்​படும் வன்முறைக் காட்சிகள், அமெரிக்​காவில் துப்பாக்கிக் கலாச்​சா​ரத்தை வளர்த்​தெடுப்​ப​தாகக் கடுமையான விமர்​சனங்கள் முன்வைக்​கப்​படு​கின்றன. ஹாலிவுட் படங்களின் வன்முறை அம்சங்களை நகலெடுக்கும் நமது கலைஞர்கள் அத்தகைய படங்கள் குறித்து அங்குள்ள முன்னணி ஊடகங்​களில் வெளியாகும் விமர்​சனங்​களையும் கவனிப்பது நல்லது.

நடைமுறையில் சாதாரணமாகத் தாக்கினால், ஒருவரை அறைந்தால் ஒரு வருடச் சிறைத் தண்டனை வரை கிடைக்கச் சாத்தியம் உண்டு. திரையில் சித்தரிக்​கப்​படுவது எல்லாமே கற்பனைதான் என்று யாராவது உத்தர​வாதம் தர முடியுமா என்ன?

குழந்தை​களிடம் சென்றுசேரும் வன்முறை: இன்றைய ஓடிடி யுகத்தில் பல்வேறு மொழித் திரைப்​படங்களை, தொடர்​களைப் பார்க்கும் திரை ரசிகர்கள், ரசனை மேம்பாட்டில் அடுத்த கட்டத்தை எட்டி​விட்​டனர். இந்தியாவில் தயாராகும் பல வலைத் தொடர்​களில் திரைக்கதை நேர்த்தி​யும், காட்சி உருவாக்​கத்தில் நம்பகத்​தன்​மையும் காணக் கிடைக்​கின்றன. ஆனால், தொழில்​நுட்ப மேம்பாட்டைக் கைக்கொண்டு​விட்ட நமது திரைக் கலைஞர்கள், ஓரளவுக்​காவது நம்பகத்​தன்மை கொண்ட​தாகத் திரைக்​கதையை உருவாக்கு​வதில் கவனம் செலுத்து​வ​தில்லை.

மாறாக, ‘ரத்தம் தெறிக்கத் தெறிக்க’ படம் எடுப்​பதையே முதன்மை நோக்க​மாகக் கொண்டிருக்​கிறார்கள். ‘கூலி’ திரைப்​படத்​துக்கு வயது வந்தோர் மட்டும் பார்க்​கக்​கூடிய வகையில் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்​கப்​பட்​டிருப்பது ஒருவகையில் ஆறுதல் அளிக்​கிறது. ஆனால், ஓடிடி மூலம் வெளியாகும்​போது, இத்தகைய படங்கள் குழந்தை​களிடம் சென்று சேராமல் தவிர்க்​கப்​படுமா என்பது கேள்விக்​குறி.

தொலைக்​காட்​சிகளில் இந்தப் படங்கள் ஒளிபரப்​பாகும்போது இத்தகைய காட்சிகள் (ஒருவேளை) நீக்கப்​பட்​டாலும், கதையின் தொடர்ச்சியே அடிபட்டுப் போய்விடும். அந்த அளவுக்குக் கதைக்குப் பதிலாக அடிப்படைக் கச்சாப் பொருளாக வன்முறையே இன்றைய பல திரைப்​படங்​களில் இடம்பெற்றிருக்​கிறது. இதனால், வன்முறை என்பது இயல்பாக்கம் (Normalization) செய்யப்​படு​கிறது. மனித மனங்கள் செயற்கையாக மரத்துப்போக வைக்கப்படுகின்றன.

அதீத வன்முறைக் காட்சிகளைத் தவிர்த்திருக்​கலாம் என்று சுட்டிக்​காட்டு​வதைத் தாண்டி, ஊடக விமர்​சனங்​களும் இத்தகைய இயக்குநர்​களிடம் காத்திரமான கேள்விகளை முன்வைப்​ப​தில்லை. ஆபத்தான இத்தகைய போக்குக்கு முடிவு​கட்ட, திரையுலகில் சமூகப் பொறுப்புடன் இயங்கும் கலைஞர்கள் முன்வர வேண்டும். தங்கள் ரசனையை மலினப்​படுத்தும் கலைஞர்​களைப் பார்வை​யாளர்கள் புறக்கணிக்கத் தொடங்​கினால் மாற்றம் நிகழலாம்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x