Last Updated : 27 Aug, 2025 06:30 AM

2  

Published : 27 Aug 2025 06:30 AM
Last Updated : 27 Aug 2025 06:30 AM

போக்குவரத்து நெருக்கடியில் இந்திய நகரங்கள் | சொல்... பொருள்... தெளிவு

இந்தியாவின் நகர்ப்பகுதிகள் போக்குவரத்து சார்ந்த கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நடந்துசெல்பவர்கள், மிதிவண்டி பயன்படுத்துபவர்களைப் புறக்கணிக்கும் வகையில் சாலைப் போக்குவரத்து வசதிகள் திட்டமிடப்படுவதால், நகரங்களில் சமத்துவமற்ற சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகக் கடுமையான போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள், காற்று மாசு உள்ளிட்ட ஆரோக்கியமற்ற சூழலை நகரங்கள் எதிர்கொண்டுள்ளன.

​திட்​ட​மிடலின்மை: இந்தியாவில் நகரமய​மாக்கல் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால், வளர்ந்து​வரும் நகரமய​மாக்​கலுக்கு இணையாக நமது சாலை வசதிகள் திட்ட​மிடப்​பட​வில்லை. அதன் விளைவாகவே, தேசிய அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1 லட்சத்​துக்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகின்றன. பெங்களூரு, லக்னோ, டெல்லி, புணே போன்ற நகரங்​களில் சாலைத் திட்ட​மிடல் பிரச்சினை தீவிர​மாகக் காணப்​படு​கிறது.

உதாரணத்​துக்கு, பெங்களூரு தகவல் தொழில்​நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதி. இந்நகரின் முக்கிய சவாலாகப் போக்கு​வரத்து நெரிசல் உள்ளது. இது பயணிகளுக்குப் பயண நேரத்தை அதிகரித்துச் சோர்வை உண்டாக்கு​கிறது. பெங்களூருவில் ஒரு நபர் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்க, 30 நிமிடங்கள் தேவைப்​படு​வ​தாகத் தரவுகள் தெரிவிக்​கின்றன.

லக்னோவில் தனிநபர் வாகன உரிமை​யானது ஆண்டுக்கு 10-12% வளர்ச்சி அடைந்து​வரு​கிறது. ஆனால், இந்நகரில் பொதுப் போக்கு​வரத்து வசதி விரிவாக்கம் மெதுவாகவே நடைபெறுகிறது. மேலும், முறைசாரா மின் ஆட்டோரிக் ஷாக்கள் இயக்கம் - ஒழுங்கற்ற திட்ட​மிடல்​களால் சாலைப் போக்கு​வரத்தில் குழப்பம் அதிகரித்​துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 90க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவுசெய்​யப்​படு​கின்றன. இதில் 88% தனிநபர் கார் - இருசக்கர வாகனங்கள்.

டெல்லி - கொல்கத்தா போன்ற நகரங்களில், போக்குவரத்து அதிகரிப்பினால் மாசு அதிகரித்து, முதன்மைச் சாலைகளின் அருகே வசிப்பவர்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் உண்டாகி, சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் வாகனங்களின் ஆதிக்கமானது நகரங்களில் போக்குவரத்து நெரிசல், விபத்து - மாசுபாடு போன்றவற்றை அதிகரித்து வருகிறது. இந்திய நகரங்​களில், சாலை மேம்பாட்டுக்கான திட்டங்கள் அதிகரித்​துள்ள நிலையிலும், மேற்சொன்ன பிரச்சினைகள் முற்றிலும் தீர்க்​கப்​பட்டு​விட​வில்லை.

நமது சாலைகளும், மேம்பாலங்​களும் நடந்துசெல்​பவர்கள், மிதிவண்டி பயன்படுத்​துபவர்கள், பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்​துபவர்​களுக்குச் சாதகமாக வடிவமைக்​கப்​ப​டாததால் அவர்களின் தேவைகள் பின்னுக்குத் தள்ளப்​பட்​டிருக்​கின்றன. இந்திய நகரங்கள் மக்களின் இயக்கத்​துக்கு முன்னுரிமை அளிக்​காமல், தனிநபர் வாகனங்​களின் இயக்கத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்​கப்​பட்​டுள்ளதே இப்பிரச்சினை​களுக்குக் காரணம் எனத் தரவுகள் குறிப்​பிடு​கின்றன.

வேக வரம்புகள்: நகர்ப்புற இயக்கத் திட்ட​மிடலில் வேகக் கட்டுப்​பாடுகள் முக்கிய​மானவை. ஐரோப்பிய நகரங்​களில் நடந்துசெல்​பவர்​களுக்கும் மிதிவண்டியைப் பயன்படுத்​துபவர்​களுக்கும் பிரத்​யேக​மாகச் சாலை வசதிகள் உள்ளன. ஜெர்மனியின் பெர்லின் நகரத்​தில், பள்ளிகள், குடியிருப்புப் பகுதி​களுக்கு அருகில் வேக வரம்பு 30 கி.மீ. அல்லது 50 கி.மீ. ஆகக் கட்டுப்​படுத்​தப்​பட்​டுள்ளது.

இது நடந்துசெல்​பவர்​களை​யும், மிதிவண்​டியைப் பயன்படுத்​துபவர்​களையும் பாதுகாக்​கிறது. ஆனால், இந்திய நகரங்​களில், உதாரணமாக சென்னை​யில், பல இடங்களில் வேக வரம்பு 60 கி.மீ.ஆக உள்ளது. குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் அல்லது நெரிசலான சந்தைகள் போன்ற இடங்களுக்கு எனத் தனி வேக வரம்புகள் இல்லை. இதனால் விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்​கிறது.

கொல்கத்தா, சமீபத்தில் அறிவியல் அடிப்​படையில் வேக வரம்புகளை அறிமுகப்​படுத்​தியது. நகர்ப்பு​றங்​களில் 50 கி.மீ. என நிர்ண​யித்​ததுடன், சாலையில் ஆபத்து அதிகமுள்ள இடங்களில் வேக வரம்பு குறைக்​கப்​பட்​டுள்ளது. கொல்கத்​தாவின் இம்முயற்​சியைப் பிற இந்திய நகரங்​களும் பின்பற்றி​னால், சாலை விபத்துகள் குறையக்​கூடும் என நிபுணர்கள் தெரிவிக்​கின்​றனர்.

தீர்வுகள்: இந்திய நகரங்​களின் சாலை இயக்கப் பிரச்சினை​களுக்குத் தீர்வு காண, மக்களின் இயக்கத்தை மையப்​படுத்திய திட்டங்கள், அறிவியல் அடிப்​படையிலான கொள்கைகள், ஸ்மார்ட் தொழில்​நுட்​பங்களை ஒருங்​கிணைக்க வேண்டும். நகரின் இயக்கத் திட்டங்களை வடிவமைக்கத் தரவு சார்ந்த ஆராய்ச்சி - பயணிகளின் இயக்கம் சார்ந்த தரவுகளைப் பயன்படுத்த வேண்டும்.

பாதசாரிகள், சைக்கிள் ஓட்டு​பவர்கள், பொதுப் போக்கு​வரத்து வசதிகளைப் பயன்படுத்​துபவர்களை உள்ளடக்கி, நமது சாலைகளை மறுவடிவ​மைப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. உள்கட்​டமைப்பு வசதிகள் மட்டுமே நகர்ப்புற இயக்கச் சவால்​களைத் தீர்த்து​வி​டாது. நமது சாலைகளின் உண்மை நிலையை உணர்ந்து அதற்கேற்ற திட்ட​மிடல்களை வகுக்க வேண்டும் என்பதை மத்திய / மாநில அரசுகள் உணர வேண்டும்.

பெங்களூரு, புணே, சண்டிகர் போன்ற நகரங்​களில் செயற்கை நுண்ணறிவு அடிப்​படையில் சாலை விதிமீறல்​களைக் கண்டறிதல், பொருத்தமான போக்கு​வரத்து சமிக்​ஞைகள், நிகழ்​நேரத் தரவு அமைப்புகள் போன்ற மேம்பட்ட தொழில்​நுட்​பங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் போக்கு​வரத்து விதிமீறல்களை உடனடி​யாகக் கண்டறிந்து அபராதம் விதிக்​கப்​படு​கிறது. சாலை நெரிசலைப் பொறுத்து சமிக்​ஞைகள் தானாக மாற்றியமைக்​கப்​படு​கின்றன.

நகரங்​களில் பாதுகாப்பான, தனியாகப் பிரிக்​கப்பட்ட பாதைகளை மிதிவண்டிகளுக்கு உருவாக்கிய இந்தியாவின் முதல் மிதிவண்டி நட்பு நகரமாக சண்டிகர் உள்ளது; சண்டிகரில் 200 கி.மீ.க்கும் மேல் தனி மிதிவண்டிப் பாதை அமைக்​கப்​பட்​டுள்ளது. இந்தியாவின் மற்ற நகரங்​களில் இவற்றைப் பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஐஐடி, என்ஐடி போன்ற நிறுவனங்கள், நகர்ப்புற இந்தியா​வுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்கு​வதில் அறிவியல்​ரீ​தி​யாகக் கூடுதல் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நகரங்​களில் அதிகரிக்கும் வாகனப் போக்கு​வரத்து காரணமாகத் தீவிர​மாகி​யுள்ள காற்று மாசைக் குறைக்கப் பரந்த சாலைகள், மேம்பாலங்​களைக் கூடுதலாக அமைப்​பதும், மக்களிடம் மின் வாகனப் பயன்பாட்டை ஊக்கு​விப்​பதும் அவசியம். பொதுப் போக்கு​வரத்து வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், தனிநபர் வாகனங்​களைச் சார்ந்​திருப்​பதைக் குறைத்து, நிலையான - சமமான நகர இயக்கத்தை உருவாக்கிட முடியும். இதற்கு அரசு - மக்களின் ஒருங்​கிணைந்த முயற்சி தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x