Published : 25 Aug 2025 07:36 AM
Last Updated : 25 Aug 2025 07:36 AM
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநிலமாநாட்டை அக்கட்சியின் தலைவர் விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். விக்கிரவாண்டியில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் நடந்த முதல் மாநில மாநாட்டில் 5 முதல் 6 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றிருப்பார்கள் என்று காவல்துறையின் ரகசிய கணிப்பு தெரிவித்திருந்தது. தற்போது மதுரையில் நடந்த மாநாடு 500 ஏக்கர் பரப்பளவில் அதைவிட பெரிய அளவில் நடந்து முடிந்திருக்கிறது.
மாநாட்டிற்குச் செல்லும் திருச்சி, தூத்துக்குடி, நெல்லை நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து சென்ற தொண்டர்களின் வாகனங்கள் மட்டும் 1.3 லட்சம் என்று தெரியவந்துள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அமர்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவை அனைத்தும் நிரம்பி பெரிய கூட்டம் கூடியுள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தை விட அதிக தொண்டர்கள் மதுரை மாநாட்டில் கூடியிருப்பது, தமிழக அரசியலில் ஒதுக்க முடியாத அரசியல் சக்தியாக விஜய் உருவாகி விட்டார் என்பதையே காட்டுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், திமுக அணி, அதிமுக அணி என இரண்டு மட்டுமே பலம் பொருந்திய அணிகளாக இதுவரை இருந்து வந்துள்ளன. இத்தகைய அரசியல்சூழ்நிலையை தவெக-வின் வருகை கலைத்துப் போட்டிருக்கிறது. பாஜக எங்கள் கொள்கை எதிரி; திமுக எங்கள் அரசியல் எதிரி என்று பகிரங்கமாக விஜய் அறிவித்துவிட்டார்.
இந்த இரண்டு அணிகளுக்கும் எதிரான ஒரு சக்தியாக அவர் உருவெடுக்கிறார். தற்போதுள்ள சூழலில், திமுகவே பலம் பொருந்திய அணியாக இருக்கிறது. அதிமுக-வும் தவெக-வும் கூட்டணி சேர்ந்தால் திமுக-வை ஆட்டம் காணவைக்க முடியும் என்று அரசியல் கணிப்புகள் வெளிவரும் நிலையில், அதற்கான வாய்ப்புகள் அரிது என்பதையே நடந்து வரும் காட்சிகள் உணர்த்துகின்றன.
அதிமுக-வும், தவெக-வும் அணிசேர வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவரும் நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர்பலவீனமடைந்துள்ள அதிமுக-வின் வாக்குகளையும், விஜயகாந்தின் மறைவுக்குப் பின்னர் பலவீனமடைந்துள்ள தேமுதிக-வின் வாக்குகளையும் குறிவைத்து எம்ஜிஆரையும், விஜயகாந்தையும் புகழ்ந்து பேசி அக்கட்சிகளின் வாக்குகளை தன்பக்கம் ஈர்த்துள்ளார் விஜய். கூட்டணி எதுவும் இல்லாமலேயே அந்தக் கட்சி தொண்டர்களை மட்டும் இழுக்கும் அவரது முயற்சியில் 20 சதவீதம் வெற்றி கிடைத்தாலே அதன்மூலம் விஜய்க்கு பெரும் பலம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வரவிருக்கும் தேர்தலில் தவெக-வுக்கும், திமுக-வுக்கும்தான் போட்டி என்று பறைசாற்றியுள்ள விஜய், திமுக-வுக்குமாற்றாக உருவாகியுள்ள புதிய சக்தி என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றுள்ளார்.
அதிமுக-வை பலம் பொருந்திய கட்சியாக வழிநடத்திய ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரங்களின் போது, அனைத்து தொகுதிகளிலும் அவரே வேட்பாளர் என்று நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்பார். அதேபாணியில் 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என்று அறிவித்து, அதிமுக-வின் வாக்குகளை குறிவைத்து விஜய் எடுத்துவரும் முயற்சிகள் வெற்றிபெறுவதும், தோல்வியடைவதும் வரவுள்ள தேர்தலில்திமுக எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT