Published : 24 Aug 2025 08:09 PM
Last Updated : 24 Aug 2025 08:09 PM
சென்னை மாகாண முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்ற அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இடைத்தேர்தல் வந்தது. இதில் ஆட்சியில் இருந்த ராஜாஜி, இந்தத் தேர்தலில் எப்படியாவது காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்று முனைப்பு காட்டினார். காங்கிரஸ் சார்பில் இளம்பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது பெயர் எனக்கு நினைவில் இல்லை... தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இருந்தபோதும் அந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் வெற்றியும் பெற்றார் . அருப்புக்கோட்டை தொகுதியில் 40 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்தார்கள். அதில் எதிர்த்து நின்ற பார்வார்டு பிளாக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் பெற்றது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியால் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது என்பதையெல்லாம் முன்னரே பார்த்தோம்...
இவையெல்லாம் 1952-ம் ஆண்டில், ராஜாஜி அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலாகத்தான் இருந்தன. கோவை மற்றும் அருப்புக்கோட்டை இடைத்தேர்தல் முடிவுகள் ராஜாஜியை பெரிதும் கவலைக்குள்ளாக்கியது என்றால் அது மிகையில்லை.
அந்தக் காலத்தில் சென்னை ராஜ்தானி ஆந்திராவையும் உள்ளடக்கியதாக இருந்தது. அப்போது ஆந்திராவின் முக்கிய தலைவராக விளங்கிய தென்னட்டி விசுவநாதம் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். ராஜாஜி முறைப்படி சட்டமன்ற உறுப்பினர் ஆகாமல் கொல்லைப்புறம் வழியாக சட்ட மேலவை உறுப்பினர் ஆகி, முதலமைச்சராகி உள்ளார் என்றார். இதுவும் ராஜாஜிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதுதவிர, அந்த சமயத்தில், உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ரேஷன் கடைகளும் சரியாக திறக்கப்படவில்லை.
இவையெல்லாம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஐசிஎஸ் அதிகாரிகளும் ராஜாஜிக்கு உரிய ஆலோசனைகளைத் தரவில்லை. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளிலும், ராஜாஜி ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தார். ஆந்திரா பிரிவினை நேரத்தில் ‘மதராஸ் மனதே’ என்ற தெலுங்கு மக்கள் சொன்னபோது, ஒருக்காலும் சென்னை நகரை ஆந்திராவிடம் விட்டுத்தர முடியாது என்று கறார் காட்டினார். இதுதொடர்பாக பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் கடிதம் எழுதினார். இத்தகைய முன்னெடுப்புகளால்தான் சென்னை மாநகரம் தமிழகத்துக்குக் கிடைத்தது.
சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக ஏ.கே.கோபாலன் இருந்தார். ராஜாஜிக்கு சட்டமன்றத்தில் கடுமையான எதிர்வினையாற்றியது கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பி.ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், ஈஎம்எஸ் நம்பூதிரி பாட், பிற்காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியான வி.ஆர்.கிருஷ்ணய்யர், எம்.கல்யாணசுந்தரம் போன்றவர்கள்தான். இவர்கள்தான் சட்டமன்றத்தில் காங்கிரசை எதிர்த்து கடுமையாக வாதாடினார்கள்.
இதற்கிடையே, கல்வித் துறையில் சீர்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. பள்ளிப் பாடங்களில் தொழிற்கல்வியை புகுத்தலாம் என்ற பரிந்துரையை அக்குழு அளித்தது. அதை ராஜாஜி மக்களிடம் சரியான முறையில் எடுத்துரைக்காமல், தகப்பன்கள் தொழிலை அவரவர் பிள்ளைகள் பார்க்கலாமே என்று சொல்ல, அது பெரும் விவாதமாகிப் போனது. அதை அன்றைய திமுக கச்சிதமாகப் பிடித்துக் கொண்டது. ராஜாஜி குலக்கல்வியை ஆதரிக்கிறார் என்றும் ராஜாஜியை ‘குல்லுகப் பட்டர்’ என்றும் எள்ளிநகையாடியது. இந்தப் பிரச்சாரம் மக்களிடையே வெகுவாகச் சென்று சேர்ந்தது. ஆனால், அதே ராஜாஜியுடன்தான் கூட்டணி அமைத்து 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தது என்பது அரசியல் வரலாறு. இவற்றையெல்லாம் நாம் முன்பே பார்த்தோம்.
சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடுமையான கருத்துக்களால் ராஜாஜியை துளைத்தெடுத்தாலும், எம்.கல்யாணசுந்தரம் சொல்லும் கருத்துகளை ராஜாஜி கூர்ந்து கவனிப்பார் என்று சி.சுப்பிரமணியம் பின்னாட்களில் சொல்லியுள்ளார்.
ராஜாஜி அரசாங்கத்தை சிறுபான்மை அரசு என்று கம்யூனிஸ்ட்கள் விமர்சித்தார்கள். இத்தகைய சூழலில், கேரளாவின் மலபார் மற்றும் ஆந்திரா பிரிந்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பல்வேறு தலைவர்கள் ஆந்திரா பக்கமும்,கேரளா பக்கமும் இடம்பெயர்ந்தார்கள். குறிப்பாக ஏ.கே.கோபாலன், ஈஎம்எஸ் நம்பூதிரி பாட், வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகியோர் கேரளா சென்று விட்டனர். அதேபோல் ஆந்திராவைச் சார்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களும் பிரிந்து சென்றனர். அதற்குப் பிறகு, பி.ராமமூர்த்தி கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக அமர்ந்தார். அவரோடு திருச்சி எம்.கல்யாண சுந்தரமும் தமிழக சட்டமன்றத்தில், தமிழக அரசியலில் செயலாற்றினார்கள்.
இந்த காலகட்டத்தில்தான் குத்தகைதார் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. விவசாய நிலங்களில் சாகுபடி செய்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ராஜாஜி கவனிக்கத் தொடங்கினார். தமிழ்நாட்டில் காவிரி வடிநிலப் பகுதி, ஆந்திரத்தில் கோதாவரி, கிருஷ்ணா வடிநிலப் பகுதிகள் போன்ற பகுதிகளில் உள்ள தானிய உற்பத்தியைப் பெருக்க உரிய திட்டங்களைக் கொண்டு வந்தார்.
அந்தப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலச்சுவான்தார்களுக்குச் சொந்தமாக இருந்தது. குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் எந்தப் பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லை. நிலத்தின் சொந்தக்காரர்கள் எந்தநேரத்திலும் இவர்களை வெளியேற்றிவிட முடியும். குத்தகை சாகுபடியில் கிடைக்கும் மகசூலைப் பகிர்ந்து கொள்ள வாரப் பங்கு என்று ஒன்று இருந்தது.
குத்தகை விவசாயிகள் நிலத்தில் அதிக மகசூல் எடுத்தால், நில உரிமையாளர்களுக்கு அவர்கள் கூடுதல் பங்கைத் தரவேண்டும். இத்தகைய நடைமுறையால் குத்தகைதாரர்கள் இரவு பகலாக கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதற்கான முழு பலனையும் அவர்களால் பெற முடியாமல் போனது. எனவே, குத்தகைதாரர்களை இந்த சிக்கலில் இருந்து மீட்க குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. விளைச்சலில் நில உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் எத்தகைய விகிதாச்சாரப்படி பிரித்துக்கொள்வது என்பது அந்தச் சட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது.
அபபோது ராஜாஜி சொன்னார், “இங்கே உள்ள கம்யூனிஸ்ட்கள் எல்லாம் நான் பணக்காரர்கள் பக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், நான் ஏழை விவசாய குத்தகைதாரர்களுக்கு சாதகமாக இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறேன். இதை அவர்கள் பாராட்ட வேண்டும். ஆனால், இந்தச் சட்டம் நியாயமானது என்று சொல்லக் கூட அவர்களுக்கு விருப்பமில்லை” என்று வருத்தமுடன் தெரிவித்தார். ராஜாஜி நல்ல நிர்வாகி என்பதுதான் பொதுவான கருத்து. எந்த ஒரு திட்டத்தையும் அதிகாரிகளுடன் நன்கு ஆலோசனை செய்து, அதன்பிறகே அதை செயல்படுத்துவார்.
ஒருமுறை சட்டப்பேரவையில் ராஜாஜி பேசும்போது, “பொதுப்பணித் துறை எனக்கு 2வது எதிரி, கம்யூனிஸ்ட்கள்தான் எனக்கு முதல் எதிரி” என அறிவித்ததும் உண்டு.
இந்த காலத்தில்தான், ஆர்.ஏ.கோபால்சாமி என்ற தலைசிறந்த அதிகாரி, மக்கள் தொகை கணிப்புத் துறையின் ஆணையராக இருந்தார். அவர் துல்லியமாகத் தயாரித்த மக்கள் தொகை கணிப்பு அறிக்கை எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்டது. பின்னாளில், சென்னை மாகாணத்தின் கல்வித் துறை செயலராக பொறுப்பேற்று, கல்வித் துறையின் மேம்பாட்டுக்கும் ஆர்.ஏ.கோபால்சாமி பெரும்பங்காற்றினார்.
இளம் ஐஏஎஸ் அதிகாரிகளாக அன்றைக்கு இருந்த எஸ்.குகன், ஜி.ராமச்சந்திரன் போன்ற அதிகாரிகளும் நிர்வாகப் பொறுப்பை திறம்படக் கையாண்டனர். பிற்காலத்தில் இந்த இருவரும் தமிழகத்தின் தலைசிறந்த ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற பெயரும் பெற்றார்கள். இப்படியாக அன்றைக்கு திறமையான அதிகாரிகள் - அமைச்சர்கள் - ஆட்சி என்று ராஜாஜி காலத்தில் எந்த ஊழலுக்கும் இடம் தராமல் செயலாற்றினார். அமைச்சரிடம் வருகின்ற கோப்புகள் உடனுக்குடன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அவற்றை பைசல் செய்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த எம்.வி. கிருஷ்ணாராவ், சென்னை ராஜ்தானியின் கல்வி அமைச்சராக இருந்தபோது, பகுதி நேரக் கல்வி பற்றி ஆலோசிக்கப்பட்டது. அவருடைய நெருங்கிய நண்பர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவர் கல்வித்துறை இயக்குநராக இருந்தார். அவர் சென்னை சட்டக் கல்லூரியின் பேராசிரியரும் கூட. இந்நிலையில், கல்வி அமைச்சர் கிருஷ்ணாராவ், கோவிந்தராஜுலு நாயுடுவுடன் இணைந்து, பகுதி நேரக் கல்வி ஏற்பாட்டை ராஜாஜி உருவாக்கினார்.
இந்தத் திட்டத்தின்படி சிறுவர் - சிறுமியர் காலை வேளையில் 4 மணி நேரம் பள்ளியில் கல்வி பயிலலாம். மாலை நேரங்களில் ஏதாவது தொழில் கல்வியில் ஈடுபடலாம். அது பெற்றோருக்கும் உதவியாக இருக்கும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதையும் குலக்கல்வி என்று திராவிட இயக்கங்கள் எதிராக முழங்கின.
அன்றைக்கு ஈ.வெ.ராமசாமி நாயக்கர் (‘பெரியார்’ என்று அழைக்கப்படாத காலகட்டம்) போன்றவர்கள் எல்லாம் இதற்கு எதிராக இருந்தனர். ராஜாஜி மீது கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதிருப்தி அடைந்த சில காங்கிரஸ் உறுப்பினர்களும் ராஜாஜிக்கு எதிராகத் திரும்பினார்கள். காமராஜரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் ராஜாஜிக்கு எதிராகவே அமைந்தன. இதைதொடர்ந்து, இந்தத் திட்டம் குறித்து ஆராய, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பர்லேகர் என்ற கல்வி நிபுணர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதற்கு ‘பர்லேகர் குழு’ என்று பெயர்.
இத்தகைய சூழ்நிலைகளுக்குப் பிறகு படிப்படியாக ராஜாஜியின் ஆட்சி கேள்விக்குறியானது. ஆந்திர மாநிலமும், கேரளத்தின் சில பகுதிகளின், கர்நாடகத்தின் சில பகுதிகளும் பிரிந்து சென்றபோது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. கம்யூனிஸ்ட்களின் தீவிர எதிர்ப்பு, திமுகவின் குலக்கல்வி விமர்சனம் போன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளால் ராஜாஜி பதவி விலக வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதன் பிறகு முதலமைச்சர் பதவிக்கு காமராஜர் போட்டியிடும் சூழல் ஏற்பட்டது. இதனால், ராஜாஜியின் ஆதரவாளர்களாக இருந்த சி.சுப்பிரமணியம், பக்தவத்சலம் போன்றவர்கள், இனிமேல் காமராஜர் தலைமையின் கீழ்தான் காங்கிரஸ் செயல்படும் என்ற நிலை வரும்பட்சத்தில் தங்களால் அரசியலில் இனி பயணிக்க முடியாது என்று முடிவெடுத்தனர். இதனால், சி.சுசுப்பிரமணியம் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை திரும்பவும் மேற்கொள்ள கோயம்புத்தூர் சென்று விட்டார். பக்தவத்சலத்துக்கு சொந்த ஊர் ஸ்ரீபெரும்புதூர் என்பதால் அவர் சென்னையிலேயே தங்கிவிட்டார்.
முதலமைச்சர் வேட்பாளராக காமராஜர் போட்டியிட்டார். கோவைக்குச் சென்ற சி.சுப்பிரமணியம், சிலரின் ஆலோசனையின் பேரில் காமராஜரை எதிர்த்து காங்கிரஸ் போட்டி வேட்பாளராக களத்தில் இறங்கினார். சேலம் வரதராஜுலு நாயுடு தேர்தல் அதிகாரியாக பிரதமர் நேருவால் நியமிக்கப்பட்டார். அவர் ஒரு சிறந்த மருத்துவர். தனித் தமிழுக்காக ‘தமிழ்நாடு’ என்ற தினசரி ஏட்டை நடத்தியவர்.
அந்த ‘தமிழ்நாடு’ பத்திரிகை தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்தது. இதில் பழ.நெடுமாறன் பணியாற்றினார். வரதராஜுலு தான் ஒரு காங்கிரஸ்காரர் என்றபோதிலும், தமிழர் நலம், தமிழர் உரிமை, தமிழ் தேசியம் என்ற கருத்துக்களை அந்த ஏட்டில் மையப்படுத்தினார். இதனால் ஈர்க்கப்பட்ட ம.பொ.சி.யும் சிலகாலம் அந்தப் பத்திரிகையில் பணியாற்றினார். ஒரு கட்டத்தில் அந்த ஏட்டை நடத்த முடியாமல், மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியாரிடம் ஒப்படைத்தார்.
‘தமிழ்நாடு’ தினசரி ஏட்டோடு, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற ஆங்கில ஏட்டையும் சேலம் வரதராஜுலு நாயுடு நடத்தி வந்தார். பின்னர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில ஏட்டையும் சதானந்தத்திடம் ஒப்படைத்தார். அவரிடமிருந்து ராம்நாத் கோயங்கா வாங்கி அதை திறம்பட நடத்தினார்.
சேலம் வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது, பெரியார் காங்கிரஸ் கமிட்டியில் அவருக்கு கீழ் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் தேர்தல் பார்வையாளராக இந்திரா காந்தி நியமிக்கப்பட்டு, சென்னையில் 2-3 நாட்கள் தங்கியிருந்தார். காமராஜர் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னரே அவர் டெல்லி திரும்பினார். இத்தகைய கட்சி விவகாரங்களில் இந்திரா காந்தி அனுபவம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நேரு, இந்திரா காந்தியை அனுப்பி வைத்தார் என்ற கருத்தும் அப்போது நிலவியது.
முதலமைச்சர் தேர்தல் எவ்வாறு நடைபெற்றது, காமராஜர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார், அமைச்சரவை அமைக்கும்போது காமராஜர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்து காண்போம்.
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம்: காங்கிரஸ் சோசலிஸ்ட், பிரஜா சம்யுக்த சோசலிஸ்ட் கட்சிகள் தோற்றம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 49
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT