Published : 23 Aug 2025 04:06 PM
Last Updated : 23 Aug 2025 04:06 PM

காங்கிரஸ் சோசலிஸ்ட், பிரஜா சம்யுக்த சோசலிஸ்ட் கட்சிகள் தோற்றம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 49

காங்கிரஸ் சோலிஸ்ட் கட்சி மாநாடு

1925-ஆம் ஆண்டு கான்பூரில் தொடங்கப் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) எல்லாவிதத்திலும் அன்றைய ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான (USSR) சோவியத் யூனியனைப் பின்பற்றியது.

இந்தியாவில் ஆயுதப் புரட்சியின் மூலம் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை அகற்றி, விடுதலை பெற்ற இந்தியாவில் விளை நிலங்களையும், தொழிற்சாலைகளையும் அரசுடமையாக்கி, வறுமை, சுரண்டலை ஒழிப்பதை தன் நோக்கமாக இக்கட்சி கொண்டிருந்தாலும் மகாத்மா காந்தி தலைமை ஏற்ற, இந்திய தேசிய காங்கிரஸ் (INC) அளவுக்கு, அதற்கு பொதுமக்கள் செல்வாக்கு, உறுப்பினர்கள், கட்டமைப்பு ஏற்படவில்லை.

இன்னொரு புறம் காந்திய காங்கிரசில் 1932 - 1934-ல் சட்ட மறுப்பு போராட்டத்தில் கைதாகி நாசிக் நகரில் (இன்றைய மத்தியப் பிரதேசத்தில் உள்ளது) சிறையில் இருந்த தலைவர்கள் ஆச்சாரிய நரேந்திர தேவா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, அச்சுத பட்டவர்த்தன், மினு மசானி போன்றோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு இந்திய தன்மை உள்ள சோசலிச சமுதாயம் அமைக்கவும், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் வெகு மக்கள் செல்வாக்கு பெற்ற காந்திய காங்கிரசுடன் ஒத்துழைப்பது என்று முடிவில் 22, 23.10.1934-ல் பம்பாயில் ஆச்சாரிய நரேந்திர தேவா தலைமையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை (CSP) நிறுவினார்கள்.

கட்சியின் தலைவராக ஆச்சாரிய நரேந்திர தேவாவும், பொதுச் செயலாளராக ஜெயப்பிரகாஷ் நாராயணனும் இணை செயலாளராக மினு மசானியும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டு மேடையில் ஏற்றப்பட்ட காங்கிரஸ் கொடியில் தோழர் காரல் மார்க்ஸ் படம் பொறிக்கப்பட்டு இருந்தது. ஒருவிதத்தில் இதை மார்க்சிய - காந்திய இணைப்பு என்று புரிந்து கொள்ளலாம். கட்சி தொடங்கிய பின் இந்தியா முழுக்க காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி கிளைகள் ஏற்பட்டன. கட்சி வேகமாக வளர்ந்தது.

CSP-யின் சிறப்பான பணிகள்

* மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு என வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைகளுக்கு உள்ளடக்கி தடை செய்யப்பட்டிருந்த சிபிஐ தோழர்கள் அனைவரும் 1936 - 1942-ல் CSP-யின் இணைந்து செயல்பட்டனர். இரு கட்சி விதிகளும் (CPI, CSP) இதற்கேற்றார் போல் மாற்றியமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் தோழர்கள் ப.ஜீவானந்தம், கே.எம்.வல்லத்தரசு, பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி எல்லோரும் CSP-யில் செயல்பட்டவர்களே.

* தோழர்கள் எஸ்.ஏ.டாங்கே, பி.சி.ஜோஷி, இஎம்எஸ் நம்பூதிரி பட் போன்ற அகில இந்திய இடதுசாரி ஆளுமைகளும் CSP-யில் இணைந்து செயல்பட்டவரே.

* 1936 டிசம்பர் லக்னோ காங்கிரசில் ஜமீன் ஒழிப்பு போராட்டத்திற்காக அகில இந்திய கிசான் சபா (AIKS) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுவாமி சகஜானந்த் சரஸ்வதி (1889 - 1950) தலைமையில் தொடங்கப் பெற்றது.

* இப்பணிகளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை CSP-யிடம் ஒப்படைத்து இருந்தது. இந்தியா முழுக்க CSP ஜமீன் ஒழிப்பு போராட்டங்கள் நடத்தியது. 1938 ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜபாளையத்தில் தமிழ்நாட்டில் மாநில காங்கிரஸ் மாநாட்டுடன் CSP-யின் AIKS சார்பாக ஜமீன் ஒழிப்பு மாநாடும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் நடைபெற்றது. இ.எம்.எஸ்.நம்பூதிரி பட், ஏ.கே.கோபாலன், என்.ஜி.ரெங்கா எல்லோரும் கலந்து கொண்டனர்.

ஆச்சாரிய நரேந்திர தேவா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, அச்சுத பட்டவர்தான், ஜெ.பி.கிருபளானி

ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, அன்றைய சென்னை மாநகர முதல்வர் ராஜாஜி, சி.சத்தியமூர்த்தி, கு.காமராஜர், க.சந்தானம், வேலூர் உபயத்துல்லா, மதுரை என்.எம்.ஆர்.சுப்புராமன், க.மு.வல்லத்தரசு எல்லோரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுதந்திர இந்தியாவில் ஜமீன் ஒழிப்புக்கு இதுவே அடிப்படை ஆகும். 1940-1941-ல் காந்தியடிகள் அறிவித்த தனி நபர் சத்தியாக்கிரகத்தில் CSP தொண்டர்கள் ஏராளமானவர்கள் கைது ஆனார்கள்.

* 1937-ல் லோகியா காங்கிரஸ் வெளியுறவு துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு அவர் வகுத்து கொள்கைகளை, பின்னாளில் பிரதமர் ஜவஹர்லால் நேருவி்ன் சுதந்திர இந்தியாவின் அணி சேரா கொள்கை (NAM) கொள்கையானது.

* 1942 - 1945-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது சோவியத் யூனியன் சார்பு நிலை எடுத்து சிபிஐ தோழர்கள் விலகி நிற்க CSP தோழர்கள் தலைவர்கள் அனைவரும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு பெரும் தியாகங்கள் செய்தனர். சிறை சென்றனர். 1942 ஜூலை மாதம் CSP அகில இந்திய பார்வர்டு பிளாக், எல்லாம் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தால் தடை செய்யப்பட்டது. 1942 ஆகஸ்ட் 8, 9-ம் தேதியில் காந்தியடிகளும், லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு காங்கிரசும் தடை செய்யப்பட்டது. இந்திய நாடு முழுக்க பெரும் புரட்சிகள் வெடித்தன.

இந்திய விடுதலைப் போராட்டத்தை முகமது அலி ஜின்னாவின் முஸ்லிம் லீக், வி.டி.சாவர்க்கரின் இந்து மகா சபா, எம்.எஸ்.கோல்வாகரின் ஆர்.எஸ்.எஸ்., தமிழ்நாட்டில் நீதிக் கட்சி, பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சுயமரியாதை இயக்கம், முனைவர் பி.ஆர்.அம்பேத்கரின் பட்டியல் வகுப்பார்கள் கூட்டமைப்பு எல்லாம் எதிர்த்து வெள்ளை காலனி ஆதிக்க ஆதரவு தவறான அரசியல் செய்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

* வல்லபாய் பட்டேல் விரும்பாத போதும் CSP-க்கு காங்கிரஸ் செயற்குழுவில் காந்தி, நேரு இடம் அளித்து இருந்தனர். பாகிஸ்தான் பிரிவினை எதிர்ப்பு, இந்து ராஷ்டிர எதிர்ப்பு இது இரண்டிற்கும் எதிராக CSP தோழர்கள் அனைவரும் மகாத்மா காந்தியை உறுதியாக ஆதரித்தனர்.

1947-ல் ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியப் பிரதமர் ஆனார். 1948 ஜனவரி 30, காந்தி கொல்லப்பட்ட பின், 1948 மார்ச் பழைய CSP தோழர்கள் 1932 -1934-ல் முன்பு சிறையில் இருந்த அதே நாசிக் நகரில் கூடி சோசலிஸ்ட் (SP) கட்சியை நிறுவினார்கள். 1948 மார்ச் நாசிக்கில் சோசலிஸ்ட் கட்சி உதயமானது. ஆச்சரிய நரேந்திர தேவாவே தலைவர். ராம் மனோகர் லோகியா பொதுச் செயலாளர். மேலே சிவப்பு, நடுவில் வெள்ளை, கீழே சிவப்பு வட்ட சக்கரம், ஏர் சின்னம் போட்ட கொடி, ஆலமரம் தேர்தல் சின்னம். 1952-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் SP வெற்றி பெற்றது. பெற்ற வாக்குகள் 10.5 சதவீதம்.

இதே காலகட்டத்தில் 1948 ஏப்ரல் கல்கத்தாவில் தோழர் பி.டி.இரணதிவே தலைமையில் சிபிஐ ஆயுதப் புரட்சி அறிவித்து, இது தோல்வியடைந்து அக்கட்சியும் 1952 - தேர்தல் பாதையை ஏற்று 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றது.

1952 தேர்தலில் ஜெ.பி.கிருபளானி தலைமையில் விவசாய தொழிலாளர் மக்கள் கட்சி (KMPP) நாடாளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஒரே கொள்கை, லட்சியம் என்பதால் 1952 செப்டம்பரில் SP மற்றும் KMPP இணைந்து பிரஜா சோசலிஸ்ட் கட்சி (PSP) உருவானது. இதன் தாக்கத்தாலே ஜெ.பி.கிருபளானி, மார்க்சியம் என்ற காந்தியம் என்ற புகழ் பெற்ற நூலை எழுதினார்.

1955-ல் ஆவடியில் காங்கிரஸ் மாநாடு

நேரு தலைமையிலான காங்கிரசுக்கு மாற்று CPI அல்லது PSP என்ற விவாதம் அப்போதே நாடெங்கும் பிரபலமாக நடைபெற்றது. இடையில் பிரதமர் நேரு 1951 ஆம் ஆண்டு PSP-யும் காங்கிரசும் இணைந்து செயல்படலாம் என அழைத்தார். ஜெ.பி. அளித்த 14 அம்ச சோசலிச திட்டத்தை அமல்படுத்த நேரு தயக்கம் காட்டியதால் அது நடைபெறவில்லை.

1956-ம் ஆண்டுதான் இன்றைய முழு கேரளா மாநிலம் உருவானது. அதற்கு முன் இன்றைய கேரளாவின் வட பகுதிகள் 1956 வரை சென்னை மாகாணத்தில் இருந்தது. தென் கேரளா பகுதிகள் திருவிதாங்கூர் கொச்சி மாநிலம் என்ற பெயரால் புது மாநிலமாக 1952-ல் உருவானது.

1952 தேர்தலில் அம்மாநிலத்தில் PSP மந்திரி சபை காங்கிரஸ் ஆதரவுடன் பட்டம் தாணுப்பிள்ளை தலைமையில் அமைந்தது. 1952 செப்டம்பர் கன்னியாகுமரி தமிழர்கள், தாங்கள் பகுதியை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என அறவழியில் போராடினார்கள். அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பல பேரை முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை கொன்றார். இதை கட்சி பொதுச் செயலாளர் லோகியா கண்டித்தார். PSP-யில் பிளவு ஏற்பட்டு 1956-ல் ஹைதராபாத்தில் லோகியா தனியே ஒரு சோசலிஸ்ட் கட்சியை நிறுவிக் கொண்டார்.

1955-ல் ஆவடியில் காங்கிரஸ் மாநாட்டில் நேரு தலைமையில் இந்தியாவில் ஜனநாயக வழியில், சோவியத் யூனியன் ஒத்துழைப்புடன் சோசலிச சமூகம் அமைப்பது என்ற தீர்மானத்தை PSP-யில் லோகியா தவிர பெரும்பாலான தலைவர்கள் ஏற்றனர்.

1956 இறுதியில் பிரஜா சோசலிஸ்ட் கட்சி அகில இந்திய தலைவரும், டெல்லி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆச்சாரிய நரேந்திர தேவா, எம்.பி. தமிழ்நாட்டில் ஈரோட்டுக்கு கட்சி நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் யாரும் எதிர்பாராமல் மாரடைப்பால் காலமானார். இது இந்தியாவில் ஜனநாயக சோசலிஸ்ட் அரசியலுக்கு அப்பொழுது பின்னடைவு ஆனது.

கோவாவில் 1950களில் லோகியா - போர்ச்சுகல் ஆதிக்கத்துக்கு எதிராக கோவா விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார். 1957 நாடாளுமன்ற தேர்தலில் PSP-களும், 19 எம்.பி.க்கும் லோகியாவின் S.P.-க்கு 6 எம்.பி.க்களும் வெற்றி பெற்றனர். தமிழ்நாட்டில் வட சென்னை எம்.பி. தொகுதியில் SCC அந்தோணி பிள்ளை, SP சார்பில் வெற்றி பெற்றார்.

சோசலிஸ்ட் கட்சியின் கொடி

PSP கட்சி பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றிய மிதவாத கண்ணோட்டம் கொண்டு இருந்தது. லோகியா தலைமையிலான SP-யோ முழுக்க அவரை எதிர்த்தது. வெள்ளை ஏகாதிபத்திய நினைவுச் சின்னங்களை அகற்றுவது, ஆங்கில மொழி ஆதிக்கத்தை அகற்றுவது, நிலச் சீர்திருத்தங்கள், குடிசைத் தொழில்கள் வளர்ப்பு, பொதுத் துறையில் தொழில்கள் ஊக்குவிப்பு என லோகியா போராட்ட குணத்துடன் 1960-களில் SSP அரசியலை முன்னெடுத்து செயல்பட்டார்.

மூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 1960-களில் அசோக் மேத்தா மத்திய அரசின் திட்ட ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதால் அவர் PSP-யில் இருந்து நீக்கப்பட்டார். 1964 - 1965-ல் PSP மூன்றாக உடைந்து அசோக் மேத்தா, சந்திரசேகர் மீண்டும் காங்கிரசில் இணைந்தனர்.

S.M.ஜோஷி பிரிவு லோகியாவுடன் இணைந்து சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி (SSP) ஆனது. எஞ்சிய பேராசிரியர் மது தண்டவதே, பேராசிரியர் சாமர்குஹா தலைமையில் PSP என்ற பெயரில் தொடர்ந்தது.

1967 தேர்தலில் SSP-க்கு 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் PSP-க்கு 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தன.

1967 அக்டோபர் மாதம், லோகியா எதிர்பாராமல் மரணம் அடைந்தார். இது கட்சிக்கு, நாட்டுக்கு பெரும் இழப்பு.

1969-ல் வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானிய ஒழிப்பால் இந்திரா காந்தி பெரும் செல்வாக்கு பெற்று 1971 நாடாளுமன்ற தேர்தலில் 2/3 பங்கு வெற்றி பெற்றார்.

1971 தேர்தலில் PSP, SSP இரண்டுமே தலா, 2 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெற்றனர். PSP-யில் மதுதண்டவதே, சாமர்குஹா, SSP-யில் மது விமாயே வெற்றி பெற்றனர்.

1972 - 73-ல் சுரங்கங்கள், ஜவுளி ஆலைகளை இந்திரா காந்தி தேசியமயமாக்கினார்.

1974-ல் SSP மீண்டும் உடைந்து ராஜ் நாராயணன், சரண் சிங் தலைமை ஏற்று பாரதிய லோக்தளம் உருவானது. PSP-யில் மது தண்டவதேயும், சாமர்குஹாவும் SSP-யில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுரேந்திர மோசன் செயல்பட்டனர். 1974-ல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் SSP - HMU தொழிற்சங்கம் புகழ் பெற்ற ரயில்வே வேலைநிறுத்தம் நடத்தியது.

1975-க்கு பின் PSP / SSP-யின் இடதுசாரி முழக்கம் செல்வாக்கு குறைந்தது அந்த முழக்கங்கள் 1975 முதல் CPI, CPI (M), CPI (ML), AIFB, RSP கட்சிகளும் சென்றன. (இவையே இன்றைய இடதுசாரி கட்சிகளாக உள்ளன).

1975-ல் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் (MISA) கொண்டு வந்தார். PSP / SSP இரண்டுமே இதை எதிர்த்தது. தோழர்கள் சிறை சென்றனர். 1977 தேர்தலில், 6 கட்சிகளை இணைத்து ஜனதா கட்சியை ஜெ.பி. உருவாக்கிய பொழுது அதில் PSP / SSP இரண்டும் இணைந்து 1977 ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார்.

ஜனதா கட்சி வெற்றி பெற்ற 298 இடங்களில் இணைந்த SSP-க்கு 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள், PSP 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழில் அமைச்சராகி கோகோகோலாவை நாட்டுடமையாக்கினார் (77 என்ற பெயரில்) மது தண்டவதே ரயில்வே அமைச்சர் ஆனார். பல நல்ல சீர்திருத்தங்களை ரயில்வேயில் செய்தார்.

ராம் மனோகர் லோகியா பற்றி மேலும் சில தகவல்கள்:

1937-ல் காங்கிரஸ் வெளியுறவு துறை செயலாளராக டாக்டர் லோகியா நியமிக்கப்பட்டு முதலாளிய உலகம், கம்யூனிச உலகம், இரண்டிலிருந்து விலகி, விடுதலை பெற்ற இந்திரா ஒரு தனி தலைமை தன்மையுடன் விளங்க வேண்டும் என்ற அறிக்கை தயாரித்து இது காந்தி - நேருவால் ஏற்கப்பட்டது. 1948 லோகிய காங்கிரசை விட்டு விலகினாலும் சுதந்திரத்துக்கு பின் இந்தியப் பிரதமரான நேரு, சோவியத் யூனியன், அமெரிக்கா இரு உலக நடைமுறைகளில் இருந்தும் விலகி, அணி சேரா நாடுகள் இயக்கம் (NAM) காண இது வழி வகுத்தது.

உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்து கம்யூனிஸ்ட் நான்காவது அகிலம் - என்பது 1940 - 1950கள் வரை செயல்பட்டது.
இதுபோல் உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் உள்ள சோசலிஸ்ட் கட்சிகளை இணைத்து சோசலிச அகிலம் நிறுவ லோகியா முயற்சிகளை தொடங்கினார்.

1960-களில் நாசர் எகிப்து அதிபராக இருந்தபொழுது, சூயஸ் கால்வாயை நாட்டுடமையாக்கியதை டாக்டர் லோகியா ஆதரித்தார், வரவேற்றார்.

1967 தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் சம்யுக்த வினாயக் தளம் (SVD) என கூட்டணி அமைத்து 6 வட மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தன. இதற்கு பெரும் பங்காற்றினார் டாக்டர் ராம் மனோகர் லோகியா.

1960களில் லோகியா முன்னெடுத்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு

1960-களில் சென்னை மாநிலத்தில் நீதிக் கட்சி (Justice Party) வெள்ளை காலனி ஆதரவு நிலைப்பாட்டில் பிராமணர்கள் அல்லாதவர் வேலை, முன்னேற்றத்தை வகுப்புவாரி இடஒதுக்கீடு என்ற பெயரில் எடுத்துச் சென்றது. (இன்று தி.க., தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., என தமிழக அரசியலில் நடக்கும் அனைத்து தவறுகளும் இதுவே வித்து).

ஆனால் லோகியா அவரது சீடர்கள் கர்ப்பூரி தாக்கூர் (பிஹார்), ராம் நரேஷ் யாதவ் (உ.பி.) எல்லாம் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை சென்றனர். 1960களில் லோகியா பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை தம் கட்சி அரசியல் திட்டத்தில் சேர்த்தார். வட இந்தியாவில் 1967-ல் S.V.D. கூட்டணி (சம்யுக்த வினாயக் தளம் கூட்டணி) மூலம் இது பிரபலம் ஆனது. பல சோதனைகளை கடந்து 1977-ல் பிஹாரிலும், உ.பி.யிலும் லோகியா சீடர்கள் ஆட்சி அதிகாரம் ஏற்றதும், இது அமல் செய்யப்பட்டது. பின்னாளில் 1978-ல் மண்டல் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்ட B.P. மண்டலும் லோகியாவின் சீடரே.

தமிழ்நாட்டில் PSP, SSP செயல்பாடுகள்

சுதந்திரப் போராட்ட காலத்தில் CSP-யில், வி.ஆர்.ராதாகிருஷ்ணன், அன்பு வேதாசலம், எஸ்.ஆர்.சுப்பிரமணியன், கே.ஆர்.நல்லசிவம், பி.எஸ்.சின்னதுரை, கே.எம்.வல்லத்தரசு எல்லாம் வெள்ளையரை எதிர்த்து சிறை சென்றார்கள். சுதந்திரத்திற்குப் பின் எஸ்.ஆர்.சுப்பிரமணியம், வி.ஆர்.ராதாகிருஷ்ணன் நிர்மாணப் பணிகளுக்கு சென்றார். பிரஜா சோசலிஸ்ட் கட்சியிலும் செயல்பட்டார்கள்.

தமிழகத்தில் தேர்தல் அரசியலில் - பி.எஸ்.சின்னத்துரை (பல்லாடம்), கே.ஆர்.நல்லசிவம் (சென்னிமலை), சுரேந்திரன் (மேட்டூர்), ஏ.ஆர்.மாரிமுத்து (பட்டுக்கோட்டை), ஏ.சுப்பிரமணியம் (சிங்காநல்லூர்), PSP / SSP - சட்டமன்ற உறுப்பினர்களாக தமிழக சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு நன்கு அரசியல் கடமை ஆற்றினார்கள். இறுதிவரை எளிமை, நேர்மையாக வாழ்ந்தனர்.

இன்று உலகமயமாக்கல் கொள்கை இந்திய நாட்டை எல்லா வகைகளிலும் சீரழிக்கின்றது.

சோசலிச பொருளாதாரத்திற்கான போராட்ட அரசியல் மிகவும் தேவையாக உள்ளது.

1934 - 1977-களில் இந்திய அரசியலில் முக்கிய செல்வாக்கு செலுத்திய CSP / PSP / SSP கட்சிகள் பற்றிய மீள் வாசிப்பு இப்பொழுது மிகவும் தேவைப்படுகிறது.
1948 மார்ச் மாதம் PSP நிறுவப்பட்ட பொழுது சர்வ ஜன வாக்குரிமையை பயன்படுத்தி தேர்தல், அரசியல், ஜனநாயக வழிகளில் இந்தியாவில் சோலிச சமூகம் ஏற்பட பாடுபடப் போவதாக அறிவித்தது. 1950 ஜனவரி 26 இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டு வயது வந்தோர் வாக்குரிமைகள் அளிக்கப்பட்டது. PSP-யும் இவ்வழிகளை ஏற்றது.

1990 - 1991-ல் சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பாவில் ஆளும் ஒரு கட்சி கம்யூனிச ஆட்சிகள் வீழ்ந்தன. சமீப ஆண்டுகளில் தேர்தல் அரசியல் ஜனநாயக வழிகளில் மூலமே தென் அமெரிக்கா கண்டத்தில் 10 நாடுகளில் இடதுசாரிகள் வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்றுள்ளனர். வலதுசாரி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இது பெரும் சவாலாக உள்ளது.

இந்திய ஒன்றியத்தில் சோசலிசம் மொழிவழி தேசிய இன சுயநிர்ணய உரிமை, சாதி ஒழிப்பு, உலக சமாதானம் போன்ற நல்ல லட்சியங்களுக்கு பாடுபட CSP / PSP / SSP-யிடம் நாம் நிறைய புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x