Published : 22 Aug 2025 11:16 AM
Last Updated : 22 Aug 2025 11:16 AM

அரசினர் தோட்டம்: சென்னை இழந்த சொர்க்கம்!

சென்னை அரசினர் தோட்டம்

இந்தியாவின் முதல் நவீன நகரமான சென்னை, தன் 386ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இன்றைக்கு இந்த நகரம் தமிழ்நாட்டின் தலைநகரம், இந்தியாவின் நான்காவது பெருநகரம், உலகின் 35ஆவது பெரிய நகரமாக உள்ளது. இந்த 386 ஆண்டுகளில் சென்னை பெற்றதும் இழந்ததும் எவ்வளவோ. இழந்ததில் முக்கியமானது அதன் இயற்கைச் செழிப்பும் பசுமைப் பரப்புமே.

சென்னையில் 1800களில் தொடங்கி நாடு விடுதலை பெற்றதுவரை அரசினர் தோட்டம் (தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டம்) எனப்படும் பகுதி​யிலேயே ஆங்கிலேய ஆளுநர்கள் தங்கிவந்​தார்கள். இந்த வளாகத்தில் கடைசியாக எஞ்சி​யிருக்கும் ஆங்கிலேய பாணி விருந்து மண்டபமான ராஜாஜி ஹால், இதற்கு கட்டிட சாட்சி. புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த ஆங்கிலேய ஆளுநர்கள் இந்தத் தோட்ட வீட்டுக்கு வந்த பிறகு அண்ணா சாலை எனப்படும் அன்றைய மவுண்ட் ரோடு முக்கி​யத்துவம் பெற்றது.

எஸ்டேட், தோட்டம் என அது அழைக்​கப்​பட்​டதற்குக் காரணம் உள்ளே பெரிய குளமும், சுற்றித் தோட்டமும் இருந்​தது​தான். இந்தத் தோட்டத்தில் புன்னை மரங்கள், நீர்க்​கடம்பு மரங்கள் கடந்த நூற்றாண்டுவரை இருந்துள்ளன. வார இறுதியில் தங்கள் ஓய்வு நேரத்தைக் கழிக்கவே ‘கிண்டி லாட்ஜ்’ எனப்படும் தற்போதைய ராஜ்பவனுக்கு ஆங்கிலேய ஆளுநர்கள் சென்று​வந்துள்ளனர். அதை வாங்கியவர் தாமஸ் மன்றோ என்கிறார் சென்னை வரலாற்று ஆராய்ச்சி​யாளர் வி. ராம்.

ராஜ்பவனும் ஒரு காட்டுப்​பகு​தி​தான். காடு என்றால் உயரமான மரங்கள், சூரிய ஒளி புகாத மரங்கள் அடர்ந்த பகுதி என்று நினைப்பது கற்பிதம். எல்லா இடங்களிலும் அதுபோன்ற காடுகள் வளர்வது சாத்தி​யமில்லை. கடலோர நகரமான சென்னை, வெப்பமண்டல, வறண்ட, புதர் நிலத்​துக்கு ​உரிய மரங்கள் வளரக்​கூடிய காட்டுப் பகுதி​யாகவே இருந்தது. அது ராஜ்பவனைச் சுற்றி இருந்தது.

இந்தக் காட்டின் பல பகுதிகள் ஐஐடி, அடையாறு புற்றுநோய் மருத்​துவமனை, காந்தி மண்டபம் எனக் கட்டிடங்களாக மாற்றப்​பட்டு​விட்டன. எஞ்சி​யுள்ள காட்டுப் பகுதியை 1977இல் ‘கிண்டி தேசியப் பூங்கா’வாக இந்திரா காந்தி அறிவித்​தார். நாட்டிலேயே நகரின் மையப்​பகு​தியில் அமைந்துள்ள தேசியப் பூங்கா, சிறிய தேசியப் பூங்கா என்கிற சிறப்பைப் பெற்றது இது. கிண்டி சிறுவர் பூங்காவும் இதுவும் ஒன்றல்ல.

அரசின் நேரடிக் கட்டுப்​பாட்டில் இருந்தும்கூட, இயற்கைச் செழிப்பு கொண்ட இந்த இரண்டு பகுதி​களிலும் இருந்த பசுமை வரலாற்றுப்​போக்கில் முழுமை​யாகக் காப்பாற்​றப்​பட​வில்லை. தனியார் கட்டுப்​பாட்டில் பசுமை காப்பாற்​றப்​பட்​டுள்ள அடையாறு தியசாபிகல் சொசைட்​டி​யில்தான் முதல்வர் மு.க.ஸ்​டாலின் தற்போது நடைப்​ப​யிற்சி மேற்கொள்​கிறார். அரசு இடங்களே இப்படித் தலைகீழாகத் திருத்​தப்​பட்​டிருக்​கும்​போது, மற்ற இடங்கள் குறித்துக் கேட்கவே வேண்டாம்.

பசுமை சென்னை: நூற்றாண்​டுக்கு முந்தைய அன்றைய மௌபரீஸ் ரோட்டில் (தற்போதைய டிடிகே சாலை) பெரிய பெரிய மரங்கள் இருந்த படங்களும், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் வாழ்ந்த புகழ்​பெற்ற காட்டுயிர் எழுத்​தாளர் மா.கிருஷ்ணனின் வர்ணனை​களும் சென்னையின் இயற்கைச் செழிப்பு குறித்த ஏக்கத்தைத் தோற்று​விக்​கின்றன.

1920-30களில் வீட்டுக்கு அருகிலேயே கீரிப்​பிள்ளை, மரநாய், நிலஆமை​களை​யும், அவருடைய வீட்டிலிருந்து மேற்கில் வயல்வெளி, தோப்பு, புதர்க்​காடு​களை​யும், அங்கே குழிமுயல்கள், நரிகள், காடைகள் போன்ற​வற்றையும் மாலையில் பார்க்க முடிந்​த​தாக அவர் எழுதி​யுள்​ளார். தற்போதைய தியாகராயர் நகர் பர்கிட் சாலையை ஒட்டி நரிகளை அந்தக் காலத்தில் பார்க்க முடிந்ததை எழுத்​தாளர் அசோகமித்​திரன் குறிப்​பிட்​டுள்​ளார்.

‘திருவிக வாழ்க்கைக் குறிப்புகள்’ நூலில், சென்னையின் பல்வேறு பகுதி​களில் விரவிக்​கிடந்த தோட்டங்கள், பூங்காக்​களைப் பற்றிக் குறிப்​பிட்​டுள்​ளார். சென்னையின் எந்த முக்கியப் பகுதியை எடுத்​துக்​கொண்​டாலும், அங்கு மிகுதியாக இருந்த மரம், தாவரத்தின் பெயராலேயே அந்த இடம் அறியப்​பட்டு​வந்துள்ளது.

அல்லிக் குளம் இருந்த பகுதி திருவல்​லிக்​கேணி, புரச மரங்கள் நிறைந்த பகுதி புரசை​வாக்கம், பிரம்​புகள் (இது மூங்கில் குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல) அதிகமாக வளர்ந்த ஊர் பெரம்​பூர், ஆல மரங்கள் கொண்ட ஊர் ஆலந்தூர், வேல மரங்கள் நிறைந்த காடு திருவேற்​காடு, நாவல் மரங்கள் நிறைந்த நாவலூர், தாழை மடல்கள் நிறைந்த தாழம்​பூர், பரந்த புல்வெளி கொண்ட மந்தைவெளி, புளியந்​தோப்பு, வேப்பேரி, திருமுல்​லை​வாயல், பனையூர் எனப் பல தாவரங்கள் அந்தந்தப் பகுதி​களுக்குப் பெயர் அளிக்கும் அளவு அதிகமாக வளர்ந்து இருந்துள்ளன.

நாடு விடுதலையான பிறகு சென்னை நகரம் அதிவேக​மாகவும் கண்மூடித்​தன​மாகவும் நகர்மய​மானதன் விளைவுகளாக மேற்கண்ட பகுதி​களுக்கு அடையாளம் தந்த தாவரங்கள் அனைத்தையும் இழந்து​விட்​டோம்.

திருவல்​லிக்கேணி குளத்தில் ஓர் அல்லி மலரைக்​கூடக் காண முடிய​வில்லை; பெரம்​பூரில் பிரம்பு இருந்​ததற்கான தடமில்லை; தாழம்​பூரில் தாழை மடல்களை தேடித்தான் பார்க்க வேண்டும்; புரசை​வாக்​கத்தின் கங்காதீஸ்வரர் கோயிலின் தல மரம் என்பதால் புரச மரமும், திருவேற்​காட்டில் வேதபுரீஸ்வரர் கோயிலின் தல மரம் என்பதால் வெள்வேல மரமும் கோயில்​களில் மட்டும் எஞ்சி​யிருக்​கின்றன.

ஆனால் நந்தவனங்கள், தோட்டங்கள், கோயில் காடுகள் போன்ற​வற்றைப் பாதுகாக்க ஆன்மிக நம்பிக்கை உதவவில்லை என்பதையும் புரிந்து​கொள்ள வேண்டி​யிருக்​கிறது. தன்னிடம் இயல்பாக இருந்த இயற்கைச் செழிப்பை, நாடு விடுதலை பெற்ற மூன்று தலைமுறை​களுக்குள் நவீன வளர்ச்சிக்கு சென்னை பலிகொடுத்து​விட்டது.

கண் முன் விளைவுகள்: சென்னையில் இயற்கை வளம் எஞ்சி​யுள்ள பகுதிகள் சொற்பமே. அவையும் அதிவேக​மாகக் கையைவிட்டுப் போய்க்​கொண்​டிருக்​கின்றன. ‘கஞ்சி குடிப்​ப​தற்​கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்’ என்று பாரதி கூறியதைப் போல, ஒவ்வொரு சுற்றுச்சூழல் நெருக்கடியும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நகரவாசிகள் நொந்து​கொள்​வார்கள். ஆனால், அதைத் திருத்து​வதற்கான காரணங்கள் திட்ட​வட்​ட​மாகத் தெரியும்​போதும், அதை மாற்றவோ, மாற்ற வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுக்கவோ மாட்டார்கள்.

1991 தொடங்கி முப்ப​தாண்​டு​களில் மட்டும் சென்னையின் கட்டு​மானப் பரப்பு மூன்று மடங்கு அதிகரித்​துள்ளது. பசுமைப் பரப்பு 23 சதவீதத்தில் இருந்து 17 சதவீத​மாகக் குறைந்துள்ளது. அதேபோல் நீர்நிலைகளும் மொத்தப் பரப்பில் 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீத​மாகக் குறைந்துள்ளன.

2013 தொடங்கி 10 ஆண்டு​களில் சென்னை மொத்தப் பரப்பில் 13 சதவீத​முள்ள 158 சதுர கி.மீ. பசுமைப் பரப்பை இழந்த​தால், நில மேற்பரப்பு வெப்பநிலை (LST) 6.53 டிகிரி செல்சியஸ் அதிகரித்​திருப்பதாக விஜயவாடா திட்ட​மிடல், கட்டிடக் கலைக் கல்லூரி ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இதன் காரணமாக சென்னை ஒரு நகர்ப்புற வெப்பத் தீவாக மாறிவரு​கிறது. சென்னையில் அதிகரித்து​வரும் கட்டுமீறிய வெப்பநிலைக்குப் பசுமைப் பரப்பை இழந்ததே முதன்மைக் காரணம். நகரத்தைக் குளிர்விக்​கக்​கூடிய, வெப்பத்தை உள்வாங்​கிக்​கொள்ளக்​கூடிய ஏரிகள், நீர்நிலைகள், காப்புக் காடுகள், மரங்களை இழந்து​விட்​டோம்.

என்ன செய்யப் போகிறோம்? - சென்னை ஒரு நவீன நகரமாக மாற மெட்ரோ ரயில், மக்கள் கூடும் சதுக்​கங்கள், நவீன மால்கள் போன்றவை மட்டும் நிச்சயமாக உதவாது. இத்தனையும் இருந்து பசுமைப் பரப்பையும் நீர்நிலைகளையும் இழந்து​விட்டால் மக்கள் நிம்ம​தியாக இரவில் தூங்கக்கூட முடியாது.

முதல்​கட்​டமாக, சென்னையின் பாரம்​பரியப் பெருமைமிக்க மரங்கள், இயற்கைச் சின்னங்களாக அறிவிக்​கப்​பட்டுப் பாதுகாக்​கப்பட வேண்டும். சென்னையில் இயற்கைச் செழிப்பாக உள்ள பகுதிகள், பசுமைப் பரப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்டவை குறித்த வரைபடம் தயாரிக்​கப்பட வேண்டும். இவை அனைத்தும் சட்டப்படி பாதுகாக்​கப்பட வேண்டும்.

இழந்த பசுமைப் பரப்பை அதிகரிப்​ப​தற்கு அரசு தீவிரமான செயல்​திட்​டங்களை முன்னெடுக்க வேண்டும். புயல், வெள்ளங்​களில் சட்டென்று முறிந்து விழும் அயல் மரங்களுக்குப் பதிலாக, இயல் மரங்களை, சென்னைக்கு அடையாளம் தந்த மரங்களைப் பெருமளவில் வளர்ப்​ப​தற்கான நீண்ட​காலச் செயல்​பாடு​களில் இறங்க வேண்டும்.

இது அரசு வேலை என்று மக்களும் ஒதுங்​கிக்​கொள்ளக் கூடாது. தன்னார்​வலர்கள், பகுதிவாழ் குடியிருப்புச் சங்கங்கள், பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சென்னையின் பசுமைப் பரப்பை மீட்டெடுக்க உடனடி​யாகச் செயலாற்றத் தொடங்க வேண்டும்​.

- தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x