Published : 22 Aug 2025 09:02 AM
Last Updated : 22 Aug 2025 09:02 AM
தற்போதுள்ள 5, 12, 18 மற்றும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்கிவிட்டு, அவற்றை 5 மற்றும் 12 சதவீதமாக மாற்றுவதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடியதாகும்.
12 சதவீத பட்டியலில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத பட்டியலுக்கும், 28 சதவீத வரிவிதிப்பின் கீழ் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்பின் கீழும் மாறவிருப்பது மிகப்பெரிய மாற்றமாகும். இதன்மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி விகிதம் குறைய வாய்ப்புள்ளதால், அந்தப் பொருட்களின் விலையும் குறையும்.
இந்த முடிவு நுகர்வோர் சந்தையில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை. புதிதாக 40 சதவீத வரிவிதிப்பு பட்டியல் உருவாக்கப்பட்டு, அதில் புகையிலை பொருட்கள், பான் மசாலா, குட்கா, சிகரெட், மதுபானம், விலையுயர்ந்த கார்கள், ஆன்லைன் விளையாட்டு போன்றவை கொண்டு வரப்படுவதும் வரவேற்புக்குரியதே.
சாதாரண நடுத்தர மக்கள் தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்திற்கு வருமான வரி செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை செலவு செய்யும்போது ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி என்ற பெயரில் இன்னொரு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், பெரும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். இதன்மூலம் மக்களின் வாங்கும் திறன் குறைந்து நுகர்வு பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்று பொருளாதார நிபுணர்கள் அவ்வப்போது புள்ளிவிவரங்களுடன் எச்சரித்து வந்தனர்.
‘‘நாட்டில் 12 சதவீதம் மக்கள் மட்டுமே கார் வாங்கும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர். 88 சதவீதம் பேர் கார் வாங்கும் தகுதியில் இல்லை என்கிற போது கார் விற்பனை எப்படி அதிகரிக்கும்’’ என்று மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா குறிப்பிட்டிருந்தது இந்திய நடுத்தர மக்களின் பொருளாதார நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருந்தது.
இதுபோல ஜிஎஸ்டி வரி விகிதங்களில் இருந்து நடுத்தர மக்களை விடுவிக்கும் வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பல்வேறு பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அவர்களது குரலுக்கு மதிப்பளித்து ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
இந்த வரி குறைப்பால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படப் போகும் இழப்பு எவ்வளவு என்பது குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை. அடுத்து நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே இதுகுறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய வரி விகிதங்களால் மாநிலங்களுக்கு ஏற்படவிருக்கும் வருவாய் இழப்பை சரிக்கட்ட வேண்டிய நெருக்கடியும் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சவால்களையும் எல்லாம் சமாளித்து ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்தால் மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT