Published : 21 Aug 2025 06:54 AM
Last Updated : 21 Aug 2025 06:54 AM

அனைவருக்குமான சென்னப் பட்டணம்!

சென்னப் பட்டணத்தில் காசிச் செட்டி, மைலப்ப கிராமணி போன்ற தனிநபர்களின் பெயருக்குப் பின்னால் உள்ள சாதியின் பெயரில் உள்ள வீதிகளும், நேரடியாகச் சாதியின் பெயரிலான தெருக்களும் இருந்துவருகின்றன.

சமீபக் காலத்தில் தனிநபர்களின் பெயர்களின் பின்னுள்ள சாதிப் பின்னொட்டு நீக்கப்பட்டாலும், சாதிப் பெயரிலான தெருக்கள் இன்னமும் நீடிக்கின்றன. ஆனால், பட்டணத்துடன் வெவ்வேறு காலக்கட்டங்களில் இணைந்திட்ட பல்வேறு கிராமங்கள் சாதிக் குறியீடுகளைப் பொதுவாகக் கொண்டிருக்கவில்லை.

இதில் விதிவிலக்காகத் தேனாம்பேட்டை இருந்துவந்திருக்கலாம். இன்றும் வெள்ளாள தேனாம்​பேட்டை அல்லது வன்னிய தேனாம்​பேட்டை என்று அழைக்​கப்​படு​வதைக் காண முடியும். அப்படி​யெனில், மற்றொரு தேனாம்​பேட்டை இருந்​திருக்க வேண்டும் என்கிற கருத்​துக்கு இடமுண்டு. ஆம்! அது உண்மை​யும்கூட.

செயின்ட் ஜார்ஜ் கதீட்​ரலுக்குத் தென் பகுதி தொடங்கி எல்டாம்ஸ் சாலையின் கிழக்குக் கோடியில் ஜான் புரூஸ் நார்ட​னுக்குச் சொந்தமாக இருந்த பவோபாப் தோப்பு வரையிலான பகுதி​யும், கிட்டத்தட்ட செனடாப் சாலை வரையிலும் வன்னிய தேனாம்​பேட்டை என்றும், அதன் தென் பகுதி மௌபரீஸ் கபோலா வரையி​லானது பள்ளி தேனாம்​பேட்டை என்றும், எல்டாம்ஸ் சாலையின் மேற்குப் பகுதி, மாம்பலம் ஏரியின் கிழக்குக் கரைப் பகுதி நியூ தேனாம்​பேட்​டை​யாகவும் அன்றைய நிலப்​படங்​களில் காணப்​படு​கின்றன.

ஒடுக்​கப்பட்ட மக்களின் இருப்​பிடங்கள்: 1865இல் டூலாக் மதராஸில் சாக்கடைப் பாதைகளை வரையறை செய்து வெளியிட்ட நிலப்படம் சென்னப் பட்டணம் பற்றிய முக்கி​யத்துவம் வாய்ந்த செய்தி ஒன்றை விவரணம் செய்கிறது. பட்டணத்தில் உள்ள பறச்சேரிகளை விரிவான அளவில் குறிப்​பிட்டுக் காட்டும் நிலப்​படமாக இது இருக்​கிறது.

காசிமேடு அருகில் வர்தன்​சேரி, ராயபுரம் அருகில் பொர்கிசேரிபட்டி, வியாசர்பாடி ஏரியின் கிழக்கில் ஒரு பறச்சேரி, வடக்கில் உப்பிலி​பாளையம், தெற்கில் சக்கி​லி​பாளையம், மேற்கில் செம்பியம் அருகில் இரண்டு தனித்தனி பறச்சேரிகள், தாண்டவராய சத்திரம் அருகில் பள்ளிக்​குப்பம் எனக் கிட்டத்தட்ட 19 பகுதி​களைத் தீர்க்கமாக அறிய முடிகிறது.

இவை தவிர, 1924இல் வெளியான ஆண்டுப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கி​யத்துவம் வாய்ந்த தெருக்கள் பட்டியலில் பறையர்கள் வாழ்விடத்தைப் பெயரின் பின்னொட்​டாகக் கொண்டிருக்கும் தெருக்​களும் இருந்​திருப்​பதைக் காண முடிகிறது. ஜகநாத​புரம் பறச்சேரி (நுங்​கம்​பாக்கம், டிவிஷன் 22) சின்னதம்பி போகிப்​பாளையம் தெரு (பெரம்​பூர், டிவிஷன் 16) கொண்டித்​தோப்பு பறச்சேரி தெரு (பெத்​து​ நாயக்கன் பேட்டை, டிவிஷன் 12) உள்ளிட்ட தெருக்​களில் அன்றைய தினம் பறையர்கள் அல்லாதோர் வாழ்ந்து வந்திருக்கும் வாய்ப்பு குறைவே.

இதுபோன்ற தகவல்​களின் அடிப்​படையில் பார்க்​கும்​போது, சென்னப் பட்டணத்தில் பொதுவாகச் சேரிகள் என்றில்லாது பறச்சேரிகள் அல்லது பறச்சேரித் தெருக்கள் என்று திட்ட​வட்டமாக வரையறை செய்யப்பட்ட இப்பகு​தி​களில் ஒடுக்​கப்​பட்​ட/​தாழ்த்​தப்பட்ட மக்கள் 1800க்கு முன்னரே தங்களின் வாழ்நிலையைக் கொண்டிருந்​திருக்​கிறார்கள்.

வடக்கில் சென்னை சின்னம்​மாபேட்டை ரயில் பாதையை​யும், தெற்கில் நுங்கம்​பாக்​கத்தில் ஆர்க்காடு சாலையை​யும், மேற்கில் கீழ்ப்​பாக்​கத்தை​யும், கிழக்கில் கோட்டையும் அடக்கிய இப்பகு​திக்குள் பறச்சேரிகள் என்று எதுவுமே டூலாக்கின் நிலப்​படத்தில் குறிப்​பிட்டுக் காட்டப்​ப​டாதது விநோதமாக இருக்​கிறது.

கிளைவ் பாட்டரி, புரசை​வாக்​கத்தில் மனநோய் மருத்​துவ​மனையை ஒட்டிய பிரிக்​கிளின் சாலை, பாடிகார்டு சாலை, பெரியமேடு, பேசின் பாலத்தை ஒட்டிய மூலக்​கொத்​தளம், மாடிப் பூங்காவை ஒட்டிய நகர எல்லைச் சுவரின் மேற்குப் பகுதி, சேத்துப்​பட்டில் ஸ்பர்​டாங்குக்கும் கூவத்​துக்கும் இடைப்பட்ட பகுதி, ஆயிரம்​விளக்கில் மக்கீஸ் தோட்டம், வியாசர்​பாடியை ஒட்டிய எருக்​கஞ்சேரி போன்ற பகுதி​களில் காலங்​கால​மாகவே தாழ்த்​தப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்திருப்பதை இன்றும் அறியலாம்.

ஆயினும் டூலாக் நிலப்​படத்தில் மேற்கண்ட இடங்களிலும் கோட்டைக்கு அருகாமை​யிலும் பறச்சேரிகள் என்று பிரத்​யேக​மாகக் குறிப்​பிடப்​பட​வில்லை. அதே தருணத்​தில், கோட்டைக்கு அருகில் படகுத் துறையும் மீனவர்​களின் குடிசைகளும் குறிப்​பிடப்​பட்​டிருக்​கின்றன.

நகர உருவாக்​கத்தில் பங்களிப்பு: துறைமுகம், ரயில் பாதை போன்ற கட்டமைப்பைப் பட்டணத்தில் உருவாக்கிய​தில் பெரும் பங்களிப்பினைத் தாழ்த்​தப்​பட்ட, ஒடுக்​கப்பட்ட பிரிவினர் கொண்டிருக்​கின்​றனர். கால நேர வரையறை​யின்றித் துறைமுகத்தில் சுமைகளை ஏற்றி இறக்கும் பணிகளை மேற்கொண்​டோர், மணியடித்​தவுடன் வர வேண்டி​ இருந்​தமை​யால், அருகில் வெட்ட​வெளி​களில் தங்கி​யிருந்​தனர். அவர்கள் வாழ்விடங்களை ஒட்டிய பகுதிகள் மேம்பட்டுப் பாதைகள் உருவான பின்னர், அவர்கள் நடைபாதை​வாசிகளாகப் பெயர் மாற்றமடைந்​தனர்.

இதுதான் பட்டணத்து நடைபாதை​வாசிகளின் ஆதியாகமம். இவ்வாறுதான் ரயில்பாதை அமைப்​ப​தில், அதையொட்டிய பகுதி​களில் மேற்கொண்டு​வரும் பணிகளின் பொருட்டு, அவர்கள் தங்கி​யிருந்தது பின்னாளில் சேரிகளாகின. இத்துடன், பணியிடத்​துக்கும் வாழ்விடத்​துக்கும் இடையில் போக்கு​வரத்துச் சாதனங்கள் என்பது பெயரளவுக்​குக்கூட இல்லாமையும் இதன் காரணியாக அமைந்து இருக்​கலாம்.

இன்றும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை ஒட்டிய பகுதி​களில் முறைப்​படுத்​தப்படாத பல்வேறு தொழில்கள் நடை பெற்று​வரு​வதை​யும், அப்பணி​களில் ஈடுபடுவோர் அந்தந்தக் கால்வாய்​களின் ஓரத்தில் குடிசைப் பகுதிகளை அமைத்​துக்​கொண்டு, பாதுகாப்​புக்​காகப் புகழ்​பெற்ற அல்லது செல்வாக்​கினைச் செலுத்​தக்​கூடிய மனிதர்​களின் பெயர்களைத் தெருப்​பெயர்​களாகச் சூட்டிக்​கொண்டு வாழ்ந்து​வரு​வதைக் காண முடியும்.

இவற்றைக் கணக்கில்​கொண்​டுதான் கர்னல் ஆல்காட் பஞ்சமருக்கான இலவசப் பள்ளிகளை அவர்கள் இருப்​பிடங்​களுக்​குள்ளேயே தொடங்கி​ இருக்​கிறார். தேனாம்​பேட்டை தாமோதர் பள்ளி, அடையாறில் ஆல்காட் பள்ளி போன்ற​வையும் இப்படித்தான் ஆரம்பிக்​கப்​பட்​டிருக்​கின்றன. கிருஷ்ணாம்​பேட்​டையில் உள்ள பள்ளியில் மாலை நேரத்தில் பெரிய​வர்​களுக்குத் தமிழ், தெலுங்கு மொழிப் பயிற்​சியும் அளிக்​கப்​பட்​டிருக்​கிறது என்கிற தகவல்களை மதராஸ் டைம்ஸின் ஆல்மனாக் அளிக்​கிறது.

இணைந்து வாழ்ந்​தனர்: கிராமங்​களில் இருந்துவந்த சேரியமைப்புகள் பல்வேறு கிராமங்​களின் ஒருங்​கிணைப்பில் உருவான பட்டணத்​திலும் தொடர்ந்​ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஒடுக்​கப்பட்ட மக்கள் மட்டுமின்றி, பட்டணத்தில் வர்த்தகம் செய்து​வரக்​கூடிய அல்லது அலுவலக வேலையில் இருந்து​வரும் ஆங்கிலேயர்​களின் முகவரி​யாகவும் 1857லேயே இவை இருந்​திருக்​கின்றன.

காலணி தயாரிப்​பாளர் ரிச்சர்ட் ரேமாண்ட், இசைக் கருவிகளை ட்யூன் செய்வதோடு பழுது பார்க்​கக்​கூடிய ஏ.ஆர்​.ட்​டி.​மார்ட்​டின், நகை விற்பனை​யாளர் ஜே.ஜே.ஸ்​டேரேஸி என்பவரும் பறச்சேரி​களைத்தான் தங்கள் இருப்​பிடங்​களாகக் கொண்டிருந்திருக்கின்றனர்.

நிறுவனங்​களிலும் கம்பெனி நிர்வாகத்​திலும் பணியாற்​றக்​கூடிய உத்யோகஸ்​தர்​களின் முகவரி​யாகவும் இச்சேரிகள் இருந்து​வந்​திருக்​கின்றன. சமூகத்தின் இதர பிரிவினர் ஒடுக்​கப்பட்ட மக்களுடன் இணைந்து வாழ்ந்​திடத் தயங்கும் கட்டத்​தில், போர்த்​துக்​கீசி​யர்​களும் ஆங்கிலேயர்​களும் இதர வெளிநாட்​ட​வர்​களும் பறச்சேரிகளை வாழ்விடங்​களாகக் கொண்டு அவர்களுடன் இணைந்​திருந்தது குறிப்​பிடத்​தக்கது.

கடந்த நூற்றாண்டின் தொடக்​கத்தில் பறச்சேரி​களில் குடியிருக்​கக்​கூடிய மக்களை வெளியேற்​றாது, அங்கேயே ஒழுங்​கமைக்​கப்பட்ட குடிசை வீடுகளை உருவாக்கி, கழிப்பறை, குடிநீர், சாலைகள் போன்ற​வற்றை ஒழுங்​கமைப்பது தொடங்​கியது. அத்துடன், அப்பகு​திகள் ‘மாடல் லைன்’ என்கிற பெயரினையும் பெற்றன.

அந்நாளில் வீரன் பறச்சேரி பட்டணத்தின் பெரிய குடியிருப்புப் பகுதி என்று சொல்லப்​பட்​டாலும், சுபாரி​குண்டா பறச்சேரியில் 200 வீடுகள் முறைப்​படுத்​தப்​பட்​டிருந்த 1915ஆம் ஆண்டு மாநகராட்சி அறிக்கையி​லிருந்து அறிய முடிகிறது.

இன்னும் சொல்லப்​போ​னால், ஆங்கிலோ இந்தி​யர்​களுக்கான மாதிரிக் குடியிருப்பு​களைக்கூட அன்றைய 12 மற்றும் 13ஆவது டிவிஷனுக்கு உட்பட்ட நரியங்​காட்டில் மாநகராட்சி உருவாக்கி​ இருக்​கிறது. இது பின்னாளில், புதுப்​பேட்​டைக்கு இடம்பெயர்ந்​திருக்​கிறது. நூற்றாண்டின் இறுதிக்​கட்​டம்வரை இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து​வந்தன. பின்னரே, மதராசப் பட்டணத்தின் உருவாக்​கத்தில் பெரும் பங்களிப்​பினைக் கொண்ட இவர்களை நகரத்​துக்கு அப்பால் குடியமர்த்தும் புதிய முயற்சிகள் தோன்றின.

பூர்வகுடிகளின் முக்கி​யத்துவம்: பறச்சேரிகள் என்றோ ‘மாடல் லைன்’ அல்லது குடிசைப் பகுதிகள் என்றோ பெயரிடப்பட்ட பகுதிகளை வாழ்விடங்​களாகக் கொண்டு இருந்தவர்கள், அவர்களைச் சுற்றி​யுள்ள பெருமக்கள் சமூகத்தைச் சார்ந்த வாழ்முறையைக் கொண்டிருந்தனர்.

நகரின் கட்டமைப்பை மேம்படுத்துவது அல்லது ஆற்றுப் படுகை​களின் ஆக்கிரமிப்பை அகற்றுவது என்கிற பெயரில் இவர்கள் பெருமளவில் வெளியேற்​றப்​பட்டு, நகரத்​துக்கு வெளியே பல கி.மீ.களுக்கு அப்பால் உருவாக்​கப்பட்ட பல்வேறு நகர்களில் குடியமர்த்​தப்​படு​கின்​றனர்.

அவை கான்கிரீட் சேரிகளே அன்றி, வேறில்லை. ஆயிரக்​கணக்கில் இங்கே இடம்பெயர்ந்த அனைவருமே நகர மக்களைச் சார்ந்த பணிகளை மேற்கொண்​ட​வர்​களாக, அண்டிப் பிழைப்​போராக இருந்​தவர்கள். இத்தகைய இடப்பெயர்வு அவர்களின் வருவாய் ஆதாரத்தை, குழந்தை​களின் கல்வி வாய்ப்புகளை, பண்பாட்டைத் தலைகீழாக மாற்றியது மட்டுமல்​லாமல், நகர மக்களோடு இணைந்து நின்ற அவர்களின் கௌரவமான வாழ்நிலையை முற்றி​லு​மாகச் சிதைத்து​விட்டது.

கடந்த காலங்​களில் பல்வேறு கட்டு​மானங்கள், ஏற்றும​திக்கான உற்பத்தி நடவடிக்கைகள், உள்ளூர்த் தேவைக்கான உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகள் போன்றவையே பல்வேறு கிராமங்​களின் ஒருங்​கிணைப்பில் உருவான மதராஸைப் பட்டண மாக்கியிருக்​கிறது.

இந்த மாற்றத்தில் ஆங்கிலேயர்கள், போர்த்​துக்​கீசியர், ஆர்மீனியர், யூதர்கள் போன்ற வெளிநாட்டவர் மட்டுமன்றி, இந்த மண்ணின் மைந்தர்கள் அனைவருமே சாதி, மத, மொழி பேதமின்றி பங்காற்​றலைக் கொண்டிருந்​திருக்​கின்​றனர். தங்களது மகத்தான உழைப்பினை அளித்​த தோடன்றி இன்றும் தங்கள் செயல்​பாடுகளை விரிவுபடுத்​தக்​கூடிய​வர்கள் ஒடுக்​கப்​பட்ட, தாழ்த்​தப்பட்ட மக்கள். அனைவருக்குமே உரியதான இந்தப் பட்டணத்தில் பூர்வகுடிகளுக்கு இடமில்லை எனில், இது எப்படி மாநகராக இருக்க முடியும்?

- தொடர்புக்கு: veeorr52@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x