Last Updated : 20 Aug, 2025 06:38 AM

 

Published : 20 Aug 2025 06:38 AM
Last Updated : 20 Aug 2025 06:38 AM

தொடரும் கழிவு மேலாண்மைச் சிக்கல் | சொல்... பொருள்... தெளிவு

உலகின் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடான இந்தியா, தீவிரமான கழிவு மேலாண்மை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 62 மில்லியன் டன் கழிவு உற்பத்தி ஆகிறது. இதில் 75-80% சேகரிக்கப்பட்டாலும், மீதமுள்ளவை திறந்தவெளியில் அல்லது நிலப்பரப்புகளில் வீசப்படுகின்றன. 30%க்கும் குறைவான கழிவு மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது அல்லது மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த அணுகுமுறை சுற்றுச்சூழல் - சுகாதாரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

குப்பை இல்லா நகரங்கள்: 2021இல் தொடங்கப்பட்ட, ‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து நகரங்களையும் குப்பை இல்லாத நகரங்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் பழைய குப்பைகளை அகற்றுவது, அறிவியல் ரீதியான கழிவு மேலாண்மை, கழிவைக் குறைப்பது, தூய்மையை மேம்படுத்துதல் போன்றவை இடம்பெற்றிருந்தன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ‘lakshya zero dumpsite’ என அழைக்கப்படுகிறது - அதாவது, ஏறக்குறைய 6,000 ஹெக்டேர் நகரப் பகுதி நிலத்தில் உள்ள பழைய குப்பைகளை அகற்றியாக வேண்டும்.

மேற்கூறிய இலக்கை அடைய 18 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை 50% பழைய குப்பைகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. 17% குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது; 12% பணி இன்னும் தொடங்கப்படாமலே உள்ளது. மீதம் உள்ளவை மாநில அரசு அல்லது பிற அமைப்புகளின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

பல ஆண்டுகளாகக் குப்பைக் கிடங்குகளில் தேங்கியிருக்கும் கழிவை நீக்க ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது. பழைய கழிவு என்பது பொதுவாகப் பழைய, மறுசுழற்சி செய்யப்படாத அல்லது முறையாகப் பதப்படுத்தப்படாத குப்பைகளாகும்; இவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை.

இந்தக் கழிவில் ஞெகிழி, கரிமப் பொருட்கள், கட்டுமானக் கழிவு, மின்னணுக் கழிவு, மருத்துவக் கழிவு இருக்கக்கூடும்; இவை ஒரே இடத்தில் நீண்ட காலமாகக் குவிக்கப்பட்டு, மண்ணையும் நீரையும் மாசுபடுத்துகின்றன. இக்கழிவு வகைகளைப் பிரித்து, மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை மீட்டெடுப்பது, கரிமக் கழிவை உரமாக மாற்றுவது, பயன்படுத்த முடியாதவற்றை அறிவியல்ரீதியாக அகற்றுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் மூலம், சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படுகிறது. ஆனால், நாட்டில் 6,019 ஹெக்டேர் பரப்பளவில் குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய குப்பைகளில், 42% பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 40% இடங்களில் அகற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 18% இன்னும் கவனிக்கப்படவில்லை. பிஹார், மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் 50%க்கும் மேல் பழைய குப்பைகள் இன்னும் அகற்றப்படாமலே உள்ளன.

மாநிலங்களின் நிலை: இந்தியாவில் கழிவு மேலாண்மைச் செயல்பாடு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. தூய்மை இந்தியா - திடக்கழிவு மேலாண்மை போன்ற முயற்சிகள் நடக்கும்போதிலும், மாநிலங்களின் செயல்திறன் - உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை வேறுபடுவதால் கழிவை அகற்றுவதில் தேக்கநிலை நிலவுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் அதிகப்படியான கழிவு உருவாகிறது. அம்மாநிலத்தில் ஒரு நாளைக்கு 22,000 டன் கழிவு உற்பத்தி செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (18,000 டன்/ ஒரு நாள்), தமிழ்நாடு (15,000 டன்/ ஒரு நாள்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்தியாவில் நகரப் பகுதிகளில் 95% கழிவு சேகரிக்கப்படுகிறது. ஆனால், கிராமப்புறப் பகுதிகளில் நகரங்களைப் போன்று முறையான சேகரிப்பு இல்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையாகக் கழிவைச் சேமிக்கின்றன; இம்மாநிலங்கள் 90%க்கும் மேல் சேகரிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளன.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்றவை 95-100% கழிவு பிரித்தல் - பதப்படுத்துதலில் முன்னணியில் உள்ளன. கழிவை மறுசுழற்சி செய்வதில் மகாராஷ்டிரம், கர்நாடகம் சிறப்பாகச் செயல்படுகின்றன. டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கழிவு பிரித்தலைச் செய்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதுரை, சென்னையில் கழிவு பிரித்தல் - உரமாக்குதல் முயற்சிகள் மேம்பட்டுவருகின்றன. ஆனால், முழுமையான நடைமுறைப்படுத்துதல் தேவை. பிஹார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்றவை பழைய குப்பைகளை அகற்றுதல் - கழிவு பிரித்தலில் பின்தங்கி உள்ளன. மேலும், குப்பைக் கிடங்குகள், உரமாக்கும் மையங்கள், உயிரி மீத்தேன் ஆலைகளின் எண்ணிக்கை பல மாநிலங்களில் போதுமான அளவு இல்லாததால் கழிவு மேலாண்மைச் சிக்கல் அதிகரித்துள்ளது.

மறுசுழற்சிக் கொள்கைகள்: மத்திய அமைச்சகம், இபிஆர் (EPR - Extended Producer Responsibility) உள்ளிட்ட கழிவு மேலாண்மைக் கொள்கைகளை வகுத்து, மறுசுழற்சியாளர்களை ஊக்குவித்து வருகிறது. உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்திசெய்யும் பொருட்களின் முழுமையான பயன்பாட்டுச் சுழற்சிக்கு, குறிப்பாக - அவை கழிவாக மாறும்போது, பொறுப்பேற்க வேண்டும் என்பதை இபிஆர் விதிகள் வலியுறுத்துகின்றன.

மின்னணுக் கழிவு, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ஞெகிழி, டயர்கள், பேட்டரிகள், பயன்படுத்தப்பட்ட எண்ணெய் ஆகியவற்றுக்கு இபிஆர் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் கழிவு மேலாண்மையில் நீடிக்கும் சவால்கள் காரணமாகத் தூய்மை இந்தியா 2.0 - இபிஆர் போன்றவற்றின் இலக்குகளை அடைவதில் திட்டவட்டமான தாமதம் ஏற்படுகிறது.

சவால்களும் தீர்வுகளும்: ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் குப்பை, கழிவைச் சமாளிக்கக் கழிவு மேலாண்மைக்கு மேம்படுத்தப்பட்ட திட்டங்களைத் துரிதமாகச் செயல்படுத்த வேண்டும். டெல்லியின் காஸிபூர், மும்பையின் தியோனர் போன்ற பிரம்மாண்டமான குப்பை மலைகளை அகற்றுவதில் சுணக்கம் நீடிக்கிறது.

இதனால், அப்பகுதி மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மின்னணுக் கழிவு, ஞெகிழி, மருத்துவக் கழிவு, மின்கலன்களை மறுசுழற்சி செய்வதற்குத் தேவையான வசதிகள் பல மாநிலங்களில் குறைவாக உள்ளன. கட்டுமானக் கழிவை மறுசுழற்சி செய்யவும், மறுபயன்பாடு செய்யவும் முறையான அமைப்புகள் தேவை.

கழிவு பிரித்தல், மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது. பலரும் குப்பையை, மட்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரிக்காமல் வீசும் நிலையே இன்றும் நிலவுகிறது. எனவே, கழிவு பிரித்தல் - மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிக்க வேண்டும்.

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கழிவு 165 டன்னை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது; இதைச் சமாளிக்கக் கழிவு மேலாண்மை செயல்முறைகளை மேம்படுத்துவது, மறுசுழற்சி, சுத்திகரிப்புக்கான உள்கட்டமைப்பு வசதி, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது ஆகிய முன்னெடுப்புகள் அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x