Published : 17 Aug 2025 12:27 PM
Last Updated : 17 Aug 2025 12:27 PM

காமராஜருக்கு எதிராக கலகக் குரல்கள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 48

மொழிவாரி மாநிலம் அமைந்த பின்பு முதல் தேர்தல் 1957-ல் நடைபெற்றது. இது காமராஜர் முதல்வரான பின் நடந்த முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வேட்பாளர் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இதனால் கட்சி நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்தனர்.

குறிப்பாக, “எந்தத் தொகுதியில் எந்த சாதி மெஜாரிட்டி என்று பார்த்து அந்த சாதியைச் சார்ந்தவரையே காங்கிரஸ் வேட்பாளராக காமராஜர் தேர்வு செய்கிறார்; காங்கிரஸ் மூத்த தலைவர்களைப் புறக்கணிக்கிறார்; புதிதாக காங்கிரசுக்குள் வந்த பணக்காரர்கள், கள்ள மார்க்கெட், கலப்பட வியாபாரிகள் போன்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறார்; காங்கிரஸ் கட்சியில் சர்வாதிகாரிபோல நடக்கிறார்; ஜனநாயக நடைமுறைகளை புறக்கணிக்கிறார்” என பல்வேறு குற்றச்சாட்டுகளை காமராஜர் மீது சுமத்தினர்.

அதைத்தொடர்ந்து அதிருப்தியில் இருந்த காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து ‘காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி 1957 தேர்தலில் களமிறங்கினர். 1957-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தை பொங்கல் அன்று ‘காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி’ உருவாக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில், அடுத்த மாதமே (பிப்ரவரி) நடந்த தேர்தலில் 80 தொகுதிகளில் போட்டியிட்டனர். சேலம் வெங்கடகிருஷ்ண ரெட்டியார், செங்கல்பட்டு வி.கே.ராமசாமி முதலியார், மதுரை டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, சிங்கராயர், நெல்லை எல்.எஸ்.கரையாளர் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சிக்கு மூதறிஞர் ராஜாஜி மறைமுக ஆதரவு அளித்தார்.

மேலும், காங்கிரஸ் எதிர்ப்பாளராக இருந்த ஃபார்வர்டு பிளாக் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆதரவையும் பெற்றனர். இந்தக் கூட்டணியின் முழு தேர்தல் பிரச்சாரகராகத் தேவர் திகழ்ந்தார். இதனால் காமராஜருக்கு பெருத்த எதிர்ப்பு உருவானது. 1954-ம் ஆண்டு 162 எம்எல்ஏ.க்களோடு ஆட்சியில் அமர்ந்த காமராஜர், 1957 தேர்தலில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 138 ஆகக் குறைந்தது. அதிலும் குறிப்பாக சாத்தூர் தொகுதியில் காமராஜர் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற முடிந்தது.

ஆங்காங்கே நடந்த அதிகார அத்துமீறல்கள் இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிந்தது. இவற்றையெல்லாம் முறியடித்து மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் சீர்திருத்தக்கட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இது அரசியல் வரலாற்றின் திருப்பு முனையாக இருந்தது.

காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி 80 சட்டமன்றத்தொகுதிகளிலும், 12 பாராளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளிலும் 7 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. புதிய கட்சி என்பதால் பொதுச் சின்னம் கிடைக்கவில்லை. எனவே, பல்வேறு சுயேட்சைச் சின்னங்களில் போட்டியிட வேண்டியநிலை இருந்தது. ஒரு சிலருக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது.

அதேபோல், 14 இடங்களில் வெற்றி பெற்ற திமுகவுக்கும் ஒரே சின்னம் கிடைக்கவில்லை. விழுப்புரம் ஏ.கோவிந்தசாமிக்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. பின்னாளில் அண்ணா அந்த சின்னத்தை திமுகவின் சின்னமாக்க கோரினார். அன்று பெற்ற உதயசூரியன் சின்னம் இன்று வரை திமுகவின் சின்னமாகத் திகழ்கிறது.

காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியின் வேட்பாளர்களான உத்தனபள்ளி முனிரெட்டி. (தர்மபுரி), ஹோசூர் கே.அப்பாவுபிள்ளை (தர்மபுரி), அறந்தாங்கி எஸ்.ராமசாமி (தஞ்சை.), சிவகங்கை துரை.சுப்பிரமணியராஜா (ராமநாதபுரம்), திருவாடனை கரியமாணிக்கம் அம்பலம் (ராமநாதபுரம்), பரமக்குடி கே.ராமச்சந்திரன் (ராமநாதபுரம்), கோவில்பட்டி வி.சுப்பையாநாயக்கர் (நெல்லை), தென்காசி சட்டநாதகரையாளர் (நெல்லை), சேரன்மகாதேவி D.S.ஆதிமூலம் நாடார் (நெல்லை), ஆலங்குளம் வேல்சாமித்தேவர், கன்னியாகுமரி டி.எஸ்.ராமசாமிபிள்ளை (குமரி), திருமங்கலம் ,பாலகுருவாரெட்டியார் (மதுரை), வடமதுரை , திருவேங்கடசாமி நாயக்கர் (மதுரை), நிலக்கோட்டை பாத்தா முத்துத்தேவர் (மதுரை), உடுமலைப்பேட்டை ST.சுப்பராயக்கவுண்டர் (கோவை), உத்திரமேரூர் வி.கே.ராமசாமி முதலியார் (செங்கல்பட்டு), போளூர். S.M.அண்ணாமலை (தென்ஆற்காடு), ஆரணி .P துரைசாமிரெட்டியார் (தென் ஆற்காடு), பெரம்பூர் பக்கிரிசாமிபிள்ளை, திண்டிவனம் பி.வீரப்பக்கவுண்டர், விருத்தாசலம் எம்எல்ஏ.செல்வராஜ், திருச்சி-1 E.P.மதுரம், சாத்தான்குளம் எஸ்.பி ஆதித்தன் போன்றோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

காங்கிரஸ் சீர்திருத்தக் காங்கிரஸ் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்று சட்டசபையில் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. வி.கே.ராமசாமி முதலியார் எதிர்க்கட்சித்தலைவர், கன்னியாகுமரி ராமசாமி பிள்ளை துணைத்தலைவராக பொறுப்பேற்றனர்.

முத்துராமலிங்கத் தேவருக்கு ஏற்பட்ட நெருக்கடி

இந்நிலையில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியின் முதல் மாநாடு 1957-ம் ஆண்டு செப்டம்பர் 28, 29-ம் தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது. மாநாட்டில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டைத் தொடங்கி வைக்க வருமாறு, கட்சிக்கு அரசியல் அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்த பசும்பொன் தேவரை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். அதன்படி மாநாட்டைத் தொடங்கி வைத்த முத்துராமலிங்கத் தேவர், காங்கிரஸ் வரலாற்றையும், காமராஜரின் ஜனநாயக விரோதப்போக்கையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, நேதாஜி காரியாலத்துக்கு சென்று கொண்டிருந்த தேவரை இடைமறித்த தமிழக போலீஸார், ‘பாதுகாப்புச் சட்டப்படி’ தேவரைக் கைது செய்தனர். அப்போது தேவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்.
பரமக்குடியில் இமானுவேல் கொலை சம்பவம் நடந்தது 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இரவு 9 மணிக்கு. அப்போதெல்லாம் தேவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்படவில்லை. ஆனால், நவம்பர் 23-ம் தேதிக்குப் பிறகு இமானுவேல் கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக தேவர் சேர்க்கப்பட்டார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

இந்த கொலை வழக்கு பரமக்குடி கோர்ட்டில் முதல்நிலை விசாரணை முடித்து, ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு வர வருடங்கள் ஆகலாம் என்று பேசப்பட்டு வந்தது. ராமநாதபுரம் மாவட்ட தலைநகரமும் மதுரை தான். மதுரை திருமலை நாயக்கர் மஹாலில்தான் ராமநாதபுர மாவட்ட நீதிமன்றம் இயங்கியது. ஆனால் வழக்கை சீக்கிரம் விசாரித்து, தேவருக்கு விரைவில் தண்டனை கொடுத்துவிடவேண்டும் என்று முனைப்பு காட்டியது காங்கிரஸ் அரசு. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் இருந்த புதுக்கோட்டையில் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு, சிறப்பு நீதிபதி மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் வி.எல்.எத்திராஜ், ஆர்.கிருஷ்ணசாமிரெட்டியாரை நியமித்து வழக்கு துரிதப்படுத்தப்பட்டது.

விசாரணை முடிந்து 1959-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 12 பேரில் தேவர் உள்ளிட்ட 9 பேர் விடுவிக்கப்பட்டனர். 3 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்ததில் அந்த 3 பேருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இதற்கிடையே, 1957 அக்டோபர் 25-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாணசுந்தரம், காமராஜர் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தார். சட்டப்பேரவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. ஆரம்பத்தில் தீர்மானத்தை ஆதரித்துப்பேசிய திமுக, வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்தது. அதன்பின் மேல்சபையிலும் தீர்மானம் வந்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் 1959-ம் ஆண்டு மதுரை நகரசபை தேர்தல் வந்தது. இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ், ஃபார்வர்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி, திமுக கட்சிகள் கூடி காங்கிரசுக்கு எதிராக அரசியல் கூட்டணியை ஏற்படுத்தின. இத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.மதுரை நகரசபை தலைவராக தேவரின் தொண்டர் எஸ்.தேவசகாயம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியலில் ஒரு புது கருத்துருவை உருவாக்கிய காங்கிரஸ் சீர்திருத்த கட்சி, ராஜாஜியின் நேரடி தலையீட்டின் காரணமாக 1960-ல் சுதந்திராக் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி என்பது இன்றைக்குப் பேசப்படுகின்ற கட்சியாகவோ அதுபற்றிய செய்திகளோ எங்கும் காணப்படவில்லை.

தமிழகத்தின் முதல் எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சிதான் இருந்து வந்தது. அதேநேரம் காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி தொடங்கிய ஒரு மாதத்திலேயே தேர்தலைச் சந்தித்து எதிர்க்கட்சியாக அமரும் நிலைக்கு அக்கட்சிக்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்தது. அதன்பின்னர் 1962-ம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக வந்தது. அதைத்தொடர்ந்து 1967-ல் ஆட்சியைப் பிடித்தது.

இந்த காங்கிரஸ் சீர்திருத்த கட்சி என்பது ஏறக்குறைய வடபுலத்தின் சோசலிஸ்ட் கட்சியைப் போன்றதுதான். அந்த சோசலிஸ்ட் கட்சி பின்னாளில் பிரஜா சோலிஸ்ட் பார்ட்டி (பிஎஸ்பி), சம்யுக்த சோசலிஸ்ட் பார்ட்டி (எஸ்எஸ்எஸ்பி) என 2ஆகப் பிரிந்தது. பிஎஸ்பி மற்றும் எஸ்எஸ்பி ஆகிய இரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன. இவர்களுக்கு முறையே ஆலமரம் மற்றும் குடிசை சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஓங்கி வளர்ந்து, கிளை பரப்பி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிழல் தந்து பாதுகாக்கும் ஆல மரம் சின்னம் என்றும், குடிசைவாழ் மக்களுக்கு சோசலிசக் கொள்கைகளை கொண்டு செல்லும் குடிசை சின்னம் என்றும் தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது. தலைவர்களும் தங்கள் கொள்கைகளுக்கு உகந்த சின்னம் கிடைத்துள்ளதாக பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள்.

இந்த கட்சிகளும் தமிழ்நாட்டில் போட்டியிட்டு 1967 வரை குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றார்கள். காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட தமிழகப் பிரச்சினைகள் குறித்தும் சட்டப்பேரவையில் பேசினார்கள். அன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி கிடையாது. ஜனசங்கம் என்ற பெயரில்தான் தேர்தலில் போட்டியிட்டது. அக்கட்சிக்கு தீபம் சின்னம் ஒதுக்கப்பட்டது. மதுரை கவுன்சிலர் தேர்தலில் அந்தச் சின்னத்தில் போட்டியிட்ட சேஷாத்திரி வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். அவருடைய ஆதரவால்தான், கலைஞரின் ஆசையின்படி மதுரை முத்து மேயர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரத்தில், என்னுடைய கடந்த கால வாழ்க்கையை சற்று பின்னோக்கிப் பார்க்கிறேன்... ஓரளவு மங்கலான நினைவுகள்...

அன்றைக்கெல்லாம் ஒருசில வீடுகளில் மர்பி மற்றும் பிலிப்ஸ் கம்பெனி ரேடியோக்கள் இருப்பதுண்டு. அதில்தான் சினிமா பாடல்களையோ, செய்திகளையே கேட்க முடியும். சிறு குழந்தைகளுக்கு மூன்று சக்கர பிளாஸ்டிக் சைக்கிள் வாங்கித் தருவார்கள். அதில் சென்ற ஞாபகம் இன்றும் நினைவில் உள்ளது. அதேபோல், சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் செல்லும்போது கடை வீதிகளில் பிளாஸ்டிக் பொம்மைக் கடைகளைப் பார்த்திருக்கிறேன். தலையிலோ அல்லது பாதத்திலோ விசில் வைத்த குழந்தை பொம்மைகளை வாங்கித் தருவார்கள். அதை அழுத்தும்போது விசில் சத்தம் வரும். இன்றைக்கு உள்ளது போன்று பேட்டரி பொம்மைகள் எல்லாம் அன்றைக்கு கிடையாது... மரப் பொம்மைகள் கிடைக்கும்.

கழுகுமலை மலையில் யாருடைய கையையாவது பிடித்துக் கொண்டு ஏறுவதுண்டு. அதேபோல் என்னை யாராவது தூக்கிக் கொண்டும் மலையில் ஏறியதுண்டு. மலை உச்சியில் இருந்து சுற்றிலும் பார்க்க பச்சைப் பசேல் என்று பசுமையாய் கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கும் நிலப்பரப்பும், சுழன்றடிக்கும் சில்லென்ற காற்றும் அளவில்லா சந்தோசத்தைத் தரும்!

என்னுடைய சிறுபிராயத்தில் எல்கேஜி, யுகேஜி, பிரீகேஜி எல்லாம் கிடையாது. 5 வயது நிரம்பினால் நேரடியாக திண்ணைணப் பள்ளிக் கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிடுவார்கள். ஓடு போட்ட பள்ளிக் கூடம். எந்தத் தடுப்புகளும் இல்லாத பெரிய வராண்டா இருக்கும். வகுப்பாசிரியர் அதை மூன்று நான்கு வகுப்புகளாக பிரித்து தனித்தனியாக உட்கார வைத்து பாடம் சொல்லித் தருவார். ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியர் சொல்லித் தருவது அடுத்த வகுப்பில் கேட்கும். பெஞ்ச் கிடையாது. தரையில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் 20 - 30 மாணவ, மாணவிகள் படிப்பார்கள். ஆசிரியர்கள் உட்காருவதற்கு நாற்காலி வசதிகூட அப்போது இருப்பதில்லை. ஒருவர் ஸ்டூலில் உட்கார்ந்திருப்பார். ஒருவர் பள்ளிக்கூட ஆவணங்கள் உள்ள பெட்டியின் மேல் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுப்பார். தலைமை ஆசிரியருக்கு மட்டும் நாற்காலி, மேஜை இருக்கும்.

ஒன்றாம் வகுப்பு மாணவர்களிடம் அ, ஆ எழுத்துகளுடன் கூடிய தமிழ் புத்தகம், மரச்சட்டத்துடன் கூடிய சிலேட்டு, அதில் எழுதுவதற்கு ‘பல்பம்’ என்று சொல்லக்கூடிய சிலேட்டுக் குச்சிகள் மட்டுமே இருக்கும். சின்னச் சின்ன வாக்கியங்கள் மட்டும் தமிழ் பாடத்தில் சொல்லித் தருவார்கள். கணிதமோ, ஆங்கிலோ கிடையாது. பள்ளிகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிக்கு மூடப்பட்டு விடும். திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான ஓடு போட்ட அரசு தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் இருந்தன. ஒருசில இடங்களில் கிராமத்தின் பொதுக் கட்டிடங்களில் வகுப்புகள் நடந்தது உண்டு. இப்படியாக அன்றைய இளம்பருவ கல்வி இருந்தது.

இனி... காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, பிஎஸ்பி மற்றும் எஸ்எஸ்பி கட்சிகள் உருவான சூழல், அதன் செயல்பாடுகள் குறித்து அடுத்து காண்போம்...

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > ‘தீர்க்கதரிசி’ ராஜாஜியின் அரசியல் பயணம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 47

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x