Published : 16 Aug 2025 05:09 PM
Last Updated : 16 Aug 2025 05:09 PM

‘தீர்க்கதரிசி’ ராஜாஜியின் அரசியல் பயணம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 47

காமராஜரை வாழ்த்திய ராஜாஜி.

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் மிக முக்கியமானவர் ராஜாஜி என்று அழைக்கப்பட்ட சி.ராஜகோபாலாச்சாரி (1878-1972). அவரின் முழு வாழ்க்கையையும் அறியாதவர்கள், அவர் ஒரு பார்ப்பனியவாதி என்று தவறாக கருதுகின்றனர். சேலத்தில் பின்னர் சென்னையில் மிக மிக வெற்றிகரமான வழக்கறிஞராக இருந்தவர். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வழக்கு கட்டணமாக 1910-இல் ஈட்டியவர் (இன்றைய மதிப்பில் சுமார் 2 லட்சம்). அவர் விரும்பியிருந்தால், மிகப் பெரும் கோடீஸ்வரராக மாறியிருக்க முடியும்.

1917-இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரவுலட் சட்டத்துக்கு எதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாக்கிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1920-இல் காந்தியடிகளின், ஒத்துழையாமை போராட்டத்திற்கான அறைக்கூவலை ஏற்று வழக்கறிஞர் தொழிலை துறந்தார். (அதன் பிறகு அவருக்கு நிரந்தர வருமானம் எதுவும் இல்லை.).

சேலம் மாநகராட்சியின் சேர்மனாக இருந்தபோது, சக பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க சாதியினரின் கடும் எதிர்ப்பை மீறி ஒரு தலித்தை குடிநீர் விநியோக பணியில் அமர்த்தினார். 1925-இல் திருச்செங்கோடு அருகே காந்தி ஆசிரமத்தைத் தொடங்கினார். அந்த ஆசிரமத்தை திறந்து வைத்தவர் ராஜாஜியின் நெருங்கிய நண்பரான பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியின் சபர்மதி ஆசிரமத்தைப் போலவே இதுவும் செயல்பட்டது. தலித் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. விளிம்பு நிலை மக்களுக்காக பல சேவைகள் செய்தார். கதர், கைத்தறி உற்பத்தி செய்யப்பட்டது. மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய ‘விமோசனம்’ என்ற இதழை ஆசிரமத்தில் இருந்து தொடங்கி நடத்தினார்.

1930-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடத்தி சிறை சென்றார். 1937-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். அப்போது வி.எம். முனுசாமி என்ற பட்டியல் இனத்தவரை இந்து அற நிலையத்துறையின் அமைச்சராக நியமித்தார். ஜெர்மனியுடன் பிரிட்டன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

போர்க்காலத்தில் பிரிட்டனுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் ‘சி.ஆர். பார்முலா’ என அழைக்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார். 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுநராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

அவர் நினைத்திருந்தால், நேருவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான காங்கிரஸ் தலைவராக, கேபினட் அமைச்சராக தொடர்ந்திருக்க முடியும். ஆனால் நேருவின் சோசலிச பாணி பொருளாதார கொள்கைகளுடன் கடுமையாக முரண்பட்டதால், காங்கிரஸ் கட்சியை விட்டே விலகினார். 1959-இல் சுதந்திரா கட்சியைத் தொடங்கி, முதலாளித்துவ பொருளியல் கொள்கைகளை முன்மொழிந்தார். 1991-க்கு பிறகு இந்தியா அதே கொள்கைகளை அமல்படுத்த தொடங்கியது. இது ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி என்பதை நிறுவுகிறது.

1937-இல் சென்னை மாகாண முதல்வரான பின்னர் இந்தி திணிப்பு செய்தார். இதனால், பெரியார் தலைமையில் பெரும் போராட்டம் வெடித்தது. இது ராஜாஜியின் முக்கிய தவறுதான். ஆனால் 1960-களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். 1965-இல் இந்தி திணிப்பை எதிர்த்தார். ராஜாஜி தவறே செய்யாதவர் என்பதல்ல... ஆனால் உள்நோக்கம் கொண்ட, தந்திரமான பார்ப்பன சதிகாரர் என்ற பிம்பம் தவறானது. 1952-இல் மீண்டும் முதல்வரானபோது, அவரின் புதிய கல்வித் திட்டத்தை ‘குலக்கல்வி’ திட்டம் என்று பெரியார் தவறாக கருதி எதிர்த்தார்.

நேருவுடன் ராஜாஜி, காமராஜர்.

பெருந்தலைவர் காமராஜரைக் கவிழ்க்க, திமுகவுடன் ராஜாஜி கூட்டு சேர்ந்தார் என்பது மேலோட்டமான, ஆதரமில்லாத கட்டுக் கதை. ராஜாஜி நேருவையும்தான் தீவிரமாக எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியின் ஏகபோக ஆட்சியை அகற்றினால்தான் இந்தியா உருப்படும் என்று தீவிரமாக நம்பினார். சோசலிசத்தின் கேடுகளில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க காங்கிரஸ் ஆட்சியை முறியடிப்பதே ஒரே வழி என்று கருதியதால், காங்கிரஸை எதிர்க்க பல வகையான எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாரே தவிர, காமராஜர் என்ற தனி மனிதரை கவிழ்க்கும் நோக்கத்தில் அல்ல.

1971 தேர்தலில் கலைஞரின் தலைமையிலான திமுக, இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தவுடன். இதே காமராஜரின் காங்கிரஸ் உடன் ராஜாஜி கூட்டணி அமைக்கவும், காங்கிரஸ் எதிர்ப்பே அடிப்படை காரணம்.

இனி 1952-ம் ஆண்டின் தமிழக அரசியல் நிலவரத்துக்கு வருவோம்...

சென்னை மாகாணத்துக்கு 1952-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா தோல்வியடைந்தார். இதனால், சென்னை மாகாணத்தின் முதல்வர் யார் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் தொற்றிக் கொண்டது. காங்கிரஸுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், பிற கட்சிகளின் ஆதரவைப் பெற காங்கிரஸ் முனைப்பு காட்டியது. அந்த வகையில் ‘காமன் வீல்’ கட்சியைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் ராஜாஜிக்கு ஆதரவு அளித்தனர்.

ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை 1952 ஏப்ரல்10-ஆம் தேதியன்று பொறுப்பேற்றது. நிர்வாகத் துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத சி.சுப்பிரமணியம், நிதி, உணவு ஆகிய துறைகளுக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

‘நிதி, உணவு ஆகிய இரு முக்கிய துறைகளை நிர்வாகத்தில் அனுபவம் இல்லாத ஒரு புதியவரிடம் ஏன் ஒப்படைத்தீர்கள்?’ என்று, ராஜாஜியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “சுப்பிரமணியம் ஆற்றல் மிகுந்தவர். இந்தப் பொறுப்பை மட்டுமின்றி இதைவிடக் கூடுதலான பொறுப்பையும் அவரால் சமாளிக்க முடியும்” என்று கூறினார். மனிதர்களையும், விஷயங்களையும் மதிப்பீடு செய்வதில் எப்போதும் தனித்துவமுடையவர் ராஜாஜி.

சென்னை மாகாணச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 9 பேர் ‘காமன் வீல்’ கட்சியைச் சேர்ந்தவர்கள். அந்தக் கட்சியின் தலைவர் மாணிக்கவேலு நாயக்கர். அந்தக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வடார்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களின் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். மாணிக்கவேலு நாயக்கர் வடார்க்காடு மாவட்டத்தில் பிரபலமாக விளங்கியவர். அவர் சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்தவர். பனகல் ராஜா தலைமையில் நீதிக்கட்சி மந்திரி சபை அமைந்தபோது அதில் சட்டசபைக்குரிய செயலாளராக (இது துணை அமைச்சர் பதவிக்கு ஈடானது) மாணிக்கவேலு நாயக்கர் பொறுப்பு வகித்துள்ளர்.

அதிர்ச்சி தந்த இடைத்தேர்தல் முடிவு: இதற்கிடையே ஒரு முக்கியமான இடைத் தேர்தல் நடந்தது. பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி பெற்றிருந்தார். அவற்றில் ஒரு தொகுதியில் உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அவர் ராஜினாமா செய்த அருப்புக்கோட்டைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.

கள்ளர், மறவர், அகமுடையர் என்று அழைக்கப்படும் முக்குலத்தோருக்கு முத்துராமலிங்கத் தேவர் தன்னிகரில்லாத் தலைவர். முத்துராமலிங்கத் தேவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் அளவிலா ஈடுபாடு கொண்டவர். ‘நேதாஜி உயிருடன் இருக்கிறார். நான் அவருடன் தொடர்பு கொண்டு வருகிறேன். அவர் தலைமைப் பதவியை ஏற்பதற்காக உரிய நேரத்தில் தோன்றுவார்’ என்று முத்துராமலிங்கத்தேவர் பல வருடங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். அதை பலர் நம்பினார்கள்.

அந்த இடைத் தேர்தலை ஒரு கவுரவப் பிரச்சினையாகக் கருதினார் ராஜாஜி. “நான் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்றால், நீங்கள் காங்கிரஸ் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று அவர் அந்தத் தொகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஓர் இளம் பெண்மணி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

இதனால், மக்களின் நம்பிக்கையைப் பெறத் தாம் தவறி விட்டதாக ராஜாஜி கருதினார். ‘இடைத்தேர்தல் நடந்த பகுதி சாதிவழிச் செல்வாக்கு மிகுந்தது என்றும், அங்கு மகாத்மா காந்தியே போட்டியிட்டாலும், அவர் தோற்கடிக்கப்பட்டிருப்பார்’ என்றும் பலர் ராஜாஜியிடம் கூறினார்கள்.

எனினும் ராஜாஜி சமாதானம் அடையவில்லை. தமது அமைச்சரவைக்குச் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குக் கோருவது என்று ராஜாஜி முடிவு செய்தார். அதன்படி, நம்பிக்கைப் பிரேரணையை 1952 ஜூன் 30-ஆம் தேதி, சட்டப்பேரவையின் அவை முன்னவர் என்ற வகையில் சி.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். இதற்கு முன்பாக முதலமைச்சர் ராஜாஜி சபையில் ஒரு அறிக்கையை வாசித்தார்.

“பேரவைத் தலைவர் அவர்களே! இந்தச் சபையின் தெளிவான நம்பிக்கையை நான் கோர வேண்டும் என்று என்னை உணர வைத்த காரணங்கள், சூழ்நிலைகள் ஆகியவை குறித்து மாண்புமிகு உறுப்பினர்கள் இப்போது முற்றிலும் அறிவார்கள். நான் இப்போது பணி புரிந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலைகள் எந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்த்தாலும், சிரமமானவை; மிகச் சிரமமானவை என்று கூறுவதும் மிகையாகாது. இந்தச் சபையின் உறுதியான, தெளிவான நம்பிக்கை எங்களுக்கு இருந்தாலொழிய, நானோ அல்லது எனது அமைச்சரவை சகாக்களோ எங்களது கடமைகளை நிறைவேற்ற முடியாது.

நான் ஒரு மாபெரும் கடினமான மாற்றத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். உணவுக் கொள்கையில் செய்யப்படும் மாற்றமே மிகப் பெரிய, மிகவும் சிரமமான மாற்றம் ஆகும். இதர பல சிரமமான பணிகளையும் நான் மேற்கொண்டிருக்கிறேன். நமது மாகாணத்தின் முன்னேற்றம், தன்னிறைவுப் பூர்த்தி நிலை ஆகியவற்றை உருவாக்க நிதி வசதியை நன்கொடையாகவோ அல்லது கடனாகவோ ஏற்பாடு செய்வதும் மிகவும் சிரமமான ஒரு பணி.

எனது அரசாங்கத்துக்கு இந்தச் சபையின் நம்பிக்கை இருக்கிறதா? என்பது குறித்துச் சந்தேகம் நீடிக்கின்ற நிலையில், என்னால் இந்த மிகச் சிரமமான பணிகளைச் செய்ய முடியாது. இந்தச் சபை எனது அரசாங்கத்தினிடம் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது அல்லது நம்பிக்கை வைக்கவில்லை என்பதாக ஏதேனும் ஒரு முடிவு வெளியானால்தான், நிதி வசதிக்காக முதலீடு செய்யக் கூடியவர்கள், எனது அரசை நம்பிச் செயல்படலாமா? அல்லது செயல்படக் கூடாதா? என்பது பற்றி தீர்மானிக்க இயலும்.

அருப்புக்கோட்டை இடைத்தேர்தல் முடிவு எனது மன அமைதியைக் குலைத்து விட்டது. எனது அரசிடம் நம்பிக்கை இருக்கிறதா என்பதைத் தெரிவிக்குமாறு, அருப்புக்கோட்டை இடைத் தேர்தலில் நான் நேரடியாக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். எனக்குப் பாதகமான ஒரு பதிலை அந்தத் தொகுதியின் வாக்காளர்கள் அளித்திருக்கிறார்கள்.

அருப்புக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் நிறுத்திய பெண்மணிக்கு சுமார் 50 ஆயிரம் வாக்குகளும், எதிர்த்து நின்ற ஃபார்வர்டு பிளாக் வேட்பாளருக்கு 70 ஆயிரம் வாக்குகளும் கிடைத்துள்ளன. எனது பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பது மட்டுமின்றி, கடுமையான தியாகங்களையும் ஆற்ற வேண்டும் என்று நான் வேண்டுகோள் விட வேண்டியிருப்பதால், இந்தச் சபையின் நம்பிக்கை வாக்குடன் நான் செயல்பட வேண்டும்.

இன்று, இந்த மாகாணம் முழுவதற்கும் நான் பிரதிநிதியாக இருப்பது அவசியம் என்று கருதுகிறேன். நான் முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதே நான் எழுப்புகின்ற கேள்வி. எனது நிலை குறித்து சந்தேகம் கொள்ள போதிய காரணங்கள் இல்லை என்றும், இந்தச் சோதனை அவசியமற்றது என்றும் பிரபல இதழ்கள் தெரிவித்துள்ளன.

எனினும், நான் தொடங்கியுள்ள பணிகள், கொள்கைகள் ஆகியவற்றின் தன்மையும், இனிமேல் நான் மேற்கொள்ளவிருக்கும் பணிகளின் தன்மையும், இந்தச் சபை தெளிவான, நிர்ணயமான, உறுதியான நம்பிக்கையை (எனது அரசிடம்) தெரிவிப்பதை அவசியமாக்குகின்றன என்று நான் கருதுகிறேன்.” இவ்வாறு ராஜாஜி அமைச்சர் பேசினார்.

இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டி.விசுவநாதம், பில்லமர்ரி வேங்கடேஸ்வருலு, பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர். இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றது.

சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்துக்காக மிகுந்த விமர்சனத்துக்கு ஆட்பட்டார் ராஜாஜி. காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962, 1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார்.

1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார். அவருடன் கூட்டணி கண்ட சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்க்கட்சியாக விளங்கியது.

ராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்ததும் அவரை ‘குல்லுகப்பட்டர்’ என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பேசியதால் பொதுவெளியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குலக் கல்வி என்று ராஜாஜி கொண்டு வந்தது தொழில் கல்வி என்று எடுத்துக் கொள்ளாமல், அது குலக் கல்வி என்று பறைசாற்றி விட்டார்கள்.

அன்றைக்கு பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பெயர் எனக்கு சரியாக நினைவில்லை... அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், கல்வித் திட்டங்களில் தொழில்கல்வியும் அவசியம் என்று சிபாரிசு செய்திருந்தது. அதன் அடிப்படையில்தான் தொழில்கல்வியை அறிவித்தார். குலக்கல்வி என்று விமர்சித்த திமுக தான் பின்னாட்களில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. அதன்படி உயர்நிலைப் பள்ளிகளில் எலெக்ட்டிவ் சப்ஜெக்ட் என்ற பிரிவு தொடங்கப்பட்டு, நெசவு, தச்சு, தோட்ட வேலை, பொறியியல் போன்ற பாடத்திட்டங்களைச் சேர்த்து அமல்படுத்தப்பட்டது. என்ன முரண்பாடு பாருங்கள்...

‘குல்லுகப் பட்டர்’ என்று விமர்சிக்கப்பட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மபொசியின் தமிழரசு கழகம், ஃபார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக் என்ற வலுவான கூட்டணியை அமைத்து, 1967-ல் திமுக வெற்றி பெற்றது, அண்ணா முதலமைச்சரானது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டன. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என்ற கருத்துக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஏற்கெனவே பெரியாருக்கு நெருக்கமாக காமராஜர் இருந்தார். ராஜாஜிக்கும் சத்தியமூர்த்திக்கும் இடையே இருந்த கோபதாபங்கள் அப்படியே சத்தியமூர்த்தியின் சீடரான காமராஜர் மீதும் தொற்றிக் கொண்டது. அதேநேரம், இரு துருவங்களாக இருந்தாலும், ராஜாஜி தடுத்தும் ராஜாஜியின் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட காமராஜர் வாய்ப்புக் கொடுத்தார்.

மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்வது குறித்து, திருவண்ணாமலையில் இருந்த தன் நண்பர் ராஜாஜியிடம் ஆதரவைக் கேட்டார். அந்த அளவுக்கு ராஜாஜி மீது பெரியார் அன்பும், நட்பும் கொண்டிருந்தார்.

அதேபோல், சென்னை பொது மருத்துவமனையில் (இன்றைக்கு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை) ராஜாஜி இறந்தபோது அன்றைக்கு கலைஞர் முதலமைச்சராக இருந்தார். மருத்துவமனையில் பெருந்தலைவர் காமராஜர், முதலமைச்சர் கலைஞர், அமைச்சரவை சகாக்கள், பழ.நெடுமாறன் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் குழுமி இருந்தார்கள். அப்போது, முதலமைச்சர் அருகில் இருக்கிறார் என்பதைக் கூட மறந்து, பழ. நெடுமாறனை அழைத்து, ‘தலைமைச் செயலர் சபாநாயகத்தை வரச் சொல்லுங்கள்’ என்றார்.

உடனடியாக சபாநாயகம் மருத்துவமனை விரைந்தார். அவரிடம், “மவுண்ட் பேட்டனுக்குப் பிறகு கவர்னர் ஜெனரலாக இருந்தவர் நம்முடைய ராஜாஜி. அவருக்கு உரிய மரியாதை கொடுத்து இறுதிக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். என்ன, கருணாநிதி சரிதானே?” என்று காமராஜர் கேட்க, அதற்கு கலைஞர், “நீங்க சொன்னால் சரிதான்” என்று கூறி, அதன்படியே செயல்படுத்தினார்.

ராஜாஜி, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1954 வரை பதவி வகித்தார். அதன் பிறகு, அவர் தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இந்த விலகலுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன, அதில் முக்கியமானது இந்தி மொழி திணிப்பு மற்றும் அவரது கொள்கைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு ஆகும். குறிப்பாக, பள்ளிகளில் இந்தியை கட்டாயமாகப் பயிற்றுவிக்கும் திட்டத்துக்கு ராஜாஜி எடுத்த முடிவு, அப்போது பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியது. அதன் காரணமாக, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ராஜாஜி முதலமைச்சர் பதவியை விட்டு விலகியதும் காமராஜர் முதலமைச்சராக பொறுப்புக்கு வந்தார். நாளடைவில், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் சில கலகக்குரல்கள் வெளிப்பட்டன. மிட்டாதார், மிராசுதார், ஜமீன்தார், ஜாகிர்தார்களுக்கு ஆதரவாக காமராஜர் செயல்படுகிறார். இது நல்லதல்ல. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகமும் இல்லை. எனவே காங்கிரசில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று காமராஜருக்கு எதிராக சிலர் போர்க்கொடி தூக்கினார்கள். அவர்கள் ஒன்றிணைந்து ‘சீர்திருத்த காங்கிரஸ்’ என்ற கட்சியைத் தொடங்கினர்.

தொடர்ந்து வந்த தேர்தலில் இக்கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று எதிர்க்கட்சியாக அமைந்தது. அந்த நேரத்தில் திமுக 15 எம்எல்ஏக்கள், 2 எம்.பி.க்களை மட்டுமே பெற்றது. இன்றைய அரசியலாளர்களுக்கு சீர்திருத்த காங்கிரஸ் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவை வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து அடுத்து பார்ப்போம்...

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம்: அண்ணாவின் ‘திராவிட நாடு’ கொள்கையில் முரண்பாடுகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 46

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x