Published : 14 Aug 2025 08:38 AM
Last Updated : 14 Aug 2025 08:38 AM
சில நாட்களாக பாகிஸ்தானிடம் இருந்து வரும் தடித்த வார்த்தைகள் இந்திய அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனால், இந்த அமைதியான சூழ்நிலையை கெடுக்கும் வகையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வெளிவரும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் அனைவரையும் கோபமடையச் செய்யும் வகையில் உள்ளது.
“சிந்து நதிநீரை நிறுத்தி வைப்பது பாகிஸ்தானின் கலாச்சாரம், நாகரிகத்தின் மீதான தாக்குதல். சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ். சட்லஜ் ஆகிய 6 நதிகளையும் இந்தியாவிடம் இருந்து பறிக்கும் வல்லமை பாகிஸ்தானுக்கு உண்டு” என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறியிருக்கிறார்.
அந்நாட்டின் ராணுவ தளபதி ஆசிம் முனீர், “சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால். ஏவுகணை கொண்டு தகர்ப்போம். எங்களிடம் ஏவுகணைகளுக்கு பஞ்சமில்லை. எங்களுக்கு ஆபத்து என்றால் உலகின் பாதியை அழித்துவிடுவோம்’’ என்று அமெரிக்க மண்ணில் இருந்தபடி ஆணவமாக பேசியுள்ளார்.
அதேபாணியில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘‘சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா மீறினால், பாகிஸ்தானில் இருந்து பதிலடி இருக்கும்’’ என்கிறார். அந்நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர்கள் வரம்புமீறி திடீரென பேசுகிறார்கள் என்றால், அதன் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
இந்த பேச்சுக்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை, ‘இது அணு ஆயுதம் வைத்துள்ள நாட்டின் பொறுப்பற்ற பேச்சு. அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அடிபணியாது. இந்தியாவை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது. அதுமட்டுமின்றி, இத்தகைய பேச்சுகளை, இந்தியாவின் நட்பு நாடு தங்கள் மண்ணில் இருந்து பேச அனுமதித்திருப்பது வருத்தமளிக்கிறது என்ற கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக வரி, அபராத வரி என அமெரிக்காவின் போக்கு சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிரான திசையில் நகர்ந்துவரும் நிலையில், பாகிஸ்தானிடம் அந்நாடு நெருக்கம் காட்டுவதும், விருந்தளிப்பதும், அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்கும் வார்த்தைகளை பாகிஸ்தான் வெளியிடுவதும் மிகப்பெரிய அரசியல் நகர்வாகும். பாகிஸ்தான் தானாக ஆடவில்லை; பின்னால் இருந்து ஆட்டி வைப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரும் தருணம் இது. எதிரியின் பின்னால் இருந்து கொண்டு செயல்படும் சக்தியையும் அடையாளம் கண்டு காய்களை நகர்த்துவது அவசியம்.
‘வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்’ என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க ராஜதந்திரங்களுடன் எதிரிகளையும், எதிரிகளுக்கு துணைபுரிபவர்களையும், அவர்களின் கெட்ட நோக்கங்களையும் முழுமையாக உணர்ந்து கொண்டு இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்கொள்வது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT