Published : 11 Aug 2025 08:30 AM
Last Updated : 11 Aug 2025 08:30 AM
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதை அடுத்து, அரசியல் விவாதத்தின் மையப் பொருளாக உருவெடுத்துள்ளது தேர்தல் ஆணையம். பிஹார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்த புகார்களுக்கு பதில் சொல்லி முடிந்த நிலையில், கர்நாடக வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தீவிரமடைந்துள்ளது.
கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் தவறான முகவரியில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள், ஒரே வீட்டில் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள், புகைப்பட குளறுபடி, புதிய வாக்காளர் சேர்ப்பில் குளறுபடி என பலவிதமான தவறுகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ராகுல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவருக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இதையெல்லாம் மறுத்துள்ள தேர்தல் ஆணையம், இதுகுறித்து முறைப்படி எழுத்துமூலம் புகார் அளிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கை உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வது தேர்தல் ஆணையத்தின் வாடிக்கை. இவைமுடிந்தவுடன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தரப்படும். அவர்கள் அதை சரிபார்த்து, அதில்மாற்றங்கள், குளறுபடிகள் இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். அதன்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் நடைபெறும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது அதை பெறும் அரசியல் கட்சிகள் அப்போது எந்த புகாரும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தேர்தல் முடிந்தபிறகு குளறுபடி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது. பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை எந்த ஆட்சேபமும் வரவில்லை என்று ஆணையம்தெரிவித்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால், தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு அசைவிலும் அரசியல் கட்சிகள் பங்கேற்கின்றன. அனைத்து கட்டத்திலும் நியாயமானநடைமுறை இருக்கிறதா என்பதை கண்காணித்து உடனுக்குடன் புகார்களை பதிவு செய்வது கட்சிகளின் கடமை. அதைசெய்யாமல், காலம்கடந்து புகார் கூறுவது நியாயமற்றது.
வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ள ராகுல், கடந்த 10 ஆண்டுகளுக்கான நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலையும் மின்னணு ஆவணமாக வெளியிடுவதுடன், தேர்தல் ஆணையத்திடம் உள்ள காணொலி பதிவுகளையும் வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்த கோரிக்கை நியாயமானதே. தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணம் அனைத்தும் அரசின் பொதுச் சொத்து என்ற வகையில், மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடுவதில் தவறில்லை. அதன்மூலம், தேர்தல் ஆணையம் தன்னை குற்றமற்ற அமைப்பாக நிரூபித்து, புடம்போட்ட தங்கமாக ஜொலிக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT