Published : 10 Aug 2025 10:59 AM
Last Updated : 10 Aug 2025 10:59 AM

அண்ணாவின் ‘திராவிட நாடு’ கொள்கையில் முரண்பாடுகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 46

இடது: பி.ராமமூர்த்தி எழுதிய ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா? - விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’ நூல் | வலது: அண்ணா

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி தன்னுடைய ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா? - விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’ என்ற நூலில், அண்ணாவின் ‘திராவிட நாடு’ கொள்கையில் முரண்பாடுகள் உள்ளதாக விவரித்துள்ளார். அந்த நூலில் பி.ராமமூர்த்தி குறிப்பிட்டுள்ள கருத்தை சுருக்கமாகப் பார்ப்போம்...

திராவிடர் இயக்கத்தின் தத்துவவாதி அண்ணாதுரை ஆவார். அந்தத் தத்துவத்தை விளக்கிய அந்த இயக்கத்தின் அடிப்படை தத்துவார்த்த நூல், அவர் எழுதிய ‘ஆரிய மாயை’ என்ற நூலாகும். இது 1943-ல் பிரசுரமாகி 1977 வரை 14 பதிப்புகள் அச்சிடப்பட்டது. இந்த தத்துவார்த்தத்தை ஆராய்வது, திராவிட இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இன்றியமையாதது.

முதலில், இந்த அடிப்படைத் தத்துவார்த்த நூலில் ‘திராவிட நாடு’ என்று அண்ணாதுரை எதைக் குறி்ப்பிடுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். சரித சம்பவங்களில் முக்கியமானவைகளை நோக்கினாலும்,இந்தியா எனும் பூபாகத்தின் இடையிடையே ஏற்பட்ட வல்லரசுகளின் எல்லைகளை நோக்கினாலும், எந்த ராஜ்ஜியமும்,விந்திய மலைக்கு மேற்புற அளவோடுதான் இருக்கக் காண்பர்.

“நர்மதை ஆறு நமக்கும், ஆரியத்துக்கும் இடையே மிக்க ரம்மியமாக ஓடிக் கொண்டிருந்தது என்பதைச் சரிதம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்” என்று நர்மதை நதிக்கு வடபுறத்திலிருக்கும் பகுதியை ஆரிய நாடு என்றும், தென்புறத்திலிருக்கும் பகுதியை ‘திராவிட நாடு’ என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். நர்மதை ஆற்றைப் பொறுத்தவரையில் அண்ணாதுரை வர்ணித்திருப்பது போன்று மிக்க ரம்மியமாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பூகோளப்படத்தை யார் பார்த்தாலும், விந்திய மலைத் தொடர், உத்தரப் பிரதேசத்தில் அலகாபாத்துக்குக் கிழக்கே, காசிக்கு மேற்கே, இரண்டு நகரங்களுக்கும் இடையே உள்ள மீர்ஜாபூர் மாவட்டத்துக்குத் தெற்கேயுள்ள பண்டேல்கண்டு என்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பகுதியிலுள்ள ரேவா மாவட்டத்தில் தொடங்குகிறது என்பதைக் காண்பர். மீர்ஜாபூர் ரயில் நிலையத்தை அடுத்து வித்தியாசல் ரோட் என்ற காரணப் பெயர் கொண்டே ஒரு ரயில்வே ஸ்டேஷனும் இருப்பதைக் காணலாம்.

இவ்வாறு மத்தியப் பிரதேசத்தின் நடுவில் அதன் வடகோடி, உத்தரப்பிரதேச எல்லையில் தொடங்கும் விந்திய மலைத் தொடர், தென்மேற்கு நோக்கிச் சென்று ஜபல்பூருக்குத் தென்கிழக்கே 30 மைல் தொலைவில் மேற்கு திசையில் திரும்பி குஜராத் மாநிலத்தில் முடிகிறது.

ஜபல்பூரில் இருந்து நர்மதா நதி, சில மைல்கள் வடபுறமாகப் பாய்ந்து, மேற்கு திசையில் திரும்பி நேராக மத்தியப் பிரதேசத்தில் ஹொஷங்காபாத், கண்ட்வா ஆகிய மாவட்டங்கள் வழியே சென்று, மத்தியப் பிரதேசத்தைத் தாண்டி குஜராத் மாநிலத்தில் புகுந்து நேராக ப்ரோச் நகரத்தின் வழியே அரபிக் கடலில் சங்கமமாகிறது. இந்த ப்ரோச் நகரம் ஒரு காலத்தில் அதாவது இரண்டாவது குப்த சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்து, வல்லபி அரசு இங்கு ஏற்பட்டபோது, அரபு, கிரேக்க, இத்தாலிய நாடுகளுடன் நடந்த வியாபாரத்துக்கான பிரதான துறைமுகமாக இருந்தது. இதனை அண்ணாதுரையே வேறோர் நூலில் கூறியிருக்கிறார்.

அந்தக் காலத்தில், காவிரி கடலில் புகுந்த பூம்புகார், தமிழ்நாட்டுக்கு எப்படி பிரதானத் துறைமுகமாக இருந்ததோ, அதேபோன்றுதான், இந்தியாவின் மற்ற பிரதேசங்களிலும் - ஏன் எல்லா நாடுகளிலும்கூட இப்படிப்பட்ட நகரங்கள் உண்டு.

ஆரியம் உச்சநிலையடைந்திருந்த காலம் அது. ‘பொற்காலம்’ என்று புகழ் பெற்ற நேரம். ப்ரோச், காம்போ துறைமுகங்களில் வியாபாரம் செழித்திருந்த சமயம் அது’ என்று அண்ணா துரையே இந்த நூலில் விக்கிரமாதித்தன் காலத்தைப் பற்றி கூறும்போது, ப்ரோச் ‘ஆரியத்தை’ சேர்ந்தது என்று ஒப்புக் கொள்கிறார்.

நர்மதை நதிக்குத் தெற்கே சாத்பூடா மலைத் தொடர்கள் இருக்கின்றன. இதற்குத் தெற்கே தாப்தி ஆறு உற்பத்தியாகி மேற்கு நோக்கி மத்தியப்பிரதேசத்தைத் தாண்டி, குஜராத் மாநிலத்தில் புகுந்து, சூரத் நகருக்கு அருகாமையில் அரபிக் கடலில் கலக்கிறது. எனவே, நர்மதை ஆற்றின் மேல் பகுதிக்கு தெற்கே இருப்பது மத்தியப் பிரதேசத்திலுள்ள ஹொஷங்காபாத், கண்ட்வா, பைதூல் மாவட்டங்கள் ஆகும். அதற்குத் தெற்கே மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரி மாவட்டத்திலிருந்து விதர்ப்பா எனும் பகுதி தொடங்குகிறது.

ஆக, இந்தி பேசும் இந்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றுக்குத் தெற்கே வாழும் மக்கள், குஜராத்தி மொழியைப் பேசும் ப்ரோச், சூரத், டாமன் பகுதி மக்கள், மராத்தி மொழி பேசும் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மக்கள் ஆகிய அனைவரும் அண்ணாதுரை கருத்திலே ‘திராவிடர்கள்’தானா? அதோடு நின்றுவிடவில்லை.

‘அன்புடன் கூடிய ஆட்சியை நடத்திய அசோகர் காலத்தில் மட்டுமே திராவிட எல்லைப் பிரதேசத்தில் ஒரு பகுதியை வடநாட்டு வல்லரசு தன்னுள் கொண்டிருந்தது. கடுமையான கலிங்கப் போருக்குப் பிறகு, இந்தப் பகுதி அசோகர் ஆட்சிக்குட்பட்டது. ஆனால் அந்தப் போரில் கலிங்கர் காட்டிய வீரம் இனி சண்டையே வேண்டாம் என்று கூறுமாறும், அன்புடன் ஆள வேண்டும் என்ற போக்கையும் அவர் கொள்ளும்படி செய்வித்தது. திராவிடர் காட்டிய வீரம், அசோகருக்கு அறத்தின் மீது அளவிலாப் பற்று பிறக்கும்படி செய்தது|” என்று இதே ‘ஆரிய மாயை’ நூலில் அண்ணாதுரை கூறியுள்ளார்.

எனவே, அவர் கருத்தில் கலிங்கமும் (தற்போது ஒரிசா) திராவிட நாட்டைச் சேர்ந்ததே. அவர்கள் பேசும் ஒரியா மொழியும் திராவிட மொழிகளில் ஒன்றே. அதேபோல் ஒரியா மொழிக்கும் வங்காள மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சொற்களில் மட்டும் அல்ல; உச்சரிப்பில் கூட ஒருமைப்பாடு உண்டு. உதாரணமாக ‘விஸ்வநாத்தாஸ்’ என்ற பெயரை ஒரிசா மக்களும், வங்காளி மக்களும் ‘பிஷ்பநாத்தாஸ்’ என்றுதான் உச்சரிப்பார்கள். இப்படி இருக்கும்போது ஒரியா மட்டுமல்ல, வங்காளமும் திராவிட நாடு என்று கூறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

திராவிட நாட்டை தனி நாடாக்க வேண்டும் என்பது ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு சென்னையில் கூடியபோது, பெரியாரின் பேருரையில் உள்ளது. இது 1938 டிசம்பரில் என்று அண்ணாதுரை, இந்த நூலில் குறிப்பிடுகிறார். அது உண்மை. ஆனால் அந்த உரையில் திராவிட நாடு என்பதற்கு இலக்கணம் கொடுக்கப்படவில்லை. அந்தக் கோரிக்கை, அந்த மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே அன்று அது பெரியார் கிளப்பிய ஒரு கோஷமே தவிர, அதிகாரப்பூர்வமான கோரிக்கையல்ல.

1940-ம் ஆண்டில் திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில்தான் இந்த கோரிக்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது ஏற்கெனவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

‘திராவிடஸ்தன் கிளர்ச்சி வெறும் கனவு’ என்று ஒருவர் கூறியதை மறுத்து, ‘கனவு காண்பது யார் என்பதைக் காலம் காட்டட்டும்’ என்று அண்ணா சுடச்சுட பதிலளித்தார்.

‘திராவிட நாடு’ கோரிக்கைக்காகக் கிளர்ச்சி செய்வது பலனளிக்காது என்று கம்யூனிஸ்டுகள் கூடத்தான் நீண்டகாலமாகக் கூறிவந்தார்கள்.

அதை நிச்சயமாகக் காலம்காட்டி விட்டது. திராவிட நாடு என்பது கனவுதான் என்பதை அண்ணாதுரை உணர்ந்து அவரே 1962-ல் அதைக் கைவிட்டுவிட்டார். இன்று திராவிட இயக்கத்தினர் என்று கூறிக் கொள்ளும் தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினர் ஆகிய இரு பிரிவினரும் ‘நாங்கள் பிரிவினையைக் கோரவில்லை’ என்று மீண்டும் மீண்டும் சத்தியம் செய்கின்றனர். மற்றொரு பிரிவினராகிய திராவிடர் கழகத்தினரோ, அந்தப் பேச்சையே இப்பொழுது தொடுவதில்லை.

காரணம், அவர்கள் யார் யாரெல்லாம் திராவிட நாட்டவர், திராவிட இனத்தவர் என்று விளக்கம் கொடுத்தார்களோ, அந்த மக்களிடத்தில் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு இல்லை.

1940-ஆம் ஆண்டில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் அன்றிருந்த சென்னை ராஜதானி அளவிலுள்ள நிலப்பரப்பு மட்டும் திராவிட நாடு என்று அதிகாரப்பூர்வமாக இலக்கணம் கொடுக்கப்பட்டது.

1942-ல் அதே பெரியாரோடு இருந்த அண்ணாதுரை நர்மதை நதிக்குத் தெற்கேயுள்ள இந்தி மொழி பேசுபவர்களும் ஒரியா மொழி, மராத்தி மொழி பேசுபவர்களும், குஜராத்தி மொழி பேசுபவர்கள் வாழும் பிரதேசங்களும், தமிழ்நாடும், கேரளமும், ஆந்திரப்பிரதேசமும், கர்னாடகாவும் சேர்ந்த பிரதேசமும் திராவிட நாடு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஆனால், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, 1953-க்கும் பிறகு, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய பகுதி மட்டுமே திராவிட நாடு என்று விளக்கம் கூறியிருக்கிறார்.

இப்படி திரும்பத் திரும்ப குழப்பிக் கொண்டிருப்பானேன்?

‘சரிதமும், இலக்கியமும், சான்றோர் சொல்லும் திராவிட நாடாக இருந்ததை மெய்ப்பிக்கின்றன. வேதகாலம் முதற்கொண்டு வேற்று நாட்டு மன்னர்களின் படையெடுப்பு காலம் வரை திராவிடம் தனி நாடாகவே இருந்தது’ என்று அண்ணாதுரை இந்த நூலில் கூறுகிறார்.
அதேநேரம், ‘இன்று ஆரியர்கள் கடவுள்களாக வணங்கும் இராமன், கிருஷ்ணன் என்று வழங்குபவர்கள், ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேலை செய்த வீரர்கள். இராமன் திராவிடர்களை வென்று தென்நாட்டிலும், இலங்கையிலும் ஆரியர்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தியவன் என்றும் கூறுகிறார்.

அதாவது இராமன் ஒரு கடவுளல்ல, திராவிடர்களை வென்ற வீரன் என்கிறார். அவன் தென்னகத்தை மட்டுமல்ல; இலங்கையையும் வென்றான். இங்கெல்லாம் ஆரியர்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தியவன் என்கிறார்.

இது விந்தையாக இல்லையா? வேற்று நாட்டவர்கள் படையெடுப்புகளினால் திராவிட நாடு பாதிக்கப்படவே இல்லை என்று கூறிவிட்டு, பிறகு ஒரு புராணக் கதையை ஆதாரமாகக் கொண்டு அந்தக் கதையின் நாயகனாகிய ‘ராமன் ஒரு வீரன்; அவன் திராவிடத்தையும், இலங்கையையும் வென்று ஆரியர் ஆதிக்கத்தை ஏற்படுத்தினான்’ என்று கூறுவதை என்னவென்று கூறுவது...?

இவ்வாறு அண்ணாவின் ‘திராவிட நாடு’ கொள்கை குறித்து பி.ராமமூர்த்தி தன்னுடைய நூலில் விமர்சித்துள்ளார்.

அண்ணாவோடு முரண்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிதான் பின்னாளில் 1967-ல் திமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றது; திமுக ஆட்சியை பிடித்தது; அண்ணா முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜருக்கு எதிராக தமிழக காங்கிரஸில் போர்க்கொடி:

அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் மிராசுதாரர்களுக்கும், பஸ் போக்குவரத்து அதிபர்களுக்கும் தேர்தலில் போட்டியிட காமராஜர் வாய்ப்பு அளித்தார் என்று குற்றம்சாட்டி காங்கிரஸில் இருந்து சிலர் விலகி ‘சீர்திருத்த காங்கிரஸ்’ கட்சியைத் தொடங்கினர். 'Congress for Reform' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

1956 - 57 காலகட்டம் என்ற நினைவு... அப்போதுதான் ‘சீர்திருத்த காங்கிரஸ்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதேபோல், தமிழக காங்கிரஸ் மேலும் பிளவுபட்டு பலர் கம்யூனிஸ்ட் கட்சியிலும், பி.எஸ்.பி., எஸ்.எஸ்.பி., ராஜாஜியின் சுதந்திரா கட்சிகளிலும் சேர்ந்தனர்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் பிளவுபடாத கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இருந்தன. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முக்கிய தலைவர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்லத் தயாராக இருந்தனர்.

அதேநேரம், குறிப்பாக காங்கிரஸில் இருந்த ஒரு சிலர் அதாவது, ஆச்சார்ய நரேந்திர தேவா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், அச்சுத் பட்டவர்த்தன், போன்றவர்கள் எல்லாம் காங்கிரசுக்கு மாற்று கம்யூனிஸ்ட் அல்ல; அதற்கு இந்திய மண் வாசனையோடு பொது உடைமைக் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கூறி, காங்கிரஸ் சோசலிசக் கட்சியில் ஐக்கியமானார்கள்.

சீர்திருத்த காங்கிரஸ், தமிழகத்தில் திமுக - கம்யூனிஸ்ட் கட்சிகளை விட அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இது இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கோ, தமிழக அரசியல் வரலாற்றைச் சொல்பவர்களுக்கோ கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை இதைக் குறித்தெல்லாம் வருகின்ற தொடர்களில் விரிவாகப் பார்ப்போம்...

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > தேசப்பிதா கற்றுத் தந்த ‘மூன்று பாடங்கள்’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 45

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x