Published : 09 Aug 2025 02:15 PM
Last Updated : 09 Aug 2025 02:15 PM

தேசப்பிதா கற்றுத் தந்த ‘மூன்று பாடங்கள்’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 45

தலாய் லாமா, ஆச்சார்ய வினோபா பாவே

டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 11-வது சுதந்திர தின விழா 1958, ஆகஸ்ட் 15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பிரதமர் ஜவஹர்லால் நேரு பேசும்போது, ‘‘நம் நாடு சுதந்திரம் பெற்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. நம்முடைய முன்னேற்றமும் கண்முன் தெரிகின்றது. அதேநேரம் விலைவாசி உயர்வு நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.

விலைவாசி குறைப்புக்கான நடவடிக்கைகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். நம்முடைய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பது மிகவும் அவசியம். தெற்கே கன்னியாகுமரி, ராமேஸ்வரம் முதல் வடக்கே காஷ்மீர் மற்றும் கிழக்கு மேற்கு என எங்கு இருந்தாலும் இந்தியா என்ற நாட்டை யாராலும் பிரிக்க முடியாது.

சோசலிசத்தை நோக்கிப் பயணிக்கிறோம். சில தவறுகளும் இருக்கின்றன. நம்முடைய சிந்தையில் வீறு கொண்டு, நாம் இடறி விழாமல் நம் சக்திக்கு ஏற்ப போராடி நம்முடைய இலக்கை எட்டுவோம்’’ என்றார்.
இன்றைக்கு பிரதமர் மோடி சொல்கின்ற ‘ஒரே நாடு’ என்ற முழக்கத்தை, அன்றைய பிரதமர் பண்டித நேருவும் இந்த சுதந்திர தின விழாவில் பேசியது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, 1959-ம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவில் நேரு பேசும்போது, ‘‘அதிகமான விடுமுறையால் நமக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. அடிமைத்தனத்தை விரட்டியதைவிட வறுமை ஒழிப்பு மிகவும் கடினமானது. கடின உழைப்பு இன்றைய காலகட்டத்தில் நமக்கு மிகவும் அவசியம். பஞ்சாப் மாநிலத்தில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

இதே நடைமுறையை மற்ற மாநிலங்களும் முன்னெடுக்க வேண்டும். 3-வது ஐந்தாண்டு திட்டத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். கடந்த 2 ஐந்தாண்டு திட்டங்களும் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன. கனரகத் தொழிற்சாலைகளை அமைத்ததன் மூலம் நாம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

தேசப்பிதா மகாத்மா காந்தி நமக்கு முக்கியமான 3 பாடங்களைக் கற்றுத் தந்தார். ‘தவறானதைச் செய்ய வேண்டாம்; தவறான பாதையில் செல்லவேண்டாம்; சுயநலத்தில் இறங்கி நாட்டுக்கு கேடு விழைவிக்க வேண்டாம்’ என அந்த 3 கோட்பாடுகளும் இளையோர், பெரியோர் என அனைவருக்குமான பாடமாகும்’’ என்று தனது உரையை நிறைவு செய்தார் நேரு.

இதற்கிடையே, இலங்கை 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றாலும், சிற்சில பிரச்சினைகள் ஆங்காங்கே தலைதூக்கின. அதைத்தொடர்ந்து, இலங்கை வாழ் ஈழப் பகுதிகளுடன், வடக்கு, கிழக்கு மாகாண தமிழர் தலைவர்கள் ஒன்றுபட்டு இருப்போம் என்று உறுதி எடுத்தார்கள். எங்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமைகள் கிடைப்பதோடு, சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழிக்கும் அந்தஸ்து கிடைக்கும் சூழல் அமைய வேண்டும் என்று சிங்கள அரசிடம் தமிழர் தலைவர்கள் வேண்டிக் கொண்டனர்.

டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் சோல்பரி உடன்படிக்கையின்படி சிங்களருக்கு இணையாக தமிழருக்கும் உரிமை வழங்கப்படும் என்ற உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் அதை அமல்படுத்தாமல் தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர். இப்படியான அரசியல் சூழல் இலங்கையில் கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

‘சோசலிசமே நமது பிரதான லட்சியம்’ என முழக்கம்: 1955-ம் ஆண்டு ஆவடியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில், ‘சோசலிசமே நமது பிரதான லட்சியம்’ என்ற தீர்மானத்தை காங்கிரஸ் முன்மொழிந்தது. சோசலிச அமைப்பில் தனியார் துறைக்கும் இடமுண்டு, அரசு நடத்தும் பொதுத்துறைக்கும் இடமுண்டு என்ற கருத்தை இம்மாநாட்டில் பிரதமர் நேரு முன்வைத்தார்.

உலகில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா பக்கமோ, சோவியத் யூனியன் பக்கமோ செல்லாமல் அணிசேரா நாடுகள் என்ற அணுகுமுறையில் நம் நாட்டின் அயலகக் கொள்கையை நேரு வகுத்தார். இந்த காலகட்டத்தில் 2-வது முறையாக பிரதமர் நேரு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் கென்னடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், எகிப்து அதிபர் நாசர், சீனா அதிபர் மா சே துங், இந்தோனேசிய அதிபர் சுகர்னோ, பிரிட்டிஷ் ராணி எலிசபெத் மற்றும் ரஷ்ய தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தார். அந்த வகையில் பிரதமர் நேருவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

1959-ம் ஆண்டு காலகட்டத்தில் தனி சுதந்திர நாடாக திபெத் இருந்து வந்தது. புத்தமதத் தலைவரின் ஆளுகையின் கீழ் திபெத் இருந்தது. அதன் அதிபர்கள் தலாய் லாமா என்று அழைக்கப்பட்டார்கள். பதவியில் உள்ள தலாய் லாமா இறக்கும் சூழலில், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தையை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுப்பது அந்நாட்டின் வழக்கம். அதாவது இறந்த தலாய் லாமா, மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போதைய திபெத்தின் 16-வது தலாய் லாமா, 1935-ம் ஆண்டு பிறந்தார். இப்படியான வரலாற்றுப் பின்னணி கொண்டது திபெத். 1959-ம் ஆண்டு மார்ச் மாதம் திபெத் மீது சீனா படையெடுத்தது. பின்னர் அந்த நாட்டை சீனா தன்னோடு சேர்த்துக் கொண்டது. அதைத்தொடர்ந்து, தலாய் லாமா தனது ஆதரவாளர்கள் 9 ஆயிரம் பேருடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர்களுக்கு நேரு அடைக்கலம் கொடுத்தார். தலாய் லாமாவை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று சீனா வற்புறுத்தியபோதும், நேரு மறுத்துவிட்டார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட இதுவும் ஒரு காரணம்.

தலாய் லாமாவுக்கு அடுத்த தலைவராக பொறுப்பேற்ற பஞ்சன் லாமா, சீனா ஆட்சிக்கு கட்டுப்பட்டு அடிபணிந்து திபெத்திலேயே தங்கிவி்ட்டார். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா இறந்தவுடன் குழப்பமான சூழ்நிலை நிலவியது. ஓரளவு செல்வாக்குடன் இருந்த லியாகத் அலிகான் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றார்.

ஆனால், அவரது ஆட்சி காலம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சியைக் கொண்டுவர அவர் பெரிதும் முயற்சித்தார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து பலர் பிரதமர்களாக வந்தாலும் அவர்களால் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்கமுடியவில்லை.

இதற்கிடையே 1956-ல் பாகிஸ்தான் குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில், 1958-ம் ஆண்டு அக்டோபர் 7-ல் அங்கு ராணுவப் புரட்சி ஏற்பட்டு, ராணுவத் தளபதி அயூப்கான் அதிபராகப் பதவியேற்றார். முன்னதாக முகமது அலி போக்ரா, சவுத்ரி முகமது அலி ஆகியோர் பிரதமராக இருந்தபோது ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு அயூப்கானை வலியுறுத்தியும் அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். பாகிஸ்தான் ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால், ராணுவ தளபதிகள் ஆட்சியில் அமரக் கூடாது என்று நினைத்தாராம்.

இருப்பினும் இப்போதைய நிலைமைகள் அசாதாரணமாக இருப்பதால், அதை சமாளிக்க ராணுவ ஆட்சிதான் தீர்வு என்பதால் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக அயூப்கான் தெரிவித்தார். அயூப்கான் சர்வாதிகாரியாக இருந்தாலும், நிலையான ஆட்சியை தந்தார். இவரது அமைச்சரவையில்தான் வெளி விவகார அமைச்சராக பூட்டோ பொறுப்பேற்றார்.

அவர் ஐ.நா. கூட்டங்களில் கலந்து கொண்டு இந்தியாவை கடுமையாகச் சாடினார். இதனால் பாகிஸ்தானில் பூட்டோவின் செல்வாக்கு உயர்ந்தது. குடியரசு நாடாக பாகிஸ்தான் ஆனபிறகும் ஜனநாயகப்பூர்வமான ஆட்சி அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரைக்கும் அந்த நிலையே நீடிக்கிறது.

பாகிஸ்தானிடமிருந்து 1971-ல் வங்காளதேசம், விடுதலை பெற்றது. இது வங்காளதேச விடுதலைப் போர் என்று அழைக்கப்பட்டது. இந்த போரில், வங்காள தேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தானுடன் இந்தியா மோதியது. 1971 டிசம்பர் 16 அன்று போர் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்ததை அடுத்து, வங்காளதேசம் ஒரு சுதந்திர நாடாக உருவானது. அந்நாட்டின் அதிபராக ஷேக் முஜுபூர் ரகுமானை இந்திய அமர்த்தியது. பாகிஸ்தானைப் போன்று வங்கதேசத்திலும் ஸ்திரத்தன்மையான ஆட்சி அமையவில்லை.

இந்த காலகட்டங்களில் இந்தியா முழுவதும் ஆச்சார்ய வினோபா பாவேயின் பூதான இயக்கம் வலுப்பெற்றது. நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து நிலங்களைப் பெற்று, நிலமற்றவர்களுக்கு வழங்கினார். அந்த வகையில் தமிழகத்திலும் அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழகத் தலைவர்கள் காமராஜர், சி.சுப்பிரமணியம், அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் சந்தித்தார். அவரது பயணம் பெரும்பாலும் கால்நடைப் பயணமாகவே இருந்தது.

1958 காலகட்டத்தில் முந்த்ரா முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால் மத்திய நிதி அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, சிறிது காலம் நிதித்துறையை கவனித்து வந்த பிரதமர் நேரு, பின்னர் மொரார்ஜி தேசாயை நிதி அமைச்சராக நியமித்தார். இவரின்கீழ் நிதித்துறை ராஜாங்க அமைச்சராக, என்னை தாய்போல் வழி நடத்திய தாரகேஸ்வரி சின்கா பொறுப்பேற்றார்.

இவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரைப் பற்றி விரிவாக பின்னர் சொல்ல இருக்கின்றேன். முந்த்ரா ஊழல் பிரச்சினையை நாடாளுமன்ற மக்களவையில் குரல் எழுப்பியவர், பிரதமர் நேருவின் மருமகனும், இந்திராவின் கணவருமான ஃபெரோஸ் காந்திதான். லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா கம்பெனியின் ரூ.1.25 கோடிக்கான பங்குகளை கல்கத்தா வணிகர் ஹரிதாஸ் முந்த்ரா முறைகேடாகப் பெற்றுள்ளார். விலை நிர்ணயத்தில் அவருக்கு சலுகை வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. நாடெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தால் பம்பாய், கல்கத்தா பங்கு மார்க்கெட்டுகள் மூடப்பட்டன.

இந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதோடு, முறைகேடுகள் நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. எனவே இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ள பம்பாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.சி.சாக்லா நியமிக்கப்பட்டார். அவரது அறிக்கையில், முந்த்ரா முறைகேட்டில் நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கும் பொறுப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.

அதனால் டி.டி.கே. ராஜினாமா செய்தார். இந்த காலகட்டத்தில், கல்வி அமைச்சராக இருந்த நேருவின் உற்ற நண்பரான மவுலானா அப்துல் கலாம் ஆசாத் காலமானார். இவர் இஸ்லாமிய மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உறவுப் பாலமாக விளங்கினார். இத்தகைய சூழலில், மத்திய அமைச்சரவையில் மைசூர் மாநில முதலமைச்சர் எஸ்.நிஜலிங்கப்பா மற்றும் மத்திய ராஜாங்க சட்ட அமைச்சராக இருந்த ஏ.கே.சென் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

1958-ம் ஆம் ஆண்டு காலகட்டத்தில், பாகிஸ்தான் மங்கலா டேம் கட்டுவதை எதிர்த்து ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா குரல் கொடுத்தது. அதேபோல், கிழக்கு பாகிஸ்தானுக்கு பெருபாரி தீவு கொடுக்கப்பட்டது குறித்த சர்ச்சையும் எழுந்தது. அந்தத் தீவை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

அமெரிக்க நாட்டின் சான்ஸ்பிராஸ்கோவில் 1957-ம் ஆண்டு நடைபெற்ற திரைப்பட விழாவில் ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படத்துக்காக சத்யஜித் ரேக்கு விருது வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் மலையாள கவிஞர் வள்ளத்தோல் நாராயண மேனன் மறைந்தார். ஆர்.கே.நாராயணனின் ‘கைடு’ புதினம் வெளியானது. இதற்கு முன் அவரது, சுவாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ் (1935) டார்க் ரூம் (1938), தி இங்கிலீஷ் டீச்சர் (1945) ஆகிய புதினங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

‘விசித்திர மனிதர்’ பெரியார்! - தமிழகத்தில் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரிந்து சென்று திமுகவைத் தொடங்கி, 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் வரை திமுகவை கடுமையாகச் சாடி வந்தார் பெரியார். அதேபோல் திராவிடர் கழகம், திமுக - இவை இரண்டையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விமர்சித்து வந்தது.

திமுக தொடக்கம் மற்றும் அதன் பிரச்சாரக் காலகட்டத்தில் என்ன நிலை இருந்தது என்பது குறித்து கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி தன்னுடைய ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா? - விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’ என்ற நூலில் விவரித்துள்ளார். இந்திய விடுதலைப் போரில் நீதிக்கட்சியும், திராவிட இயக்கங்களும் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

அந்த நூலில் இடம்பெற்ற சில பகுதிகள் வருமாறு: “பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போதிலும், காங்கிரஸ் கட்சியிலேயே அவர் இருந்தார். அவரோடு சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் சேர்ந்தவர்கள் காங்கிரசிலிருந்த எஸ்.ராமனாதன், திருப்பூர் அய்யாமுத்து போன்றவர்களைத் தவிர, அந்த இயக்கத்தில் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் யாரும் சேரவில்லை. அந்த சமயத்தில் பெரியார் தொடங்கிய ‘விடுதலை’ ஏடு ஆரம்ப காலங்களில் மூவர்ண தேசியக் கொடியை முகப்பில் தாங்கிக் கொண்டே வெளிவந்தது.

இந்த இயக்கத்தைப் பரப்புவதில் பெரியாருக்கு பல தடங்கல்கள் தோன்றின. குறிப்பாக, பார்ப்பனரல்லாத பாமர மக்களிடையே நூறாண்டு காலமாக ரத்தத்தில் ஊறிப்போன உயர் சாதி, கீழ் சாதி என்ற மனப்பான்மை குறுக்கே நின்றது. சுதந்திரத்துக்குப் பிறகு 1952-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலுக்கு முன் நான் தலைமறைவாக இருந்த காலத்தில், 1951-ல் சென்னை செனாய் நகரில் உள்ள குத்தூசி குருசாமி வீட்டில் பெரியாரை 15 தடவைக்கும் மேலாக ரகசியமாக இரவு 10 மணிக்கு மேல் சந்தித்து விவாதித்திருக்கிறேன்.

‘எங்கள் கட்சியின் திட்டமாகிய மாநில சுயாட்சிக் கோரிக்கையை விளக்கிஇருக்கிறேன். திராவிடர் கழகமும் தேர்தலில் போட்டி போட வேண்டும் என்றும், எங்கள் கட்சியோடுகூட்டணி வகுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் வற்புறுத்தினேன்.

அவர் திராவிடக் கழகத்தைத் தேர்தலில் போட்டி போட எப்போதும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி மறுத்துவிட்டார். சட்டசபைக்குப் போனால், லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் இரையாகிவிடும் அபாயம் இருக்கிறது என்று வாதாடினார். ஆனால், எங்கள் கட்சியை காங்கிரசுக்கு எதிராக ஆதரிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

அதேபோல் ஒன்றிரண்டு தொகுதிகள் தவிர நாங்கள் போட்டியிட்ட எல்லா தொகுதிகளுக்கும் சென்று கூட்டங்களில் பேசி ஆதரித்தார். நான் மதுரையில் சிறையிலிருந்தே போட்டியிட்ட அந்தத் தேர்தலில்,மதுரைக் கூட்டத்தில் என்னை ஆதரித்து உருக்கமாகப் பேசினார். நான் பிறப்பினால் பிராமணன்;என்ன எதிர்த்துப் போட்டியிட்டது அவருடைய பழங்கால நண்பர் பி.டி.ராஜன் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

திண்டுக்கல்லில் ஏ.பாலசுப்ரமணியத்தை ஆதரித்துப் பேசினார். அவரும் பிறப்பால் பிராமணர் என்பதற்காக எவ்வித தயக்கமும் காட்டவி்ல்லை. அக்கூட்டத்தில் முதலில் பேசிய பாலசுப்ரமணியம், மாகாண சுய ஆட்சியின் அவசியத்தை விளக்கிப் பேசியிருந்தார். அதற்குப் பிறகு பேசிய பெரியார், ‘கம்யூனிஸ்டுகள் விரும்பும் மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டசமஷ்டி இந்தியாவாக இருந்தால், அது பாலசுப்ரமணியம் விளக்கியபடி இருக்குமானால், நான் தனித் திராவிட நாடு கோரிக்கையை வற்புறுத்த மாட்டேன்’’ என்று கூறினார்.

இதெல்லாம் எதைக் காட்டுகிறது? காங்கிரஸ் எதிர்ப்புதான் அவருக்குப் பிரதானம். ஏன்? வர்ணாசிரம தர்மத்தையும், சாதி முறையையும் காங்கிரஸ் நீடித்து நிலைநிறுத்தும் என்பதில் அவருக்கிருந்த அசையாத நம்பிக்கையையே காட்டுகிறது. அதே சமயத்தில் திருத்துறைப்பூண்டி தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அந்தத் தேர்தலில் மணலி கந்தசாமி போட்டியிட்டபோது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர்.சாமியப்ப முதலியாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் பெரியார். பழைய நேசபாசம் வென்றது.

கடைசி வரை, அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கை அவ்வப்போது எதிர்த்தபோதிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள பிறப்பில் பிராமண சாதியில் பிறந்துவிட்ட எம்.ஆர்.வெங்கட்ராமனையோ, ஏ.பாலசுப்பிரமணியத்தையோ, என்னையோ பார்ப்பனச் சூழ்ச்சிக்காரர்கள் என்று எப்பொழுதும் கூறியது கிடையாது. சில சமயத்தில் அவருடைய பிராமணிய எதிர்ப்பு ஆவேசம் பிராமணர் எதிர்ப்பிற்கு கொண்டு சென்றிருப்பது உண்மை. ஆயினும் பிரதானமாக அவர் மனத்திலிருந்தது சாதி அமைப்பும், அதை நியாயப்படுத்தும் பிராமணியமும் ஒழிய வேண்டும் என்பதே.

ஆயினும் கடைசி வரையில் நாத்திகப் பிரச்சாரத்தை அவர் கைவிடவில்லை. அதை உறுதியாகப் பிரச்சாரம் செய்து வந்தார். தன் சிலை வைக்க வேண்டுமானால் அதில் ‘கடவுள் என்று ஒருவன் இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை உண்டாக்கியவன் அயோக்கியன்’ என்று பொறிக்க வேண்டுமென்று வற்புறுத்தி வந்தார். இப்படி ஒரு முரண்பட்ட நடைமுறையைக் கொண்ட ஒரு‘விசித்திர மனிதர்’ பெரியார். 50 ஆண்டுகளுக்கு மேல் பெரியார் இவ்வாறு பிரச்சாரம் செய்த போதிலும் மக்களிடையே கடவுள் நம்பிக்கை போகவில்லை.

அவருடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்களே கடவுள் நம்பிக்கை உடையவர்களாக காட்சியளிக்கின்றனர். அண்ணாதுரை, ‘ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்’ என்ற திருமூலரின் கொள்கையை ஏற்றுக் கொண்டார். அதே பெரியாரின் உண்மையான வாரிசு தாம்தான் என்று உரிமை கொண்டாடும் எம்.ஜி.ஆரோ, தான் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு வருகிறார்.’’ இவ்வாறு அந்த நூலில் பி.ராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை’ என்ற நூலில் கூறியுள்ள ‘திராவிட நாடு’ பற்றி பி.ராமமூர்த்தி தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளதை சுருக்கமாக அடுத்து பார்ப்போம்.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > நேரு உருவாக்கிய பஞ்சசீலக் கொள்கை - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 44

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x