Published : 09 Aug 2025 09:20 AM
Last Updated : 09 Aug 2025 09:20 AM
திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனூத்து கிராமத்தில் காவல்துறை சிறப்பு எஸ்ஐ வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், நடந்த அசம்பாவிதத்திற்கு காவல்துறையின் எதிர்வினையாக அமைந்துள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறை அதிகாரிகளே கொல்லப்படுகிறார்களே என்று மக்கள் திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. என்ன செய்கிறது காவல்துறை? காவல்துறைக்கே இந்த நிலைமையா? போன்ற கேள்விகளை பொதுமக்கள் கோபத்துடன் எழுப்பும் சூழ்நிலைகளில் என்கவுன்ட்டர் சம்பவங்கள் மூலம் முக்கிய குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்படுவது, மக்களின் கோபம் அப்போதைக்கு தணிந்து ஆறுதல் தருகிறது.
இருந்தாலும் ஜனநாயக நாட்டில் குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றங்கள் முன்பாக நிறுத்தி, உரிய விசாரணைக்குப் பின் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் நீதி. அத்தகைய நீதிக்கு முரணாக என்கவுன்ட்டர் மூலம் குற்றவாளிகள் கொல்லப்படும்போது பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்தப் பிரச்சினைக்கும் என்கவுன்ட்டர் தீர்வாக அமையாது.
அது ஒருபுறம் இருக்க, இந்த சம்பவத்தை காவல்துறை சரியாக கையாண்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. சிக்கனூத்து கிராமத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான பண்ணையில் வேலைபார்க்கும் மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் குடித்துவிட்டு ஆயுதங்களுடன் சண்டையிடுகின்றனர் என்ற தகவல் அந்த தோட்டத்தின் மேலாளர் மூலம் காவல் துறைக்கு கிடைக்கிறது.
அப்போது ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ சண்முகவேல் மற்றும் காவலர் அழகுராஜா இருவரும் சம்பவ இடத்திற்குச் செல்கின்றனர். ஆயுதங்களுடன் சண்டையிடுபவர்களை சிறப்பு எஸ்ஐ கண்டிக்கும்போது இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த இடத்தில் காவல்துறை மீதான பயம் போய்விட்டதா? அல்லது ஆயுதங்களுடன் சண்டையிடும் வன்முறையாளர்களை கையாள்வது எப்படி என்பது காவல்துறைக்கு தெரியவில்லையா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
குடித்துவிட்டு ஆயுதங்களுடன் சண்டையிடுகிறார்கள் என்று தெரிந்தும் அந்த இடத்திற்கு நிராயுதபாணியாக காவலர்கள் செல்வதும், அவர்களுக்கு மத்தியில் சிக்கி தப்பியோடுவது என்பதும் இதுபோன்ற சந்தர்ப்பங்களை கையாள்வது குறித்து காவலர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. இரவு நேரங்களில் பணியில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி இப்போது உத்தரவிடுகிறார்.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை உத்தரவை முன்பே ஏன் பிறப்பிக்கவில்லை. ஆயுதங்களுடன் சண்டையிடுபவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆயுதங்களை கீழே போடவைத்து, கைகளைத் தூக்கியபடி முட்டியிட வைத்த பின்பு அருகில் செல்வது தானே சரியான நடைமுறையாக இருக்க முடியும்? இந்த அடிப்படை விஷயம்கூட காவல் துறையில் கற்றுத் தரப்படவில்லை என்பது வேதனையளிப்பதாகும்.
கடமையில் உயிரிழந்த சண்முகவேல் உடலை டிஜிபி சங்கர் ஜிவால் தன் தோளில் தூக்கிச் சென்று அடக்கம் செய்தது அவரது மனிதாபிமான அணுகுமுறையைக் காட்டுகிறது. அதேநேரம், ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுவோரை காவலர்கள் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான பயிற்சி அளிப்பதே, காவலர்கள் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT