Last Updated : 06 Aug, 2025 07:05 AM

1  

Published : 06 Aug 2025 07:05 AM
Last Updated : 06 Aug 2025 07:05 AM

இந்தியாவில் நீடிக்கும் சமத்துவமின்மை | சொல்... பொருள்... தெளிவு

இந்தியாவில் நுகர்வு இடைவெளி குறைந்துவந்தாலும், வருமான ஏற்றத்தாழ்வு வேகமாக அதிகரிக்கிறது என உலக வங்கியின் சமீபத்திய தரவு தெரிவிக்கிறது. ஒரு குடும்பமோ தனிநபரோ குறைந்த வருமானம் காரணமாக விரும்பிய அளவு செலவு (ஆரோக்கியமான உணவு, வீடு, கார் போன்ற போக்குவரத்து வசதி) செய்ய முடியாத நிலை இருந்தால், அதுவே ‘நுகர்வு இடைவெளி’ (consumption gap) என வரையறுக்கப்படுகிறது.

உலக வங்கியின் தரவின்படி, இந்தியாவின் நுகர்வு அடிப்படையிலான ஜினி துணைக்காரண (Gini coefficient - சமத்துவமின்மை அளவீடு) அளவீடானது 2011-12 இல் 28.8 ஆக இருந்த நிலையில், 2022-23இல் அது 25.5 ஆகக் குறைந்துள்ளது; இந்த அளவீடானது, இந்தியாவில் நுகர்வு இடைவெளி குறைந்துவருவதைக் குறிக்கிறது.

ஆனால், இந்தக் கணக்கெடுப்பு முறையில் செல்வந்தர்கள் - வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்; இதன் காரணமாக நுகர்வு இடைவெளியானது குறைத்து மதிப்பிடப்படுவதாகப் பொருளாதார நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.

ஜினி துணைக்காரணம் என்றால் என்ன? - பொதுவாக ஒரு நாட்டில், நிலவும் சமத்துவமின்மையை அறிந்துகொள்ள ஜினி துணைக்காரணம் என்கிற அளவீடு பயன்படுகிறது. 1912இல் இத்தாலியைச் சேர்ந்த புள்ளியியல் வல்லுநரான கொராடோ ஜினி (Corrado Gini) இந்த அளவீட்டை உருவாக்கினார்.

இது பொருளாதாரச் சமத்துவமின்மையின் அளவீடாகவும், வருமானப் பங்கீட்டின் அளவீடாகவும், மக்கள்தொகையில் செல்வப் பங்கீட்டின் அளவீடாகவும் குறிக்கப்படுகிறது. துணைக்காரணத்தின் அளவீடானது 0 முதல் 1 வரையும் அல்லது 0% முதல் 100% வரையும் கணக்கிடப்படுகிறது. இதில் 0 என்பது சமத்துவத்தையும்; 1 சமத்துவமின்மையையும் குறிக்கிறது.

உண்மை நிலை: இந்தியாவில் முறைசாராப் பொருளாதாரம் (Informal Economy) பரந்த அளவில் இருப்பதால், மக்களின் முழுமையான வருமான விவரங்கள் கிடைப்பது கடினம். எனவே, பொருளாதார வல்லுநர்கள் மக்களின் செலவு (consumption) விவரங்களைப் பயன்படுத்தி வருமானத்தை மதிப்பிடுகிறார்கள்.

ஆனால், இந்த முறையில் ஒரு பிரச்சினை உள்ளது. இந்தச் செலவு குறித்த தரவுகள், இங்குள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், பணக்காரர்கள் ஆகியோரின் உண்மை நிலையை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை.

எடுத்துக்காட்டாக, பணம் அதிகம் உள்ளவர்கள் அதிகமாகச் சேமிக்கிறார்கள்; அவர்கள் செலவு செய்யும் தொகை அவர்களின் உண்மையான வருமானத்தைவிடக் குறைவாக இருக்கும். இவர்களில் பலரும் உலக வங்கியின் மேற்கண்ட ஆய்வுகளிலிருந்து விடுபட நேரிடலாம்.

இதனால், மக்களின் செலவு குறித்த தரவுகளைப் பயன்படுத்தும்போது, இந்தியாவில் உண்மையான பொருளாதார ஏற்றத்தாழ்வு முழுமையாகத் தெரியாமல், சற்றுக் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. இவ்வாறு இந்தியாவில் நுகர்வு ஏற்றத்தாழ்வு குறைந்திருப்பதுபோல் தோன்றினாலும், வருமான அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு வேறு கள யதார்த்தத்தைக் கூறுகிறது.

வருமான சமத்துவமின்மை: இந்தியாவின் வருமான ஜினி துணைக்காரணம் 2004இல் 51ஆக இருந்ததாகவும், 2023இல் 61 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக ஏற்றத்தாழ்வு தரவுத்தளமும் (World Inequality Database – WID), உலக வங்கியும் கண்டறிந்துள்ளன. வரித் தாக்கல் தரவுகளைப் பயன்படுத்தி இந்த முடிவை அவை எட்டியிருக்கின்றன. இது உயர் வருமானம் பெறுவோரிடம் வருமானம் அதிகளவு குவிந்திருப்பதையும் காட்டுகிறது.

இந்தியாவில் அரசினால் நடத்தப்படும் அனைத்துச் சமூக-பொருளாதார ஆய்வுகளிலும் வருமானம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஏனெனில், இந்தியா போன்ற முறைசாராப் பொருளாதாரம் கொண்ட நாடுகளில் வருமானத்தைக் கணக்கிடுவது மிகவும் கடினம் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உதாரணமாக, ஒரு விவசாயியின் வருமானத்தைக் கணக்கிட, விதைகள், உரம், பயிரை விற்ற விலை ஆகியவற்றை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியாக மதிப்பிட வேண்டும். இது மிகவும் சிக்கலான முறை. இதற்கு மாற்றாக, பொருளாதார நிபுணர்கள் வருமான வரி அறிக்கைகளைப் பயன்படுத்துகின்றனர்.

உலக வங்கியானது, தாமஸ் பிக்கெட்டி (Thomas Piketty) போன்ற பொருளாதார நிபுணர்கள் உருவாக்கிய, உலக ஏற்றத்தாழ்வு தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தரவுத் தளமானது, ஜினி துணைக்காரணத்தைக் கணக்கிடுவதில்லை, ஏனெனில் அதற்கு முழு வருமான விநியோகத்தையும் மதிப்பிட வேண்டும். இம்முறை கடினமானது.

எனவே இதற்கு மாறாக, முதல் 10 சதவீதத்தினர் (பணக்காரர்கள்), கீழே உள்ள 50 சதவீதத்தினரின் (மிகவும் ஏழைகள்) வருமானப் பங்கு பயன்படுத்தப்படுகிறது. இது எளிதானது. ஏனெனில் முதல் 10 சதவீதத்தினர் பெரும்பாலும் வருமான வரி செலுத்துகின்றனர்.

ஆனால், இந்தியாவில் 7 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்கின்றனர், 5 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் வரி செலுத்துகின்றனர். இருப்பினும், இந்த வரி அறிக்கைகளைப் பயன்படுத்தி, வருமான ஏற்றத்தாழ்வு குறித்த கணக்கீட்டை ஓரளவு பெற முடியும்.

உலக வங்கி பயன்படுத்தும் உலக ஏற்றத்தாழ்வு தரவுத்தளத்தின்படி, இந்தியாவில் முதல் 10 சதவீதப் பணக்காரர்களின் வருமானப் பங்கு - கீழே உள்ள 50 சதவீத ஏழைகளின் வருமானப் பங்கு ஆகியவற்றின் விகிதம் 19.2 ஆக உள்ளது. இதன் பொருள், மிகவும் பணக்காரர்களாக உள்ள முதல் 10 சதவீத மக்கள், மிகவும் ஏழ்மையான 50 சதவீத மக்களின் வருமானத்தைவிடக் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாகச் சம்பாதிக்கின்றனர்.

மேலும், இந்தியாவில் முதல் 10 சதவீதப் பணக்காரர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் 57.7 சதவீதத்தை ஈட்டுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியா உலகிலேயே மிகவும் ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.

வறுமை அளவீடு: இந்தியாவில் வறுமைக் கோடு (Poverty Line) என்பது ஒரு நபருக்கு அத்தியாவசியத் தேவைகளைப் (உணவு, உடை, வீடு போன்றவை) பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச செலவை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த வறுமைக் கோடு, மக்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை அறிவதற்கான செலவு ஆய்வுகள் மூலம் தரவு சேகரிக்கப்பட்டுக் கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்தத் தரவுச் சேகரிப்பு முறையின் ஒரு அம்சமாக உள்ள வித்தியாசங்கள் வறுமைக்கோட்டின் அளவை பாதிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ‘ஒரு முறை கணக்கெடுப்பு’ அடிப்படையில் (One-visit Survey), ஆய்வாளர்கள் ஒரே ஒரு முறை மட்டுமே ஒரு குடும்பத்தைப் பார்வையிடுகிறார்கள். அப்போது, குடும்பத்தின் செலவு விவரங்களை ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு மட்டுமே அவர்கள் பதிவுசெய்கிறார்கள்.

இந்த ஆய்வு எளிமையானது, விரைவானது, செலவு குறைவானதுகூட. ஆனால், இது முழுமையான அல்லது துல்லியமான தரவை வழங்குவதில்லை. ஏனெனில் - கணக்கெடுப்புக்கான அந்த ஒரே வருகையில் தங்கள் செலவுகளை மக்கள் முழுமையாக நினைவுபடுத்தித் தெரிவிக்காமல் இருக்கலாம். பருவகால மாற்றங்கள், வருமான மாறுபாடுகள் அல்லது அசாதாரணச் செலவுகள் (திருமணம், மருத்துவ செலவு) ஆகியவை ஆய்வில் பதிவாகாமல் போகலாம்.

இதனால், இந்த முறையைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்ட வறுமைக் கோடு, உண்மையான தேவைகளை வெளிப்படுத்துவதைவிடக் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, இந்த முறையில் கணக்கிடப்படும் வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கை உண்மையைவிடக் குறைவாகத் தோன்றலாம்.

மேலும், உலக வங்கி, மத்திய அரசு, ஆக்ஸ்ஃபாம் போன்றவை இந்தியாவின் வறுமை நிலையைக் கண்டறியப் பல்வேறு கணக்கீடுகளைப் பயன்படுத்துகின்றன. இதனால், வறுமை அளவீடு குறித்த ஒருமித்த கருத்து இல்லை. இதனால் வறுமைக்கு எதிராக அரசு கொள்கை வகுப்பது சவாலாக உள்ளது.

இந்தியாவில் ஏற்றத்தாழ்வைக் குறைக்க, முதலில் முழுமையான வருமானத் தரவு சேகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் செலவு அடிப்படையிலான ஆய்வுகள் கள யதார்த்தத்தை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்றே கடந்த கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, ‘பல முறை கணக்கெடுப்பு’ ஆய்வுகள், முறைசாராத் தொழிலாளர்களின் வருமானத்தை மதிப்பிடுதல், அனைவரையும் உள்ளடக்கிய கணக்கெடுப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். வருமான இடைவெளியைக் குறைத்துக் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்றவற்றை மேம்படுத்தி, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x