Published : 03 Aug 2025 01:31 PM
Last Updated : 03 Aug 2025 01:31 PM

நேரு உருவாக்கிய பஞ்சசீலக் கொள்கை - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 44

இந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பிரதமர் ஜவஹர்லால் நேரு பல முக்கிய முடிவுகளை எடுத்தார். மற்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதில் நேருவுக்கு தனித்த தொலைநோக்குப் பார்வை இருந்தது. அதைக் கவனத்தில் கொண்டே பஞ்சசீலக் கொள்கையை அவர் உருவாக்கினார். 1954-ல் சீனாவுடன் பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 1955-ம் ஆண்டு ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் அணி திரண்ட பாண்டுங் மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகள்:

1. அனைத்து நாடுகளும் சமாதான சுகவாழ்வு வாழ வேண்டும்.
2. வலிமை குறைந்த நாடுகளை வலிமை மிக்க நாடுகள் துன்புறுத்தக் கூடாது.
3. மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிடக் கூடாது.
4. தேவையுள்ள அனைத்து நாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வர வேண்டும்.
5. அனைத்து நாடுகளின் எல்லைப் பாதுகாப்புக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.

‘பஞ்சசீலக் கொள்கை’யை அரசியலில், 1945-ஆம் ஆண்டு இந்தோனேசிய குடியரசுத் தலைவர் டாக்டர். சுகர்ணோ கையாண்டார். இவர் தெய்வ நம்பிக்கை, மனிதாபிமானம், தேசியம், குடியரசு, சமூக நீதி என்பனவற்றைத் தம் அரசாங்கக் கொள்கைகளாக வெளியிட்டார். 1955-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நேருவின் உரையில் இந்திய நாடு வகுத்துள்ள பஞ்சசீலக் கொள்கை குறித்து குறிப்பிட்டிருந்தார். அவருடைய உரை வருமாறு:

“சுதந்திரம் பெற்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நேரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா என்பதை எண்ணிப் பார்த்தால் கண்களில் நீர்த் திவலைகள் முட்டி நிற்கின்றன. இப்போதும் பாகிஸ்தான் கொடுக்கும் பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டே வருகிறோம். அனைத்தையும் நாம் சகித்துக் கொண்டோம். எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் நாம் வலிமையோடு செயல்படுகிறோம். பஞ்ச சீலம் என்ற கொள்கை உருவாக்கப்பட்டு அதை நாம் கடைப்பிடித்து வருகிறோம். அந்த கொள்கையின்படி, நாடுகளுக்கு இடையே உறவு எப்படி இருக்க வேண்டும்? உலகத்தோடு நாம் எவ்வாறு நட்புறவை கொண்டாட வேண்டும் என்று எடுத்துச் சொன்னோம்.

அடுத்த நாட்டு பிரச்சினைகளில் தலையிடுவதோ போரிடுவதோ இல்லாமல், உலக சமாதானத்தை பாதுகாப்பது என்ற அடிப்படையில் பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கினோம். இன்று ஆகஸ்ட் 15. கோவா நம் கவனத்தில் இருக்கிறது. விடுதலைக்காக நாம் போராடும்போது, கோவா, புதுச்சேரி, மாஹே, ஏனம், காரைக்கால், சந்திர நாகூர் போன்ற பல பகுதிகள் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தோம். இந்தப் பகுதிகள் 200 - 300 ஆண்டுகளாக தனித்து இருந்தன. இன்று சிலர் கேட்கின்றனர். ஏன் இந்தியா கோவா வேண்டும் என்கிறது என்று.

நாம் சொல்ல வேண்டும்... இந்திய வரைபடத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். இந்திய வரைபடத்தில் இருந்து கோவா, புதுச்சேரி போன்ற பிரதேசங்களைப் பிரிக்க முடியாது. கடந்த 8 ஆண்டுகளில் கோவா பிரச்சினையில் அமைதியான முறையில் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதில் ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. அமைதியான வழியில் கோவா பிரச்சினையில் சுமுகத் தீர்வு எட்டப்படும் என்று நம்புகிறேன்.

ஏன் சொல்கிறேன் என்றால் கோவா பிரச்சினையை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். அகமும் புறமுமான நிலையில் பல பிரச்சினைகள் உள்ளன. இதில் பலர் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இப்படியான நிலையில் நாம் முன்னெடுத்த பஞ்சசீலக் கொள்கை உலகம் முழுவதும் இன்றைக்குப் பேசுபொருளாக இருக்கின்றது. சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது சில சங்கடங்கள் நேரிடக் கூடும். நாம் எழுப்ப நினைக்கும் கட்டிடங்கள் இன்றைக்கு வெற்றுக் கட்டிடங்கள் அல்ல. நாளை இவை நம் தலைமுறையை வலிமைப்படுத்தும் அடையாளங்களாக விளங்கும். இதற்கு நமது உழைப்பை வழங்க வேண்டும்.

இந்த பரந்து விரிந்த இந்துஸ்தானத்தில் பல முகங்கள் உள்ளன. பல மதங்கள் உள்ளன. பல மண்டலங்கள் உள்ளன. பல சித்தாந்தங்கள் உள்ளன. பல நிலங்கள் உள்ளன. பல மாநிலங்கள் உள்ளன. இருப்பினும் இந்தியா என்பது இவற்றையெல்லாம் உள்ளடக்கிய சகோதர சகோதரிகளுடன் இணைந்த ஒரு அமைப்பாகும்.

இன்றைய உலகம் அணுசக்தி உலகமாக உள்ளது. அதேநேரம், அணுசக்தியைப் பயன்படுத்துவதால் மட்டுமே சச்சரவுகளுக்கு தீர்வாக அமையாது. புது யுகத்தைப் புரிந்துகொண்டு அந்த நற்சிந்தனைகளோடு நீங்கள் இருக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு மாநில சீரமைப்பு கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் பாரபட்சம் இல்லாமல் நடுநிலைமையுடன் செயல்பட 3 நபர்களை அமைத்துள்ளோம். அந்தக் குழு ஆய்வு செய்யும். இன்னும் 2 மாதங்களில் அவர்களுடைய அறிக்கைகளும், பரிந்துரைகளும் வரக் கூடும். அந்தப் பரிந்துரைகள் என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால். ஒன்றை மட்டும் சொல்வேன். அது எத்தனை சூடான நிலவரமாக இருந்தாலும், பஞ்சாப், தக்காணம், கிழக்கு, மேற்கு எதுவாக இருந்தாலும் வரப்போகிற அந்தப் பரிந்துரைகளை நாம் அமைதியாக ஏற்கத்தான் வேண்டும். நம்முடைய மாநிலங்கள் வெவ்வேறு நாடுகள் அல்ல.

பஞ்ச சீலத்தில் நம்முடைய அணுகுமுறை சரியாக உள்ளது. நாம் சரியாகச் செல்கின்றோம். விடுதலையாகி 8-வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். கட்டிடத்தின் ஒரு மாடி கட்டி விட்டோம். அடுத்து 2-வது மாடியைக் கட்ட வேண்டும். நமக்கு முன்னால் இந்த நாட்டுக்காக கடின உழைப்பையும் தியாகமும் புரிந்தவர்களை நினைவு கொள்வோம். இந்தியாவின் தொன்மையான குரலைக் கேட்போம். நம்முடைய மூத்தோர் குரல் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

புத்தர் மறைந்து 2,500 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அவரை இங்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடுவோம். அவரோடு மகாத்மா காந்தியையும் நினைவு கொள்வோம். அவரே நமக்கு ஆதாரம். புத்தர் மற்றும் காந்தியின் கொள்கைகள், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம்முடைய நிலைப்பாடாக இருக்க வேண்டும். இதயம் வலிமையாக இருக்கும். கண்கள் நேராகப் பார்க்கும். இதைக் கொண்டே நாம் ஜீவனுள்ள புதிய இந்தியாவைப் படைப்போம்’’ என்று குறிப்பிட்டார் நேரு.

இந்த சுதந்திர பூமியில் நான் பிறந்த பின்பு 1956-ல் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நேருவின் பேச்சும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவ்விழாவில் நேரு பேசியதாவது:

“இந்தியாவின் சுதந்திர தின விழாவை இன்று நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். நாளை (ஆக.16) லண்டனில் உலகை அச்சுறுத்தும் சூயஸ் கால்வாய் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படவேண்டும் என விரும்புகிறேன். கிடைக்கும் என்று நம்புகிறேன்... இந்த சூயஸ் கால்வாய் உலக வர்த்தகத்துக்கு முக்கியமான காரணியாகும். குறிப்பாக எகிப்து மற்றும் இங்கிலாந்து போன்ற நட்புறவு நாடுகள் இதற்கு தீர்வு கண்டாக வேண்டும்.

இந்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் அதாவது எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வருகிறார்கள். இந்த நாட்டின் சட்டங்கள், நாட்டு மக்களுடைய பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றார்கள். அதற்கு நாடாளுமன்றம் ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவு கட்டும் வழிமுறையாகும். இன்னும் சில மாதங்களில் இரண்டாவது பொதுத்தேர்தல் வர இருக்கிறது. ஒவ்வொருவருக்கும், தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமை உள்ளது. அந்த உரிமையின்படி ஆட்சிகள் மாறலாம். அதுவே ஜனநாயகத்தின் முக்கியக் கூறாகும்.

இந்தியா எதை நோக்கிச் செலகிறது என்றும் பார்க்க வேண்டும். நம்முடைய பண்டைய வழிமுறைகள் வலுவிழந்து விட்டனவா? ஒவ்வொரு நாடும் அதற்கான கலாச்சாரத்தில் வார்க்கப்பட்டிருக்கின்றதா? அந்த வார்ப்பு எப்படியானது என்பதைக் கவனிக்க வேண்டும். நம்முடைய மரபு என்பது நமது ரத்தநாளங்களில் இருக்கின்றது. அதை யாரும் பிரித்துக் கொண்டு செல்ல முடியாது. பல துறைகளிலும் மரபு ரீதியான முன்னேற்றங்கள், நவீன பார்வைகள், நமக்கு வேண்டும். இந்திய இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்தையும் அவர்களுடைய எதிர்காலத்தையும் கவனித்து செயல்பட வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளில் நடந்த பணிகள் குறித்து நிறைய பேசுகிறார்கள். என்னவெல்லாம் நடந்தன? இந்தியாவின் மதிப்பு எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு நாடுகளுக்கு ஒரு மாத சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்தேன். எல்லா நாட்டிலும் எல்லோரது பார்வையும் இந்தியாவின் மீதே உள்ளது. நாம் எப்படி முன்னேறுகிறோம். நமது வலிமை, கவுரவம் எப்படி உயர்கிறது என்பதைக் காண மற்ற தேசங்களில் உள்ள தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஐந்தாண்டுத் திட்டத்தின் ஆற்றலை நகர்த்த வேண்டும். வறுமை, அறியாமை, வேலையின்மை, இவற்றை அகற்றியாக வேண்டும். புதிய வலுவான இந்தியாவை நிர்மாணிக்க வேண்டும். இந்த உலகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் இந்தியாவுக்கு உண்டு.

வன்முறையற்ற அமைதியான ஒத்துழைப்பில் இந்த நாட்டினுடைய பெருமையை உயர்த்த வேண்டும். நவீன கலாச்சாரத்தை கொண்டவர்களின் அணுகுமுறை நமக்குத் தேவை. 2,500 ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் புத்தர் வாழ்ந்த பெருமை நமக்கு உண்டு. இப்படியான பல்வேறு பண்பாடுகள் நமக்குள்ளே இருப்பதை பெருமையாக நினைத்து தொடர்ந்து நம்முடைய செயல்பாட்டில் பயணத்தைத் தொடர்வோம்” என்று தமது பேச்சை நிறைவு செய்தார் நேரு.

அடுத்ததாக 1957-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நேரு உரையாற்றியதாவது: “இந்த செங்கோட்டையின் ஒவ்வொரு கல்லும் அதனுடைய கதையைச் சொல்லும். நமது நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கும் டெல்லி அங்காடித் தெரு, சாந்தினி சவுக் நம் கண்முன் இருக்கின்றன.

இந்த சாந்தினி சவுக் என்னவெல்லாம் பார்த்திருக்கிறது... சாம்ராஜ்யங்களின் அணிவகுப்பு, சாம்ராஜ்யங்களின் எழுச்சி, வீழ்ச்சி, மக்கள் ஊர்வலங்கள், ஆங்கில அரசின் ஆளுகை, எத்தனையோ பிரிட்டிஷ் அதிகாரிகள், குதிரைகளிலும், யானைகளிலும் வலம் வந்தது... என எண்ணற்ற சம்பவங்களை பார்த்ததுதான் இந்த சாந்தினி சவுக்.

தற்போது இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகள், இரும்பாலைகள், அணைகள் கட்டப்படுகின்றன. இது வளர்ச்சிப்பாதையின் அடையாளங்களாகும். லட்சக்கணக்கானோர் உற்பத்தியில் இறங்கி உள்ளனர். இந்தியாவை உருவாக்குபவர் யார்? வெளியே இருந்து யாரும் கிடையாது. நமக்கு நாமே, நாம் எல்லோரும் சேர்ந்து இந்தியாவை உருவாக்கி வருகிறோம். அதை மேலும் உயர்த்துவோம். ஒரு அரசாங்கம் மட்டுமே நாட்டை உயர்த்த முடியாது. சட்டங்களாலும் நாட்டை உயர்த்த முடியாது. சமூக ஒற்றுமை, சமூக வலிமையால் மட்டுமே நாட்டை உயர்த்த முடியும்.

இந்த கொண்டாட்ட விழாவில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்க்கிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துகள். நீங்கள் வளர்ந்து உற்சாகத்துடன் நம் நாட்டுக்கு உழைக்க வேண்டும். இந்த நாடு உங்களை வழிமேல் விழி வைத்து எதிர்பார்க்கின்றது.

இமயம் முதல் குமரி வரை நம் நாடு விரிந்திருக்கிறது. இங்கே டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நம்முடைய சுதந்திர விழாவை மூவர்ணக் கொடியேற்றி கொண்டாடுகிறோம். சுதந்திரம் பெற்ற பின் ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் என்னுடைய கருத்துக்களை நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பேசி வருகிறேன். பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம். முன்னோக்கியும் பார்க்கின்றோம்.

வரலாற்றாசிரியர்கள் நூற்றாண்டு கால சுந்திரப் போராட்டம் குறித்து பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார்கள் இன்னும் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. இந்திய மக்கள் பொங்கி எழுந்தார்கள், அன்னிய ஆட்சியை அகற்ற முயன்றார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். அவர்களுக்கென ஒரு நாடு இன்றைக்கு அமைந்து, இந்திய மக்களே ஆள்கின்றனர்.

அந்தக் காலத்து இந்திய வேறு மாதிரி இருந்தது. அது மன்னர் காலம். பகதூர் ஷா, பாட்ஷா ஆண்ட காலம். அப்போது இந்தியா என்னவாக இருந்தாலும் அது சுதந்திரத்துக்கு முயற்சித்த காலம். அதில் பொதுமக்கள் பங்கு பெற்றனர். நானா சாகிப், குன்வர்சிங், லியாகத் அலிகான், லட்சுமிபாய் ராணி என பல பேர் போராடினர். அவர்கள் சுதந்திரத் தீயை மூட்டியவர்கள். இன்றைக்கும் அவர்கள் நம் இதயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

சுதந்திர ஜோதியை உயர்த்திப் பிடித்த தாதாபாய் நவுரோஜி. லோகமன்ய திலகர், லாலா லஜபதிராய், பிபின்சந்திர பால் போன்ற நம் மூதாதையர்களை இங்கே நாம் நினைத்துப் பார்க்கிறோம் அவர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தனர். சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று குரல் கொடுத்தார் திலகர்.

அவர்கள் விட்டுச் சென்ற அந்த பாடங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன. ஒற்றுமையை வலியுறுத்துகின்றன. இந்த வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு நாம் புத்தாக்கம் பெற்று பீடுநடை போடுவோம்.

பாகிஸ்தான் நம்மோடு போர் தொடுக்கப் பார்க்கின்றது. நாமும் பொறுமையாக இருக்கின்றோம். ஒருவேளை இந்தியாவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், அதைச் சமாளிக்கும் வலிமை நம்மிடம் இருக்கின்றது. எந்தவொரு நாட்டோடும் நட்பை விரும்புவோம், நட்போடு இருப்போம். இன்றைக்கு உழைக்கும் சமுதாயம் உதயமாகி விட்டது. வேகமாக வளர்கின்றோம். பழைய பிரச்சினைகளை வென்றாக வேண்டும். புதிய பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டும். எனவே வலிமையான பாரதத்தை படைக்க இன்றைய சூழ்நிலையில் எனது சகோதர சகோதரிகள் முயல வேண்டும். அதுவே இந்தத் தருணத்தில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய உறுதிமொழி.” இவ்வாறு தனது உரையை முடித்தார் நேரு.

பல்வேறு நாடுகளின் உதவியுடன் இந்தியாவில் கனரக தொழிற்சாலைகள்

1957-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் நேரு குறிப்பிட்டதுபோல, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகளுடன் நட்புறவோடு சர்வதேச அளவில் இந்தியா நடைபோட்டது. தொழில்துறையில் முன்னேற வேண்டும், வல்லரசாக மாற வேண்டும் என்ற நோக்கம் ஒருபுறத்தில் இருந்தாலும், விஞ்ஞானத் துறையிலும் இந்தியா முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நேரு நினைத்தார். அதற்கான வழிகளை வகுத்தார்.

அவருடைய எண்ணங்களுக்கு வலுவூட்டும் விதமாக 1952, 1957, 1962 என அடுத்தடுத்து நடந்த பொதுத் தேர்தல்களில் அதிகமான இடங்களை காங்கிரஸ் பெற்று, நேரு பிரதமராகப் பதவியைத் தொடர்ந்தார்.

நேருவின் முயற்சியால் பிலாய் இரும்பாலை, சோவியத் யூனியன் உதவியால் நிர்மாணிக்கப்பட்டது. ரூர்கேலாவில் ஜெர்மனியுடன் உதவியுடனும், துர்க்காபூரில் பிரிட்டன் உதவியுடனும் உருக்காலைகள் அமைக்கப்பட்டன. சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டி தொழிற்சாலையும், ராணுவ டேங்க் தொழிற்சாலையும், திருச்சியில் பாய்லர் தொழிற்சாலையும் நேரு காலத்தில் அமைக்கப்பட்டன.

ரூர்கேலா எஃகு தொழிற்சாலை

ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் தொழிற்புரட்சி என்பது ஒரு முக்கிய கொள்கையாக இருந்தது. குறிப்பாக, கனரகத் தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளமாக கருதப்படுகிறது. இங்கு ஒன்றை சொல்லவிரும்புகிறேன்...

இந்தக் காலகட்டங்களில்தான் நான் பிறந்தேன். அன்றைக்குப் பிறந்த எங்களைப் போன்றவர்கள் இன்றைக்கும் திடகாத்திரமாக இருக்கின்றார்கள்... அதற்கு முக்கிய காரணம் அன்றைய வாழ்வியல் முறைகள்தான்!

‘2கே கிட்ஸ்’ என்று சொல்லக்கூடிய இந்தக்கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டக்காரர்களே.

அன்றைக்கெல்லாம், எந்தவித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை; கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை; புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.; பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தது முதல் இருட்டும் வரை தெருக்களில் ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை; நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம்தான்...

நெட் நண்பர்களிடம் இல்லை; தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணீர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர், மினரல் வாட்டர் தேடியதில்லை; ஒரே சர்பத்தை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை; அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் உடம்பு பெருக்கவில்லை; நீரிழிவு நோய் வந்ததில்லை; காலில் காலணி அணியாமல் நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை; சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை; உடல் வலிமை பெற ஊட்டச்சத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

எங்கள் பெற்றோர்கள் லட்சாதிபதிகள் அல்ல. அதேநேரம், அவர்கள் பணம்... பணம்... என்று அதன் பின்னால் ஓடியவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல. எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பரிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை; எங்களிடம் செல்போன், ப்ளே ஸ்டேஷன், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.

இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தோம் நாங்கள்...! அதனால் அதே புத்துணர்ச்சியோடு இன்றும் வலம் வருகிறோம்... அந்த வகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்தானே!

என்னோடு அந்தக் காலட்டத்தில் பிறந்தவர்களை இன்றைக்கு ரயிலிலோ, விமானத்திலோ நேரில் பார்க்கும்போது அடையாளம் தெரியாத அளவுக்கு அவர்கள் உருமாறிவிட்டார்கள். பள்ளி, கல்லூரி தோழர்களும் அப்படித்தான். இன்றைக்கு ஒருசிலர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக, கல்லூரிப் பேராசிரியர்களாக இன்னும் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களாக, தொழில் அதிபர்களாக உள்ளனர். அவர்களை நேரில் சந்திக்கும்போது கடந்த கால நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். அந்த நாட்கள் மீண்டும் வாராதா என்ற ஒருவித ஏக்கம், ஆற்றாமையால் மனம் தத்தளிக்கிறது.

‘பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே...பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்...” என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. என்ன செய்வது... காலம் வகுத்த வழியில் நடைபோட்டு வருகிறோம்..!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x