Published : 03 Aug 2025 08:42 AM
Last Updated : 03 Aug 2025 08:42 AM
உலகப் புகழ்பெற்ற ஓவிய-சிற்பக் கலைஞர் குமாரி நாகப்பன், இவருடைய சிற்பங்கள் சிங்கப்பூர் பொது இடங்களில் நிர்மாணிக்கப் பட்டு பேசப்பட்டவை. 40 வயதுக்கு மேல் கலைத் துறையில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சிங்கப்பூர் 60ஆவது தேசிய நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘சிங்கா 60’ விழா சென்னையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அடையாறு ஃபோரம் ஆர்ட் கேலரியில் ’நகரத்துச் சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் ஓவிய-சிற்பக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் குமாரி நாகப்பனுடன், சிங்கப்பூர், இந்தியாவைச்சேர்ந்த கவிதா பத்ரா, பி.ஞானா, மகாலட்சுமி கண்ணப்பன், ஆர்யன் அரோரா ஆகிய ஓவியர்கள், சிற்ப கலைஞர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஓவியரும் வரையும் விதமும், அவர்களுடைய ஓவியங்களின் தளமும் வேறுபடும். ஒவ்வொரு கலைஞரும் தங்களது படைப்புகளில் தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், பல்வேறுபட்ட தன்மைகள் கொண்ட ஓவியங்கள், படைப்புகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஐவரில் இளையவர் ஆர்யன் அரோரா. ஆயில் கேன்வாஸ் முறையில் இவர் வரைந்திருக்கும் முகம் இல்லா கறுப்பு வெள்ளை உருவங்களின் மேல் ‘லேட்டக்ஸ்’ போன்றதொரு பொருளால் சாயம் பூசப்பட்டுள்ளது. தெருவோரக் கடையில் ஒருவர் காபி அருந்துவது, மனிதர்கள் வரிசையில் நிற்பது எனச் சிங்கப்பூரில் அவர் கண்ட காட்சிகளை ஒளிப்படங்களாக எடுத்து, அவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளார்.
கேன்வாசில் ஓவியங்களை வரைந்திருக்கும் கவிதா பத்ரா ஆயில், ஆக்ரிலிக் எனப் பல பொருட்களைப் பயன்படுத்தி ‘மிக்ஸ்டு மீடியா’ முறையில் பூக்களையும், நடைபாதையில் தன்னை பாதித்த கதைகளையும் ஓவியங்களில் காட்சிப்படுத்தியுள்ளார். கரி (சார்கோல்), பிளாஸ்டர் பொருள்களை ஒன்றாகப் பிசைந்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருளைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கியுள்ளார் மகாலட்சுமி கண்ணப்பன். இவற்றைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும் கறுப்புத் தட்டில் உள்ள கோடுகள், சுருள்கள் என ஒவ்வொன்றும் ஒரு தோரணையில் தனித்துவமாகக் காட்சியளிக்கின்றன.
குமாரி நாகப்பனும் பி. ஞானாவும் வெண்கலத்தில் சிற்பங்களை வடித்துள்ளனர். குமாரி நாகப்பனின் சிற்பங்கள் ’குழந்தை’ என்கிற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளன. சிவப்பு மிளகாய் வடிவில் ஒரு குழந்தையின் முகபாவனையைச் சேர்த்து அவர் வடித்திருக்கும் படைப்பு பார்ப்பவரைப் பிரமிக்க வைக்கிறது. வெண்கலத்தால் வடிக்கப்பட்ட சிற்பங்களுக்கு அவர் அளித்திருக்கும் வண்ணப்பூச்சு கச்சிதம்.
இவரது படைப்புகளில் இருந்து சற்று வேறுபடுகின்றன ஞானாவின் படைப்புகள். அம்மாவும் குழந்தையும், ஒரு காதல் ஜோடி என்பதாக உறவுகளைப் பிரதிபலிக்கும் அழகான ஓவியங்களுக்கு வண்ணம் பூசாதது அவருடைய தனிப் பாணி. இந்தக் கண்காட்சி ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சியில் சிற்பி குமாரி நாகப்பன் உரையாற்றுகிறார்.
‘சிங்கா 60’ நிகழ்ச்சிகளைப் பற்றி கூடுதலாக அறியவும், பங்கேற்பதற்கு பதிவு செய்யவும் இதோ இணைப்பு > சிங்கா 60 கலை திருவிழா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT