Published : 02 Aug 2025 01:57 PM
Last Updated : 02 Aug 2025 01:57 PM

நேருவின் சுதந்திர தின உரையும், உற்று நோக்கிய உலகமும் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 43

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நேருவின் சுதந்திர தின உரை

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் இருந்து பிரதமர் நேரு தேசியக் கொடியேற்றி, சுதந்திர தின உரையாற்றுவது வழக்கம். குறிப்பாக 1947 மற்றும் 1948-ம் ஆண்டுகளில் வானொலியில் தான் பிரதமர் உரையாற்றினார். 1949-ம் ஆண்டுக்குப் பிறகுதான் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் உரையாற்றும் நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.

ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் பிரதமர் நேரு ஆற்றும் உரை இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளாலும் உற்றுக் கவனிக்கப்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அவரது சுதந்திர தின உரைகளை சுருக்கமாகப் பார்ப்போம்...

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி.... முதலாவது சுதந்திர தின விழாவின்போது, ‘கிழக்கே ஒரு நட்சத்திரம் உதிக்கிறது’ என்ற தலைப்பில் வானொலியில் பிரதமர் ஆற்றிய உரை முக்கியமானதாகக் கருதப்பட்டது.

‘இந்திய மக்களின் முதல் சேவகர்’ என்ற முறையில், அவர்களின் சேவைக்கும் அவர்களின் முன்னேற்றத்துக்கும் உறுதியளித்து, இன்று முதல்முறையாக நான் உங்களிடம் அதிகாரப்பூர்வமாக உரையாற்றுகிறேன்... என்று தன் உரையைத் தொடங்கினார் பிரதமர் ஜவஹர்லால் நேரு. தொடர்ந்து அவர் பேசியதாவது:

“நாம் நிறைய சாதித்துள்ளோம்; இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். எனவே, நமது மாபெரும் தலைவர் நமக்குக் கற்றுக் கொடுத்த உயர்ந்த கொள்கைகளை உறுதியாகவும், கடைப்பிடிப்புடனும் நமது புதிய பணிகளை நோக்கிச் செல்வோம். அதிர்ஷ்டவசமாக, காந்திஜி நமக்கு வழிகாட்டவும், ஊக்கமளிக்கவும், உயர்ந்த முயற்சியின் பாதையை நமக்குச் சுட்டிக்காட்டவும் நம்முடன் இருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்று விட்டது. நாம் புதிய நம்பிக்கையோடு... லட்சிய நோக்கோடு பயணிக்கப் போகிறோம். நல்ல எதிர்காலம், முன்னேற்றம் நமக்கு உள்ளது. நமது கனவுகள் மெய்ப்பட வேண்டும். நமது தொன்மை மற்றும் நமது பயணத்தில் புதிய பார்வையோடு தாய்நாட்டை முன்னேற்றி இந்தியாவை வணங்குவோம். இதனால் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. நமக்கு ஓய்வில்லை. துணிச்சலான முன்னேற்றத்தின் தொடக்கம் இது. நம் எதிரே உள்ள இருளை அகற்றி, தீபத்தை ஏற்றிக் கொண்டு காந்தியின் கொள்கையில் பயணம் செய்வோம்” என்று குறிப்பிட்டார்.

அதேபோல் 1948-ம் ஆண்டு 2-வது சுதந்திர தின உரையில், “நமக்குள் வேற்றுமைகள் பல உள்ளன. இருந்தபோதும் நமக்குள் வன்முறை கூடாது. எந்த சூழ்நிலையிலும் அச்சம் கொள்ளக் கூடாது. நம்மை நாமே கண்டெடுக்க வேண்டும். நாம் கண்ட கனவுகள் சுதந்திர இந்தியாவில் நனவாக்கப்பட வேண்டும். பழைய விழுமியங்களை மீட்டெடுக்க வேண்டும். புதிய சுதந்திர இந்தியாவில் நாம் அதை பொருத்தி முன்னேற்றப் பாதையில் செல்வோம். உண்மை, அமைதி, ஒத்துழைப்பு, சகிப்புத் தன்மை என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படை கூறுகளாக நாம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

அடுத்து 3-வது விடுதலை நாளான 1949 ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி மக்கள் மத்தியில் நேரு பேசும்போது, “நாம் சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தீ பற்றினால் அதை உடனே அணைத்து விடலாம். ஆனால் வதந்தீ பெரும் ஆபத்துகளை உருவாக்கக் கூடியது. அது விரைவில் பரவக் கூடியது. அவ்வாறு பரவி விட்டால் அதை அணைப்பது அவ்வளவு சுலபமல்ல. எனவே அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எனவே மக்களுக்கான புரிதல் மிக மிக அவசியம்.

தனது சொந்த வலிமையின் மூலமே நமது சுதந்திரத்தைத் தற்காத்துக் கொள்ள முடியும். எந்த நாட்டின் மீதும் பகை உணர்வு நமக்கு இல்லை. அடுத்த நாட்டு பிரச்சினையில் நாம் தலையிடப் போவது இல்லை. அதேபோல், நம் நாட்டுப் பிரச்சினைகளில் பிற நாட்டினர் தலையிடவும் அனுமதிக்க மாட்டோம். அதுபற்றிய கவலை அவர்களுக்கு தேவையில்லாதது. இந்த உலகம் பலவிதமானது. பல்வேறு கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்களைக் கொண்டது. அது நாடுக்கு நாடு வேறுபடும். இந்த அகிலத்தின் சிறப்பே அத்தகைய பன்முகத்தன்மையான நிலைதான். உலக அமைதிக்கான பணியில் நம் நாட்டின் செயல் உறுதியாக இருக்கும். இதுவே நம்முடைய வெளியுறவுக் கொள்கை” என்று சூளுரைத்தார்.

அதற்கடுத்து 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பேசும்போது, “இன்று நம் முன்னே பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதிலும் மிக முக்கியமான பிரச்சினை மட்டுமல்ல... முதன்மையான பிரச்சினை என்னவென்றால், உணவு பொருட்கள் தட்டுப்பாடுதான். எனவே, உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். அதற்கான ஆயத்தங்களில் நாம் இறங்க வேண்டும். நம்முடைய முழு கவனமும் அதை நோக்கியே இருக்க வேண்டும்” என்றார்.

இந்த காலகட்டத்தில்தான் பிரதமர் நேரு அமெரிக்கா சென்றார். அமெரிக்க ஜனாதிபதியாக அப்போது இருந்தவர் ஹாரி எஸ். ட்ரூமன். அவரைச் சந்தித்து இந்தியாவில் நிலவும் உணவுப் பற்றாக்குறை குறித்து பேசினார்.

அதன் விளைவாக, இந்தியாவுக்கு கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை அமெரிக்கா அனுப்பியது. குறிப்பாக, கோதுமை அதிகமாக அனுப்பப்பட்டது. மேலும், தெருக்களில் அமர்ந்து பொதுமக்களிடம் கோதுமை மூட்டை மூட்டையாக பெறப்பட்டு, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. இத்தகைய அவலமான நிலையை எல்லாம் அன்றைக்கு இந்தியா சந்தித்தது.

அடுத்ததாக, 1951-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நேரு ஆற்றிய சுதந்திர தின உரையில், “சுதந்திரம் மட்டுமே நமக்கு எல்லாம் ஆகிவிட முடியாது. ஆயுதங்களால் மட்டுமே நம்மை தற்காத்துக் கொள்ள முடியாது. நமது கனவுகள் அற்புதமானவை. அதை நம்முடைய ஒற்றுமையால்தான் செயல்படுத்த முடியும். வேற்றுமையில் ஒற்றுமை என்றாலும், அதை எல்லோரும் ஓரணியில் நின்று செயல்பட்டால்தான் நமது கனவுகள் மெய்ப்படும்.. இன்றைக்கு நம் நாடு எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் அதிகம். அதிலும் குறிப்பாக, விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை நம் கண் முன் பூதாகரமாக நிற்கின்றன. அதற்காகவே ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களின் நல்வாழ்வுக்காக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. (இந்த 5 ஆண்டுத் திட்டம் என்பது ரஷ்யாவினுடைய மாதிரியாகும்.) அரசாங்கம் தங்களால் ஆன நல்லனவற்றை மக்களுக்குச் செய்யும் என்று உறுதி கூறுகிறேன். அதேபோல், மக்களின் ஒத்துழைப்பும் நமக்கு மிகவும் முக்கியம். ஐந்தாண்டுத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், நற்சிந்தனைகளும் இருக்க வேண்டியது நாட்டுக்கு மிகவும் அவசியம். அடுத்து நமது நாட்டில் முதல் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. அதில் மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த ஜனநாயக தேர்தல் முறை மாபெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

நமக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. உலகில் நமக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே, உலக நடப்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். எல்லா முக்கிய பிரச்சினைகளிலும் உலக நாடுகள் இந்தியாவின் கருத்தை எதிர்பார்க்கின்றன. சச்சரவுகளை இந்தியா ஒருபோதும் விரும்பியதில்லை; விரும்பப் போவதும் இல்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பாகிஸ்தான் நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டது. அதை பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டு அமைதியாகி விட்டனர். அதேநேரம் பாகிஸ்தானில் உள்ள சிலர் நம் மீது வெறுப்புணர்வுடன் நடந்து கொள்கின்றனர். அதேபோல் இங்கும் சிலர் அத்தகைய வெறுப்பைக் கொட்டுகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் நாம் முக்கியத்துவம் தராமல் எச்சரிக்கையோடு நடைபோடுவோம்” என்றார்.

1951-ம் ஆண்டு இந்திய மக்களுக்கு வழங்குவதற்காக அமெரிக்காவில் உணவுப் பொருட்கள் சேகரிப்பு

அடுத்து 1952-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் நேரு பேசியது வருமாறு: “ஒரு ஜனநாயக நாட்டில் அதிகார மாற்றம் என்பது இயல்பானது. குழந்தைகளுக்கு நம் நாட்டில் கல்வி அவசியம் என்பதை உணர வேண்டும். கருப்புச் சந்தை நாட்டின் பொருளாதாரத்தை பின்னோக்குப் பாதையில் தள்ளி விடுகின்றது. அத்தகைய பொருளாதாரக் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் கூட ஏற்படக் கூடும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் பயணம் முன்னேற்றப் பாதையில் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். பெருமிதத்தோடு விடுதலையடைந்தோம். பண்போடு முன்னோக்கி நகர்வோம். இந்தியாவின் கனவை நிறைவேற்றுவோம். நம்முடைய கரங்களின் வலிமையை அறிந்து, கவலை இல்லாமல் நடப்போம். நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம் என்று இத்தருணத்தில் நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வது அவசியம்.

நாட்டில் பல இடங்களில் போதிய மழை இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இதனால் வேளாண் உற்பத்தியில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் அல்லல்படுகின்றனர். அதேநேரம் சில இடங்களில் மழை நன்றாக பெய்கிறது. அந்தப் பகுதிகளில் உணவு உற்பத்தியும் கூடுகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்கள், மேற்கு வங்கம், ராயலசீமா, மதறாஸ் (சென்னை), மைசூரில் நிலைமை மிக மோசமாக உள்ளது. அங்கு உணவுப் பொருள் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. எனவே அத்தகையப் பகுதிகளில் உணவுப் பொருட்கள் தடங்கல் இன்றி கிடைக்க நாம் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சமன்பாடற்ற நிலையைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். முற்றிலுமாக வறுமையை ஒழிக்க முடியாது என்றாலும், அதைத் தீர்ப்பதற்கு நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்” என்றார். நேருவின் இந்தப் பேச்சு நாட்டு மக்களிடையே பேசு பொருளானது.

மாநில உரிமைகள் குறித்து நேருவின் பார்வை

1953-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நேரு உரையாற்றியது இன்றைய சூழலுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இன்று நாட்டில் பரவலாக மாநில உரிமைகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. மாநில உரிமைகள் பற்றி அன்றைய தினம் பிரதமர் நேரு என்ன உரையாற்றினார் என்பதைப் பார்ப்போம்...

“கடுமையான உழைப்பின் மூலமே நவஇந்தியாவை நாம் உருவாக்க முடியும். இந்தியா சுதந்திரம் பெற்று 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜனநாயகத்தின் அச்சாணியாகி விளங்குகின்ற முதல் பொதுத் தேர்தல் முடிவடைந்தது. மக்களுடைய பெருவாரியான ஆதரவுடன் என் தலைமையில் மத்தியில் ஆட்சியும் அமைக்கப்பட்டு விட்டது. நமது நாடு பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டது. இத்தனை ஆண்டுகளாக பல்வேறு பெருமிதங்களை அடைந்தோம். அதேபோல சரிவுகளையும் கண்டோம். ஒருமுறை அல்ல... பலமுறை சரிந்து விழுந்தோம். அதேவேகத்தில் மீண்டும் எழுந்தும் நின்றோம்.

நமக்கு வலிமையைத் தந்தது எது? நம்மை பலவீனம் ஆக்கியது எது? இனி நாம் செல்ல வேண்டிய இலக்கு என்ன? எங்கே போகிறோம்? நமக்கான பாதை எது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களுடைய சம்மதத்தோடு, அவர்களின் பேராதரவோடு பீடுநடை போட வேண்டும். அதற்கு சரியான பாதையில் நாம் செல்ல வேண்டியது அவசியம். சுதந்திரம் பெற்றோம். சுதந்திரத்தின் பலன்களைப் பெற்றோம். அதேநேரம் பல்வேறு பிரச்சினைகள் தலைக்குமேல் இருக்கின்றன.

நம்முடைய சுதந்திரத்தையும் பேணிக் காக்கவேண்டும். நம்முடைய பணிகளையும் செய்து நாட்டை முன்னேற்றப்படுத்த வேண்டும். நம்முள் எந்தவிதமான பிரிவையோ, நம்மைப் பிரிக்கிற எந்தச் சூழலையுமோ அனுமதிக்கக் கூடாது. பரந்த விசால இந்தியாவில் மாநில உணர்வுகளுக்கு நாம் இடம் தரக்கூடாது. மாநிலத்தை முதன்மைப்படுத்தினால் நாடு பின்னே தள்ளப்படும்” என்றார்.

மாநில உரிமை குறித்து நேருவின் பார்வையை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய காங்கிரஸ்காரர்கள் நேருவின் கருத்துக்கு என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை.

மேலும் நேரு தமது உரையில், “அடுத்து நம்மிடம் இருக்கின்ற முக்கிய பிரச்சினை இனம். அதாவது இந்தியாவில் உள்ள இனங்கள். இது ஒரு சுவர். இந்தச் சுவர்தான் இந்தியாவில் உள்ள மக்களை தனிமைப்படுத்துகிறது. பலவீனமாக்குகின்றது. தனி மனித வலிமை முக்கியமல்ல. நாட்டின் வலிமையே முக்கியம். நாம் அரசியல் சுதந்திரம் பெற்று விட்டோம். ஆனால் அது முழுமையான சுயராஜ்யம் அல்ல. உண்மையான சுயராஜ்யம் என்பது ஒவ்வொருவருக்கும் அது சென்றடைந்திருக்க வேண்டும். அதை மக்கள் உணர வேண்டும். அதேபோல் பொருளாதார நிலைமை முன்னேறியிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் சுயராஜ்யம் பெற்றதாக அர்த்தம்.

இந்திய மக்களின் உழைப்பால் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். உலக நடப்புகளில் இந்தியாவினுடைய பங்களிப்பும் இருப்பது அவசியம். நமக்குள் தேவையற்ற விவாதங்கள், சண்டைகள் இருக்கக் கூடாது. எல்லாவற்றையும் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித் தீர்க்கலாம். பாகிஸ்தான் செய்த கலவரங்களால் காஷ்மீரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன.

பாகிஸ்தான் நாட்டின் செய்தித்தாள்களைப் பார்க்கும்போது என் மனம் குமுறுகின்றது. அந்த அளவுக்கு இந்தியாவைப் பற்றி பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனர். அதைப் படிக்கின்ற மக்களுக்கு இந்தியா மீது வன்மம் ஏற்படுகிறது. மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தலைவர்கள் பகைமை உணர்ச்சியை ஊட்டி வளர்க்கின்றனர். நான் கராச்சிக்குச் சென்றேன்.பாகிஸ்தான் பிரதமரும் இந்தியா வருகிறார். நாம் எப்போதும் சமாதானப் பாதையில் செல்வோம். கடுமையான உழைப்பின் மூலம் நவ இந்தியாவை உருவாக்குவோம்.” இவ்வாறு உணர்ச்சி ததும்ப நேரு உரையாற்றினார்.

அடுத்ததாக, 1954 ஆகஸ்ட் 15-ம் தேதி நேரு ஆற்றிய சுதந்திர தின உரை வருமாறு: “நவ இந்தியா உருவாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை இந்த செங்கோட்டை வளாகத்தில் நாம் கொண்டாடுகிறோம். இந்தக் கொண்டாட்டம் பல கோடி மக்களுக்கானது. இந்தியா என்ற குடும்பத்துக்கானது. நானும் 7 ஆண்டுகளாக ஒவ்வொரு சுதந்திர நாளிலும் நமது அபிலாஷைகள் குறித்து பிரகடனப்படுத்துறேன். அந்த வகையில் நம் நாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா என்ற குழந்தை தற்போது 7 வயது குழந்தையாக வளர்ந்திருக்கிறது. இனியும் வளரும். எப்போதும் நம்முன் பெரிய கேள்விகள் இருக்கத்தான் செய்யும். ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி உள்ளோம். கிராமப் பகுதி மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சக் கீற்று தென்படுகிறது. உறங்கிக் கிடந்த மக்கள் விழித்துக் கொண்டு விட்டனர். பழமையில் இருந்தவர்கள் புதிய சிந்தனையில் புதிய திசையை நோக்கி திரும்பி உள்ளனர். இதுதான் பாரதத்தில் நாம் காணும் நல்ல சூழல்.

மகாத்மா காந்தி சொன்னதைப் போல உண்மையான இந்தியா கிராமத்தில்தான் உள்ளது. கள நிலைமை, எதார்த்த நிலைமை, ஒன்றோடு ஒன்று கவனித்து நம்முடைய பணிகள், அணுகுமுறைகள் இருக்க வேண்டும். எத்தனையோ பிரச்சினைகள் நம் முன்னே இருக்கின்றன. ஆனால் முக்கிய பயணத்தில் நாம் முன்னோக்கி நகர்ந்து வருகிறோம். இந்தியாவின் தன்னிறைவு என்பதான் இன்றைய முக்கிய காரணியாகும். எல்லோரும் வளமாக வாழ வேண்டும். சோம்பேறியாக இருப்பது நல்லதல்ல. சுயாட்சி விடுதலையால் மட்டுமே முன்னேறி விட முடியாது. அதோடு இலக்கை நோக்கி கடின உழைப்போடு கவனத்தை செலுத்தி நம்முடைய பணிகளை செவ்வனே மேற்கொள்வோம்.

பிரிட்டிஷாருக்கும் நமக்கும் பகையில்லை. இங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் நட்பை விட்டுச் சென்றுள்ளனர். இன்னும் சில நாடுகள் அன்னியர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. இந்தோனேசியாவிலும் ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆளுகின்ற சூழல் நிலவுகிறது. அங்கும் விரைவில் சுதந்திரம் கிடைக்க வேண்டும். இந்தியா பல கிராமங்களைக் கொண்ட நாடுதான். ஆனாலும் பல கிராமப் பகுதிகள் முன்னேறாமல் இருப்பது சற்று வேதனைப்படுத்தினாலும், இதற்கு தீர்வுகாணப்பட வேண்டும்.

அத்தகைய நல்ல தீர்வுகள் கிடைப்பதற்கான பரிகாரங்களைக் காண்போம். எனவே நமக்குள் ஒற்றுமையாக பரஸ்பர மனிதநேயத்தோடு முன்னேறுவோம். கிராமத்தில், நகரத்தில் என எங்கிருந்தாலும் இந்தியாவை வலிமையாக்க வாருங்கள் என்று மக்களை நான் அன்போடு அழைக்கிறேன்” என்றார்.

அடுத்ததாக 1955-ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது இந்தியா மேற்கொண்டிருக்கும் ‘பஞ்சசீலக் கொள்கை’ குறித்து நேரு விளக்கமாக உரையாற்றினார். ‘பஞ்சசீலக் கொள்கை’ என்றால் என்ன என்பதை இனி பார்ப்போம்...

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதலமைச்சர் ஆனது எப்படி? - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 42

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x