Published : 02 Aug 2025 08:54 AM
Last Updated : 02 Aug 2025 08:54 AM
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளால் பெரும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் முக்கிய கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது பாராட்டுக்குரியதாகும். பீகாரில் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 7.93 கோடிவாக்காளர்கள் உள்ளனர். பீகார் வரும் நவம்பரில் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை தீவிர சரிபார்த்தலுக்கு தேர்தல் ஆணையம் உட்படுத்தியது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.
இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு மொத்த வாக்காளர் பட்டியலும் தீவிர சரிபார்ப்பு செய்யப்பட்ட நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரிபார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அதற்கான முழு சட்ட அங்கீகாரமும், அதிகாரமும், கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. தேர்தல் ஆணையம் எந்த சட்ட விதிமீறிலிலும் ஈடுபடவில்லை.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அதுவும் ஒரு லட்சம் வட்டார தேர்தல் அலுவலர்கள், 4 லட்சம் தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 1.5 லட்சம் வாக்குச்சாவடி அளவிலான முகவர்களை ஈடுபடுத்தி மிகப்பெரிய சரிபார்ப்பு பணியை செய்திருப்பதை பாராட்ட வேண்டுமே தவிர, குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.
மொத்த வாக்காளர்களில் பெரும் பகுதியான 7.23 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமைக்கான ஆவணங்களை செலுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை உறுதி செய்துவிட்டனர். 65 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களும் செப்டம்பர் 1-ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்குள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட், கல்விச் சான்று உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டி தங்களது பெயரை இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே இறந்தவர்கள், நிரந்தரமாக ஊரைவிட்டு, நாட்டை விட்டு வெளியேறியவர்கள், இரண்டு மூன்று இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதில்லை. இதுபோன்ற பெயர்களை நீக்குவதற்கு தீவிர சரிபார்த்தல் பணி உதவிகரமாக உள்ளது.
வேலைநிமித்தம் வேறு மாநிலங்களுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்தவர்கள் பெயர் நீக்கப்படும் என்ற அச்சமும் தவறானது. தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் இதுகுறித்து விளம்பரம் செய்து, அவர்கள் தற்போது பணிபுரியும் மாநிலத்தில் இருந்தபடியே உரிய ஆவணங்களை இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் பதிவு செய்து வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை உறுதிசெய்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரைவுப்பட்டியலில் தவறாக நீக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ள ஒருமாத அவகாசம் உண்டு. அதன்பிறகு செப்டம்பர் 30-ம் தேதி தான் இறுதிப் பட்டியல் வெளியாகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், அதற்கான அச்சாணியாக விளங்கும் வாக்காளர் பட்டியலைசரிசெய்து நியாயமான தேர்தல் நடத்துவதற்கு பெரும் சிரத்தை எடுத்து பணியாற்றி வரும் தேர்தல் ஆணையத்தை அரசியல் காரணங்களுக்காக விமர்சனத்திற்கு உள்ளாக்குவது எந்த வகையிலும் நியாயமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT