Published : 01 Aug 2025 08:40 AM
Last Updated : 01 Aug 2025 08:40 AM
கிராம பஞ்சாயத்துகளில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதில் மாற்றங்கள் செய்யப்பட்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்திருப்பது நல்ல முடிவாகும். பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை ஆகியவற்றை ஏற்று, தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதுடன், இதுகுறித்து மேலும் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
டீக்கடை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் ஓட்டல்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை கையாளும் தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறும் நடைமுறை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. தொழில் உரிமம் சட்டம் 1958-ல் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்பிருந்த ஆட்சிகளிலும் இச்சட்டத்தின்கீழ் உரிமம் வழங்கப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருப்பது உண்மைதான். ஆனால், இந்த பட்டியலில் அனைத்து தொழில்களையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக ‘தொழில் உரிமம்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதே சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.
புதிய சட்டத்தின்கீழ் தையல் தொழில், சலவை செய்வோர் உள்ளிட்ட 119 சேவை தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 48 தொழில்கள் உற்பத்தி தொழில்களாக பட்டியலிடப்பட்டு அவற்றிற்கு அதன் முதலீடு அளவின் அடிப்படையில் உரிமக் கட்டணம் நிர்ணயித்திருப்பதன் மூலம், இதுவரை எந்த உரிமமும் பெறாமல் சிறிய அளவில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தொழில் செய்துவரும் சிறு குறு வணிகர்களும் உரிமம் என்ற பெயரில் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.
அரசு நிர்ணயிக்கும் நியாயமான கட்டணத்தை சிறு தொழில் செய்வோர் செலுத்துவதற்கு தயாராக இருந்தாலும், உரிமம் பெறுவதற்கும், புதுப்பித்தலுக்கும் அரசு அதிகாரிகளிடம் செல்லும்போது, நடைமுறையில் லஞ்சம் வாங்காமல் இம்மியளவும் வேலை நடக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி ஆதாரத்தைப் பெருக்க வேண்டுமென்ற அரசின் நல்ல நோக்கம் நியாயமானதே. புதிதாக உருவாகும் பகுதிகளுக்கு சாலை வசதி, தெரு விளக்குகள், குப்பை அள்ளுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு கிராம பஞ்சாயத்துகளை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கிராம பஞ்சாயத்துகளிடம் நிதியில்லை என்ற நிலைதான் தற்போது இருந்து வருகிறது. அவர்களுக்கு கூடுதல் நிதி கிடைக்க மக்களை துன்புறுத்தாத மாற்று வழிகளை மட்டுமே அரசு யோசிக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் கூட விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன. இதுபோன்ற அதிக லாபம் ஈட்டுபவர்களிடம் வருவாயை பெறலாம். பெரிய முதலீட்டில் உருவாகும் தொழில் நிறுவனங்களிடமிருந்தும் வருவாய் பெற்று கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கலாம். அதைவிடுத்து சிறு குறு வணிகர்களை இன்னலுக்கு ஆளாக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. அந்த வகையில் எதிர்ப்பு குரல்களுக்கு மதிப்பளித்து வணிகர்களின் ஆலோசனைகளையும் பெற்று பரிந்துரைகளை அளிக்க குழு அமைத்து அரசு உத்தரவிட்டிருப்பது பாராட்டுக்குரியதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT