Published : 30 Jul 2025 07:09 AM
Last Updated : 30 Jul 2025 07:09 AM
தனிமை - இன்றைய காலக்கட்டத்தின் முக்கியச் சவாலாக மாறியுள்ளது. அண்மையில், மக்களிடம் தனிமை உணர்வு அதிகரித்துவருவது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2014 முதல் 2023 வரையில் உலக அளவில் ஆறு பேரில் ஒருவர் தனிமையை உணர்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமையானது வயது, பாலினம், பொருளாதார நிலை என எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் ஓர் உலகளாவிய பிரச்சினை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும், தனிமை உணர்வானது மனநலத்தில் மட்டுமல்லாமல், உடல்நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துவதாக இவ்வறிக்கை எச்சரித்துள்ளது.
அதிகம் பாதிக்கப்படுபவர்கள்: தனிமை உணர்வுக்கும் - தனித்து வாழ்தலுக்கும் வித்தியாசம் உண்டு. ஒருவர் குடும்பத்தை விடுத்துத் தனியாக வாழ்கிறார்; பிறருடன் பேசுவதைத் தவிர்க்கிறார் என்றால், அது அவரின் சுயதேர்வாகப் பார்க்கப்படுகிறது. ஒருவர் தனியாக வசித்தாலும் தனிமை உணர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தனிமை உணர்வானது குடும்பத்துடன் இணைந்து வாழும் சூழலிலும் ஒருவருக்கு ஏற்படலாம் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியச் சமூக அமைப்பில் தனிமை உணர்வால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இளைஞர்களும் - முதியோர்களும் உள்ளனர். தனிமை உணர்வைப் பற்றி விவரிக்கும், உலகச் சுகாதார நிறுவனத்தின் ‘தனிமையிலிருந்து சமூகத் தொடர்புக்கு’ (From loneliness to social connection) அறிக்கை, தனிமையின் பிடியில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இந்த இரண்டு பிரிவினரைக் குறிப்பிடுகிறது.
அதன்படி, இளைஞர்கள் - குறிப்பாக, குறைந்த வருமானம் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். 13 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களில் 17-21% பேர் தனிமையை உணர்கின்றனர். குறிப்பாக, பதின்ம வயதினரிடையே இது அதிகமாக உள்ளது. குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 24% பேர் தனிமையை உணர்கின்றனர். இது அதிக வருமானம் உள்ள நாடுகளில் (11%) உள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.
2014 – 2019 கால இடைவெளியில், ஆண்டுக்குச் சுமார் 8,71,000 பேர் தனிமை உணர்வால் மரணமடைந்துள்ளனர்; அதாவது, மணிக்கு 100 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள், அகதிகள், பால் புதுமையர், சிறுபான்மையினர் தனிமை உணர்வால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இவர்களுக்குச் சமூகத்துடன் இணைந்து வாழும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், மனம் - உடல் நலப் பிரச்சினைகள் அதிகரிப்பதாகவும் உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.
உடல் நலப் பாதிப்புகள்: தனிமனிதர்களின் உடல் - மன நலமானது சமூகத்தின் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியே இருக்கிறது; சமூக இணைப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் தற்போது அதிக அளவு இருந்தபோதிலும், மக்கள் தங்களைத் தனிமையாகவும், தனித்து விடப்பட்டவர்களாகவும் உணர்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் பிணைப்பு - சமூக ஊடகப் பயன்பாடு அதிகரித்துவரும் சூழலிலும், மக்களிடம் சமூக இணைப்பு குறைந்து வருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் தெரிவிக்கிறார்.
தனிமை உணர்வானது பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை, தற்கொலை உணர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தனிமை உணர்வு உள்ளவர்களுக்கு 50% டிமென்ஷியா, 30% இதய நோய்களுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது. மேலும், இது புகைபிடித்தல், உடல் பருமன், உடற்பயிற்சி இன்மையையும் அதிகரித்து, நாள்பட்ட நோய்களுக்கும் வழிவகுக்கிறது.
தனிமை உணர்வின் தாக்கமானது கல்வி, வேலைவாய்ப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தனிமை உணர்வால் பாதிக்கப்பட்ட 22% பதின்பருவத்தினர் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவதாகவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னெடுப்புகள் தேவை: தனிமை உணர்வைப் போக்க, சமூக இணைப்பை வளர்க்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகளிடம் உலகச் சுகாதார நிறுவனம் இந்த அறிக்கை மூலம் வலியுறுத்துகிறது. உதாரணமாக, பிரிட்டன் - ஜப்பான் போன்ற நாடுகள் தனிமைக்கு எதிராகத் தேசிய அளவிலான கொள்கைகளைச் செயல்படுத்தி வருகின்றன. பிரிட்டனில் 2018ஆம் ஆண்டிலும், ஜப்பானில் 2021ஆம் ஆண்டிலும் மக்களிடம் நிலவும் தனிமை உணர்வை நீக்கும் வகையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற எட்டு நாடுகள் சமூகத் தொடர்பு குறித்த தேசியக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தத் தேசியக் கொள்கைகள், சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், சமூகத் தனிமையைக் குறைக்கவும், தனிமையை நீக்கும் உத்திகளுடன் கட்டமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் வலுவான மனித உறவுகளை வளர்க்கவும், பிணைக்கப்பட்ட சமூகங்களை உருவாக்கவும் இந்நாடுகள் முயன்றுவருகின்றன.
தீர்வுகள்: தனிமை உணர்வைப் பொது சுகாதாரப் பிரச்சினையாக அறிவித்து, சமூகத் தொடர்பு முயற்சிகளைச் சுகாதார அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கலாம். மக்கள் கூட்டமாக இயங்கும் வகையில் பூங்காக்கள், நூலகங்கள், நடைபாதைகளை உருவாக்கலாம். பல்வேறு குழுக்களை (இளைஞர்கள், முதியவர்கள், புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள்) இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள், தன்னார்வத் திட்டங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் போன்ற சமூக ஈடுபாட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
ஜப்பானில் முதியவர்களிடம் நிலவும் தனிமையை நீக்க சிறியவர் முதல் பெரியவர் வரை பல்வேறு வயதினரை உள்ளடக்கிய சமூகத் திட்டங்களை அந்நாடு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தனிமை உணர்வு தீவிரமாக இருக்கும்பட்சத்தில், உளவியல் நிபுணரின் உதவியை நாடும் விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தனிமை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு, சமூகத் தொடர்பில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள், மின்னஞ்சல், காணொளி அழைப்புகள், பொழுதுபோக்குச் செயலிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களை இணைப்பதற்குப் பெரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இருப்பினும், இந்தத் தொழில்நுட்பங்கள் மனித உறவுகளை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தனிமையை அதிகரித்துவருகின்றன.
சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது மேலோட்டமான தொடர்புகளையே உருவாக்குவதாகவும், ஆழமான-நேரடி மனிதத் தொடர்புகளுக்கு இவை தடையாக இருப்பதாகவும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றைக் கவனத்தில் கொண்டு, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நேரடி சமூகத் தொடர்புகளை அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT