Published : 30 Jul 2025 08:38 AM
Last Updated : 30 Jul 2025 08:38 AM
பாரதிய கிசான் சங்கம் என்ற அமைப்பு நாக்பூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதில், ‘‘இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களிலும் மரபணு மாற்றம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாய பயிர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் ரசாயன பொருட்களின் தர அளவை நிர்ணயிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புத்துறை அதைச் செய்ய தவறி வருகிறது.
அல்சைமர், புற்றுநோய், தோல்நோய், சுவாச கோளாறு போன்றவற்றிற்கு ரசாயனம் கலக்கப்பட்ட விவசாயப் பொருட்களே முக்கிய காரணம் என்பதை பொது சுகாதாரத்துறை அமைச்சகமும், உணவு மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன. ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க மக்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவாக பசு அடிப்படையிலான இயற்கை பொருட்கள் சார்ந்த வேளாண் உற்பத்தி பொருட்களையே அனுமதிக்க வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் பாரதிய கிசான் சங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எந்தெந்த பொருட்களுக்கு வரிகளைக் குறைக்கலாம், நீக்கலாம் என்ற பேச்சின் இடையே, மரபணு மாற்றப்பட்ட சோயா பீன், மக்காச்சோளம் போன்ற பயிர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது. இதை தடுக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு அங்கமாக உள்ள பாரதிய கிசான் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது ஆளும் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
இதைவிட முக்கிய விஷயம் ஒன்றும் இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இந்தியாவின் பால் பொருட்கள் சந்தை உலகின் மிகப்பெரிய சந்தை என்பதால், பால் பொருட்கள் விற்பனையில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, ‘அசைவ பால்’ விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகிறது. அமெரிக்காவில் பசு மாடுகளுக்கு கோழி, மீன் இறைச்சிகளில் இருந்து உருவாக்கப்படும் மாவுப் பொருட்களை உணவாக தருகின்றனர். பன்றிக் கொழுப்பு, ரத்தம் ஆகியவற்றில் இருந்து உருவாக்கப்படும் புரோட்டீன் பவுடர்கள் உணவாக தரப்படுகின்றன. இத்தகைய உணவைச் சாப்பிடும் மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் ‘அசைவ பால்’ என்று கூறப்படுகிறது.
பசு மற்றும் பால் பொருட்கள் இந்தியாவில் புனிதமாக கருதப்படுவதால் அமெரிக்க பால் பொருட்களை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியா தரப்பில் உறுதியாக இருப்பதும் ஒப்பந்தம் தாமதமாகி வருவதற்கு காரணமாக உள்ளது. வர்த்தக உறவு, வருவாய் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT