Published : 28 Jul 2025 08:59 AM
Last Updated : 28 Jul 2025 08:59 AM
ஓர் இளைஞர் தனது குழந்தையை பசுமாட்டின் மடியில் நேரடியாக பால் குடிக்கவைத்து, அதை ‘ரீல்’ (குறுகிய நேர காணொலி) எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை 9 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து, தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
பசு மாட்டின் மடியில் இருந்து வரும் பாலை நேரடியாக குடிக்க கூடாது; மிதமான வெப்பநிலையில் காய்ச்சிய பின்னரே குடிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை. பச்சைப் பாலில் இ.கோலி, லிஸ்டீரியா, சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. பால் காய்ச்சப்படும்போது இவை அழிந்துவிடும். அதன்பிறகே பால் குடிப்பதற்கு உகந்த உணவாக மாறும் என்பது மருத்துவர்களின் கருத்து.
இதுதவிர, கால்நடைகள் மூலம் ஏவியன் ஃப்ளூ போன்ற காய்ச்சல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதால், பதப்படுத்தப்படாத பாலை குடிப்பது நல்லதல்ல என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இதுபோன்ற ‘ரீல்’களை இளைஞர்கள் உருவாக்குகின்றனர்.
இதுமட்டுமின்றி, ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று ‘செல்ஃபி’ எடுப்பது, ஆபத்தான அணை மற்றும் வெள்ளநீரில் குதித்து காணொலிகளை உருவாக்குவது, உயரமான கட்டிடங்களின் மாடியில் இருந்து தங்கள் காதலியை தொங்கவிட்டு ஒரு கையில் தாங்கிப் பிடித்து காணொலி உருவாக்குவது, வனவிலங்குகள் மற்றும் பாம்புடன் ‘செல்ஃபி’ என ஆபத்தான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் இளைஞர் ஒருவர் ரயில் செல்லும்போது அதன் அடியில் படுத்தபடி காணொலி உருவாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, வடமாநிலத்தில் இரு இளைஞர்கள் கைதாகி விலங்கு மாட்டப்பட்ட நிலையில், காவல் துறை வாகனத்தில் செல்லும் காட்சியை சற்றும் வருத்தமின்றி காணொலியாக உருவாக்கி பிரபலப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய காணொலிகள் இளைஞர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படுவதாலும், அதிக அளவில்பகிரப்படுவதாலும் மேன்மேலும் உயிரை பணயம் வைக்கும் காணொலிகள் உருவாக்கப்படுகின்றன. மற்றவர்களைவிட அதிக விருப்பங்களை பெறுவதற்கு ஏற்ப காணொலிகளை புதிது புதிதாக உருவாக்க இளைஞர்கள் போட்டி போட்டு முயற்சிக்கின்றனர். இது எங்கு போய் முடியுமோ? என்ற கேள்வியைத்தான் பார்ப்பவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற எல்லை மீறிய விநோத காணொலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருவதையே தற்போது நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதுபோல உருவாக்கப்படும் காணொலிகளுக்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தால், காவல் துறையினர் உடனே தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து வலைதளத்தில் இருந்து காணொலியை நீக்குமாறு வற்புறுத்துகின்றனர்; அவர்களை எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். இந்த நடவடிக்கை போதாது என்பதையே சம்பவங்கள்உணர்த்துகின்றன.
இதுபோன்று உயிரை பணயம் வைக்கும் காணொலிகளை உருவாக்குவதும், சமூக வலைதளங்களில் பகிர்வதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றவகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இந்த செயல்கள் தொடராமல் தடுக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT