Published : 27 Jul 2025 12:34 PM
Last Updated : 27 Jul 2025 12:34 PM

குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதலமைச்சர் ஆனது எப்படி? - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 42

குமாரசாமி ராஜா

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அடுத்தபடியாக சென்னை மாகாணப் பிரதமராக (முதல்வராக) யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து காங்கிரஸ் மேல்மட்டத் தலைவர்களிடையே விவாதங்கள் நடைபெற்றன. பலரின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டன.

பக்தவத்சலத்தைப் பிரதமராக (முதல்வராக) ஆக்க வேண்டும் என்று காமராஜரின் முடிவாக இருந்தது. அவ்வாறு பதவி ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று பக்தவத்சலத்திடமும் காமராஜர் தெரிவித்துவிட்டார். யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்ற அமைச்சர்கள் பட்டியல் கூட தயாரிக்கப்பட்டு விட்டது.

அதேநேரம், பக்தவத்சலத்தைப் பிரதமராக (முதல்வராக) ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டதில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட சிலர் காமராஜரிடம் தெரிவித்தனர். வேறு எவரைப் பிரதமராக ஆக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்று அவர்களிடம் திருப்பிக் கேட்டார் காமராஜர்.

உடனே, பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரை சி.சுப்பிரமணியனும், ‘தினமணி’ ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம் பிள்ளையும் குறிப்பிட்டார்கள். சிறிது நேர விவாதத்துக்குப் பிறகு, காமராஜர் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். எனினும் பிரதமர் பதவியை ஏற்க குமாரசாமி ராஜாவை ஒப்புக் கொள்ளுமாறு செய்வது உங்களது பொறுப்பு என்று அவர்களிடம் காமராஜர் நிபந்தனை விதித்தார்.

அப்போது குமாரசாமி ராஜா உடல்நலமின்றி சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குமாரசாமி ராஜாவின் உடல்நலம் செம்மையாக இல்லை என்பதால் அவர் இந்த யோசனையை ஏற்க மறுக்கக் கூடும் என்று காமராஜர் கருதினார். இதற்கிடையே குமாரசாமி ராஜாவைச் சந்தித்து, அவரது கருத்தை அறிவதற்காக சி.சுப்பிரமணியமும், சொக்கலிங்கம் பிள்ளையும் உடனே புறப்பட்டுச் சென்றனர்.

அன்றைய சூழலில் அவகாசம் மிகவும் குறைவாக இருந்தது. ஏனென்றால் அதற்கு அடுத்தநாள் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரின் (அதாவது முதலமைச்சரின்) தேர்தல் நடைபெற இருந்தது. எனவே, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று, சட்டப்பேரவைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு குமாரசாமி ராஜாவைக் கேட்டுக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் குமாரசாமிராஜா மிகவும் தயங்கினார். தாம் நீரிழிவு நோயாளி என்பதைக் குறிப்பிட்ட அவர், பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு உரிய வகையில் தமது உடல்நிலை இல்லை என்றும் கூறினார். மேலும், குமாரசாமி ராஜாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சராக உள்ளூர விருப்பம் இல்லை.

ஏனென்றால், நேர்மையாளர், அரசியலில் தூய்மையானவர் என்று போற்றப்பட்ட ஓமந்தூரார் இதற்கு முன் முதல் அமைச்சராக இருந்தபோது எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டார், மனம் வெறுத்தார், பலரின் எதிர்ப்புகளைச் சம்பாதித்தார் என்பதையெல்லாம் அறிந்திருந்த காரணத்தால் மறுத்தார். மேலும் பலதரப்பட்ட எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் கொண்ட அரசியல்வாதிகளுடன் தன்னால் நேர்மையாகப் பணி செய்ய முடியாது என்றும் கருதினர்.

ஆனால், “உங்களைத் தவிர இந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர் கிடைப்பது அரிது. நீங்கள் அவசியம் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். அன்றைய ஆந்திரப் பிரதேசமும், இன்றைய கன்னியாகுமரி நீங்கலாக உள்ள இந்த சென்னை ராஜதானியில் ஒரு தெலுங்கு மொழி பேசக் கூடியவர் முதல்வராக இருந்தால்தான் 2 பகுதி மக்களையும் இணக்கமாகக் கொண்டு செல்ல முடியும்.

நீங்களும், ஓமந்தூர் ரெட்டியாரும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இருப்பினும் தெலுங்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். உங்களைப் போன்றவர்களால்தான் இரு பகுதிகளுக்கும் பொதுவான தலைவராக வர முடியும்” என்று வற்புறுத்தினர்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். அதேநேரம், “பக்தவத்சலத்தைப் பிரதமராக (முதலமைச்சராக) ஆக்குவது என்று காமராஜர் ஏற்கெனவே முடிவு செய்திருக்கிறார். அவ்வாறு அவர் முடிவெடுத்ததில் எனக்கும் பங்கு உண்டு. அந்த முடிவை காமராஜர் மாற்றிக் கொண்டால், நான் முதலமைச்சராகச் சம்மதிக்கிறேன்” என்று குமாரசாமி ராஜா நிபந்தனை விதித்தார். ஏனென்றால் குமாரசாமி ராஜாவுக்கும் காமராஜருக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்தது.

அதைத் தொடர்ந்து இருவரும் காமராஜரிடம் சென்று, குமாராமி ராஜாவின் இசைவு பற்றி தெரிவித்தனர். அப்போது மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, பக்தவத்சலம் பிரதமராக (முதல் அமைச்சராக) தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்றும், குமாரசாமி ராஜாவை பிரதமராக ஆக்க முடிவு செய்யப்பட்டு விட்டது என்றும் பக்தவத்சலத்திடம் தெரிவிக்கவேண்டும். இந்தச் சூழ்நிலையை சமாளிக்கும் பொறுப்பும் காமராஜரிடமே விடப்பட்டது.

அடுத்தநாள், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கூடி, குமாரசாமி ராஜாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. பக்தவத்சலத்துக்குப் பதிலாக திடீரென குமாரசாமி ராஜா எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது மிகச் சிலரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. இவ்வாறாக குமாரசாமி ராஜா சென்னை மாகாணப் பிரதமராக 6.4.1949-ல் பதவி ஏற்றார்.

இந்த அமைச்சரவையில், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பக்தவத்சலம், பி.கோபால் ரெட்டி, கே.மாதவ மேனன், ஹெச். சீதாராம ரெட்டி,
ஏ.பி.ஷெட்டி, கே.சந்திரமவுலி, பி.பரமேஸ்வரன், நீலம் சஞ்சீவரெட்டி, சி.பெருமாள் சாமி ரெட்டி, தூத்துக்குடியைச் சேர்ந்த ஜே.எல்.பி.ரோச் விக்டோரியா ஆகியோர் இடம்பெற்றனர்.

துரதிர்ஷ்டவசமாக டி.எஸ்.அவினாசிலிங்கத்தைத் தமது அமைச்சரவையில் குமாரசாமி ராஜா சேர்த்துக் கொள்ளவில்லை. ஏற்கெனவே இருந்த அமைச்சரவையில் கல்வியமைச்சர் என்ற வகையில் அவினாசிலிங்கம் நல்ல பணிகளை ஆற்றி வந்தார். குமாரசாமி ராஜாவும் அவினாசி லிங்கமும் நல்ல நண்பர்கள். எனவே அவினாசி லிங்கத்தை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளாதது பலருக்கு வியப்பை அளித்தது.

இதுபற்றி குமாரசாமி ராஜாவிடம் சி.சுப்பிரமணியம் கேட்டபோது, காமராஜர் கூறியதன் பேரிலேயே அவினாசி லிங்கத்தைத் தாம் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று குமாரசாமி ராஜா கூறினார். அவினாசிலிங்கத்தை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளாதது புத்திசாலித்தனமான முடிவு அல்ல என்று சி.சுப்பிரமணியம் கருதினார். அந்த முடிவு, சென்னை மாகணத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது சி.எஸ்.-சின் கருத்தாக இருந்தது.

ஒரு மாதத்தில் திரும்பவும் குமாரரசாமி ராஜா முதலமைச்சரக 13.5.1949-ல் பதவியேற்றார். இதிலும் மேற்கண்டவர்களே அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். அதைத் தொடர்ந்து 3-வது முறையாக 1.1.1951-ல் முதல்வராகப் பதவியேற்றார். இதில் களா வெங்கட்ராவ் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டார்.

நான்காவது முறையாக 8.2.1952-ல் குமாரசாமி ராஜா பதவியேற்றபோது அமைச்சர்களின் எண்ணிக்கை சுருங்கியது. ஹெச்.சீதாராம ரெட்டி, ஏ.பி.ஷெட்டி, பி.பரமேஸ்வரன், சி.பெருமாள்சாமி ரெட்டி, ஜே.எல்.பி.ரோச் விக்டோரியா ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

1952-ம் ஆண்டில் புதிய இந்திய அரசியல் சட்டத்தின்படி நாடு முழுவதும் பொதுத் தேர்தல் நடந்தது. ரேஷன் முறையைப் பின்பற்றியதற்காகக் கடுமையான தோல்வியை சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி சந்திக்க வேண்டியதாயிற்று. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி 152 இடங்களை மட்டுமே பெற்றது.

அப்போது தமிழ்நாடு, ஆந்திரத்தின் கடற்கரையோர மாவட்டங்கள், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தில் பெல்லாரி, தெற்கு கன்னட மாவட்டங்கள் ஆகியவை அடங்கியதாகச் சென்னை மாகாணம் இருந்தது. அந்தப் பொதுத் தேர்தலில் இரு அமைச்சரகள் நீங்கலாக மற்ற எல்லா அமைச்சர்களும் தோல்வி அடைந்தார்கள். தமி்ழநாட்டுப் பகுதியைச் சேர்ந்த ஹரிஜன அமைச்சர் ஒருவரும், தெற்குக் கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.பி.ஷெட்டியும் மட்டுமே தப்பிப் பிழைத்தவர்கள்.

குமாரசாமி ராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சியினரால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது முதல்வர் பதவியை குமாரசாமி ராஜா ஏற்றுக் கொள்ளுமாறு நேரு வற்புறுத்தினார். ஆனால் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவன் நான். அவ்வாறு முதல்வராக என் மனசாட்சி இடம் தராது என்று கூறி மறுத்து விட்டார். தேடி வந்த பதவியை உதறித் தள்ளிய அரசியல்வாதிகளை இன்றைக்குப் பார்க்க முடியுமா?

அதைத்தொடர்ந்து 1954-ம் ஆண்டு ஒரிசா மாநிலத்தின் கவர்னராக குமாரசாமி ராஜா நியமிக்கப்பட்டார். 1956 வரை பணியாற்றிய அவர், நீரிழிவு நோயால் உடல் நலிவுற்று 1957-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி சென்னையில் காலமானார்.

‘தென்னகத்துக் காந்தி’ என்று போற்றப்பட்ட குமாரசாமி ராஜா இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் 1898-ம் ஆண்டு பிறந்தார். ஒருவாரத்தில் தாயார் இறந்து விட்டார். 3 வயதாக இருக்கும்போது தந்தையும் இறந்தார். இதனால் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார்.

செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் வளர்ந்த குமாரசாமி ராஜா, பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்து சமூக சேவையிலும், விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். இளம் வயதிலேயே கிராமப் பஞ்சாயத்து, நகரசபை நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாகப் பணியாற்றினார்.

அவரது இளம்வயதில் அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரது வாழ்வும் எழுத்துக்களும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருந்தன. அதனால் முனைப்புடன் விடுதலைப் போராட்டக் களத்தில் ஈடுபட்டார். 1919-ம் ஆண்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். அதன் பிறகு அவரது தீவிர ஆதரவாளராக மாறி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். காந்திய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் பல பொதுக்காரியங்களில், நற்செயலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இரட்டை ஆட்சிமுறை அமலில் இருந்த காலகட்டத்தில் 1934-ம் ஆண்டில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் சார்பாக சென்னை மாகாணத்துக்கு நடைபெற்ற தேர்தலில் இவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிக்கலான காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பிரதமர் பொறுப்பை அவர் ஏற்றபோதும், ஆட்சியை திறம்பட நடத்தினார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆலயப் பிரவேசம் சட்டப்பூர்வமானது. கதர், கைத்தறி ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. காந்தி மீது கொண்டிருந்த அளவற்ற பாசத்தால், தனக்குச் சொந்தமான பிரம்மாண்டமான வீட்டை ‘காந்தி கலை மன்றம்’ என்ற அமைப்புக்கு தானமாக அளித்தார்.

ராஜபாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் தென்பகுதிகளில் ஆலைகள், கல்வி நிறுவனங்களை நிறுவினார். இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்விச் செல்வம் கிடைக்கப் பெற்றது. இவரது நினைவை போற்றும் வகையில் குமாரசாமி ராஜா உருவம் பொறித்த அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பு சேர்த்தது.

1949 காலகட்டத்தில், சென்னை அரசாங்கம், சினிமா நடிகர்களுக்கும் பிலிம் சேம்பருக்கும் இந்து கடவுள்கள் வேஷம் போட்டு நடிக்கக் கூடாது என்ற ஒரு தாக்கீதை அனுப்பியது பரபரப்பாக பேசப்பட்டது.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம்: கருப்பு - சிவப்பு வண்ணத்துடன் திமுக கொடி உருவாக்கம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 41

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x