Published : 26 Jul 2025 12:59 PM
Last Updated : 26 Jul 2025 12:59 PM
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட பின் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி திமுக நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்ட தீர்மானங்கள் வருமாறு:
1. பெரியார் - மணியம்மை திருமணம், கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரக் கொள்கைக்கும், லட்சியத்துக்கும் கேடு பயப்பது.
2. கழக உறுப்பினர்கள் பெரும்பாலோர் இத்திருமணத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட சமயத்திலும், திருமணத்துக்குப் பிறகு கண்டனம் தெரிவித்தபோதும், அதை கருத்தில் கொள்ளாது, பெரியார் பேசியும் எழுதியும் வந்த போக்கு ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகவும் எதேச்சதிகார முறையாகவும் இருக்கும் காரணத்தால், பெரியாரின் தலைமையில் நம்பிக்கையில்லை.
3. இந்நிலையில் எதிர்கால வேலைத்திட்ட முறையை வகுக்கும் பொறுப்பை கே.கே.நீலமேகம், ஏ.சித்தையன், கே.வி.கே.சாமி, எஸ்.முத்து, ஜி.பராங்குசம், கே.கோவிந்தசாமி, என்.வி.நடராசன் (செயலாளர்) முதலானோர் அடங்கிய அமைப்புக் குழுவினரிடம் இக்கமிட்டி ஒப்படைக்கிறது. - என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைப்புக் குழுக் கூட்டம்
அதைத்தொடர்ந்து, மறுநாள் அதாவது, 18.09.1949 அன்று காலை 7 மணிக்கு சென்னை பவளக்காரன் வீதி 7-ம் எண் இல்லத்தில் கூடிய அமைப்புக் குழுவின் முடிவுகள் வருமாறு:
திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் திருமணத்துக்குப் பிறகு கழகத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாகவே கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டபடியாலும், இந்நிலையை மாற்ற ஜனநாயக முறைப்படி பெரியார் தலைமைப் பதவியை ராஜினாமா செய்யாமல் கழகத்தைச் செயலற்றதாக்கி இருப்பதாலும், இப்பொழுது இருக்கிற நாட்டு நிலையில், இந்த மாதிரியான மந்த நிலைமை இந்நாட்டு மக்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் ஊறு பயக்கும் என்று இக்கமிட்டி கருதுவதாலும், கழகக் கொள்கைகளும் லட்சியமும் நசுக்கப்பட்டுப் போகும் என்று அஞ்சுவதாலும், நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்ப, உடனடியாக வேலைகளைத் தொடங்கி நடத்தவும், நாம், ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுவதெனவும் கமிட்டி தீர்மானிக்கிறது.
திமுக கொடி உருவாக்கம்
திமுக கொடி நீண்ட சதுர வடிவத்தில், மேல் சரிபாதி கருப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி சிவப்பு நிறமாகவும் அமைந்திருக்க வேண்டும். கொடியின் அளவு அகலம் 2 பங்கும், நீளம் 3 பங்கும் இருக்க வேண்டும். அதாவது அகலம் 2 அடியானால் நீளம் 3 அடியாக இருக்க வேண்டும் என்பதாகும்.
கருப்பு: அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.
சிவப்பு: அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி, ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும். இருண்ட நிலையை ஒளி நிலை அழித்துக் கொண்டு வரவேண்டும் - அழித்துக் கொண்டு வருகிறது. இருண்ட வானின் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளிபோல் என்ற கருத்துடன், கருப்பு மேலும், சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காலிகக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த அமைப்புக்குப் பொதுச் செயலாளராக இருந்து பணிபுரியும்படி அறிஞர் சி.என்.அண்ணாதுரையை அமைப்புக்குழு கேட்டுக் கொண்டது. பின்னர், நூற்றுப்பதின்மர் கொண்ட ஓர் பொதுக்குழுவும், பொதுக்குழு உறுப்பினர்களிலிருந்து ஓர் பிரச்சாரக் குழுவும், அமைப்புக் குழுவும், நிதிக்குழுவும் அமைத்துக் கொண்டது.
பொதுக்குழு உறுப்பினர்கள்
திமுக பொதுக்குழு உறுப்பினர்களாக சி.என்.அண்ணாதுரை, இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, என்.வி.நடராசன், ஈ.வெ.கி. சம்பத், டி.எம்.பார்த்தசாரதி, மணிமொழியார், என்.ஜீவரத்தினம், கே.கோவிந்தசாமி, வி.முனுசாமி, சி.வி.ராஜன், எம்.ஆர்.பாண்டியன், வி.டி.பெரியசாமி, மா.இளஞ்செழியன், சி.டி.டி.அரசு, ஏ.எஸ்.ராமன், சத்தியவாணி முத்து, எஸ்.தருமாம்பாள், பி.ராமசுவாமி, ஏ.ஜெயராஜ், எஸ்.பாலசுந்தரம், டாக்டர் சி.கணேசன், ஏ.எஸ்.வேணு, எம்.எஸ்.எம்.மொய்தீன், ஏ.கே.சாமி, சி.வி.எம்.அண்ணாமலை, எம்.சின்னையா, ஆர்.அரங்கண்ணல், ஈழத்தடிகள், காஞ்சி கலியாணசுந்தரம், சி.பஞ்சாட்சரம், சி.எஸ்.சஞ்சீவி;
தில்லை வில்லாளன், துரைசாமி, புலவர் கோவிந்தன், மா.ராஜமாணிக்கம், எம்.பி.வடிவேலு, சி.பி.சிற்றரசு, பி.யூ.சண்முகம், போளூர் கே.சுப்பிரமணியம், நடேசன் (திருப்பத்தூர்), அரக்கோணம், ஏ.எல்.சி.கிருஷ்ணசாமி, சி.முனுசாமி, பழனி, கே.பி.சுந்தரம், சாம்பசிவம், எம்.கலியாணசுந்தரம், இரா.இளம்வழுதி, பாரதிதாசன், எஸ்.சிவப்பிரகாசம், எ.சித்தையன், ஜி.பி.சோமசுந்தரம், பி.கண்ணன், என்.கே.பி.வேல், பி.பொன்னுசாமி, பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, எஸ்.ஆர்.சுப்பிரமணியம், எம்.எஸ்.கனகராசன், கோபி ராஜு, பொள்ளாச்சி நடராசு, எஸ்.ஏ.ராஜமாணிக்கம், பிள்ளாரி, கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி, ஏ.எஸ்.பாலசுப்பிரமணியம், கே.கே.நீலமேகம், எஸ்.கே.சாமி;
எம்.எம்.நடராஜன், டி.கே.சீனிவாசன், என்.எஸ்.இளங்கோ, கே.என்.சிவராமகிருஷ்ணன், டி.என்.ராமன், ஹாஜாபீர், நாகை, பாப்பையன், மூவலூர் ராமாமிர்தம்மாள், வி.சின்னத்தம்பி, ஜி.பாராங்குசம், ராஜாசோழகர், வானமாமலை, என்.சாம்பசிவம், என்.சங்கரன், நெடுமாறன், அன்பில் தர்மலிங்கம், கரூர் கோவிந்தராசன், கே.எஸ்.எஸ்.ராஜன், முருகு சுப்பிரமணியம், பெரியண்ணன், துறையூர் அழகுமுத்து, டி.ஆவுடையப்பன், மதுரை எஸ்.முத்து, எம்.அய்யாசாமி, சிவகங்கை ராஜசேகரன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, ராம.சுப்பையா, ஆர்.ராமசுப்பிரமணியம், கே.வி.கே.சாமி, எஸ்.நீதிமாணிக்கம், எம்.எஸ்.சிவசாமி, தங்கப்பழம், சிவசங்கு, திராவிட அரசு, எஸ்.சண்முகம்;
து.ரத்தினம் புல்லையா, ஆ.வேலாயுதம், பூதலிங்கம், மனோகரன், கிருஷ்ணபிள்ளை, ஈ.வி.எ.வள்ளிமுத்து, கே.கோவிந்தசாமி, எம்.எஸ்.மணி, மா.கி.சோமசுந்தரம், எல்.என்.பரமசிவம், பி.எம்.நாராயணசாமி, டி.நடராசன், வி.சீனிவாசன், எஸ்.எஸ்.மணி, வி.நாராயணசாமி, ஈ.தங்கவேலர், பி.கே.என்.சக்கரவர்த்தி, சே.தேவசகாயம், டி.சீனுவாசனவ், வெங்கடாசலம், வி.சி.கோசால், எஸ்.ஆர்.சந்தானம், ஏ.சங்கரய்யா, டாக்டர் எஸ்.சிவசங்கரன், ரா.கெளரிராஜன், எம்.எஸ்.ராமசாமி, ஏ.கே.வேலன், த.ம.திருநாவுக்கரசு, ஆர்.அங்கமுத்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மேலும், அமைப்புக்குழு உறுப்பினர்களாக கே.கே.நீலமேகம், எ.சித்தையன், கே.வி.கே.சாமி, எஸ்.முத்து, ஜி.பராங்குசம், கே.கோவிந்தசாமி, பழனியப்பன், எம்.நடேசன், வெங்கடாசலம், எம்.சின்னையா, எம்.எஸ்.ராமசாமி, என்.வி.நடராசன் ஆகியோரும், பிரச்சாரக் குழு உறுப்பினர்களாக கே.ஏ.மதியழகன், ஈ.வெ.கி.சம்பத், சி.பி.சிற்றரசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, டி.கே.சீனிவாசன், என்.வி.நடராசன், காஞ்சி கலியாணசுந்தரம், என்.எஸ்.இளங்கோ, தங்கப்பழம், சிவசாமி, என்.ஜீவரத்தினம், மா.இளஞ்செழியன், முருகு சுப்பிரமணியம், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், ஜி.என்.ராஜு, ராமாமிர்தத்தம்மையார், சத்தியவாணிமுத்து, பூ.கணேசன், இளம்வழுதி, சி.வி.எம்.அண்ணாமலை, புலவர் கோவிந்தன், மனோகரன், டி.எம்.பார்த்தசாரதி, நெடுமாறன், எம்.எஸ்.மணி, எம்.எஸ்.இராமசாமி, எஸ்.அப்பாவு, தா.மா.திருநாவுக்கரசு, இரா.நெடுஞ்செழியன் (செயலாளர்). ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
அதேபோல், சட்டதிட்டக்குழு உறுப்பினர்களாக ஈ.வெ.கி.சம்பத், இரா.செழியன், பா.வாணன், என்.வி.நடராசன், இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் ஆகியோரும், நிதிக்குழு உறுப்பினர்களாக சி.வி.ராஜன், எ.பொன்னுசாமி, முல்லை எம்.பி.வடிவேலு, ப.உ.சண்முகம், கே.கோவிந்தசாமி, கே.கே.நீலமேகம், மணிமொழியார், வி.டி.பெரியசாமி, பி.இராமசாமி, வி.முனுசாமி, டி.ஆவுடையப்பன், ஈ.வி.எ.வள்ளிமுத்து, நீதிமாணிக்கம், ராஜா சோழகர், என்.சங்கரன், சி.முனுசாமி, குறிஞ்சிப்பாடி சாம்பசிவம், காஞ்சி மணிமொழியார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறாக திமுக எனும் திராவிடக் கட்சி பல்வேறு அமைப்புகள் மற்றும் செயல் வீரர்களுடன் தமிழ் மண்ணில் வேர் விடத் தொடங்கியது.
மக்களின் முதல்வர்! முதல்வர்களின் முதல்வர்!!
இந்திய விடுதலைக்கு முன் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளை உள்ளடக்கி ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியாக இருந்தது. இதை ‘மதராஸ் மாகாணம்’ என்றும் அழைப்பர். 1947-ல் நாடு விடுதலை அடைந்த பின் சென்னை ராஜதானியின் முதல்வராகப் பொறுப்பேற்றவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அன்றைக்கு முதல்வரை பிரதமர் அல்லது பிரீமியர் என்று அழைப்பார்கள்.
ராமசாமி ரெட்டியாரோடு டாக்டர் பி.சுப்பராயன், டக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பக்தவத்சலம், பி.கோபால் ரெட்டி, டேனியல் தாமஸ், ஹெச்.சீதாராம ரெட்டி, கே.சந்திரமவுலி, டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார், கே.மாதவ மேனன், களா வெங்கடராவ், ஏ.பி.செட்டி, வெமுலா குர்மையா என தமிழ்நாடு ஆந்திரம், தென் கர்நாடகம், கேரளம் பகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.
அதைத்தொடர்ந்து 2-வது முறையாக 20.1.1948-ல் ஓ.பி.ராமசாமிரெட்டியார் முதல்வராகப் பதவியேற்றார். அப்போது அவருடைய அமைச்சரவையில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பக்தவத்சலம், பி.கோபால் ரெட்டி, ஹெச். சீதாராமரெட்டி, கே.சந்திரமவுலி, டி.எஸ்.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார், கே.மாதவ மேனன், களா வெங்கடராவ், ஏ.பி.செட்டி, வெமுலா குர்மையா, எஸ்.குருபாதம் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
‘முதல்வர்களின் முதல்வர்’, ‘விவசாயிகளின் முதல்வர்’ என பெயர் பெற்றவர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் நேர்மையின் சிகரம், நேர்மையின் முகவரி. எளிமையின் அடையாளம் என்று பாமர மக்களால் போற்றப்பட்டார்.
இந்தியாவில் முதன்முதலாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதி அரசாணையைப் பிறப்பித்தார். அன்றைக்கு தமிழ்நாட்டில் தெற்கே திருநெல்வேலி, கன்னியாகுமரி நீங்கலாக இன்றைய ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் பகுதி, தெற்கு கர்நாடகம் ஆகியவை உள்ளடங்கிய மாநிலத்தில் இந்த உத்தரவை ஓமந்தூரார் முதன்முதலாகக் கொண்டு வந்தார். சமூக நீதிக்கு முன்னோடியாக அவர் திகழ்ந்ததை யாரும் மறுக்க முடியாது.
சமூக நீதி பேசுபவர்கள் ஏன் ஓமந்தூராரைப் பற்றி பேசுவதில்லை? அவருக்கு ஏன் சிலை எழுப்பவில்லை என்பதுதான் நம்முன் நிற்கும் வினா. சமூக நீதிக்குப் பாடுபட்ட தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூராரின் படத்தை தமிழக சட்டப் பேரவையில் 73 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வைத்தனர். இதுதான் நமது சமூக நீதி!
உத்தமர் காந்தி அடியொற்றி விடுதலைப் போராட்டம், காங்கிரஸ் கட்சி களப்பணிகள் என ஆரம்பக் கட்டத்தில் பங்கேற்றவர். காங்கிரஸ்வாதியாக விடுதலைப் போராட்டக் காலத்தில் நடந்தே சென்று கிராமம் கிராமமாக தண்டோரா போட்டு, கூட்டங்களை நடத்தி விடுதலை உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டியவர்.
அன்றைய திருநெல்வேலி ஜில்லாவுக்கு 1936-ல் கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை வந்து மதிய உணவுக்கு எங்கள் கிராமத்துக்கு வந்ததாகவும் அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டு எங்கள் வீட்டின் பெரிய திண்ணையில் பாயை விரித்து எளிமையாக படுத்து உறங்கி, சங்கரன்கோவில் சென்றார் என்றும் எங்கள் தந்தையார் சொல்வார். என்னுடைய தந்தை கே.வி.சீனிவாச நாயுடுவிடம் அன்பு பாராட்டியவர் ஓமந்தூரார். அவர் எழுதிய கடிதங்களை எங்கள் தந்தையார் பாதுகாத்து வந்தார் என்பதெல்லாம் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. எங்கள் வீட்டில் இந்த உத்தமரின் காலடி பட்டது எங்களுக்கு காலம் வழங்கிய அருட்கொடை என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டிவனம் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தொடங்கி முதலமைச்சர் பொறுப்பு வரை உயர்ந்த விவசாயிகளின் முதல்வர். தென்னார்காடு மாவட்டத்தில் படையாச்சிகளை குற்றப்பரம்பரை என ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சட்டம் கொண்டு வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவர் ஓபிஆர்.
ஓபிஆர் முதல்வரான பின் 1949-ல் நிலச் சீர்திருத்தங்கள் குறித்தான நடவடிக்கைகளை ஜே.சி.குமரப்பா அறிக்கைக்கு சற்று மாறுபட்டு விவசாயிகளின் நலன்கருதி தன் கருத்தில் ஆணித்தரமாக இருந்ததெல்லாம் உண்டு. பின் புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவில் இணைய எடுத்துக் கொண்ட போராட்டங்கள் அதிகம். அதேபோல ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானோடு இணைய யோசித்து சற்று எதிர்வினைகள் ஆற்றியபோது இரும்பு மனிதர் சர்தார் படேலுக்கு உதவியாக சென்னை ராஜதானியில் பாதுகாப்பு படையை அனுப்பி ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்க பட்டேலுடன் பெரும் பங்காற்றியவர்.
அந்தக் கால கட்டத்தில் தமிழக தலைவர்கள், ராஜாஜி, காமராஜர் போன்றோர் பல்வேறு திசைகளில் பயணித்தாலும், அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய - விரும்பிய தலைவராக ஓமந்தூரார் இருந்தார்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம், விவசாய நலன்களுக்கான திட்டங்களைத் தீட்டியவர் ஓமந்தூரார். இன்றைக்கு சமூக நீதி என்று பலர் முழங்குகிறார்கள். ஆனால், நாட்டின் விடுதலைக்குப் பின் நீதிக்கட்சி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முத்தையா முதலியார் கம்யூனல் அரசாணையை அடுத்து செயல்பாட்டுக்கு வரக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக சமூகநீதி உத்தரவை முதன்முதலாக பிறப்பித்த ஒரு காங்கிரஸ் முதலமைச்சராக ஓபிஆர் திகழ்ந்தார்.
இப்படியெல்லாம் மக்களின் உரிமைகள், நலன்களைப் போற்றி கடமையாற்றிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை இன்றைய இளைஞர்கள் அறியவோ, புரியவோ இல்லை என்பது எங்களைப் போன்றோர்க்கு ரணமான செய்தி. பொதுவாழ்வில் நீண்டகாலம் எங்களைப் போன்றோர் பணியாற்றினாலும் எங்களுக்கு என்றைக்கும் ரோல் மாடலாக ஓமந்தார் இருக்கின்றார். தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் வடலூர் வள்ளலார் சுத்த சன்மார்க்க அமைப்புக்கு வழங்கி அந்த அமைப்புக்கான கட்டிடங்கள் கட்டி, வள்ளலாருடைய வடலூர் ஆசிரமத்தை மேலும் சீராக்கி கொண்டாடியவர் ஓமந்தூரார்.
தமிழ் வளர்ச்சி, தமிழ் இலக்கியங்கள், பெரியசாமி தூரன் தலைமையில் அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்குதல், உயர்கல்வி சீராக்குதல், நீர்ப்பாசன திட்டங்கள், மின்சார வசதி, தமிழக திருக்கோயில்களின் சீர்திருத்தங்கள் என பல துறைகளில் சீரமைப்பை திட்டமிட்டு செய்தவர் ஓமந்தூரார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தையே அரசு சின்னமாக அறிவித்து, தமிழருடைய கலாச்சாரத்தைப் போற்றி வளர்த்தவர். ஒருமுறை இங்கிலாந்து எலிசபெத் ராணி சென்னை வந்தபோது, அவரை வரவேற்கச் செல்ல வேண்டும். குளித்துவிட்டு தயாராகி கசங்கிய கதர் சட்டையோடு வெளியே வருகிறார் ஓமந்தூரார்.
இவரை எதிர்பார்த்து அழைத்துச் செல்ல இருந்த அதிகாரிகள், “ஐயா, நீங்க கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வருவீர்கள் என நினைத்தோம். ஆனால் என்றும் போல கதர் ஆடைகளோடு சென்றால் ராணியை வரவேற்க நல்லாவா இருக்கும்?” என்று கேட்டவுடன் ஓபிஆர், “இதோ பாருங்க... இதுதான் என் இயல்பு... நீங்க சொன்னாப்புல நான் வரமுடியாது. என்னால் வேஷங்கட்ட முடியாது. இப்படி வரவேற்க வருவதே நல்லது. இல்லையென்றால் நான் வரலை.. நீங்க எல்லாம் போங்க...”என்ற பதிலளித்தவர் தான் ஓமந்தூரார்.
‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடிய முண்டாசுக் கவி பாரதியின் பற்றாளர். எட்டயபுரத்தில் பாரதியின் மண்டபம் அமைய கல்கிக்கு உதவியாக இருந்தவர் ஓமந்தூரார். பாரதியுடைய கவிதைகள் மேல் இருந்த தடையை நீக்க வேண்டும் என்று ரசிகமணி டி.கே.சி.யோடு குரல் கொடுத்தவர்.
இவர் நேர்மையின் திருவிளக்கு! நேர்மையற்றோர்க்கு அவர்களை அழிக்கும் அக்கினி! ஏழை பாழைகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும் ஒப்பற்ற ஜோதியாக விளங்கியவர். ஓமந்தூரார் போன்ற அரசியல் தலைவர்களை இன்றைக்கு பார்ப்பது அரிது!
பொதுவாழ்க்கையில் நேர்மையாகவும், தன்னலமற்ற தலைவராகவும் விளங்கிய ஓமந்தூரார் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் மொட்ட பெட்டிஷன்களை பிரதமர் நேருவுக்கு அனுப்பினார்கள்.
மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், படேல் போன்ற தேசியத் தலைவர்களோடு அணுக்கமாக இருந்தவர் ஓ.பி.ஆர். பல்வேறு நெருக்கடிகளையும் சமாளித்து ஆட்சி செலுத்தி வந்த ஓ.பி.ஆர், ஒருகட்டத்தில் முதலமைச்சர் பதவியை துச்சமெனக் கருதி ராஜினாமா செய்து விட்டார்.
உடனடியாக, அன்றைக்கு அவர் தங்கியிருந்த ‘கூவம் ஹவுஸ்’ (இன்றைக்கு ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு பக்கத்தில் வடக்கு பார்த்து இருந்த இல்லம்) இல்லத்தில் இருந்த தனது படுக்கை, துணிமணிகள், புத்தகங்கள் ஆகியவற்றை மூட்டை கட்டி வைத்துவிட்டார். ராஜினாமா கடிதம் கொடுத்தவுடன் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த வாகனத்தையும் திருப்பி ஒப்படைத்து விட்டார்.
இன்றைக்கு அண்ணா சிலை இருக்கின்ற இடத்தில் தர்பார் ஓட்டல், கிருஷ்ணா உடுப்பி ஓட்டல் ஆகியன இருந்தன. அதன் அருகில் டாக்ஸி ஸ்டாண்டு இருந்தது. அங்கு நடந்தே வந்தார். அவரைப் பார்த்ததும் டாக்ஸி ஓட்டுநர்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். பின்னர் ஒரு டாக்ஸியைப் பிடித்து தனது உடைமைகளை அதில் ஏற்றிக் கொண்டு வடலூருக்கு சென்று விட்டார். வள்ளலார் கொள்கைகளைப் பின்பற்றி தனது இறுதி காலம் வரை அங்கேயே தங்கி விட்டார். இப்படியொரு முதலமைச்சரை நாம் பார்க்க முடியுமா?
இவ்வளவு நெறியான வாழ்க்கையை வாழ்ந்த மாமனிதர், 1970-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி இம்மண்ணை விட்டுப் பிரிந்தார்.
பிரதமராக நேரு பொறுப்பேற்றவுடன் மாநில பிரீமியர்களுக்கு (முதல்வர்களுக்கு) மாதம் 2 முறை விரிவான கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் முதல் கடிதத்தை 15.10.1947-ம் ஆண்டு எழுதினார்.
அதில் நாட்டில் நடக்கும் அரசியல் நிலவரங்களை எல்லாம் விரிவாக முதலமைச்சர்களுக்கு விளக்கி எழுதினார். குறிப்பாக, “கிழக்கு வங்கம் (இன்றைய பங்களாதேஷ்) பிரிந்து விட்டது. மேற்கு வங்கத்தில் இருந்த ரயில்வே தலங்களை எல்லாம் பாகிஸ்தான் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடுவது வேதனை தருகிறது” என்ற முக்கிய தகவலையும் பகிர்ந்திருந்தார்.
அடுத்ததாக, 25.11.1947-ல் எழுதிய 2-வது கடிதத்தில், “பல அரசியல் நிகழ்வுகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், தேசிய பிலிம் டிவிஷன் மூலமாக செய்தி வடிவமாக பிராந்திய மொழிகளில் திரைப்பட அரங்குகளில் ஒளிபரப்பப்பட வேண்டும். நம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்பதை மக்கள் அறிய வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தி இருந்தார்.
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம்: திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த அண்ணா - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 40
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT