Last Updated : 25 Jul, 2025 08:28 PM

 

Published : 25 Jul 2025 08:28 PM
Last Updated : 25 Jul 2025 08:28 PM

கலாம்: இந்திரா பவன் முதல் ராஷ்டிரபதி பவன் வரை!

புனே நகரின் கடகவாசலா ஏரியின் ஒரு கரையில், குன்றின் மீது அமைந்திருக்கிறது ‘ராணுவப் பல்கலைக் கழகம்'. இங்குதான் புதிதாகப் பணியில் சேரும் இளம் டி.ஆர்.டி.ஓ (Defence Research and Development Organisation) விஞ்ஞானிகளுக்குப் புகுமுகப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பல ஆண்டு களுக்கு முன் பல்கலைக்கழகத்தின் குளிரூட்டப்பட்ட கலையரங்கில், கனவுகள் நிறைந்த கண்களோடு ஏராளமான இளை ஞர்கள் அமர்ந்திருந்தனர். இந்தியாவின் பல்வேறு கல்லூரிகளில் பயின்று, மிகக் கடினமான தொழில்நுட்ப நுழைவுத் தேர்வில் வென்று, தேசத்தின் இளம் விஞ்ஞானி களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் நாள் பயிற்சிக்கு அவர்கள் வந்திருந்தார்கள்.

டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தைப் பற்றி அறிமுகம் செய்த மூத்த விஞ்ஞானியின் பேச்சு காற்றில் கலந்து காதுகளை நிறைத்தது. “மற்ற அரசுத் துறைகளைக் காட்டிலும் டி.ஆர்.டி.ஓ நிறுவனத் தின் பதவி உயர்வுக் கொள்கை மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. இன்று இளம் ராணுவ விஞ்ஞானிகளாகப் பணியில் சேர்ந்திருக்கிறீர்கள்.

படிப்படியாகப் பதவி உயர்வு கிடைக்கும். இந்தியக் குடியரசுத் தலைவர் வரை பதவி உயர்வு உண்டு!” என்றதும் அரங்கத்தில் சிரிப்பலை. டி.ஆர்.டி.ஓ நிறுவனத் தின் தலைவராக இருந்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாமைக் குறிப்பால் உணர்த்தும் வரிகள் அவை. அந்த அரங்கில் நானும் அமர்ந்திருந்தேன்.

எழுத்து-பேச்சு-ஆராய்ச்சி: தான் உண்டு தன் ஆராய்ச்சி உண்டு எனப் பரபரப்போடு இயங்கும் விஞ்ஞானிகளுள், தன் ஆராய்ச்சியின் அவசரங்களைத் தாண்டி அதன் சவால்களைச் சுவாரசியமாகப் பதிவுசெய்தவர் கலாம். அவர் எழுதிய 25 புத்தகங்கள், அவரு டைய உழைப்பின் இன்னொரு பரிமாணம். மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதைத் தனது ஆராய்ச்சிப் பணியின் ஓர் அங்கமாகவே அவர் கருதினார்.

அவரின் எழுத்துகளும் பேச்சுகளும் மாணவர்கள், இளைஞர்கள் மனங்களில் புத்தெழுச்சிப் புயலாக மையம் கொண்டு, நன்மைகளை வழிநெடுக விதைத்துச் சென்றன. அதில் நானும் ஒரு பயனாளி. ஆம், அவருடைய ‘அக்னிச் சிறகுகள்' நூலைப் படித்து, அதனால் உத்வேகம் பெற்று நான் ராணுவ விஞ்ஞானியானேன்.

பரந்துபட்ட வாசிப்பு: வழக்கமாக வல்லுநர்கள் தமது துறை சார்ந்து மட்டுமே வாசிப்பார்கள். பெரும் பாலும் வாசிப்பு ஆங்கிலத்தில் இருக்கும். தனது தொழில் நுட்ப வாசிப்பைத் தாண்டி, பொது நூல்களையும் பத்திரிகைகளையும் தொடர்ந்து வாசித்தவர் கலாம். அதிலும் அவரின் தமிழ் வாசிப்பு குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரத்தில் ‘இந்திரா பவன்' என்கிற விடுதியின் ஓர் அறைதான் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கலாமின் குடியிருப்பு.

விடுதியில் அவரின் பக்கத்து அறையில் வசித்தவர் விஞ்ஞானி ஆர்.எம். வாசகம். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பின்னாளில் சேவையாற்றியவர். ‘கலாமின் அறையில் புத்தகங்கள், செய்தித்தாள்கள், தமிழ்ப் பத்திரிகைகள் என நிறைய இருக்கும். இதற்காகவே கலாமின் அறைக்கு அடிக்கடி செல்வேன்’ என்று வாசகம் கூறியிருக்கிறார்.

‘அவர் ராமேஸ்வரத்துக்கு வரும்போதெல்லாம் பயணத்தில் படித்த பத்திரிகைகளைக் கொண்டு வருவார். அதை எதிர்பார்த்துக் காத்திருப்போம்' என்று கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் கூறியதும் நினைவில் இருக்கிறது. தனது துறையைத் தாண்டிய வாசிப்பு, அவரைச் சமூக - கலாச்சார - விழுமியங்கள் சார்ந்த ஒரு மனிதராக வார்த்தெடுத்தது எனலாம்.

ஒரு விஞ்ஞானி, மூளையோடு இதயத் தையும் சேர்த்தே தனது படைப்பில் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில், மனிதம் சார்ந்த பல தொழில் நுட்பங்களை அவர் முன்னெடுத்தார். ‘என் மூளை உங்கள் வலியைப் போக்கட்டும்' (Let my brain relieve your pain) என்கிற முத்திரை வாசகத்தைத் தந்த அவர், எடை குறைந்த நடைக்கருவி, இதய வலைக்குழாய் என மக்கள் சார்ந்த பல தொழில் நுட்பங்களைச் சாத்தியப்படுத்தினார்.

கலாமும் கைபேசியும்: மனித வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் கலந்துவிட்ட கைபேசி, பல நேரத்தில் கவனச் சிதறலுக்குக் காரணமாகி, இளையோர் பலரின் வாழ்க்கையைக் காலாவதியாக்கி வருகிறது. கைபேசியின் பயன்பாடு பற்றிக் கலாமின் அறிவுரை என்ன? இதைக் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜிடம் கேட்டேன். ‘ஆம். மிகமிக அவசர அழைப்பைத் தவிர, ஒவ்வொரு அழைப்பையும் உடனுக்குடன் ஏற்கத் தேவையில்லை. நமது வேலையில் ஊன்றி கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கைபேசியைக் கவனித்து, தவறவிட்ட அழைப்புகளுக்கு, குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்க லாம். மறுபடியும் திரும்பி வந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இதைப் பின்பற்றி னால், அழைப்பவர்களுக்கும் இவரை இந்த நேரத்தில்தான் அழைக்க வேண்டும் என்கிற செய்தி தெளிவாகும். நமது வேலையும் பாதிக்கப் படாது. இதுதான் கலாமின் அறிவுரை’ என்றார்.

தொடரும் நட்பு: ஒரு துறையில் ஜொலிக்க துறைசார்ந் தோரிடம் நல்ல நட்புறவைப் பேணுவதும் நன்றி பாராட்டுவதும் அவசியம். தான் பல உயரங் களைத் தொட்ட பிறகும், தன் ஆராய்ச்சிப்பணியின் தொடக்கக் கால சகாக்களிடம் கலாம் நட்பைத் தொடர்ந்தார்.

தும்பா தேவாலயத்தின் ஓர் அறையில் கலாமுடன் ஒன்றாகப் பணியாற்றியவர், விஞ்ஞானி நம்பி நாராயணன். அவர் ஒரு சம்பவத்தை என்னிடம் பகிர்ந்தார். ’கலாம் குடியரசுத் தலைவரான பிறகு ஒரு முறை அவரைச் சந்திக்கச் சென்றேன். எனக்குப் பின் வந்தவர்கள் கலாமைச் சந்தித்துச் சென்றார்கள்.

எனக்கு நீண்ட நேரம் அழைப்பு இல்லை. ஒருகட்டத்தில் பொறுமையிழந்து, புறப்படுகிறேன் எனக் கலாமின் உதவியாளரிடம் கூறிவிட்டு, புறப்படத் தயாரானேன். உடனடியாகக் கலாம் அழைத்தார். அறைக்குள் கோபத்துடன் சென்றேன். ‘எல்லாரையும் சீக்கிரம் பார்த்து அனுப்பிவிட்டு, உன்னுடன் பொறுமையாக நீண்ட நேரம் உரையாடலாம் என்றிருந்தேன். அதனால்தான் தாமதம்’ என்றார். நட்பின் குளுமையில் நெகிழ்ந்து போனார் நம்பி.

திறமைக்கு மரியாதை: பிரம்மாண்டக் கனவுகளை நெய்யும் பலர், தாங்களே அதன் எல்லா இழைகளையும் செயல்படுத்தும் முயற்சியில் இறங்குவதைப் பார்க்கிறோம். சவாலான பல்துறை தொழில்நுட்பங்கள் கலந்து உறவாடும் பாதுகாப்புத் துறையில், கனவுகளுக்கு வடிவம் கொடுக்க, திறமையான வர்களைக் கண்டறிந்து அவர்களைப் பயன் படுத்துவது அவசியம். கலாம் இதைக் கச்சித மாகச் செய்தார்.

அக்னி, பிருத்வி, ஆகாஷ், திரிசூல், நாக் என ஐந்து ஏவுகணைத் திட்டங்கள், ‘ஒருங்கிணைந்த வழிகாட்டி சார்ந்த ஏவுகணை உருவாக்கு திட்டம்' (Integrated Guided Missile Development Programme - IGMDP) என்கிற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போது, ஐந்து விஞ்ஞானிகளை அதற்குத் திட்ட இயக்குநர்களாக நியமித்து, ஏவுகணைகளை வெற்றிகரமாக உருவாக்கி, தேசப் பாதுகாப்புக்கு அச்சாரமிட்டார்.

இந்தத் திட்ட இயக்குநர்களைப் ‘பஞ்ச பாண்டவர்கள்’ என்று டி.ஆர்.டி.ஓ. வட்டாரங் களில் குறிப்பிட்டார்கள். புதிய சிந்தனையில் முகிழ்த்த பிரம்மோஸ் திட்டத்தை விஞ்ஞானி சிவதாணு பிள்ளையின் தலைமையில் வெற்றி யாக்கினார். ஆண்டுகள் பல கடந்து, பிரம்மோஸ், ஆகாஷ் உள்ளிட்ட டி.ஆர்.டி.ஓ. ஏவுகணைகள், அண்மையில் நடந்த துல்லிய பதிலடித் தாக்குதலில் பங்களித்ததை நாடு கொண்டாடியது. அதில் கலாமின் தொலைநோக்கு மிளிர்ந்தது.

ரத்தமும் சதையும் கொண்ட மானிடருக்கான அத்தனை சோதனைகளையும் சவால்களையும் சந்தித்த ஒரு மனிதர், அவற்றை எப்படிக் கையாண்டு வெற்றி பெற்றார் என்கிற வகையில், அப்துல் கலாம் சாதிக்கத் துடிக்கும் இந்திய இளையோரின் கலங்கரை விளக்கம். படிப்பு, உழைப்பு, நன்னடத்தை ஆகியவை மனிதர்களை உயர்த்தும். அவை, இந்திரா பவனின் ஓர் அறையில் வசித்தவரை, 340 அறைகள் கொண்ட ராஷ்டிரபதி பவனுக்கு இட்டுச் சென்றன!

- ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு | தொடர்புக்கு dilli.drdo@gmail.com

| ஜூலை 27: கலாமின் 10-ம் ஆண்டு நினைவு நாள் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x