Last Updated : 24 Jul, 2025 08:48 AM

 

Published : 24 Jul 2025 08:48 AM
Last Updated : 24 Jul 2025 08:48 AM

10% இட ஒதுக்கீடு: மாணவர் நலனில் புதுச்சேரியின் அக்கறை

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற முன்னோடித் திட்டத்தை புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதற்கான அரசாணை பிறப்பிக்க தேவையான பணிகளையும் அம்மாநில அரசு துரிதமாக செய்து வருவது பாராட்டுக்குரியது.

இளநிலை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து படிப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் உயர்கல்விச் செலவையும் அம்மாநில அரசே ஏற்றுக் கொண்டு வருகிறது.

தமிழகத்தில் 2020-21 கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு பயின்று எம்பிபிஎஸ் சேரும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களது கல்விச் செலவையும் தமிழக அரசே ஏற்றும் வருகிறது. பின்னர் இந்த இட ஒதுக்கீடு பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், மீன்வள படிப்புகள் மற்றும் சட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 40,000-க்கும் அதிகமான அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தொழிற் படிப்புகளில் சேர்ந்து பலனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் பலன் மக்களை அதிக அளவில் சென்றடைந்துள்ளதால், 7.5 சதவீதம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு உயர்ந்தவண்ணம் உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டைப் பெறும் நோக்கத்தில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது இத்திட்டத்திற்கு கிடைத்துவரும் பாராட்டுச் சான்றிதழாகும்.

தமிழகத்தின் வழியைப் பின்பற்றி 10 சதவீதம் இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்த புதுச்சேரி அரசு அடுத்தகட்டபாய்ச்சலாக, மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகள் மட்டுமின்றி அனைத்து உயர் படிப்புகளிலும் அரசுபள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முன்வந்திருப்பது மாணவர் நலன் மீது அம்மாநில அரசு கொண்டுள்ள அதீத அக்கறையை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு 5 ஆண்டுகளுக்குப் பின் மறுபரிசீலனைக்கு உட்பட்டது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது. அரசு பள்ளிகளில் நம்பிக்கையுடன் கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பிடிகொம்பாக அமைந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தேவையான நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் பெற்று தொடர்ந்து வழங்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் இருப்பதைப் போல், இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக மாற்றுவதற்கும், அனைத்து உயர் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவதற்கும் தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x