Last Updated : 23 Jul, 2025 08:40 AM

 

Published : 23 Jul 2025 08:40 AM
Last Updated : 23 Jul 2025 08:40 AM

பள்ளிகளில் சிசிடிவி: சிபிஎஸ்இ-யின் நல்ல முடிவு

கோப்புப்படம்

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ அதன் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான அங்கீகார நிபந்தனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 580 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் 28 ஆயிரம் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றி மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றன. இந்த பள்ளிகளில் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களின் நலன்கருதி, கழிப்பறை பகுதிகளைத் தவிர்த்து, நுழைவாயில், வெளியேறும் வழி, வகுப்பறை, நடைபாதை என பள்ளிகளில் மாணவர்கள் புழங்கும் அனைத்து பகுதிகளிலும் அதிக திறன்வாய்ந்த சிசிடிவி கேமராக்களை பள்ளிகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் பதிவுகளை குறைந்தபட்சம் 15 நாட்கள் வரை பதிவு செய்து, அதிகாரிகள் கேட்கும்போது வழங்கும் வகையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்க நடவடிக்கையாகும்.

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய குழு (NCPCR) பரிந்துரையின் அடிப்படையில், இந்த முயற்சியை சிபிஎஸ்இ நிர்வாகம் எடுத்துள்ளது. பள்ளிகளின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளிடம் தவறாக நடப்பது. வன்முறை, மாணவர்களுக்குள் நடைபெறும் சிறு சண்டை, மிரட்டல் போன்ற பல அன்றாட வரம்பு மீறல்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்படுவதன் மூலம் மாணவர்களும் சுய கட்டுப்பாடுடன் வகுப்பறைகளிலும் பள்ளி வளாகங்களிலும் நடந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு என்பது முன் எப்போதையும் விட தற்போதைய காலகட்டத்தில் அதிகம் தேவைப்படுகிறது. சமீபத்தில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பள்ளியில் தாமதமாக வந்த மாணவர்களை தட்டிக் கேட்ட ஆசிரியரை 12-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் கல்வி வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

அதே பள்ளியில் இதற்கு முன்பும் மாணவர்கள் சிலர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் மிரட்டிய சம்பவமும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இன்றைய காலகட்டத்தில் அடிக்கடி நடந்துவரும் நிலையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்துவது மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.

பல்வேறு குற்றச் சம்பவங்களில் இன்றைக்கு காவல்துறையின் புலன் விசாரணைக்கும், உண்மையை கண்டறியவும் சிசிடிவி கேமரா பதிவுகளே பெரிதும் உதவி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கும், மறுபுறம் வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்களை பாதுகாக்கவும் சிசிடிவி கண்காணிப்பு உதவும் என்பதில் சந்தேகமில்லை. சிபிஎஸ்இ பள்ளிகளின் முன்னோடித் திட்டத்தை தமிழக அரசும் பின்பற்றி தமிழக அரசின் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைத்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மேம்பட வாய்ப்பு ஏற்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x