Published : 22 Jul 2025 06:45 AM
Last Updated : 22 Jul 2025 06:45 AM
‘சார்’ என்பது ஒரு மரியாதை விளி. அது நமது அதிகாரிகளையும் திரைப் பிரபலங்களையும் பின்னொட்டாக நின்று தாங்கிப்பிடிக்க வல்லது. இந்த விளி பலருக்கும் விருப்பமானது. ஆனால், இப்போது பிஹாரை மையம் கொண்டிருக்கும் ‘சார்’ ஒரு புயலைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
நவம்பரில் அங்கே சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாகத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் திருத்தப்போகிறது. இதற்கு ‘தீவிரச் சிறப்புத் திருத்தம்’ (Special Intensive Revision- SIR) என்று பெயர். இதன் சுருக்கப்பட்ட வடிவம்தான் ‘சார்’.
யார் இந்த சார்? - ஜூன் 24ஆம் நாள், தேர்தல் ஆணையம் ‘சார்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் திருத்தத்தின் நோக்கம் என்ன? ஆணையத்தின் வார்த்தைகளில் சொன்னால் - ‘தகுதி வாய்ந்த எந்த வாக்காளரின் பெயரும் விடுபடக் கூடாது; தகுதியற்ற எந்த வாக்காளரின் பெயர் இடம்பெறவும் கூடாது’. இந்தத் திருத்தப் பணிக்கான தொடக்கப் புள்ளியாக 2003ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் அமையும். இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஏறக்குறைய 5 கோடி வாக்காளர்கள்.
இதற்குப் பின்பு 2025 வரையிலான வாக்காளர் பட்டியல்களில் இணைந்துகொண்டவர்கள் ஏறக்குறைய 3 கோடி பேர். இரு சாராரும் ஆணையம் இப்போது உருவாக்கியிருக்கும் புதிய கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்பி, தற்காலப் படமும் ஒட்டி, ஒப்பமிட்டு ஆணையத்தின் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இரண்டாம் பிரிவினர் (3 கோடி) மேலதிகமாகத் தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்று நிரூபிக்க வேண்டும். அவர்களில் 1.7.1987க்கு முன்பு பிறந்தவர்கள், தங்களது பிறப்புச் சான்றையும், அதற்குப் பின்பு பிறந்தவர்கள் கூடுதலாக அவர்களது பெற்றோரது பிறப்புச் சான்றுகளையும் இணைக்க வேண்டும். இந்தச் சான்றின் மூலம் தமது பிறந்த நாளையும் பிறந்த ஊரையும் அவர்கள் நிறுவ வேண்டும்.
இந்தப் பணியைத் தேர்தல் ஆணையம் ஜூலை 1இல் தொடங்கியது. இதற்காக முன்னதாக நிரப்பப்பட்ட படிவங்களுடன் அலுவலர்கள் இல்லந்தோறும் ஏறி இறங்கி, வாக்காளர்களைச் சந்தித்துப் படிவங்களைப் பதிவேற்றுவார்கள் என்றும், இந்தப் பணி ஜூலை 25இல் முடியும் என்றும் அறிவித்தது ஆணையம். ஆகஸ்ட் முதல் நாள் வரைவுப் பட்டியல் வெளியாகும்.
அதில் விடுபட்டவர்களின் கோரிக்கை மனு ஆகஸ்ட் கடைசி வரை ஏற்கப்படும். இறுதிப் பட்டியல் செப்டம்பர் 30 அன்று வெளியாகும். இந்த இறுதிப் பட்டியலில் இடம்பெறுவோர் மட்டுமே நவம்பரில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இந்தத் திருத்த நடவடிக்கையின் மூலம் - உயிரிழந்தோர், நிரந்தரமாகப் புலம்பெயர்ந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவுசெய்தோர் ஆகியோரைக் கண்டறிந்து, பட்டியலிலிருந்து நீக்குவதே தமது நோக்கம் என்கிறது ஆணையம். இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
விமர்சனங்கள் நான்கு: முதலாவதாக, இந்தத் திருத்த நடவடிக்கைக்கு ஆணையம் விதித்திருக்கிற காலக்கெடு, ஜூலை 1 முதல் ஜூலை 25க்குள். அதாவது, 25 நாட்களுக்குள். 8 கோடி வாக்காளர்களின் படிவங்கள் நிரப்பப்பட்டு, மூன்று கோடி வாக்காளர்களின் ஆவணங்கள் இணைக்கப்பட்டு, அவை பதிவேற்றப்பட வேண்டும். இதற்கு முன்பும் ஆணையம் இப்படியான திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.
மேலும், அவை தேர்தல் காலத்தில் நடந்ததில்லை. இரண்டாவதாக, இப்போதைய நடவடிக்கையில் வாக்காளர்கள் அனைவரும் தத்தமது படிவத்தைப் பதிவேற்றுவதன் மூலமே தங்கள் வாக்குரிமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்திய வரலாற்றில், இப்படி நடப்பது இதுதான் முதல் முறை. இதற்கு முன்பு வாக்காளரைப் பட்டியலில் சேர்க்கும் பொறுப்பு ஆணையத்திடம் இருந்தது. இப்போது அந்தப் பொறுப்பு வாக்காளரின் தலையிலேயே ஏற்றப்பட்டுவிட்டது.
முன் நிரப்பப்பட்ட படிவங்களுடன் ஆணையத்தின் அலுவலர்கள் ஒவ்வொரு வாக்காளரையும் அவரவர் வீட்டில் சந்திப்பார்கள் என்றது ஆணையம். ஆனால், அது அவ்விதம் நடக்கவில்லை என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மூன்றாவதாக, பிஹாரை நிரந்தரத் தங்கும் இடமாகக் கொண்ட, புலம்பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமை பற்றியது.
இவர்கள் தென் மாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி முதலான வட மாநிலங்களிலும் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்காக ஆணையம் ஒரு முழுப் பக்க விளம்பரத்தைக் கடந்த வாரம் வெளியிட்டது. அது இந்தியில் இருந்தது; தமிழ், ஆங்கில நாளிதழ்களிலும் வெளியானது.
பிஹார் தொழிலாளர்கள், தமிழ்-ஆங்கில நாளிதழ்களை வாசிப்பார்கள் என்றும், அவர்கள் படிவத்தையும் ஆவணங்களையும் பதிவேற்றும் கணித்திறம் உள்ளவர்கள் என்றும் ஆணையம் நம்புவதாகத் தெரிகிறது. கடைசியாக, பிறந்த நாள், பிறந்த ஊர் ஆகியவற்றை நிறுவ ஆணையம் 11 ஆவணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
வறுமையும் கல்லாமையும் பீடித்திருக்கும் மாநிலங்களில் முதன்மையானது பிஹார். இங்கு ஆணையம் கோரியிருக்கும் ஆவணங்களில் சில பள்ளிச் சான்று (பிஹாரில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 15%), சாதிச் சான்று (இதை வைத்திருப்பவர்கள் 16% முதல் 25% இருக்கலாம்), அரசுப் பணி அடையாளச் சீட்டு (2%), கடவுச் சீட்டு (10%), பிறப்புச் சான்று (3%). ஆக, இந்த ஆவணங்கள் பலரிடத்திலும் இருக்க வாய்ப்பில்லை.
அதே வேளையில், பலரிடமும் இருக்கக்கூடிய ஆதார் (95%), குடும்ப அட்டை (84%), நூறு நாள் வேலைத்திட்ட அடையாள அட்டை போன்றவை பட்டியலில் இல்லை. முக்கியமாக, ஆணையமே வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை (EPIC) ஓர் ஆவணமாக ஏற்கப்படவில்லை.
இந்தத் திருத்த நடவடிக்கையின் மூலம் சிறுபான்மையினர், பழங்குடிகள், தலித், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முதலான சமூகங்களின் வாக்குரிமையைப் பறிப்பதே ஆளுங்கட்சியின் நோக்கம் என்றும், அதற்குத் தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்றும் குற்றம் சுமத்துகின்றன எதிர்க்கட்சிகள். அவை உச்ச நீதிமன்றத்தை நாடின. வழக்கு ஜூலை 10ஆம் நாள் விசாரணைக்கு வந்தது.
நமது சகல அடையாளங்களையும் ஆதாருடன் இணைக்கச் சொல்கிறது அரசு. அந்த ஆதார் ஏன் ஓர் அடையாளமாக ஏற்கப்படவில்லை என்று கேட்டனர் நீதியரசர்கள். ஆதார் குடியுரிமைக்கான ஆவணமாகாது என்று பதிலளித்தது ஆணையம். இந்தியாவில் குடியுரிமைக்கென எந்த ஆவணமும் இல்லை. ஆதார் தங்கும் இடத்துக்கான நிரூபணம் ஆகும். பட்டியலில் ஏற்கெனவே பெயர் இருக்கும் வாக்காளருக்கு ஆதாரை ஏன் அடையாளமாக ஏற்கக் கூடாது என்று வினவியது நீதிமன்றம்.
விசாரணையின் முடிவில் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகிய மூன்றையும் அடையாளங்களாக ஏற்குமாறு ஆணையத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறது நீதிமன்றம். இது வேண்டுகோள்தான், ஆணையன்று. இதைக் குறித்து ஆணையம் என்ன கருதுகிறது என்கிற நிலைப்பாட்டை ஆணையம் இதுகாறும் பொதுவெளியில் அறிவிக்கவில்லை.
ஜூலை 28 அன்று வழக்கு மறு விசாரணைக்கு வரும். அப்போது திருத்த நடவடிக்கை முடிந்திருக்கும்; வரைவுப் பட்டியலும் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும். அப்போது இந்த மூன்று அடையாளங்களைக் குறித்த தனது கருத்தை ஆணையம் தெரிவிக்க வேண்டியிருக்கும். பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களைக் குறித்த விளக்கமும் தரக்கூடும்.
ஆணையத்தின் நம்பகத்தன்மை: இப்படியொரு பெரும் திருத்த நடவடிக்கை குறித்து, எதிர்க்கட்சிகளுடனும் சமூக ஆர்வலர்களுடனும் ஆணையம் ஆலோசிக்கவில்லை. இவ்வளவு விமர்சனங்களுக்கு இடையிலும் அது செய்தியாளர்களைச் சந்திக்கவோ விளக்கம் அளிக்கவோ முயலவில்லை. இந்தப் பிரச்சினையில் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுகிறது என்பதுதான் தலையாய குற்றச்சாட்டு. ஆணையம் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இயங்க வேண்டும். அது அப்படித்தான் இயங்கிக்கொண்டிருந்தது.
1977இல் நெருக்கடி நிலை காலத்தில் தேர்தலை அறிவித்தார் இந்திரா காந்தி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றது. ஆட்சியைக் கைப்பற்றிய ஜனதா கட்சி, இரண்டு ஆண்டுகளில் பிளவுண்டது. மீண்டும் தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் ஜனதா தோற்றது. அப்போதெல்லாம் ஆணையம் குறித்து யாருக்கும் எந்த ஐயப்பாடும் இல்லை. இப்போதைய ஆணையம் மீண்டும் அப்படியான நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.
இது பிஹாரின் பிரச்சினை மட்டுமல்ல. விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும் இந்த ‘சார்’ விஜயம் செய்வார் என்று அறிவித்திருக்கிறது ஆணையம். வாக்காளர் பட்டியலைத் திருத்தலாம். அதற்குப் போதிய அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதைத் தேர்தல் காலத்தில் செய்யலாகாது.
அனைத்துத் தரப்பினரோடும் ஆணையம் ஆலோசிக்க வேண்டும். அதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது வாக்களிக்கும் வயது வந்த அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தகுதியான வாக்காளர்களை வெளியேற்றுவதாக அமைந்துவிடக் கூடாது. அப்படி நடப்பது ஜனநாயகமாகாது.
- தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT