Published : 20 Jul 2025 12:10 PM
Last Updated : 20 Jul 2025 12:10 PM

திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த அண்ணா - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 40

1949 செப்.17-ம் தேதி சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்க விழாவில் உரையாற்றிய அண்ணா.

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருபவை திமுக மற்றும் அதிமுக எனும் திராவிடக் கட்சிகளே. நீதிக்கட்சி மற்றும் பெரியாரின் திராவிடர் கழகம் ஆகியவற்றிலிருந்து இந்த கட்சிகள் தங்களின் வேர்களைக் கொண்டுள்ளன. 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றது. அன்று முதல் இன்றுவரை திமுக - அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆளுகையிலேயே தமிழ்நாடு உள்ளது.

திராவிடர் கழகத்தில் அண்ணா செயல்பட்டுவந்த காலத்தில், பெரியார் - அண்ணா இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு, திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திமுக உருவானது, அன்றைக்கு இருந்த அரசியல் சூழ்நிலைகள் பற்றியெல்லாம் இன்றைய தலைமுறைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேநேரம் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து ஆராயும்போது திராவிட இயக்கங்களின் பங்களிப்பு பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் தேர்தல் அரசியலில் ஈடுபடாத திராவிடர் கழகத்தில் இருந்து, திமுக உருவான வரலாறு குறித்து சுருக்கமாகக் காண்போம்.

கருத்து முரண்பாட்டால் கட்சி தொடக்கம்: பெரியாரை தனது அரசியல் ஆசானாக ஏற்று பயணித்து வந்த அண்ணாவுக்கு பின்னாளில் பெரியாரின் பல்வேறு கருத்துகள் முரண்பாடாகத் தெரிந்தன. அத்தகைய சூழலில் பெரியார் - மணியம்மை திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இத்திருமணத்துக்கு வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த அண்ணா, திராவிடர் கழகத்தில் இருந்து தனது சகாக்களுடன் வெளியேறினார். அவ்வாறு விலகியவர்களை ‘கண்ணீர்த் துளிகள்’ என்று பெரியார் குறிப்பிட்டார். துடிப்புடன் செயல்பட்ட ஏராளமான முன்னோடிகள் அண்ணாவின் பின்னால் அணிவகுத்தார்கள். எதிர்காலத் திட்டங்கள் குறித்து இரவும் பகலும் ஆலோசித்தார்கள். அதன் விளைவாக உருப்பெற்றதுதான் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சி.

திராவிட முன்னேற்றக் கழகத் தொடக்க விழாவின் மாபெரும் கூட்டம். 17.9.1949 அன்று மாலை, சென்னை, ராயபுரம், ராபின்சன் பூங்கா மைதானத்தில் கொட்டும் மழைக்கிடையே மிகச் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவுக்குப் பெத்தாம்பாளையம் பி.பழனிச்சாமியைத் தலைமை வகிக்கும்படி டி.எம்.பார்த்தசாரதி முன்மொழிய, கே.கோவிந்தசாமி வழிமொழிய, பி.வி.முத்துசாமியின் துணைமொழிக்குப் பிறகு பி.பழனிச்சாமி தலைமை வகித்துக் கூட்டத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.

பின்னர், ஏ.சித்தையன், என்.வி.நடராசன், ஈ.வெ.கி.சம்பத், எஸ்.ஆர்.சுப்ரமண்யம், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இரா.நெடுஞ்செழியன், மதுரை முத்து, கே.கே.நீலமேகம், சத்தியவாணிமுத்து ஆகியோர் பேசிய பிறகு அறிஞர் அண்ணா நீண்ட நெடிய சொற்பொழிவாற்றினார். அதன் சாராம்சம் வருமாறு:

“பல நாட்களுக்குப் பின்னர் கூடியிருக்கிறோம். இக்கூட்டம் நமது நோக்கத்தைத் தெரிவிக்கக் கூடிய கூட்டமாகும். மழையோ பலமாகப் பெய்கிறது; வந்திருக்கும் கூட்டமோ ஏராளம்; பேச இருப்போரும் பலர்; பல மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள தோழர்கள், இயக்கத்தின் முக்கியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள். அவர்கள் யாவரும் பேச இருக்கிறார்கள். மழை பலமாகப் பெய்து கொண்டிருக்கிறது.

பலர் பேச வேண்டும்; சங்கடமான நிலைதான். அடாது மழை பெய்கிறது; அளவற்ற கூட்டம், தாய்மார்கள் தவிக்கின்றனர்; மழையில் நின்றுகொண்டே இருக்கிறீர்கள் சங்கடம்தான்; ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இதுபோன்ற நிலையில்தான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கிடந்தன; சங்கடமான நிலை ஏற்பட்டது; சரி செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. புதிய அமைப்பு ஏற்பட்டு விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரால் ஏன் ஏற்பட்டது? எதற்காக ஏற்படுத்தப்பட்டது? என்பவை விளக்கும் கூட்டமே இது.

இந்நிலைக்கு நானா காரணம்? - நான்தான் காரணம் இந்த நிலைக்கு - ஏற்பாட்டுக்கு - என்று கூறுவர் சிலர். நான் பேசுகிறேன் இப்போது - நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் - பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது - என்ன நினைக்கிறீர்கள்? இதற்கு நானா பொறுப்பாளி? நானா மழையை வரவேற்கிறேன். வருவித்தேன்? இல்லை! இப்போது நான் பொறுப்பாளியல்லவோ, அப்படித்தான் கழகத்தில் ஏற்பட்ட மந்த நிலைக்கும் செயலற்றுக் கிடந்த நிலைக்கும் நான் பொறுப்பாளியல்ல. மழைக்கு நான் பொறுப்பாளியல்ல என்றாலும் என்னை ஏசுவர். கூட்டத்துக்கு வந்துள்ள மக்கள், “ஏனப்பா! அந்த அண்ணாதுரை கூட்டத்துக்குப் போனேன். ஒரே மழை, நன்றாக நனைந்து விட்டேன். நீர் சொட்டக் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்றுதான் பேசுவர்.

நான் என்ன செய்துவிட்டேன்! தலைவர் தவறினார் கொள்கையினின்றும், பகுத்தறிவு பாதையினின்றும். தவறு என்று மனதார நம்பினேன் - கூடாது என்று கருதினேன். கருதியது குற்றமா? கருத்தைத் தெரிவித்தேன் காரணத்தோடு; வேதனையை வெளிப்படுத்தினேன்; வெளிப்படுத்தியது குற்றமாகுமா? கொள்கையைக் கூறுவது குற்றமா? கூறுங்கள் தோழர்களே!

நான் மட்டுமல்ல, என்போன்ற தோழர்கள் பல தாய்மார்கள், பல கழகங்கள், பாட்டாளி மக்கள் தொழிலாளர்கள், தோழர்கள், பட்டிதொட்டி எங்கும் உள்ளோர் கூறினர். கூடாது இந்த ஏற்பாடு, திருமணம் என்னும் பேச்சை விட்டு விடுங்கள் என்று. பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான். ஆயாசங் கொண்டவன் நான். அதுமட்டுமல்ல. நான் ஒதுங்கி விடுகிறேன் என்ற எண்ணத்தை - நான் கொண்ட கருத்தைத் தெரிவித்தவன் நான். பேதம், பிளவு, மனத்தாங்கல், மோதல் கூடாது, நல்லதன்று என்று கருதும் போக்கும், மனப் பண்பும் படைத்தவன் நான். எனவே, என் வரையில் பெருந்தன்மையாகக் கட்சிப் பணியிலிருந்து விலகுவது நல்லது என்று முடிவு கட்டியிருந்தேன்.

பெரியாருடன் அண்ணா

என்போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதை மட்டுமல்ல, கண்டித்தனர்; கதறினர்; வேண்டாம் என்று வேதனை உள்ளத்தோடு. நான் மனதாரத் தீமை என்று கருதிய ஒன்றை, நல்லதல்லவென்று தெரிந்த ஒன்றை, பகுத்தறிவுக்குப் புறம்பானது என்று பாமரரும் ஒப்பும் ஒன்றைத் தெரிவித்தது குற்றமா?

பெரியார் சமாதானம் சொல்லிவிட்டார், என் சொந்த விஷயம். எதிர்ப்போர், சுயநலமிகள் - சதிக் கூட்டத்தினர் என்று. மனப்புண் ஆறவில்லை. மக்கள் அப்படிப்பட்ட தலைவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டோம் என்று கூறினர். செவிசாய்க்கவில்லை தலைவர். விலகுவார் என்று பார்த்தனர். விலகவும் இல்லை. அவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாத நிலையிலுள்ள மிகப் பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள், கூடிப் பேசி ஒரு முடிவு செய்தனர். அந்த முடிவுதான் ‘திராவிட முன்னேற்றக் கழக’த் தோற்றம் - போட்டிக் கழகமல்ல.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது! திராவிடக் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில் தான் திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான், திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில் - மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை - ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.

கொள்கைக்கே புறம்பாக, ஜனநாயகத்துக்கே அப்பாற்பட்டுத் தமது போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறார், பெரியார். அவர் தலைமையில் வேலை செய்ய மனம் ஒப்பவில்லை. செயலாற்றும் வகை கிடையாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அவர் வகுத்த பாதையிலிருந்து அவரே தவறி விட்டார். தடுமாறி விட்டார். தவறு என்று எடுத்துக் காட்டினோம்! நாம் மட்டுமா? நாட்டு மக்கள் அனைவரும். இயக்கம் பெரிது - இயக்கத்தில் கொள்கைகள் மிக மிகப் பெரிது. கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; கொள்கைக்கு இழுக்கு வர விடமாட்டோம்; தவறு செய்தது தலைவரேயானாலும் கண்டித்திட தயங்கோம் என்ற குரல், நாடெங்கும் கேட்டது. தலைவர் தம் வழியே செல்கிறார், தவறை உணராது. சரியென்று சாதித்துக் கொண்டு, திராவிடர் கழகம் மூன்றுமாத காலமாகச் செயலற்றுக் கிடந்தது.

கொள்கை பிடிக்காமலோ, கோணல் புத்தி படைத்தோ அல்ல - நாங்கள் விலகியது, வெளியேறியது. கொள்கை வேண்டும், அதுவும் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும். நாடும் மக்களும் நலம் பெறும் முறையில் கொள்கைக்கு குந்தகம் விளைவிக்கும் காரியத்துக்குப் பக்கபலமாக இருந்து பணியாற்ற முடியாது என்ற நிர்ப்பந்த நிலையிலேதான் விலகினோம்; விலக நேரிட்டது. பெருந்தன்மை வேண்டுமென்ற ஒரே காரணத்தினால்தான், மோதுதலைத் தவிர்த்து, கழகத்தைக் கைப்பற்றும் பணியை விடுத்து விலகுகிறோம். அதுமட்டுமல்லாமல், தலைவர் எல்லோர் மீதும் நம்பிக்கையில்லை, நம்ப முடியாது என்று வேறு கூறியிருக்கிறார். சோம்பேறிகள், செயலாற்ற முடியாத சிறுவர் கூட்டம், உழைக்கத் தெரியாதவர்கள் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்! யாரைப் பார்த்து? உழைத்து உழைத்துக் கட்சியை, கழகத்தை உருவாக்கிய உண்மைத் தொண்டர்களை, தம் வாழ்வைப் பாழ்படுத்திக் கொண்ட இளைஞர்களைப் பார்த்து.

ஒரு குடும்பத் தலைவன் சதா தன் மக்களில் சிலரைப் பார்த்து, “நீ சோம்பேறி, வேலைக்கு லாயக்கற்றவன், வீணன் என்று தூற்றிக் கொண்டே இருந்தால், மகன் நிலை என்னவாகும்? உண்மையிலேயே உழைக்கும் மகன் உள்ளம் உடைந்துதானே போவான்? அதுமட்டுமா, சற்று விவேகமும், ரோஷமும் படைத்த மைந்தன் வீட்டை விட்டு வெளியேறி, தொழில் புரிந்து தன் நிலையைப் பலப்படுத்தி, தகப்பனைக் கூப்பிட்டுப் “பார் அப்பா! வீணன், வேலைக்கு லாயக்கற்றவன், சோம்பேறி என்று கூறினீரே, பாரும் எனது திறத்தை! செயலாற்ற விடவில்லை. நீர், சதா எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுக் கொண்டு, எங்களை எரிச்சலோடு ஏசினீர். பாரும் எமது வேலையை, வேலையின் திறத்தை, வெற்றியை” என்றுதானே கூறுவான்? காட்டுவான்!

அதுபோலவேதான் நாமும் நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றலுடன் துச்சமென மதித்த தலைவரின் தலைமையை விட்டு வெளியேறித் தனிக்குடித்தனம், தனி முகாம், தனிக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இக்கழகத்தை!

நான் மிகத் தெளிவாகவே கூறிவிடுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்துக்கு எதிரானதல்ல, எதிர்நோக்கம் கொண்டதுமல்ல. கொள்கை ஒன்றே, கோட்பாடும் ஒன்றே. அங்கிருந்தவரில் பெரும்பாலோர்தான் இங்கு இருக்கின்றனர். குடும்பத் தலைவரின் போக்கு பிடிக்காத காரணத்தால், மக்கள் வேறு பண்ணையில் வசிக்கும் பண்பினைப் போல, தன்மையைப் போல, பகை உணர்ச்சி சற்றும் கிடையாது நமக்கு.

இக்கூட்டத்தின் இடையே மழை பொழிந்து சற்று சங்கடத்தைத் தருவது போல, இடையிடையே சிறு சிறு தூறல்கள் தூறலாம், நம்மிடையே. அது வார்த்தை வடிவிலே வரலாம்; விசாரப்படாதீர்கள். அதுவும் அந்தப் பக்கமிருந்துதான் வரலாம். பெரியார்தான் எங்களை மறந்தார், உதாசீனம் செய்தார். உதவாக்கரைகள் என்று கூறினார். மனம் நோகும்படி பேசினார், ஏசினார், நடந்தார் - நடந்து கொண்டிருக்கிறார். நாம் அவரோடு மேலும் போராடவோ, மோதவோ விரும்பவில்லை. விவேகமல்ல என்று கருதுவதால் - வீண் வேலை என்று நினைப்பதால்.

அவர் போக்கைக் கண்டித்தால், என்ன திடீர் லாபம் ஏற்பட்டு விடும்? எனக்கோ, அல்லது என்னோடு நிற்கும் நண்பர்களுக்கோ? ஒன்றுமில்லை. எனக்குத் தெரியாதா? யார் யார் என்ன கூறுவர் என்பது. எனக்குத் தெரியும். பெரியாரைக் கண்டிப்பதால், சிலர் ஏசுவர், சிலர் தூற்றுவர், பற்பல விதமாக என்று. நேற்றுவரை அறிஞன் என்று போற்றப்பட்டவன், இன்று என்ன அறிந்தான் இவன்? என்று கேலி செய்யும் கூட்டம் கிளம்பும் என்பது தெரியும். நான் எழுதிய சினிமாக் கதையைப் பற்பல விதமாய்ப் புகழ்ந்தவர்களும், என்னப்பா அதிலே இருக்கிறது? என்று நையாண்டி செய்வர் என்பதும் தெரியும்.

நேற்றுவரை எனது ‘கம்ப ரசத்தை’ இனிப்பாகக் கருதியிருந்தோர் இன்று பழைய காடியாகக் கருதுவோராகக் கிளம்புவர் என்பதும் அறிவேன். நான் ரேடியோவில், ஆங்கிலத்தில் பாரதியாரைப் பற்றி பலநாள் முன்னரே பேசியிருக்கிறேன். ‘மக்கள் கவி பாரதி’ என்ற தலைப்பிலே அப்போது போற்றினர். ‘ஆகா எங்கள் அண்ணாவைப் பார், உண்மைப் பாரதியாரைப் படம் பிடித்துக் காட்டுகிறார்’ என்று போற்றினர். இன்றோ ‘பார்! பார்! பயல் பாரதி விழாவில் கலந்து கொண்டு காங்கிரசுக்கு நல்ல பிள்ளையாகிறான்’ என்று தூற்றுவர் என்றும் எனக்குத் தெரியும். இதெல்லாம் வரும், சிலர் செய்வர் என்பதும் தெரியும். தெரிந்தும் கடமையுணர்ச்சி, மனிதப் பண்பு ஆகியவை என்னைப் பெரியார் திருமணத்தைத் தகாதது என்று கூறிவிட வைத்தன.

எனக்கு எதிலே குறை ஏற்பட்டது? - எனது பீடத்தைக் காலி செய்துவிட்டு வந்துவிட்டேன். அங்கிருந்து நானாகவே. நான் விரும்பினால், விரும்பியிருந்தால் அங்கேயே இருந்திருக்கலாம். எல்லா வகை விருதுகளோடும், என் நிலை என்ன அங்கே சாமான்யமானதா? எளிதில் கிடைக்கக் கூடியதா? இல்லையே. அவர் அங்கே கடவுள் நிலையில் இருக்கிறார் என்றால், நான்தானே அர்ச்சகன்! அவர் தம்பிரான் என்றால், நான்தானே கட்டளைத் தம்பிரான்? அவர் தலைவர் - நான் தளபதி! என்றுதான் நான் போற்றப்பட்டேன்; புகழப்பட்டேன். இன்று அவரது ‘வாழ்க்கைத் துணை நலம்’ ஆன மணியம்மையுங்கூட எனக்குத்தான் - மற்ற எவரையும் விட மரியாதை, வரவேற்பு காட்டியிருக்கிறார்கள். பெரியார் எழுதுவதாகக் கூறின் டிரஸ்டிலும் என் பெயர் தானே முதலில் இருந்திருக்கும்.

நான் என்ன இவ்வளவு விருதையும் புகழையும் பாழ்படுத்திக் கொள்ளப் பித்தனா? வறட்டு ஜம்பம் பேசி, கழகத்தில் புகழ் வாழ்வைக் கெடுத்துக் கொள்ள - நான் என்ன வெறியனா? அல்லது இதை விட்டு வேறு வேலை தேட, குமாரசாமி ராஜாவிடம் ஏதாவது அப்ளிகேஷன் போட்டிருக்கிறேனா? அதுவும் இல்லையே! எனக்கு என்ன லாபம் ஏற்படும் என்று. அவரை கண்டிக்க வேண்டும்! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

பெரியாரோடு நான் மாறுபட்ட கருத்துடையவன் என்று கூறப்படுகிறது.சிற்சில விஷயங்களிலே, நான் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும், நெடு நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும், அவைகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. முடிந்த அளவு ஒத்துழைத்தே வந்திருக்கிறேன். முடியாத நேரத்தில் மிக மிகக் கண்ணியமாக ஒதுங்கியே இருந்திருக்கிறேன். பெரியார் காலம் வரை, அவர் வழிப்படியே கழகம் நடக்கும். பிறகு பார்த்துக்கொள்வோம் என்ற போக்கைக் கொண்டிருந்தவன்.

நான்தான் பெரியாரோடு பலத்த கருத்து வேற்றுமை கொண்டேன் என்றும், அவரைப் பிடிக்கவில்லை என்றும் பேசுவது தவறு; உண்மைக்குப் புறம்பானது. எனக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது 1935-ம் ஆண்டில்தான். அப்போது நான் பி.ஏ. (ஹானர்ஸ்) பரீட்சை எழுதியிருந்தேன். பரீட்சை முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவைக்கு அடுத்த திருப்பூரில் ஓர் வாலிபர் மாநாடு நடந்தது. அங்கு தான் பெரியாரும் நானும் முதன் முதலில் சந்தித்தது; எனக்குப் பற்றும் - பாசமும் ஏற்பட்டது. அவருடைய சீர்திருத்தக் கருத்துகள் எனக்குப் பெரிதும் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து ‘என்ன செய்கிறாய்?’ என்று கேட்டார். ‘படிக்கிறேன், பரீட்சை எழுதியிருக்கிறேன்’ என்றேன். ‘உத்தியோகம் பார்க்கப் போகிறாயா?’ என்றார். ‘இல்லை, உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை. பொது வாழ்வில் ஈடுபட விருப்பம்’ என்று பதிலளித்தேன்.

அன்று முதல் அவர் எனது தலைவர் ஆனார். நான் அவருக்குச் சுவீகாரப் புத்திரனாய் விட்டேன். பொதுவாழ்வில் அன்றையிலிருந்து இன்றுவரை சுவீகாரப் பிள்ளைதான் நான், அவரது குடும்பத்தாருக்கு! இன்னும்கூட அந்தத் தொடர்பு விடவில்லை எனக்கும் அவருக்கும். ஏன்? அவருடைய அண்ணார் பிள்ளை சம்பத் என்னுடைய சுவீகாரப் பிள்ளை. இப்போது 14 ஆண்டுகள் அவரோடு பழகினேன். 14 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் இருக்கின்றேன்.

நான் அறிந்த ஒரே தலைவர், ஒரே கட்சி! - இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர் - தெரிந்த தலைவர் - பார்த்த தலைவர் இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை. வராது. அதே காரணத்தினால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கூடத் தலைவரை ஏற்படுத்தவில்லை; அவசியம் என்றும் கருதவில்லை.

இதயப்பூர்வமான தலைவர் - இதயத்திலேயே குடியேறியத் தலைவர் - நமக்கெல்லாம் அப்போது நல்வழிகாட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்தப் பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ, அல்லது நாங்களே, அல்லது நானே அமரவோ விரும்பவில்லை.” இவ்வாறு அண்ணா உணர்ச்சி ததும்ப எழுச்சிப் பேருரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில், மடை திறந்த வெள்ளம்போல் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்த அண்ணாவின் பேச்சைக் கண்டு கொட்டும் மழையும் கொஞ்சம் ஆடித்தான் போனது!

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம்: உலக அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்ட இரண்டாம் உலகப் போர் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 39

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x