Published : 19 Jul 2025 12:55 PM
Last Updated : 19 Jul 2025 12:55 PM

உலக அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்ட இரண்டாம் உலகப் போர் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 39

உலக அரசியலில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்ட இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை நடைபெற்றது. அச்சு நாடுகள் என்று சொல்லக் கூடிய ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் ஒரு பக்கமும், நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்க போன்ற நாடுகள் மற்றொரு பக்கமுமாக நின்று போரிட்டன.

போரின் உச்சமாக ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை அமெரிக்கா வீசியது. 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஹிரோஷிமா மீதும், ஆகஸ்ட் 9-ம் தேதி நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. இந்த அணுகுண்டு வீச்சுகள் பேரழிவை ஏற்படுத்தின, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வுகள் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு முக்கிய காரணமாக அமைந்தன, அச்சு நாடுகள் தோல்வியைத் தழுவின.

இரண்டாம் உலகப் போர் மனித வரலாற்றில் மிகவும் பேரழிவுகரமான மோதலாக இருந்தது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு வாங்கியது. ஜெர்மனியின் மிக முக்கிய அரசியல் தலைவரும், ஹிட்லருக்கு மிகவும் நெருங்கியவருமான ஜோசப் கோயபல்ஸ் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் ஜெர்மன் அதிபர் அடால்ஃப் ஹிட்லரும் தற்கொலை செய்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து, ஜெர்மனியை நேச நாடுகள் பங்கு போட்டன. ஜெர்மன் மேற்கு - ஜெர்மன் கிழக்கு என இரண்டாகக் கூறுபோடப்பட்டது ஜெர்மன். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் ஆதரவுடன் மேற்கு ஜெர்மனியும், கம்யூனிச சித்தாந்த நாடான சோவியத் யூனியன் ஆதரவுடன் கிழக்கு ஜெர்மனியும் உருவாகின. கிழக்கு ஜெர்மனியில் இருந்து மேற்கு ஜெர்மனி நோக்கி மக்கள் வெளியேறுவதைத் தடுக்க பெர்லின் சுவர் 1961-ம் ஆண்டு கட்டப்பட்டது. இருப்பினும் ஆயிரக்கணக்கானோர் சுவர் வழியாக தப்பிச் செல்ல முயன்றனர், இதில் பலர் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்த ஜப்பான், அயராத உழைப்பால் இன்று பொருளாதார வளமிக்க நாடாகத் திகழ்கிறது. இந்த வியத்தகு பொருளாதார எழுச்சி ‘ஜப்பானிய அதிசயம்’ என்று அழைக்கப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தோளோடு தோள் நின்று, இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்து ஹிட்லரை எதிர்த்துப் போர் புரிந்த ஜோசப் ஸ்டாலின், ரஷ்யாவில் சர்வாதிகாரியாகத் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் இரும்புத் திரை நாடாக ரஷ்யா விளங்கியது. அந்த நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் வெளியுலகுக்குத் தெரியாமல் இருந்தன.

பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்ததால், இரண்டாம் உலகப் போரில் இந்தியாவும் பங்கெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. இந்திய ராணுவத்தினர் பிரிட்டிஷ் ராணுவத்தினருடன் இணைந்து ஜப்பான் மீது படையெடுக்கும் சூழலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் உடனே வெளியேற வேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மனிதகுலத்தைக் காப்பாற்றும் காந்தியின் தத்துவம்

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற மகாத்மா காந்தியடிகள் எண்ணற்ற அறப்போராட்டங்களை முன்னெடுத்தார். அவற்றுள் முக்கியமானது உப்பு சத்தியாக்கிரகம். பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் விதித்திருந்த சட்டங்களை மீறி, காந்தியடிகள் தலைமையில் சத்தியாக்கிரகிகள் தண்டிக்குச் சென்று உப்பை அள்ளுவதற்காக அந்த மாபெரும் இயக்கத்தில் அணி, அணியாகப் போலீஸாரின் மூர்க்கத்தனமான தடியடியைச் சந்திக்கப் பெரும் உத்வேகத்துடன் வீறுநடை போட்டுச் சென்றனர். இந்தக் காட்சி இந்திய மக்களின் சுதந்திர வேட்கையை மேலும் உக்கிரமாக்கியது. பிற நாட்டுமக்களிடமும் இந்தப் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பின்னாட்களில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘காந்தி’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டபோது, சத்தியாக்கிரகப் போராட்டக் காட்சியைப் பார்த்து அமெரிக்க மக்கள் பிரமித்துப்போனார்கள்.

“மனிதர்களிடையே ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க, யுத்தத்துக்கு மாற்றாக மற்றொரு வழி இருப்பதைக் காந்திஜி எடுத்துக்காட்டியிருக்கிறார்” என்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பெரும் புலமை பெற்ற பேராசிரியர்கள் பலர் அறிவித்தனர்.

“இன்று மனித குலம் அணுகுண்டு யுகத்தில் வாழ்கிறது. இந்த யுகத்தில் காந்திஜியின் தத்துவம் ஒன்று மட்டுமே மனித குலத்தைக் காப்பாற்றும்” என்று அவர்கள் ஆணித்தரமாக எடுத்துரைத்தனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடந்த கலவரங்கள், பாகிஸ்தான் பிரிவினை போன்ற களேபரங்கள் முடிவடைந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தியத் தலைவர்கள் ஆலோசிக்கலாயினர். அந்த வகையில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்குகின்ற பணி, மிகுந்த அக்கறையுடன் நடைபெற்று வந்தது. அதேசமயத்தில், சட்டமியற்றும் பணிக்காகவும், நிர்வாகப் பணிக்காகவும் அரசியல் நிர்ணய சபை அடிக்கடி கூடியது.

சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைத் தொடர்ந்து ஆர்.கே.சண்முகம் செட்டி மத்திய நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவரது ராஜினாமாவுக்கான உண்மையான காரணங்கள் அப்போது தெரிவிக்கப்படவில்லை. பின்னாளில், வருமான வரி விஷயம் சம்பந்தமாக குறிப்பிட்ட ஒருவருக்குச் சாதகமான சில உத்தரவுகளை அவர் தவறாகப் பிறப்பித்தார் என்பது தெரியவந்தது. மக்கள் பிரதிநிதியான ஓர் அமைச்சர் விவேகமும், முன்யோசனையும் இல்லாமல் ஒரு சிறிய பிழையைச் செய்துவிட்டார் என்றாலும்கூட, அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்படுவார் என்ற நிலை அப்போது இருந்தது.

இவ்வாறு பல அமைச்சர்கள் ராஜினாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். முந்த்ரா ஊழலின் விளைவாக டி.டி.கிருஷ்ணாமாச்சாரி பதவி விலக நேர்ந்தது. ஒரு ஒப்பந்ததாரருக்கு தவறாகச் சில சாதகங்களைச் செய்தார் என்று கூறப்பட்டதால், கே.டி.மாளவியா விலக வேண்டியதாயிற்று. இந்தியா மீது சீனா படையெடுத்ததைத் தொடர்ந்து வி.கே.கிருஷ்ண மேனன் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நேரிட்டது. ஆனால், லால் பகதூர் சாஸ்திரி ஒரு சிறந்த உதாரணத்தை நிலைநாட்டினார். தமிழ்நாட்டில் அரியலூர் அருகே ரயில் விபத்து ஏற்பட்டுப் பலர் உயிரிழந்ததற்கு லால் பகதூர் சாஸ்திரி தார்மீகப் பொறுப்பை ஏற்று ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

பின்னாளில் அதேபோல், பங்கு சந்தை தரகர்கள், வங்கி அதிகாரிகள், நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் இதரர்கள் நடத்தியுள்ள மாபெரும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதற்காக, மத்திய வணிகத் துறை இணையமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம், 1992-ம் ஆண்டில் விலகியதன் மூலம் மற்றொரு நல்ல உதாரணத்தை நிலைநாட்டியிருக்கிறார்.

ஆனால், இப்போதைய நிலைமை என்ன? ஒப்புக் கொள்ளப்படும் உண்மைகளின் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் கூட அசட்டை செய்யப்படுகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகின்ற அமைச்சர்கள் எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல் பதவியில் நீடிக்கிறார்கள்.

ஆர்.கே.சண்முகம் செட்டிக்குப் பதிலாக மத்திய நிதி அமைச்சராக டாக்டர் ஜான் மத்தாய் பொறுப்பு ஏற்றார். அவர் பொருளியல் துறை பேராசிரியராக இருந்தவர். புள்ளி விவரங்கள், தகவல்கள் பற்றிய அவரது ஞாபக சக்தி மிகவும் குறிப்பிடத்தக்கது.கோழிக்கோட்டில் பிறந்தவர் ஜான் மத்தாய். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். இவர் 1922 முதல் 1925 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், அதன் தலைவராகவும் பணியாற்றினார். இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றிய பொருளாதார நிபுணராவார்.

1949-ம் ஆண்டில் நிதியமைச்சர் டாக்டர் ஜான் மத்தாய் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார். நிதிநிலை அறிக்கையை எழுதி வாசிக்காமல், சம்பந்தப்பட்ட எல்லாப் புள்ளி விவரங்கள், எண்கள், தகவல்கள் அனைத்துடன் முன் பிரயத்தனம் இல்லாமல் சபையில் பேச்சு வடிவில் சமர்ப்பித்த ஒரே நிதியமைச்சர் ஜான் மத்தாய் மட்டுமே. அவ்வாறு செய்தது சரியென்று பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தார்கள். அமைச்சர்களின் முக்கியமான அறிக்கையில் தெரிவிக்கப்படும் எந்த விஷயம் குறித்தும், எத்தகைய சந்தேகமும் ஏற்படாமல் தவிர்க்க, எழுத்து வடிவில்தான் முக்கியமான அறிக்கைகள் இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. எனினும் இதற்கு எப்போதும் விலக்குகள் உண்டு.

1949-ம் ஆண்டில் நிதியமைச்சர் டாக்டர் ஜான் மத்தாய் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்கள் அனைத்திலும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகவும் இருந்த சி.சுப்பிரமணியன் பேசினார். அதை சுருக்கமாகப் பார்ப்போம்...

“மூன்றாவது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து மதிப்பிற்குரிய நிதியமைச்சர் நிகழ்த்திய உரையை நாம் அனைவரும் கேட்டோம். முதலில் சமர்ப்பிக்கப்பட்டது இடைக்கால நிதிநிலை அறிக்கை. அதற்குப் பிறகு முழு அளவிலான நிதிநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இப்போது முழு அளவிலான இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசாங்க நிதிகளின் நிலவரத்தை மட்டும் பார்த்தால், நாட்டு நிலவரம் பற்றிய சரியான கருத்து நமக்கு ஏற்படாது என்று நான் கருதுகிறேன். நாட்டின் உண்மையான நிலவரத்தை இந்தச் சபையின் உறுப்பினர்கள் அறிந்து கொள்வதற்கு, அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையுடன் ‘தேசிய நிதி நிலை அறிக்கை’ ஒன்றையும் அரசு தர வேண்டும்.

அரசாங்கம் என்பது ஒரு நோக்கத்தை அடைவதற்கான மார்க்கம் மட்டுமே ஆகும். அரசாங்க அமைப்பு முழுவதுமே தேசியக் கொள்கையை அமல்படுத்தும் பணிக்காகத்தான் உள்ளது. இதை நாம் ஒப்புக் கொள்கிறோம் என்றால், தேசிய வளங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கம் குறித்து நமது தீர்ப்பை வழங்குவதற்கு முன்பாக, தேசிய நிலவரம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது தேசிய வாழ்க்கை சம்பந்தமான நிலவரம் என்ன, பல்வேறு தொழில்களில், தேசிய நடவடிக்கையின் பல்வேறு பிரிவுகளில் உற்பத்தி சம்பந்தமான நிலவரம் என்ன என்பது பற்றிய முழு விவரங்களை மிக விரைவில் இந்தச் சபைக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் அளிக்குமாறு மதிப்புக்குரிய நிதியமைச்சரையும் மத்திய அரசினரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முழு விவரங்கள் கிடைத்த பிறகுதான், நம்மிடம் என்னென்ன வளங்கள் உள்ளன என்றும், நமது தேவைகள் எவையாக இருக்கும் என்றும், எந்தெந்த விதங்களில் நாம் முன்னேற்றம் காண வேண்டும் என்றும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். எனவே, அரசாங்க நிதிகள் சம்பந்தமான புள்ளிவிவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, நாட்டின் உண்மையான நிலவரம் குறித்துத் தீர்ப்பளிக்க நாம் தகுதியுடையவர்களாக இருக்க மாட்டோம் என்று நான் எண்ணுகிறேன்.

பணவீக்கத்திற்கு எதிரான போராட்டமே அரசாங்கத்தின் பிரதான பணியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது; நான் இதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் பணவீக்க நிலவரத்தை கட்டுப்படுத்தப் பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்து நாங்கள் திருப்தி அடையவே இல்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன்.

ஆர்.கே.சண்முகம் செட்டி, டாக்டர் ஜான் மத்தாய், சி.சுப்பிரமணியம்

சென்னையில் துணைப் பிரதம மந்திரி குறிப்பிட்டதைப் போல, பண்டங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ஊழல் ஏற்படுகிறது. கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்றபோது, இது சரியாகச் செயல்படும் என்றே தோன்றுகிறது.ஆனால் உண்மை நடைமுறையில் ஏராளமான சிரமங்களும் ஊழலும் விளைகின்றன.

உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வது, மற்றும் ரேஷன் கொள்கை சம்பந்தமாக மாகாணங்களுக்கு ஓரளவு சுயாட்சி அதிகாரத்தை அனுமதிக்க வேண்டும். மாகாணங்களுக்கு உணவுத் தானிய ஒதுக்கீடு அளவு பற்றி முடிவு செய்ததும், மாகாணங்களுக்கு மிகவும் பொருத்தமான திட்டங்களின்படி விநியோகம் மற்றும் கொள்முதல் குறித்து நடவடிக்கைகளை வகுத்துக் கொள்ள மாகாணங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.” - சி.சுப்பிரமணியத்தின் இத்தகைய பேச்சு அனைவரையும் கவனிக்க வைத்தது.

கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்து மவுண்ட் பேட்டன் பிரபு, 1948 ஜூன் 21-ஆம் தேதி ஓய்வு பெற்றார். அப்போது மேற்குவங்க ஆளுநராக இருந்த ராஜாஜி, இந்திய கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். ராஜாஜி முதலாவது இந்திய கவர்னர் ஜெனரல், இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வருவற்கு முன்பாகப் பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும் ராஜாஜியே. அப்போது ஜவஹர்லால் நேருவுக்கும், ராஜாஜிக்கும் இடையே சிறந்த உறவு நிலவியது. உண்மையில், கவர்னர் ஜெனரல் பதவிக்கு ராஜாஜியின் பெயரை முதலில் எடுத்துக் கூறியவர் நேருஜிதான்.

அரசியல் சாசனப் பீடிகை

1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபை இறுதியாக நிறைவேற்றியது. இந்திய அரசியல் சாசனத்துக்கு ஒரு பீடிகை, அதாவது முகவுரை எழுதப்பட்டது. இந்தியாவில் அரசியல், சமூக, பொருளாதார அமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்தப் பீடிகை மிகத் தெளிவாகக் கூறுகிறது. அதன் முழு வாசகம் வருமாறு:

“இந்திய மக்களாகிய நாங்கள், இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக இந்தியாவை உருவாக்குவது என்றும், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் நீதியையும், சிந்தனை, கருத்துத் தெரிவித்தல், சமயக் கோட்பாடு, சமய நம்பிக்கை ஆகியவற்றுக்குச் சுதந்திரத்தையும், சமநிலையையும், சம வாய்ப்புகளையும் பெற்றுத் தருவது என்றும், தனி நபர் கெளரவத்தை உறுதி கூறும் சகோதரத் தன்மையையும், நாட்டின் ஐக்கியத்தையும் மக்கள் அனைவரிடமும் வளர்ப்பது என்றும், பயபக்தியுடன் கூடிய பவித்திரமான உணர்வுடன் தீர்மானித்துள்ள நிலையில், 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாளாகிய இன்று, எங்களது அரசியல் நிர்ணயசபையில், இந்த அரசியல் சாசனத்தை, இதன் மூலம் ஏற்றுக் கொண்டு, சட்டமாக்கி, எங்களுக்கு அளித்துக் கொள்கின்றோம்.” - இவ்வாறு அரசியல் சாசனத்தின் முகவுரை கூறுகிறது.

அரசியல் சாசன ஆவணத்தில் கையெழுத்திடுகின்ற பெரும் பேறு சி.சுப்பிரமணியம் மற்றும் அரசியல் நிர்ணய சபையின் இதர உறுப்பினர்களுக்கும் கிட்டியது.

இவ்வாறு முற்றிலும் சுதந்திரமான இந்தியா உருவாயிற்று. ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15-ம் தேதியன்றும், குடியரசுத் தினத்தை ஜனவரி 26-ம் தேதியன்றும் நாம் கொண்டாடி வருகிறோம்.

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் லாகூரில் 1930-ம் ஆண்டு இதே ஜனவரி 26-ம் தேதி நடந்த கூட்டத்தில், ‘பூர்ண ஸ்வராஜ்’ அல்லது ‘முழு சுதந்திரம் வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம்: மகாத்மா காந்தி கொலையும், நீதிமன்ற தீர்ப்பும் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 38

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x