Last Updated : 17 Jul, 2025 09:26 AM

1  

Published : 17 Jul 2025 09:26 AM
Last Updated : 17 Jul 2025 09:26 AM

சமோசா, ஜிலேபி, லட்டு ஆரோக்கியமற்றதா..?

படம்: மெட்டா ஏஐ

சமோசா, ஜிலேபி, லட்டு போன்ற இந்திய மக்களால் அன்றாடம் விரும்பி உண்ணப்படும் உணவுகள் ஆரோக்கியமற்றவை என்றும், இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்புகள் இந்த உணவுப் பொருட்களுடன் இணைத்து வெளியிடப்படும் என்று சமீபத்தில் வெளியான செய்தி, இவற்றை விரும்பி உண்ணும் மக்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த கலக்கத்தை ஏற்படுத்தியது.

சாலையோரம் விற்கப்படும் இந்திய உணவுப் பொருட்களை குறிவைத்து இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவதாக ஒருசாரார் விமர்சிக்கவும் தவறவில்லை. இச்செய்தி வெளியான மறுநாளே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில், மறுப்பு வெளியிடப்பட்டது.

“இந்த உணவுகள் ஆரோக்கியமற்றவை என்று நாங்கள் அறிவிக்கவில்லை; அதிக எண்ணெய் மற்றும் இனிப்பு கலந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டது. இந்திய பாரம்பரிய, கலாசார உணவுப் பொருட்களை தடை செய்யும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை” என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த உணவுகள் இந்திய மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படுபவை என்பது உண்மை என்றாலும், ஆரோக்கியமற்றதா என்பது விவாதத்திற்குரியதே. எந்த உணவுப் பண்டமாக இருந்தாலும் குறைந்த அளவில் எப்போதாவது ஒருமுறை உண்ணும்போது உடல்நலத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. இந்த விவாதத்திற்கு மத்தியில் இந்தியர்களின் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்தும் விமர்சனம் எழுந்து வருகிறது.

குறிப்பாக, சமீப காலமாக இளம் வயதுடையவர்கள் இதயக் கோளாறு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை தொடர்புபடுத்தி இத்தகைய விவாதம் நடைபெறுகிறது. வரும் 2050-ம் ஆண்டில் 44.9 கோடி இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனுடன் இருப்பார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

தற்போது நகரங்களில் எடுத்த ஆய்வில், 5ல் ஒருவர் உடல் பருமனுடன் இருப்பதாகவும், அதிக எடையுடன் கூடிய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. உடல் நலன் மீது நாம் இன்னும் சற்று கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்பதையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன.

சில தசாப்தங்களுக்கு முன்பு வரை சீன மக்கள் உயரம் குறைந்தவர்களாக இருந்தனர். இதை தேசிய பிரச்சினையாக கருதி, நிபுணர்கள் அறிவுரைப்படி குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க ஊட்டச்சத்து வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அந்நாடு எடுத்தது. அதன் விளைவாக, கடந்த 1985-ம் ஆண்டு முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 19 வயதுடைய இளைஞர்களின் உயரம் ஆண்களுக்கு 8.1 செ.மீட்டரும், பெண்களுக்கு 6.1 செ.மீட்டரும் அதிகரித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2030-ம் ஆண்டில் சீனர்களின் சராசரி உயரம் 176.5 செ.மீட்டராக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதுபோல இந்திய மக்களின் ஆரோக்கியம் தொடர்பாக நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் தேசிய அளவில் சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி உடல் பருமன், இதயக் கோளாறு, உயரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x