Last Updated : 16 Jul, 2025 06:41 AM

4  

Published : 16 Jul 2025 06:41 AM
Last Updated : 16 Jul 2025 06:41 AM

மருத்துவக் கட்டமைப்பில் தமிழகம் தவறவிடும் விஷயங்கள் | சொல்... பொருள்... தெளிவு

மருத்துவக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில், நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்கள் - குழந்தைகள் நலப் பராமரிப்பு, தொற்றுநோய் - தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் தமிழ்நாட்டின் செயல்பாடு சிறப்பாகவே தொடர்கிறது. ​

திட்​ட​மிடப்பட்ட சுகாதாரக் கட்டமைப்புகள், ஆக்கபூர்வமான திட்டங்கள், உயர்தரச் சிகிச்சைகள் போன்றவை இதற்கு அடித்​தளமாக உள்ளன. சுகாதாரத் துறையின் இத்தகைய நிறைகளுக்கு மத்தி​யில், சில குறைகளும் நீடிக்​கின்றன. பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்​பப்​ப​டாதது, மருத்​துவத் துறையினரின் வேலைப் பளு போன்றவை தமிழக சுகாதாரத் துறைக்கு நெருக்​கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.

சாதனைத் திட்டங்கள்: தாய் - சேய் நலம், தொற்று​நோய்​களைக் கட்டுப்​படுத்து​வதில் பல்வேறு முதன்​மையான திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிமுகப்​படுத்​தப்​பட்​டிருக்​கின்றன. குறிப்பாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் மூலம், பொருளா​தாரம் - சமூகரீ​தி​யாகப் பின்தங்கிய கர்ப்​பிணி​களுக்கு நிதி - ஊட்டச்​சத்து ஆதரவை இத்திட்டம் வழங்கு​கிறது.

தமிழக முதல்​வரின் விரிவான மருத்​துவக் காப்பீட்டுத் திட்டத்​தில், பச்சிளம் குழந்தை​களுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகள், எட்டு தொடர் சிகிச்சைகள், 52 பரிசோதனை முறைகள் அடங்கி​யுள்ளன; இதன் மூலம் வருமானத்தில் பின்தங்கிய மக்களுக்கான மருத்​துவப் பாதுகாப்பை அரசு வழங்கிவரு​கிறது.

2021இல் அறிமுகப்​படுத்​தப்​பட்ட, ‘மக்களைத் தேடி மருத்​துவம்’ திட்டத்தின் மூலம், நீரிழிவு - உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான மருந்துகள் மக்களின் வீடுகளுக்கே கொண்டு​செல்​லப்​பட்டு விநியோகிக்​கப்​படு​கின்றன. காசநோய் இறப்பை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்​பதில் தமிழ்நாடு முன்மா​திரி​யாகச் செயல்​படு​கிறது. 2022இல் தொடங்​கப்பட்ட முன்னெடுப்பின் மூலம் 10-20% காசநோய் இறப்புகள் குறைந்துள்ளன.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகமானது, அரசு மருத்​துவ​மனை​களுக்கு மருந்து கொள்முதல் - விநியோகத்தை ஒழுங்குபடுத்தி, மக்களுக்கு மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி​செய்​கிறது. மாநில உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் ஒழுங்குபடுத்​தப்​படு​கின்றன. ஆரம்பக் கட்டத்​திலேயே புற்று​நோயைக் கண்டறிந்து, அதைத் தடுக்கும் வகையில் சமுதாய அடிப்​படையிலான புற்று​நோய்ப் பரிசோதனைத் திட்டங்கள் தொடங்​கப்​பட்​டுள்ளன.

மருத்​துவப் பயன்கள்: தாய் - சேய் நலத் திட்டங்​களின் மூலம் தமிழ்​நாட்டில் குழந்தைகள் - தாய்மார்கள் இறப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தாய் இறப்பு விகிதம் 2023-2024இல் 45.5 ஆக இருந்த நிலையில், 2024-2025இல் இது 39.4 ஆகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 2023-2024 இல், 8.2 ஆக இருந்தது; 2024-2025இல் 7.7 ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தின் சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பு (HMIS) வெளியிட்ட அறிக்கை இதை உறுதி​செய்​கிறது.

மேலும், ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தை​களின் இறப்பு விகிதம், 2023-2024இல் 8.9 ஆக இருந்த நிலையில், 2024-2025இல் 8.2 ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் உயர் ரத்த அழுத்தம் - நீரிழிவு நோயைக் கட்டுப்​படுத்து​வதில் ‘மக்களைத் தேடி மருத்​துவம் திட்டம்’ சிறப்​பாகச் செயல்​பட்டு வருகிறது.

அதன்படி, உயர் ரத்த அழுத்தம் உள்ள பெரிய​வர்​களுக்கு, ரத்த அழுத்தக் கட்டுப்​பாட்டில் உள்ள விகிதம் 17% ஆக (முந்தைய அளவு 7.3%) உயர்ந்துள்ளது. அதேபோல், நீரிழிவு நோயாளி​களில், ரத்த சர்க்கரை கட்டுப்​பாட்டில் உள்ள விகிதம் 16.7% ஆக (முந்தைய அளவு 10.8%) உயர்ந்துள்ளது. மக்களைத் தேடி மருத்​துவத் திட்டத்தின் மூலம் 2025, மார்ச் வரை 2.24 கோடி பேர் பயனடைந்துள்ளது குறிப்​பிடத்​தக்கது.

நிரப்​பப்படாத பணியிடங்கள்: தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பு விரிவடைந்து​வரும் அதேநேரத்​தில், பணியாளர்கள் பற்றாக்குறை நிலவிவரு​கிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு​வதில் தொடரும் தாமதம் - புதிய பணியிடங்கள் உருவாக்​கப்​ப​டாதது ஆகியவை தமிழக சுகாதாரத் துறையில் நெருக்​கடியை ஏற்படுத்​திவரு​கின்றன.

தமிழகத்தில் உள்ள 8,488 துணை சுகாதார நிலையங்​களில் 4 ஆயிரத்​துக்கும் மேற்பட்ட கிராமப்புற சுகாதாரச் செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்​பப்​ப​டாமல் உள்ளன. 50% பணியிடங்கள் காலியாக இருப்​ப​தால், பணியில் உள்ள கிராமப்புறச் சுகாதார செவிலியர்​களுக்குப் பணிச்சுமை கடுமையாக அதிகரித்​துள்ளது.

இந்தியப் பொது சுகாதாரத் தரநிலை​யின்படி (IPHS), நோயாளி​களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்​துவர்​களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆனால், அரசு மருத்​துவ​மனை​களில் நோயாளி​களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்பப் பணியாளர்​களின் எண்ணிக்கை உயரவில்லை என மருத்​துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டு​களில், முதன்மை சுகாதார நிலையங்​களுக்கு ஏறக்குறைய 3,500 மருத்துவ அதிகாரிகள் நியமிக்​கப்​பட்​டாலும், இரண்டாம் - மூன்றாம் நிலைகளில் உள்ள பராமரிப்பு நிலையங்​களில் மருத்துவ நிபுணர்​களின் பற்றாக்குறை இன்னும் தீர்க்​கப்படாத பிரச்சினையாவே தொடர்​கிறது.

குறிப்பாக, இதய அறுவைசிகிச்சை - ரத்த நாள அறுவைசிகிச்சை போன்ற மிக உயர்நிலை நிபுணத்துவப் பிரிவு​களில் மருத்​துவர்கள் பற்றாக்குறை நீடிக்​கிறது; உளவியல் மருத்​துவர்​களும் அரசு மருத்​துவ​மனை​களில் குறைந்த எண்ணிக்கை​யிலேயே நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

நிபுணத்துவம் கொண்ட மருத்​துவர்கள் இல்லாத மருத்​துவ​மனை​களில், பயிற்சி மருத்​துவர்களே நோயாளி​களுக்குச் சிகிச்சை அளிக்​கின்​றனர். இத்தகைய சூழலில், மூத்த மருத்​துவர்​களின் வழிகாட்டுதல் இல்லாமல் பயிற்சி மருத்​துவர்களே சிகிச்சை அளிப்பதை எப்படி ஏற்றுக்​கொள்ள முடியும் என்கிற கேள்விகள் எழுகின்றன.

மதுரை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் போன்ற பல்வேறு மாவட்​டங்​களில் அரசு மருத்​துவ​மனை​களில் நிலவும் மருத்​துவர் - செவிலியர் பற்றாக்குறை காரணமாக நோயாளி​களுக்கு உடனுக்​குடன் சிகிச்சை வழங்கு​வதில் தாமதம் ஏற்படு​கிறது. பல ஆரம்ப சுகாதார நிலையங்​களில் ஒரே ஒரு மருத்​துவர் மட்டுமே இருப்​ப​தாகச் செயல்​பாட்​டாளர்​களும் விமர்​சிக்​கின்​றனர். குறைந்த ஊதியம் - அதிக பணிச் சுமை காரணமாக அரசு மருத்​துவர்கள் உளவியல் ​ரீ​தி​யாகப் பாதிக்​கப்​படும் சூழலும் உருவாகி​யுள்ளது.

துரித நடவடிக்கை தேவை: தமிழ்​நாட்டில் பதிவு செய்யப்​பட்​டுள்ள மருத்​துவர்​களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு மருத்​துவ​மனை​களில் மருத்​துவர்​களின் எண்ணிக்கை உயர்த்​தப்பட வேண்டும்; மருத்​துவர்​களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து காலி மருத்​துவப் பணியிடங்கள் உடனடியாக நிரப்​பப்பட வேண்டும்.

கர்ப்​பிணிகள் இறப்பைக் குறைக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து​வரு​கிறது. எனினும், மருத்​துவ​மனை​களில் மகப்பேறு மருத்​துவர்கள் போதிய எண்ணிக்கையில் இருந்தால் மட்டுமே தாய் - சேய் இறப்பைக் குறைப்​பதில் நிர்ண​யித்த இலக்கை எட்ட முடியும்.

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் நிலவும் கட்டுப்​பாட்டு வரம்புகள் நீக்கப்பட வேண்டும்; இத்திட்​டத்தில் பங்கேற்கும் சில தனியார் மருத்​துவ​மனைகள், காப்பீட்டுத் தொகையை முழுமை​யாகப் பயன்படுத்தி, அதற்கு மேலும் கூடுதல் கட்டணம் பெறுவதாக எழும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்​கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மேம்பட்ட சுகாதார உள்கட்​டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்​தா​லும், அதிகப் பணிச்சுமை கொண்ட சுகாதாரப் பணியாளர்​களால் அதன் செயல்​திறன் பாதிக்​கப்​படக்​கூடும். இதைச் சரிசெய்ய, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், புதிய பணியிடங்களை உருவாக்​குதல், மருத்துவ நிபுணர்​களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கை​களில் அரசு துரிதமாக இறங்க வேண்டும். இதில் அலட்சியம் தொடர்ந்​தால், மருத்துவ சேவை பாதிக்​கப்​படு​வதுடன், அரசு மருத்​துவ​மனைகள் மீதான மக்களின் நம்​பிக்கையும் சீர்​குலைந்து​விடும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x