Published : 13 Jul 2025 12:23 PM
Last Updated : 13 Jul 2025 12:23 PM
நம் நாடு விடுதலையடைந்து சரியாக ஐந்தரை மாதங்களிலேயே அதாவது 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். 1934-ல் இருந்து 5 முறை அவரைக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த நிலையில், 6-வது முறை கொலை செய்யப்பட்டார்.
டில்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியின் கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது. 1949-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நீதிபதி ஆத்மா சரண், மரண தண்டனை விதித்தார். விஷ்ணு கர்கரே, மதன்லால் பாஹ்வா, ஷங்கர் கிஸ்ட்யா, கோபால் கோட்சே, தத்தாத்ரேயா பர்ச்சுரே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பைக் கேட்டதும், கோட்சே உட்பட அனைவரும் 'இந்து மதம் வாழ்க, பாகிஸ்தானை பிரிப்போம், இந்தி இந்து இந்துஸ்தான்' என்ற முழக்கங்களை எழுப்பினர்.
பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட் பேட்டன், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் 1948-ம் ஆண்டில் பிரிட்டன் திரும்பினார். அதைத்தொடர்ந்து கவர்னர் ஜெனரல் பொறுப்பை ராஜாஜி எற்றுக் கொண்டார்.
அந்த காலகட்டத்தில் மவுண்ட் பேட்டன் கூறியதாக ஒரு செய்தி உலா வந்தது. அதாவது, இந்தியாவுக்கு அருகில் உள்ள இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மற்றும் இலங்கையின் மத்திய மலைநாட்டில் மலையகத் தமிழர்கள் வாழும் குறிப்பாக, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, ரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்களை இந்தியாவுடன் இணைத்து விடலாம் என்று கூறியதாகவும், அதற்கு படேல், அது தவறான முன்னுதாரணமாகி விடும். இலங்கை வேறொரு நாடு. அந்த நாட்டின் பகுதிகளை இந்தியாவோடு சேர்ப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும், சட்ட சிக்கல்களும் உள்ளன. எனவே அது சாத்தியமாகாது என்று கூறியதாகவும் சொல்லப்பட்டது.
சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் ஏறக்குறைய 562 சமஸ்தானங்கள் இருந்தன. சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலான இந்திய அரசு, இந்த சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைக்கும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டது. ஆனால் பல சமஸ்தானங்கள் முரண்டு பிடித்தன. காரணம் அவை சுதந்திரமாக இருக்க விரும்பின. சில பாகிஸ்தானுடன் இணைய விரும்பின. சில இந்தியாவுடன் இணைய தயக்கம் காட்டின. அத்தகைய சமஸ்தானங்களை பணிய வைக்கும் பணியில் படேல் தீவிரமாக ஈடுபட்டார்.
குஜராத்தின் 7-வது பெரிய நகரம் ஜுனாகத், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இஸ்லாமிய சமஸ்தானமாக இருந்தது. அது இந்தியாவுடன் இணைய மறுத்தது. ஆனால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்ற சர்தார் வல்லபாய் படேலின் அச்சுறுத்தல் காரணமாக வேறு வழியில்லாமல் இந்தியாவுடன் இணைந்தது.
தமிழ்நாட்டுப் பகுதியில் இருந்த ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை. அதன் மன்னர் ராஜ ராஜகோபால தொண்டைமான் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இந்தியாவுடன் உடனே இணைந்துவிட்டார்.
ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக தெலுங்கானா முன்பு இருந்தது. நிஜாம்களின் ஆட்சியின் கீழ் இருந்த இந்த சமஸ்தானம், பின்னர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஹைதராபாத் சமஸ்தானத்தின் கடைசி ஆட்சியாளரான ஏழாம் நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் இந்தியாவுடன் இணைவதற்கு முட்டுக்கட்டை போட்டுவந்தார். மேலும், அவர் பாகிஸ்தானோடு இணைய விருப்பம் தெரிவித்து முகமதுஅலி ஜின்னாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அதேநேரம், சர்தார் படேலும் சென்னை ராஜ்தானியின் அன்றைய பிரதமர் (முதல்வர்) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் திட்டமிடலின் காரணமாக ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. இவ்வாறு பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்து விட்டன அல்லது இணைக்கப்பட்டன.
இந்திய அரசியல் சாசன வரைவுக் கமிட்டியின் தலைவராக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். கமிட்டியில் இருந்த பி.என்.ராவ், இன்றைய அரசியல் சாசனத்தை எழுதுவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார். பி.என்.ராவ் இல்லை என்றால் இந்திய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது.
பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அரசியல் சாசன ஷரத்துகளை எல்லாம் அறிந்து வந்தார். அந்த வகையில், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்காண்டிநேவியா, ஆஸ்திரேலிய, ஜப்பான், சோவியத் நாடுகளுக்கெல்லாம் சென்று, அங்குள்ள அரசியல் சாசனம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்தார்.
அனைத்து விவரங்களையும் தொகுத்து, அந்தக்கால ரெமிங்டன் தட்டச்சு இயந்திரத்தில் இரவும் பகலுமாக ஓய்வு - தூக்கமில்லாமல் தட்டச்சு செய்து ஒழுங்குபடுத்தினார். இதுகுறித்தான தகவல்கள் இன்றைக்கு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பி.என்.ராவ் ஆந்திராவைச் சேர்ந்தவர். சென்னை ராஜ்தானியில்தான் அவர் பிறந்தார். அவரைப் பற்றிய எந்தவிதமான பேச்சுக்களோ, தகவல்களோ இன்றைக்கு வருவதில்லை என்பது வருத்தமான செய்தி.
இதேபோல் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகித்த வழக்குரைஞர்களில் மிகச் சிறந்து விளங்கியவர் அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர். அரசியல் நிர்ணய சபையில் சட்ட நிபுணராகவும், அரசியல் சாசன நிபுணராகவும் பங்காற்றுவதை மட்டுமே அவர் தமது பணியாகக் கொண்டிருந்தார்.
அவரது உழைப்பும், விடாமுயற்சியும் சோர்வே அறியாதவை. சட்டம் பற்றிய அவரது அறிவு மிகவும் விசாலமானது. அன்றைய சென்னை மாகாண அட்வகேட் ஜெனரலாக அல்லடி கிருஷ்ண சுவாமி ஐயர் நீண்ட காலம் இருந்திருக்கிறார். அரசியல் சாசனத் தயாரிப்பு பணியில் அந்த அனுபவம் மிகவும் உதவிகரமாக இருந்தது.
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு நேரு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தொழிற்சாலைகள், அணைகள் நாட்டுக்குத் தேவை என்பதை உணர்ந்த நேரு, தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தை அறிவித்தார். தாமோதர் பள்ளத்தாக்கு என்பது மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள தாமோதர் நதியின் பள்ளத்தாக்கு ஆகும். இந்தியாவின் முதல் பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டமான இது, வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், மின் உற்பத்தி போன்ற பல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.
அதேபோல் ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் ஹீராகுட் அணைத் திட்டத்துக்கும் நேரு அடிக்கல் நாட்டினார். மகாநதி ஆற்றின் குறுக்கே ஹீராகுட் அணை கட்டப்பட்டது. இது இந்தியாவின் மிக நீளமான அணைகளில் ஒன்றாகும். மேலும், சுதந்திரத்துக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது. இவையெல்லாம் இந்தியாவின் முக்கியமான நீர்ப்பாசன திட்டங்களாகும்.
கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) நீர் பங்கீடு தொடர்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. கராச்சியில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கான் ஆகியோர் செப்டம்பர் 19, 1960 அன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதியின் கிழக்கு நதிகள் (ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்) இந்தியாவுக்கும், மேற்கு நதிகள் (சிந்து, ஜீலம் மற்றும் செனாப்) பாகிஸ்தானுக்கும் பிரிக்கப்பட்டன. கிழக்கு நதிகளின் நீரை இந்தியா முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் மேற்கு நதிகளின் நீரை பாகிஸ்தான் அதிகமாகப் பயன்படுத்தும். இந்தியா தோராயமாக 20% சிந்து நதி நீரைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் பாகிஸ்தான் 80% நீரைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பகைமை இருந்தாலும் சிந்து நதி நீரை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்று நேரு காலத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, இந்திய நிர்வாகத்தின் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கூறி, இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. நிறுத்தப்பட்ட சிந்து நதி தண்ணீரை கால்வாய்கள் அமைத்து ராஜஸ்தான் பாலைவனப் பகுதிகளுக்கு கொண்டுசெல்ல தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஒரு தகவலை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்...
மகாத்மா காந்தி இறந்தபோது, அவருடனான நினைவுகளை அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவுகூர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
‘மகாத்மா ஸ்பெஷல்’ என்ற ஒரு சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பியது. கிண்டி ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி அந்த ரயிலில் ஏறிக் கொண்டார். இரவில் காந்தி தூங்குவதற்காக காட்டுப்பாக்கத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. நாலாபுறமும் போலீஸார் காவல் பணியில் ஈடுபட்டனர். ரயிலில் காந்திஜி வருவது தெரிந்தால், மக்கள் கூடுவார்கள், இதனால் அவரது தூக்கம் கெடும் என்று கருதி இந்த விவரத்தை யாருக்கும் தெரிவிக்கவில்லை.
ஏன்... காட்டுப்பாக்கம் ஸ்டேஷன் மாஸ்டருக்குக் கூட தெரிவிக்கவில்லை. இருந்தபோதும் எப்படியோ செய்தியறிந்து மக்கள் அங்கு கூடி விட்டனர். காட்டுப்பாக்கத்தில் இரவில் ரயிலில் கொசுக்கடியால் தூக்கமில்லாமல் தவித்தேன் என்று தன்னிடம் காந்திஜி கூறியதாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவுகூர்ந்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டபின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. தேவராஜ் முதலியார் வீட்டிலும், பவளக்காரத் தெருவிலும் அடுத்தக்கட்டப் பணிகள் குறித்து அண்ணா ஆலோசனை நடத்தினார். அதில் ஈ.வி.கே.எஸ்.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன், கலைஞர், என்.வி.நடராஜன், சி.பி.சிற்றரசு, கண்ணதாசன் போன்றவர்கள் கலந்து கொண்டர்கள். பிரச்சாரக் குழு, தலைமை நிலைய நிர்வாகக் குழு என்று பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.
தேவராஜ் முதலியார் வீட்டில் காராபூந்தி, பகோடா சுவைத்தபடியும், டீயைக் குடித்துக் கொண்டும் விடிய விடிய ஆலோசனை மேற்கொண்டார் அண்ணா. தேவராஜ் முதலியார் வீட்டில் கிழிந்த சோபா ஒன்று, உடைந்த நாற்காலி இரண்டு, ஓட்டை விழுந்த பாய்கள், அழுக்கேறிய தலையணைகள் இருந்தன. அங்குதான் அண்ணாவின் ஆலோசனைகள் நடைபெற்றன.
இன்றைக்கு சாதாரண கவுன்சிலர் கூட கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொகுசு வாகனம், ஆடம்பர மாளிகை என வலம் வருகின்றனர். சைக்கிளில் சென்றவர்கள் பதவி வந்தவுடன் சொகுசு கார்களில் கட்சிக் கொடியுடன் பறக்கிறார்கள். இதுவா முன்னேற்றம்? நாடும், மக்களும் முன்னேற வேண்டும். அதுதான் நல்ல அரசியலுக்கு வழிகோலும்.
திமுகவை நிறுவி முதலமைச்சராக அண்ணா இருந்தது குறைந்த நாட்களே. அவருடைய கொள்கையின்படிதான்இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்களா? என்றால் அது கேள்விக்குறிதான்.
அண்ணாவினுடைய வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டபோது, அண்ணாவால் பயனடைந்தவர்கள் அவரை எட்டிக்கூட பார்க்க வரவில்லை. அண்ணா இல்லை என்றால் திமுக கிடையாது. யார் யாருக்கோ ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்பு கொடுத்தவர்கள், அண்ணாவினுடைய வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளத்துக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாமே? அண்ணா இறந்தவுடன் ஏதாவது செய்யவேண்டும் என்ற நிர்பந்தத்தில்தான், அன்றைக்கு ராணி அண்ணாதுரைக்கு, தமிழக மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவி தரப்பட்டது.
திமுக தொடங்கப்பட்டவுடன் கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எங்கள் ஊரான திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்த கலைஞர், நெல்லை, தூத்துக்குடி கோவில்பட்டியில் நிர்வாகிகளைச் சந்தித்து கட்சி அலுவலகங்களைத் தொடங்கி வைத்தார். கோவில்பட்டி தெற்கு பஜாரில் உள்ள ஜில் விலாஸ் பானங்கள் உற்பத்தி செய்யும் அந்தக் கட்டிடம் இன்றைக்கும் இருக்கிறது. 'L' வடிவில் அமைந்த தெருவில்தான் அந்தக் கட்டிடம் அமைந்திருக்கிறது. அங்குதான் திமுக கொடியேற்றினார் கலைஞர். அந்த நினைவுக் கம்பம் இன்று இல்லை. அதை மீண்டும் நிறுவ நான் முயற்சி செய்தபோதுதான் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
அதேபோல் எட்டையபுரம் பாரதி இல்லத்தில், இல்லம் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் நினைவாக வைக்கப்பட்ட கல்வெட்டு, பின்னர் வந்த ஆட்சியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அந்த கல்வெட்டு பற்றி அப்பகுதி நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. 2009-ம் ஆண்டு, நான் மீண்டும் திமுகவில் இணைந்த ஒரு மாதத்தில் என்னுடைய முன்னெடுப்பினால், அந்தக் கல்வெட்டு மீண்டும் அங்கு வைக்கப்பட்டது.
கட்சியால் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில்தான் முக்கிய நிர்வாகிகள் செயல்படுவார்கள். ஆனால் அதற்கு மாறாக நான் செயல்பட்டதால், இல்லாததும் - பொல்லாததும் சொல்லி கட்சியின் தலைவரால் நான் வெளியேற்றப்பட்டேன்.
(தொடரும்...)
முந்தைய அத்தியாயம்: சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மதக்கலவரங்கள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 37
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT