Published : 12 Jul 2025 12:59 PM
Last Updated : 12 Jul 2025 12:59 PM

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மதக்கலவரங்கள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 37

இடது: 1946-ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட இந்து - முஸ்லீம் கலவரம் | வலது: நவகாளி யாத்திரையின்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் உரையாடிய காந்தி.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்திய நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இந்தியா முழுவதும் எண்ணற்ற தலைவர்கள் போராடினர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். சொத்து சுகங்களை இழந்தனர். அந்த ஒப்பற்ற தியாகங்களின் விளைவால் இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைக்கப் பெற்றது.

அதேநேரம் போராடிப் பெற்ற சுந்திரத்தை கொண்டாடுவதற்கு மாறாக, பஞ்சாப், வங்காளம் போன்ற மாகாணங்களில் ஏற்பட்ட இனக் கலவரங்கள் தலைவர்களை மட்டுமல்ல; மக்களையும் அச்சத்துக்கு உள்ளாக்கின. நகரங்கள் பற்றியெறிந்தன. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான சொத்துகள் சேதமடைந்தன. இந்த சம்பவங்கள் எல்லாம் மகாத்மா காந்திக்கு வேதனையை ஏற்படுத்தின.

டில்லியில் இந்திய விடுதலை விழாவை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்தார். ஒரே நாட்டில் ஒருமித்து வாழ்ந்துவந்த இந்துக்களும் - முஸ்லீம்களும் ஏதோ அயலார் போல ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டுக் கொண்டிருந்தார்கள். இரு மதத்தினருக்கும் இடையே அமைதியை உண்டாக்க காந்திஜி எவ்வளவோ முயன்றார். பலனில்லை.

அதைத்தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு புதிய சுதந்திர நாடுகளை உருவாக்குகின்ற பணியும், அவற்றுக்கு இடையே உடமைகளையும், கடன் பொறுப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் பணியும் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதேநேரத்தில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்கள் மதிகெட்டு, மிகப் பெரிய அளவில் அர்த்தமற்ற வன்முறையில் ஈடுபட்டார்கள்.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பாகவே, நாட்டின் பல பகுதிகளில் மதக் கலவரங்கள் ஆங்காங்கே வெடித்தன. சுதந்திரம் பெற்றதும் அது உச்சத்தை அடைந்தது. 1947, ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இரவு கிழக்கு பஞ்சாப், மேற்கு பஞ்சாப், வட மேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து மாகாணம் ஆகியவற்றில் பல மாதங்கள் வன்முறைக் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்றன. (இந்த மாகாணங்களில் பஞ்சாபில் கிழக்குப் பகுதி நீங்கலாக இதர எல்லா பகுதிகளுமே இப்போது பாகிஸ்தானில் உள்ளன.)

கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிக ஏராளமான இந்துக்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும், மிக ஏராளமான முஸ்லீம்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் குடிபெயர்ந்தார்கள். இந்த அளவுக்கு வன்முறை மூளும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. எனவே இதைச் சமாளிக்க எவரும் தயார் நிலையில் இல்லை. இரு மதத்தினரும் முன் எப்போதும் கண்டிராத அளவில் வன்முறையில் ஈடுபட்டனர்.

முன்னதாக, 1946-ம் ஆண்டில் வங்காளத்தில் மதக் கலவரம் தலைவிரித்தாடியது. இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் ஒன்றான நவகாளி மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின. இந்த தாக்குதலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்களும், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, அங்குள்ள மக்களிடையே அமைதியை ஏற்படுத்தவும், மக்களை ஒற்றுமைப்படுத்தவும் மகாத்மா காந்தி, நவகாளிக்குச் சென்று, அமைதிப் பயணத்தைத் தொடங்கினார். இந்த யாத்திரை, காந்தியின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பயணமாகும்.

நாடு விடுதலை பெற்றவுடன் வங்கப் பிரிவினை நடந்தது. மேற்குவங்கம் இந்தியாவோடும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானோடும் செல்ல திட்டமிட்டது. அப்போதும், வங்கத்தில் குறிப்பாக கல்கத்தாவில் கலவரம் பற்றியெறிந்தது. வன்முறை சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். காந்தியின் உயிருக்கு பலமுறை ஆபத்துகள் வந்தன. அவற்றில் இருந்தெல்லாம் அவர் தப்பித்தார்.

இனிமேல் அமைதி, ஒருமைப்பாடு, வளர்ச்சி என்ற நோக்கில் நாடு செல்ல வேண்டும். நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் இயக்கம் கட்டியமைக்கப்பட்டது. இனி அதை விடுத்து, நாட்டின் நிர்மாணப் பணிகளைத் தொடங்க வேண்டும். அத்தகைய இக்கட்டான சூழலில் இந்த மாதிரியான கலவரங்கள் நடப்பது தன்னை மிகவும் வேதனைப்படுத்துவதாக மகாத்மா காந்தி மிகவும் வருந்தினார்.

அதேபோல், காங்கிரஸில் இருந்து தான் விலகி விடுவதாக காந்தி சொன்னதும் உண்டு. சில விவகாரங்களில் காந்திக்கும் நேருவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதும் உண்டு. இதற்கிடையே, பாகிஸ்தான் போல இந்திய மாநிலங்கள் தங்கள் விருப்பம்போல் செயல்படலாம் என்று ராஜாஜி கூறிய கருத்து காந்திக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது.

சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராகவும், பின்னாளில் ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சராகவும் விளங்கிய ‘ஆந்திர கேசரி’ என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசமும், காமராஜரும் ராஜாஜியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ராஜாஜியின் இந்த கருத்து தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அதில் தீர்மானத்துக்கு எதிராக 120 பேர் வாக்களித்தனர். டி.டி.கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்டோர் தீர்மானத்தை ஆதரித்தனர். தீர்மானம் தோல்வியடைந்ததால் வருத்தமடைந்த ராஜாஜி, காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 ஆண்டுகள் விலகியிருந்தார்.

இவையெல்லாம் அன்றைக்கு நடந்த சம்பவங்கள்... இந்த இடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் பற்றி குறிப்பிட வேண்டும்.

சுபாஷ் சந்திர போஸின் மர்ம மரணம்

இந்திய தேசிய காங்கிரஸில் இருந்த தலைவர்கள் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என இரு பிரிவு மனநிலையில் இருந்தனர். இவர்கள் வெவ்வேறு அரசியல் போக்குகளில் களம் கண்டனர். அறவழியில் அதாவது, ஆங்கிலேயர்களிடம் மனுக்கள், வேண்டுகோள்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தங்கள் கோரிக்கைகளை மிதவாதிகள் முன்வைத்தனர். ஆங்கிலேயர்களிடம் படிப்படியாக உரிமைகளைப் பெறுவதில் கவனம் செலுத்தினர். ஆனால் தீவிரவாதிகள், தங்கள் கோரிக்கைகளை அடைவதற்கு போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் புறக்கணிப்புகள் போன்ற நடவடிக்கைகளை ஆதரித்தனர்.

ஆரம்பகால காங்கிரஸ் மூத்த தலைவர்களான தாதாபாய் நௌரோஜி, பெரோஸ்ஷா மேத்தா, கோபாலகிருஷ்ண கோகலே போன்றவர்கள் மிதவாத தலைவர்களாக அறியப்பட்டனர். பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் போன்றவர்கள். தீவிரவாத தலைவர்களாக அறியப்பட்டனர்.

அறப் போராட்டங்களை விட, ஆயுதப் போராட்டங்களால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் என்று முழுமையாக நம்பினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பானுடன் இணைந்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுவிக்க டெல்லியை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதைக் குறிப்பதற்காக ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்தையும் கையிலெடுத்தார்.

மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவையும், நிதியுதவியையும் சுபாஷ் சந்திரபோஸ் திரட்டினார், குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் போது, இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைப்பதற்காக பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

அந்த வகையில் 1941-ம் ஆண்டு ஜெர்மனிக்கும், 1943-ம் ஆண்டு ஜப்பானுக்கும் பயணம் செய்தார். அங்கு, இந்திய தேசிய ராணுவத்தை மறுசீரமைத்தார், மேலும் சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியர்களையும் ஒன்றிணைத்தார். ஜப்பானில் இருந்து, மலேசியா, பர்மா, மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து இந்திய தேசிய ராணுவத்தில் சேர மக்களை ஊக்கப்படுத்தினார்.

இந்நிலையில், ஜப்பான் ரேடியோ 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி அதிர்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டது. 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமானத்தில் புறப்பட்டார். 18-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அதில் நேதாஜி படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். நேதாஜியின் உதவித் தளபதி கர்னல் ஹபிப் - வுர் - ரகிமனும் மற்றும் 4 ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்

இந்தச் செய்தி இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்து விட்டார் என்பதை பலர் நம்பவில்லை. ‘நேதாஜி இறந்துவிட்டார் என்றால் அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?’ என்று கேட்டனர்.

அதேநேரம், நேதாஜியுடன் பயணம் செய்து படுகாயத்துடன் தப்பிய ஹபிப் - வுர் - ரகிமன், ‘நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்களால் பார்த்தேன்’ என்று கூறினார். ஆயினும் முத்துராமலிங்கத் தேவர் உள்பட பல தலைவர்கள் ‘நேதாஜி உயிருடன் இருக்கிறார்’ என்றே கூறி வந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1956-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில் கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை. டோக்கியோவில் உள்ள புத்தர் கோயிலில் இருப்பது அவருடைய அஸ்திதான்” என்று அறிக்கை கொடுத்தனர்.

மூன்றாவது உறுப்பிரான சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து, தனி அறிக்கை கொடுத்தார். அதைத் தொடர்ந்து 1967-ல் 350 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு, நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும்படி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அதன்படி ஓய்வுபெற்ற பஞ்சாப் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி ‘விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை’ என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார். இவ்வாறாக இன்றுவரை நேதாஜியின் மரணம் மர்மமாகவே உள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின் 1948-ல் இலங்கை சுதந்திரம் பெற்றது. அதேநேரம் அங்குள்ள தேயிலைத் தோட்டங்களை சீர்படுத்தி இலங்கை நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்ற இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பிரஜா உரிமை சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்த காலகட்டத்தில்தான் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகவும், நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்த புதுமைப்பித்தன், தன்னுடைய 42-வது வயதில் 1948-ம் ஆண்டு காலமானார். இவருடைய படைப்புகள் கூரிய சமூக விமர்சனமும், நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்டு தனித்தன்மையுடன் திகழ்கின்றன.

அண்ணாவுக்கு அபராதம் விதித்த சென்னை மாகாண அரசு

1949-ம் ஆண்டில் திராவிடர் கழகத்திலிருந்து, ‘கண்ணீர் துளிகள்’ என்று பெரியாரால் அழைக்கப்பட்ட அண்ணாவும், அவரது சகாக்களும் வெளியேறினர். அதே காலகட்டத்தில்தான் அண்ணா ஆசிரியராகப் பொறுப்பேற்று டி.எம்.பார்த்தசாரதி மேற்பார்வையில் திமுக ஆதரவு ஏடான ‘மாலை மணி’ வெளியீட்டு விழாவும் நடந்தது.

அதைத்தொடர்ந்து, அண்ணா ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் நீலமேகம் தலைமையில் திமுக தோழர்கள் கூட்டத்தைக் கூட்டி திமுகவின் வேலை திட்டங்கள் குறித்து ஆராய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்கா அருகே பெத்தாம்பாளையம் பழனிசாமி தலைமையில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ம் ஆண்டு செப்.17-ம் தேதி தொடங்கப்பட்டது.

‘திராவிட நாடு’ பத்திரிகையில் அரசுக்கு எதிரான கருத்துகளை மக்களுக்குச் சென்றடையக் கூடிய வகையில் எளிய முறையில் அண்ணா எழுதி வந்தார். இதனால் கோபமடைந்த சென்னை மாகாண அரசு அண்ணாவுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, அன்றைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த டி.வி.ராஜமன்னார், சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், “அண்ணாவுக்கு எழுத்துரிமை, பேச்சுரிமை உண்டு. சென்னை மாகாணத்தின் உத்தரவு செல்லாது” என்று தீர்ப்பு அளித்தது. மேலும், அண்ணா கட்டிய அபராதத் தொகையை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அபராதத் தொகையான 300 ரூபாயைத் திரும்பப் பெற்ற அண்ணா, அதை மாநிலம் முழுவதும் இருந்து நன்கொடையாக வழங்கியவர்களுக்கு மணியார்டர் மூலமாகத் திருப்பி அனுப்பி விட்டார்.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம் > இந்திய ஒற்றுமைக்காக வி.பி.மேனன் சமர்ப்பித்த திட்டம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 36

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x