Published : 12 Jul 2025 08:44 AM
Last Updated : 12 Jul 2025 08:44 AM
மதுரையில் ஆடு, மாடுகளை வைத்து வித்தியாசமான மாநாடு நடத்தி தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். மாடுகளை வைத்து நடைபெறும் பால் பொருள் வர்த்தகம் ரூ.13.5 லட்சம் கோடி என்றும், அதில் தமிழகத்தின் பங்கு ரூ.1.38 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டுள்ள சீமான், மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாடு முழுவதுமுள்ள 1.7 கோடி ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்களில் தமிழகத்தில் இருக்கும் அளவு 12 லட்சம் ஹெக்டேர். ஆனால், அவை அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் கட்டுவதற்காகவும், வீட்டு மனைகளாகவும், சாலை அமைக்கவும், விமான நிலையங்கள் அமைக்கவும் எடுக்கப்பட்டு விட்டதால் மாடுகள் மேய்ச்சல் நிலம் இன்றி தவிக்கின்றன.
காடுகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால் வனப் பாதுகாப்பு என்ற பெயரில் தடுக்கின்றனர் என்ற கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார். காடுகளில் மேய்ச்சல் உரிமையை மீண்டும் கேட்டு தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளது தமிழக அரசியல் இதுவரை கண்டிராத வித்தியாசமான போராட்டம் என்பதில் சந்தேகமில்லை.
உலகில் விவசாயத்திற்கு அடுத்து இரண்டாமிடத்தில் இருப்பது கால்நடை வளர்ப்பு தொழில் தான். பால் உற்பத்தியில் கடந்த 1998ம் ஆண்டு முதல் உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருகிறது. நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் 5 சதவீதம் பால் பொருட்கள் மூலமே கிடைக்கிறது.
தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான கால்நடைகள் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் வளர்ச்சியில் இந்த அளவுக்கு பங்களிக்கும் ஒரு துறையின் அடிப்படை ஆதாரமாக உள்ள கால்நடைகளின் நலன் குறித்து ஒரு அரசியல் கட்சி அக்கறை காட்டுவது நியாயமானது என்பதுடன் பாராட்டுக்கும் உரியது.
முன்பு ஒவ்வொரு கிராமங்களிலும் மேய்ச்சல் புறம்போக்கு என்ற ஒரு பகுதியை ஊர்மக்கள் பராமரித்து வந்தனர். அங்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பி பால் உற்பத்தியை பெருக்கினர். காலப்போக்கில் இத்தகைய நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி அருகி விட்டன.
பஞ்சாப், பீகார், கேரளா போன்ற மாநிலங்களில் 12 லட்சம் ஹெக்டேர் நிலம் மேய்ச்சல் நிலங்களாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரும் பகுதி மேய்ச்சல் நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஹிமாச்சல், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 70 சதவீதம் நிலப்பகுதி மேய்ச்சல் நிலங்களாக இன்றும் பராமரிக்கப்படுகின்றன.
விவசாயத்தின் பிரதான அங்கமாகவும், பால் பொருள் வர்த்தகம் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிக்கவும் காரணமாக உள்ள கால்நடைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மற்ற மாநிலங்கள் மேய்ச்சல் நிலங்களை பராமரிக்கும்போது தமிழகமும் அதற்குரிய முக்கியத்துவம் அளித்து கொள்கை முடிவுகளை திருத்தியமைப்பதில் தவறில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT