Published : 11 Jul 2025 06:55 AM
Last Updated : 11 Jul 2025 06:55 AM
பிரிட்டனின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் பாலின - மேம்பாட்டுத் துறையின் பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் நித்யா ராவ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் பாலினச் சமத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்.
‘Quest for Identity’, ‘Good Women Do Not Inherit Land’ உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். நித்யா ராவின் ஆராய்ச்சிகள், சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதிலும் உரிமைகளை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருடனான பேட்டி:
இந்தியாவில் காலநிலை மாற்றம் பாலினரீதியாக ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? ஓர் ஆராய்ச்சியாளராக இம்மாற்றங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? - காலநிலை மாற்றத்தினால், வெப்பம், மழைப்பொழிவு, நீரோட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வட இந்தியா - கிழக்கு இந்தியாவின் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் விவசாயத்தை விட்டு வேறு வேலை தேடித் தென்னிந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ஆண்கள் இல்லாத சூழலில், விவசாயம், வீட்டுப் பராமரிப்பு வேலைகளில் பெண்களே ஈடுபடுகிறார்கள். இதனால் பெண்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது; அதேநேரத்தில், குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்குப் பெண்கள் வந்துள்ளனர். எனினும், வேலை ஆட்களை நியமிப்பது, வளங்களை நிர்வகிப்பது போன்ற நிலைகளில் பெண்கள் இல்லை.
சமீபத்தில், இந்திய மாநிலங்களில் ஆய்வு ஒன்றை நடத்தினோம். அதில் உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் ஆண்கள் இல்லாத சூழலில், வயதான பெண்கள் குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர்; இளம் பெண்களோ பணிச் சுமையுடனும், நிலம் போன்ற வளங்களில் உரிமையில்லாத நிலையிலும் இருப்பது தெரியவந்தது.
காலநிலை மாற்றம் பாலினச் சமத்துவமின்மையைத் தீவிரப்படுத்துகிறதா? - காலநிலை மாற்றத்தினால் ஆண்கள், வேலையிழப்பை எதிர்கொள்கின்றனர். ஆண்களால் போதுமான அளவு வருமானம் ஈட்ட முடியாத நிலையில் குடும்பத்தின் வறுமையைப் போக்கப் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். இது, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பதற்குக் காரணமாகிறது.
கணிக்க முடியாத மழை அளவு, வறட்சியினால் மகாராஷ்டிரத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்கிற நெருக்கடி நிலவுகிறது; இதனால் அங்கு இளம் வயதுத் திருமணங்கள் அதிகரித்து உள்ளன; பெண்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு, காலநிலை மாற்றம் பெண்களுக்கான வாய்ப்புகளைக் குறைப்பதுடன், பாலினச் சமத்துவமின்மையையும் தீவிரப்படுத்துகிறது.
உணவு உற்பத்தி - ஊட்டச்சத்துப் பாதுகாப்பில் கிராமப்புறப் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது? - காலநிலை மாற்றத்தினால் கிராமப் பகுதிகளில் விவசாய நிலம் பெண்களின் கைகளுக்கு வந்துள்ளது. அந்த வகையில் உணவு உற்பத்தி - ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்கும் பெண்கள் முக்கியப் பொறுப்பாகி உள்ளனர்.
எனினும், துரதிர்ஷ்டவசமாக, விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பானது இந்தியாவில் அங்கீகரிக்கப்படுவது இல்லை. விவசாயம் சார்ந்த மூலப்பொருள்களை வாங்க ஆண்களே சந்தைக்குச் செல்வதால், பெண்களுக்கு அது சார்ந்த நேரடி அனுபவம் குறைவாக உள்ளது.
இத்தகைய சூழலில், விவசாயம் சார்ந்த முழுமையான அறிவைப் பெண்களால் பெற முடிவதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வைப் பெண்களிடம் மத்திய - மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாக, விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்க, பெண்களுக்கு நிலப் பகிர்வில் முக்கியத்துவம் அளித்துக் கடன் வழங்குதலை இலகுவாக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தகவல்கள், தொழில்நுட்பம், இயந்திரங்கள் கிடைப்பதை எளிமையாக்க வேண்டும்.
ஊட்டச்சத்துப் பாதுகாப்பை மேம்படுத்த, சுத்தமான நீர், மேம்பட்ட சுகாதாரம் அவசியம். இந்தியக் கிராமங்களில் பட்டியல் சாதிப் பெண்கள் விவசாயக் கூலி வேலைக்குச் செல்வதால் குழாய்த் தண்ணீரை வரிசையில் நின்று பிடிக்கப் போதிய நேரம் கிடைப்பதில்லை.
இதனால் மாசடைந்த நீரையே அப்பெண்கள் பயன்படுத்துகிறார்கள். எரிபொருளுக்காகவும் நீண்ட நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஊட்டச்சத்துப் பாதுகாப்பில், குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் உணவளிப்பது அவசியம். விவசாய நிலங்களில் வேலை செய்யும் தாய்மார்களால் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் உணவளிக்க முடிவதில்லை.
நீங்கள் எழுதிய ‘Quest for Identity’ என்கிற புத்தகம் ஜார்க்கண்டில் பழங்குடிப் பெண்களின் இன்றைய நிலையையும், பழங்குடி மக்களின் நிலப் போராட்டத்தையும், பூர்விக அடையாளத்தையும் பற்றிப் பேசுகிறது. பழங்குடி மக்களின் போராட்டம், உரிமை சார்ந்து எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது? - 2000இல் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட 40-50 ஆண்டுக் காலமாகத் தொடர்ந்த பழங்குடியினர் போராட்டமே காரணம். ஜார்க்கண்ட் பழங்குடிகளின் போராட்டம் என்பது நிலம், நீர், காடுகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் பழங்குடிப் பெண்களின் உரிமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா எனக் கேட்டால், பிரச்சினைகள் தொடர்வதாகவே கருதுகிறேன். பழங்குடிப் பெண்ணுரிமைகளில் சட்டரீதியாக எந்த மாற்றமும் நிகழவில்லை.
சந்தால் பர்கானா குத்தகைச் சட்டத்தை (Santhal Pargana Tenancy Act) சீர்திருத்திப் பழங்குடிப் பெண்களுக்கு நிலத்தில் சமவுரிமை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை வெற்றி பெறவில்லை. பாலின உரிமைப் போராட்டமானது பழங்குடி இயக்கங்களிடம் பிரிவினையை ஏற்படுத்துகிறது என அதன் தலைவர்கள் கருதியதே அதற்குக் காரணம். மேலும், தாராளமயமாக்கல், சந்தை வளர்ச்சி, காலநிலை மாற்றத்தினால் பழங்குடிகள் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். முன்பெல்லாம் ஆண்கள் நிலத்தைத் தங்கள் அடையாளமாகக் கருதினர். தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.
ஆண்கள் வேலை தேடிச் சென்றுவிட்டதால், நிலங்களுக்குப் பெண்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. நிலத்தில் எல்லா வேலைகளையும் பழங்குடிப் பெண்கள் செய்கிறார்கள்; ஆனால் நிலத்தின் மீதான சட்டரீதியான உரிமை அப்பெண்களுக்கு இல்லை. என் புத்தகத்தில் இனம், பாலினம், நிலம், உழைப்பு இவற்றுக்கு இடையேயான நெருங்கிய தொடர்பைப் பற்றித்தான் ஆராய்ந்திருக்கிறேன்.
முன்பு நிலத்தில் தங்கள் அடையாளத்தைக் கண்ட பழங்குடி ஆண்கள், உழைப்பில் கவனத்தைச் செலுத்தினர். முன்பு நிலத்துடன் தொடர்பில்லாமல் இருந்த பழங்குடிப் பெண்கள் தற்போது நிலத்துடனும் நெருக்கமாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். அந்தவகையில், உள்ளூர் சமூக உறவுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில் பெண்கள் நிலவுடைமையாளர்களாக இருக்கும்பட்சத்தில், பெண்களுக்கான சமூக அந்தஸ்து, பாலினச் சமத்துவம் உயர்ந்து, பெண்கள் மீதான வன்முறைகள் குறைந்துள்ளதாகக் கடந்த கால ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை? - என்னைப் பொறுத்தவரை இது இரண்டு வகைகளிலும் நிகழலாம். அதாவது, பெண்கள் மீதான வன்முறை குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். பெண்கள் நில உரிமையாளர்களாக இருந்தால், திருமண உறவில் கணவனால் அத்துமீறலை எதிர்கொண்டால், அந்த உறவிலிருந்து வெளிவரும் சாத்தியம் கூடுதலாக உள்ளது.
அதுவே பொருளாதாரத்தில் வலிமை இல்லாத பெண்கள், குழந்தைகளை வளர்க்கக் கணவனைச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது; இதனால் தங்கள் மீதான வன்முறைகளைப் பெண்கள் சகித்துக்கொள்கிறார்கள். அந்த வகையில் நிலம் பெண்களுக்கான வலிமையைத் தருகிறது.
சில நேரங்களில் விவசாயம், குடும்பத்தை நிர்வகிப்பதில் பெண் ஆணைவிடச் சிறப்பாகச் செயல்படும்போது, ஆண்களால் அதை ஏற்க முடிவதில்லை. ஜார்க்கண்டில் பெண்களுக்கு நில உரிமைகளை வலியுறுத்தும்போது, அங்கு பழங்குடிப் பெண்கள் பாலியல்ரீதியாகவும், உடல்ரீதியாகவும் தாக்குலுக்கு உள்ளாகினர்; சூனியக்காரிகள் என்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியாவில் 2005இல், திருத்தப்பட்ட வாரிசுரிமைச் சட்டத் திருத்தமானது நிலத்தில் பெண்களுக்கான உரிமையை வழங்குகிறது. ஆனால், நமது குடும்ப உறவுகளில் பிளவினை ஏற்படுத்தக் கூடாது எனக் கருதும் பெண்கள், நிலத்தில் தங்களுக்கான உரிமைகளைக் கோருவதில்லை.
இறுதியாக, நமது சமூக அமைப்பில் உள்ள பாலின விதிமுறைகள், தங்களின் உரிமைகளைப் பெறுவதற்குப் பெண்கள் போராடுவதற்குப் பதிலாக, கீழ்ப்படிந்திருக்கவே வலியுறுத்துகின்றன. அந்த வகையில் நிலவுரிமை - பெண்கள் மீதான வன்முறை இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்பு தெளிவற்றதாகவே நீடிக்கிறது.
- தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT